Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாட்டி தந்த பரமன் தத்துவம்


    ங்கள் ஊரில் சங்குடு பாட்டின்னு ஒரு பாட்டி இருந்தாங்க அவுங்க முழுப் பேரு என்னென்னு எனக்கு இன்று வரை தெரியாது ஒரு வேளை சண்முகவடிவாக இருக்கலாம் சண்முகவடிவுன்னு முழுப் பெயரையும் நீட்டி முழங்கி கூப்பிட சிரமப்பட்டோ செல்லமாகவோ சங்குடுன்னு அழைக்க துவங்கி இருக்கலாம்

எதை வைச்சி இப்படி சொல்லுறேன் என்றால் என் தாய் வழிபாட்டிப் பேரும் சண்முகவடிவுதான் அவுங்களை எல்லோரும் முழுப் பேரை சொல்லி கூப்பிடமாட்டாங்க சம்மடிவு என்று தான் கூப்பிடுவாங்க இது அந்தக் கால பழக்கம் என்று நினைக்கிறேன்

சங்குடு பாட்டி வெள்ளாவியில் வைத்து வெழுத்த வெள்ளை துப்பட்டிப் போல இருப்பாங்க முழுசா அளந்தா மூனே முக்கால் அடி  உயரம் தேருவாங்க அவங்க நடக்கிறதை பார்த்தால் காற்றில் மிதப்பது போல் தான் இருக்கும் வயசானாலும் வேகம் குறையாது

தினசரி  அவுங்களோட வேலை மாலை ஆறு மணிக்குள்ளே ஊருக்கு மேற்கே இருக்கும் நாராயணசாமி கோவிலுக்கு போய் சாமிக்கு விளக்கேற்றி பூஜை செய்யனும் வெயிலோ புயலோ அடை மழையோ எதுவாக இருந்தாலும் பாட்டியின் பூஜையை தடுக்க முடியாது வடக்கே வாசகசாலை பக்கத்தில் அவுங்க வீடு நாராயணசாமி கோவில் மேற்கே கடைசியில் எப்படியும் இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும் சங்குடு பாட்டியின் பக்திக்கு முன்னால் தூரம் எல்லாம் தூசு மாதிரி பஞ்சாக பறந்து போகும்

எங்க வீட்டை கடந்து தான் பாட்டி கோவிலுக்கு போகனும்  அவங்க வரவுக்காக வீட்டு வாசலிலே காத்திருப்போம் நான் , ஆறுமுகராஜன் ஜெயசிங் கிருஷ்ணவேல் என்று ஒரு பட்டாளமே பாட்டிக்கூட பூஜைக்கு போவோம்

அடடே அந்த வயசிலேயே இவ்வளவு சாமி பக்தியா என்று யாரும் நினைக்க வேண்டாம் அப்படியல்லாம் ஒன்றுமில்லை பாட்டி கூட போனால் பூஜை முடிந்த பின் சர்க்கரை பொங்கல் தேங்காய் சில்லுன்னு பல பிரசாத அயிட்டங்கள் தருவாங்க ரொம்ப சுவையாய் இருக்கும்

முக்கியமா நாராயணசாமி கோவிலில் நாமக்கட்டியை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி வைத்திருப்பாங்க புரட்டாசி மாதம் திருவிழா நடக்கும் போது கன்னிப் பெண்கள் ஒரு சடங்காகவே நாமம் இடிப்பாங்க

ஐய்யா வைகுண்டரின் அகிலத் திரட்டு அம்மானையில் உள்ள சில பாடல்களை ஒருவர் தாளத்தோடு சொல்ல தாளம் தப்பாமல் மற்றவர் உலக்கையால் நாமம் இடிப்பதை பார்ப்தற்கும் கேட்பதற்கும் தாலாட்டுவது போல் சுகமாக இருக்கும்

இப்படி இடித்து வைக்கப்பட்ட நாமத்தூள் கோவிலில் பத்திரமாக இருக்கும் அந்த நாமத்தில் ஒரு கை பிடி அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து தீர்த்தமாகத் தருவார்கள் இதை இனத்தான் பால் என்று கூறுவார்கள் அந்தப் பால் சிறுவர்களான எங்களுக்கு மிகவும் பிடிக்கும்

அது என்னவோ சின்னப் பசங்களுக்கு மண்ணுச்சுவை என்றாலே அலாதிப் பிரியம் கிருஷ்ணர் காலத்திலிருந்தே இந்த கதை தொடர்கிறது என்று நினைக்கிறேன் அவரும் மண்ணைத் தின்று அம்மாகிட்ட உதை வாங்கினார் அவருடைய கள்ளம் கபடம் இல்லாத மனசு இருக்கிற வரையிலும் மனுஷனும் மண்ணுத் தின்ன ஆசைப்பட்டு அம்மாவிடம் அடி வாங்குவான்

இந்த விஷயத்தில் நாங்கள் பரவாயில்லை நாமக்கட்டி என்பதும் திருமண் என்ற மண்தான் அது பக்தியோடு தீர்த்தமாக குடிக்கப்படுவதால் யாரும் திட்டுவது கிடையாது அரசாங்க அனுமதியோட சாராயம் குடிக்கிற மாதிரின்னு வைச்சிக்கலாம்

அந்த நாமப் பால் ரொம்பவும் சுவையாக இருக்கும் நெறுநெறுன்னு சின்ன சின்ன மண்துகள்களோடு நாக்கில் புரட்டி புரட்டி சுவைத்தால் என்னவோ சொர்க்கலோகம் போல இருக்கும் அதை அனுபவிச்சாத்தான் தெரியும்

அப்போ எங்களோட ஆலயப் பிரவேசம் என்பது முக்கியமா இந்த நாமப்பாலுக்காகத்தான் இந்த ரகசியம் எங்க எல்லோருக்கும் தெரியும் யாரும் வெளிக்காட்டிக்க மாட்டோம் பெரிய பக்தச் சிரோன்மணிகள் மாதிரி நெற்றி நிறைய நாமமும் வாயில் அய்யா வைகுண்டரின்  அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற கோஷத்தோடும் இருப்போம்

நாராயணசாமி கோவில் பூஜையில் எனது ஆர்வத்தை தூண்டுகிற இன்னும் பல சங்கதிகள் உண்டு பெரிய மணியில் நீளமாக தொங்குகின்ற கயிற்றை பிடித்து டங்டங் என்று மூச்சி விடாமல் அடித்து மற்றவர்களை தொல்லை படுத்துவது சேசண்டியை எடுத்து பக்கத்தில் உள்ளவர்கள் காதுகளுக்கு அண்டையில் கொண்டு போய் வேகமாக  அடித்து கொடூரமாக சிரிப்பது ஜால்ராவை தரையில் உருட்டி விளையாடுவது என்று ஏகப்பட்ட ஐட்டங்கள் உண்டு

இவற்றிற்க்கெல்லாம் மகுடம் வைத்தது போல என்னை சுண்டி இழுப்பது வெள்ளை ரோஜாப்பூ போல வழுவழுவென்று பெரிசாக இருக்கும் சங்குகள் தான் இரண்டோ மூன்றோ சங்குகள் அங்கு உண்டு எல்லாம் வலம்புரி சங்குகள்

 அரிசி மூட்டைக்கு அடியில் வைத்தால் ஒரு மணி நேத்தில் அரிசி கூட்த்தை கிழித்துக் கொண்டு மேலே வந்து நம்மை பார்த்து கேலியாக சிரிப்பது போல கிடக்கும் எனக்கு ஆச்சர்யம் தாங்காது எப்படி இந்த சங்கு மேலே ஏறி வருகிறது?இன்று வரையிலும் அந்த ரகசியம் என்னவென்றே தெரியவில்லை

எனக்கு அந்த சங்குகளின் மீது ஒரு வகையான காதல் உண்டு சங்கை தொட்டுப் பார்க்க வேண்டும் கையில் வைத்து உருட்டி விளையாட வேண்டும் கர்ணன் சினிமாவில் ராமாராவ் தேரில் நின்று கொண்டு பாரத போர் துவக்குவதற்காக ஊதுவாரே அதே மாதிரி ஊதி பார்க்க வேண்டும் என்று இன்னும் என்னென்னவோ ஆசைகள் உண்டு

ஆனால் அழகான அத்தைப் பொண்ணு பக்கத்தில் இருப்பாள் சிரிச்சி சிரிச்சி பேசுவாள் அவளைத் தொட்டுப் பார்க்க ஆசை வரும் தொட்டால் திட்டுவாளோ என்ற பயம் வரும் அதனால் கையை காலை மடக்கி வைத்துக் கொண்டு ஏக்கத்தோடு சும்மா உட்கார்ந்திருப்பானே பதினெட்டு வயசு பையன் அவனை மாதிரி நானும் சங்கை ஏக்கத்தோடு பார்த்த வண்ணம் இருப்பேன் தொடப் போனால் சங்குடு பாட்டி திட்டுவாங்களோ என்ற பயம்

இருந்தாலும் பாட்டியிடம் நைசாகப் பேசி ஒருநாள் சங்கைத் தொட்டே பார்த்து விடுவது என்று முடிவு செய்திருந்தேன் அப்படி ஒரு நாளும் வந்தது பாட்டியிடம் பூஜையின் போது சங்கை ஏன் ஊத வேண்டும்? சாமிக்கு இந்த சத்தம் ரொம்ப பிடிக்குமா என்று கேட்டேன்

நான் எதற்காக கேட்கிறேன் என்பதை தெரியாமல் ஜெயசிங் பாட்டியிடம் இன்னொறு கேள்வியையும் கேட்கத் துவங்கி விட்டான் கிருஷ்ணர் கையில் ஒரு சங்கு இருக்கிறதே அது இந்த சங்கா? என்றான்

சங்குடு பாட்டிக்கு ஆர்வம் பற்றிக் கொண்டது பயல்களுக்கு விளங்குகிறதோ இல்லையோ தான் விளக்கியே தீருவேன் என்று முடிவு செய்து பேச ஆரம்பித்து விட்டார்கள் பகவான் கையில் இருப்பது சாதாரண சங்கு இல்லேடா அது எல்லாவற்றிலும் ஓசத்தியான பாஞ்சசன்யம் சங்கு அது என்று துவங்கினார்

பாஞ்ச சன்யம் என்றால் என்ன? என்று இடமறித்து நான் கேட்டேன்

கடலில் எண்ணவே முடியாத அளவுக்கு ஏராளமான சிப்பிக்கள் உண்டு அந்த சிப்பிக்கள் மத்தியில் அபூர்வமா இடம்புறி சங்கு விளையும்

லட்சம் இடம்புறி சங்குகள் உருவாகும் இடத்தில் ஒரே ஒரு வலம்புறி சங்கு தோன்றும் இப்படி பிறக்கும் வலம்புறி சங்கில் பல சக்திக்கள் உண்டு அது இருக்கும் இடத்தில் வறுமை இருக்காது நோய் நொடி தோன்றாது பிச்சைக்காரன் கூட ராஜா மாதிரி வாழ ஆரம்பிச்சி விடுவான்

பாட்டி இப்படி சொன்னது தான் என் சங்குக் காதல் காமமாகவே ஆயிடிச்சி எப்படியாவது அதை தொட்டுப் பார்க்க வேண்டும் என்ன வெறி பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது பாட்டியின் பேச்சை உன்னிப்பாக கவனிக்த் துவங்கினேன்

இந்த மாதிரி சக்திவாய்ந்த வலம்புறி சங்குகள் ஆயிரம் பிறந்த இடத்தில் ஒரே ஒரு சலஞ்சலம் என்ற அதிசய சங்கு விளையும் இது சாதாரணமா மனுஷன் கையில் அகப்படாது ஞானிகள் யோகிகள் கையில் மட்டும் தான் கிடைக்கும்

என் ஆர்வம் இன்னும் கூடியது பாட்டியின் வாய்க்கு நேரே காதுகளை தீட்டிக் கொண்டு காத்திருந்தேன்

சலஞ்சலம் சங்குகள் விளைகிற இடத்தில் ஆயிரம் வருஷத்திற்கு ஒருமுறை லட்சம் சலஞ்சலம் சங்குகள் நடுவில் ஒரே ஒரு பாஞ்ச சன்யம் சங்கு தோன்றும் அது பிறக்கிற நாள் ஆவணி மாதம் அஷ்ட்டமி திதி சுவாதி நக்ஷத்திரம் உள்ள நாளாக இருக்கும் அப்பத்தான் அது கிருஷ்ணன் கையில் போய் சேர முடியும் 

பாட்டி சொல்லி முடித்தார் அதற்கு மேல் எதையாவது சொல்லுவார் பேச்சைத் தொடரலாம் அவர் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்கும் போது நான் சங்கைத் தொட்டுப் பார்க்கிறேனே என்று சட்டென்று தொட்டு விடலாம் என்று நினைத்தேன் என்னுடைய துரதிர்ஷ்டம் அவருடைய கவனம் வேறு வேலையில் திரும்பி விட்டது வயசானவங்களே அப்படித்தான் பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டி விட்டு விட்டு போய் விடுவார்கள் பிறகு அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்

வேறு வழியில்லை சிறிது நேரம் காத்திருந்து பார்த்து விட்டு சங்கைத் தொட முடியாமலும் அதற்கு மேல் எதையும் கேட்க முடியாமலும் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன் சிறிது காலத்தில் மனதும் மாறி விட்டது சூழலும் திசை மாறி போய்விட்டது 'சங்கு ஆசை சத்தம் இல்லாமலே செத்துவிட்டது

இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் கண்ணன் கையில் இருக்கும் பாஞ்ச சந்தியம் எவ்வளவு அபூர்வமானது தெய்வீகமானது என்பதோடு  அதில் எவ்வளவு பெரிய தத்துவமும் மறைந்திருக்கிறது?

கடலில் கணக்கற்ற சிப்பிக்கள் தோன்றுவது போலவே நிலத்திலும் கோடி கோடியாய் ஜனங்கள் பிறக்கிறார்கள் எல்லோருமே கிருஷ்ணனை நினைக்கிறார்களா ஏதோ ஒரு சிலர் நினைக்கிறார்கள் அவர்கள் இடம்புறி சங்கு போன்றவர்கள்

கோபாலனை நினைப்பதோடு மட்டும் நில்லாமல் அவன் மேல் மையல் கொண்டு பக்தியால் ஊன் உருகி உள்ளம் உருகி வாழும் மனிதர்களும் உண்டு அவர்கள் வலம்புறி சங்கைப் போன்றவர்கள்

பக்தி என்ற சமுத்திரத்தில் நீந்தி தவம் என்ற குன்றேறி நின்று மாதவன் தவிர வேறு எதையும் நாடாது மாதவம் செய்யும் ஞானிகளும் உண்டு அவர்கள் சலஞ்சலம் என்ற சங்கை நிகர்த்தவர்கள்

இடம்புறி வலம்புறி சலஞ்சலம் என்ற மூன்று நிலையும் தாண்டினால் தான் அதாவது சரியை என்ற நினைப்பு கிரியை என்ற வழிபாடு யோகம் என்ற தவம் இவற்றை முறைப்படி கடந்து வந்தால் தான் ஞானம் என்ற பிறவிகள் இல்லாத உயர்ந்த நிலைக்  கிடைக்கும் அந்த உயர்வின் வடிவம்தான் பாஞ்ச சன்யம் என்ற கண்ணன் கை ஆழிச் சங்கு
Contact Form

Name

Email *

Message *