Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனிதனுக்கும் மனம் உண்டு ( கதை )



ந்தக் காட்டு மைனாவிற்கு தாகம் அதிகம் இருந்தது கருவேலங் காட்டுக்குள்ளே தாழப்பறந்து சென்றதில் கூட்டம் கூட்டமாய் தெறி புட்டான்களை காண முடிந்தது பார்த்த மாத்திரத்திலேயே நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்ததால் கணக்கு வழக்கு இல்லாமல் தெறி புட்டான்களை பிடித்து தின்ன ஆரம்பித்துவிட்டது நாக்கு வெறி சற்று அடங்கியப் பிறகு தான் அளவுக்கு மீறி தின்று விட்டதும் இரைப்பை சுமக்க முடியாத பாரமாகி கழுத்தை இழுப்பதும் புரிந்தது இந்த நிலையில் உச்சி வெயில் என்பதால் தாகம் வேறு உயிரை எடுக்கிறது

முன்பெல்லாம் சித்திரை வைகாசி மாதங்களில் மதிய வெயில் தகிக்கும் போது தேரிக் காட்டு செம்மண் குன்றுகளில் அடுக்கடுக்காக நிற்கும் பனை மரங்களில் தொங்கும் மண் கலசங்களில் நுங்கும் நுரையுமாக பதனீர் பொங்கி வழியும் ஆசை தீர அள்ளி அள்ளி குடிக்கலாம் சுட்டெரிக்கும் வெயிலில் அலகு வழியாக தொண்டைக் குழிக்குள் இரங்கும் பதனீர் தேவாமிர்தம் போல் சிலுசிலுப்பாய் இருக்கும்

இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது நிலத்தடி நீர் இல்லாமல் நிறைய பனை மரங்கள் பட்டுப் போய் விட்டன மீதமான மரங்கள் மனிதர்கள் வெட்டி சாய்த்து விட்டனர் தப்பிப் பிழைத்த ஒன்றிரண்டு மரங்களில் பதனீர் இரக்க ஆள் கிடையாது மைனா போன்ற சின்னஞ் சிறு உயிர்கள் என்ன செய்ய முடியும் கோடை காலத்தை கடத்தும் முன்னர் உயிர் வாதை பட வேண்டியதுதான் இருக்கிறது

கோடை காலம் என்றில்லை குளிர் காலம் மழைக்காலம் எல்லாமே தொல்லை மிகுந்ததுதான் புயலும் மழையும் சேர்ந்தடித்தால் மரங்களே அரிதாக தென்படும் பகுதிகளில் வாழும் பறவைகளும் விலங்குகளும் எங்கே புகலிடம் தேடும்? இந்த பாழாய் போன பாவி மனித ஜென்மங்கள் சின்ன உயிர்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது கண்ணில் கண்ட நிலமெல்லாம் தனக்கே சொந்தம் என்று அபகரிக்க தொடங்கி விடுகிறார்கள்

காட்டு மைனாவிற்கு அனலாய் மூச்சு வந்து வெயிலின் உக்கிரம் அலகுகளை மூட முடியாமல் உலர செய்து விட்டது வயிற்றின் பாரம் வேறு சங்கடப்படுத்தியது இப்போதைக்கு உடனடி தேவை குடிக்க தண்ணீரும் நல்ல நிழலும் அது எங்கே கிடைக்கும்? அலை அலையாக கொதிக்கும் மணற்பரப்பில் குளிர்ந்த நிழலுக்கு எங்கே போவது?கருவேலம்முள்ளும் கள்ளிச் செடியும் தான் அதன் குன்னி முத்து கண்களுக்கு எட்டியவரை தெரிந்தது

இன்னும் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் மயக்கம் வந்தாலும் வந்துவிடும் என்று தோன்றியது இருக்கும் சக்தியை வைத்துக் கொண்டு பறந்து போய் நீரைத் தேடலாம் என்று மைனா முடிவு செய்தது முன்பு ஒரு முறை வடக்கு பக்கமாக போகும் போது மனிதகுடியிருப்பு ஒன்று இருப்பதை மைனா நினைத்துக் கொண்டு அந்தப் பக்கமாக பறக்க துவங்கியது

காட்டு மைனாவின் அம்மா இதனிடம் ஒரு முறை சொல்லியது இப்போது நினைவிற்கு வந்தது மனிதர்கள் வாழும் பகுதிக்கு அடிக்கடி போகாதே அவர்கள்  அவித்த நெல்லையும் வறுத்த மீனையும் தின்னும் ஜாதி நாமும் அதை தின்றால் உடம்பு நாற்றம் எடுத்து விடும் என்று சொன்னதில் இருந்தே மனிதர்கள் என்றாலே மைனாவிற்கு கொஞ்சம் அறுவெறுப்பு உண்டு

மனிதர்கள் மூக்கு நுனியில் கொத்து கொத்தாய் கொப்பளங்கள் தொங்குவது போல் வியற்த்து நிற்பதும் பக்கத்தில் போனால் கற்றாளையை வெட்டியது போல நாற்றம் குமட்டுவதும் வெட்கமே இல்லாமல் பறவைகள் முட்டைகளை திருடி சுட்டு தின்னுவதும் மைனாவால் சகிக்கவே முடியவில்லை சில நேரங்களில் நினைத்தால் வயிற்றை புரட்டி வாந்தியே வந்து விடும் போலிருக்கும்

காட்டில் இருந்து ஊர்புரத்திற்கு சென்று வந்த இதன் தோழி மைனா ஒரு தகவலை சொன்னது அதைக் கேட்டதில் இருந்தே மனிதர்கள் மேல் அருவெறுப்பு மட்டுமல்ல அடங்காத கோபமும் வெறுப்பும் வந்தது வெறுப்பும் ஆத்திரமும் ஒரு ஜீவனின் ரத்த ஓட்டத்தை தாறுமாறாக்கி இதய துடிப்பை அதிகரித்து உயிரை தின்று விடும் என்று இது அறிந்திருந்தால் அவைகளை அடக்கி கொண்டது

மனிதகுடியிருப்பில் அவர்களை நம்பி அவர்களை அண்டி சிட்டுக் குருவி என்ற இனம் இருந்ததாம் அவர்களை முற்றிலுமாக அந்த சின்னப் பறவை நம்பி வாழ்ந்ததால் அடைக்கலாம் குருவி என்றும் அழைப்பார்களாம் இப்போ இருக்கிற மனிதர் போல அப்போ இருந்த மனிதர்கள் கள்ளத்தனமாகவும் சுயநலமாகவும் அதிகமாக இல்லையாம் இதனால் வீட்டில் நடுக்கூடத்தில் அல்லது முற்றத்தில் நெல் கதிர்களை கற்றையாக கட்டி தொங்க விடுவார்களாம் சின்ன பாத்திரங்களில் தண்ணீரும் வைப்பார்களாம்

உணவும் தண்ணியும் ஒரே இடத்தில் கிடைத்தால் அதன் பெயர் தானே சொர்க்கம் சிட்டுக்குருவிகளும் அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றன வீட்டுக் கூரைகளில் கூடு கட்டுவதும் ஜன்னல்களில் அமர்ந்து இறகு கோதுவதும் துணிக் காயப்போடும் கொடிகளில் ஊஞ்சலாடி ஜோடிகளோடு கொஞ்சுவதும் இன்னும் நிறைய ஆனந்தத்தை அனுபவிப்பதாக வாழ்ந்திருக்கின்றன

பனை மட்டை விசிரிகளை விட்டு விட்டு ஃபேன்கள் மாட்டத் தொடங்கியதும் சிட்டுக்குருவிகளுக்கு சனியன் பிடிக்க துவங்கி இருக்கிறது பிறகு ஏ ஸி பெட்டியும் கண்ணாடி ஜன்னலும் வந்த பின்பு சிட்டுக்குருவிகள் பாவம் வாழ்வதற்கு இடம் இல்லாமல் அவதிபட்டுருக்கின்றன 

இது மட்டுமல்ல செல்போன் டவர் என்று ஒன்று இருக்கிறதாம் பத்து பனை மரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்ற உயரம் இருக்குமாம். அதில் எதோ வட்டமாக மிஷன் மாட்டுவார்களாம் அதிலிருந்து கண்ணுக்கு தெரியாத சக்தி ஒன்று வந்துகொண்டே இருக்குமாம். அந்த சக்தி சிட்டுக்குருவிகளின் முட்டைகளில் உள்ள கருவை கலைத்துவிடுமாம். பாவம் இதனாலையே அந்த சிட்டுகுருவி இனம் படிப்படியாக அழிந்து வருகிறதாம். இதை தோழி மைனா சொன்னதிலிருந்து காட்டு மைனவிற்கு மனிதர்கள் மேல் முளைத்த கோபம் வளர்ந்து கொண்டே போனது. 

மனிதர்கள் இரக்கமுள்ள பிறவிகளே கிடையாது. கொடூரத்திலும் கொடுரமான ஜென்மங்கள் வாய்நிறைய அன்பை பேசிக்கொண்டே கைநிறைய இரத்தத்தை எடுத்து குடிக்கும் கீழ்த்தரமான பிறவிகள். அவர்களை நினைப்பதே பாவம் அவர்கள் அருகில் சென்றாலே தோஷம். பிணத்தின் வாயில் போடுகிற அரிசியை கூட பிடுங்கி தின்பார்கள் தனது சுகத்திற்காக பாலூட்டும் தாயின் மார்பை பிளந்து ரத்தம் குடிப்பார்கள் இது தான் காட்டு மைனாமனிதர்களை பற்றி இறுதியாக வைத்திருக்கும் எண்ணம்

கோழி வளர்ப்பார்களாம் கோழி எதற்காக முட்டை போடுகிறது? தனது இனத்தை பெருக்கி தலைமுறை தலைமுறையாக வாழவேண்டும் என்பதற்க்காக தானே ஆனால் அந்த கோழியின் முட்டைகளை இவர்கள் உணவாக்கி கொள்கிறார்கள். அதுகூட மன்னிக்கலாம் ஆனால் உயிரே இல்லாத செத்த முட்டைகளை கோழிகளை போட செய்து அதை வியாபாரம் ஆக்குவார்களாம். இவர்களுடைய கொடூரத்திற்கு அளவே இல்லை.

 பசுவை வளர்த்து அதன் பாலை கறந்து தான் குடித்து வாழ்கிறார்கள். உலகிலேயே மற்ற இனத்தின் பாலை குடிக்கும் ஜென்மங்கள் மனிதர்கள் மட்டும் தான். வேறு எந்த இனமும் வேற்று இனத்தின் பாலை குடிப்பது இல்லை. இவர்கள் பசுவின் பாலை மட்டுமா குடிக்கிறார்கள்? பால் கொடுத்த பசுவை கசாப்பு கடையில் வெட்டி அடுப்பில் வேகவைத்து தின்னுகிறார்கள். பெற்ற தாயை கரி சமைத்து உண்ணுவதற்கு சமம் என்று அவர்கள் யோசிப்பதே இல்லை நல்ல வேளை தான் காட்டு மைனவாக பிறந்து காட்டிலேயே வாழுகின்ற பேறுபேற்று விட்டதை எண்ணி மைனா அடிக்கடி சந்தோசப்பட்டு கொண்டது.

இப்போது மைனாவின் தாகமும் வயிற்றில் நிறைய இருந்த இரையின் பாரமும் பறக்கவிடாமல் தடுப்பது போல் இருந்தது. தலை சுற்றியது எப்படியாவது ஒரு நிழலில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று மனம் தவியாக தவித்தது. ஆனால் எங்கேயும் மரம் இல்லை நிழலும் இல்லை

 மனிதர்கள் வாழுகின்ற பகுதிக்குள் காட்டும் மைனா வந்துவிட்டாலும் அதன் கண்களில் கட்டிடங்கள் தான் தென்பட்டன அதற்கு கட்டிடத்தில் உட்கார்ந்து பழக்கமில்லை மரத்தை தான் தேடியது. ஆனால் அலங்காரத்திற்கு கூட அந்த ஊரில் மரமில்லை

 மைனாவின் நிலைமை மோசமானது கண்கள் இருண்டு கொண்டுவந்தது. நெஞ்சி படபடத்தது இனி பறக்க முடியாது என்று ஒரு கட்டிடத்தின் விளிம்பில் உட்கார முயற்சி செய்து உட்காரும் போது மயக்கமே வந்துவிட்டது கட்டிட விளிம்பிலிருந்து வெயில் சுட்டெரிக்கும் சிமென்ட் தரையில் மைனா விழுந்து துடித்தது சிறிது நேரத்தில் அதன் துடிப்பு அடங்குவது போலிருந்தது 

நெடுநேரம் காட்டுமைனா மயக்கத்தில் இருந்திருக்க வேண்டும் அதன் உடம்பில் குளிர்ச்சியாக தண்ணீர் படுகின்ற உணர்ச்சி ஏற்பட்டு மயக்கம் தெளிந்து கண்விழித்து ஒரு மானிட பெண் மைனாவை தனது கைகளில் ஒரு பூவை தொடுவது போல வைத்திருந்தாள் தனது விரல்களால் அதன் கழுத்தை மிக மெதுவாக வருடி கொடுத்தாள்

 அவளது முகமும் மைனாவின் அழகும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தன. மைனவிற்கு இப்போது அதன் தாய் சொன்ன மனிதன் நாற்றம் என்பது மறந்து போய்விட்டது அந்த பெண்ணின் நாசியிலிருந்து வரும் மூச்சிக்காற்று இதமான தென்றல்போல் இருந்தது. காற்றில் பறந்த அவளது தலைக் தேசத்திலிருந்து சுகந்தமான நறுமணம் வீசியதுஅவள் மூக்கு நுனியில் மைனாவால் தெளிவாக பார்க்க முடிந்தது அதில் சொத்துக் கொத்தாக வியர்வை இல்லை அது பூவின் மடல்போல அழகாக தெரிந்தது 

அவளது பஞ்சு போன்ற கைகளின் மைனா சுகமாக படுத்து கொண்டது அது முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அம்மாவின் சிறகுகளுக்குள் அணைப்பிலிருந்த போது இருந்த கததப்பை இப்போது உணர்ந்தது அந்த பெண் மைனாவை தொடுகின்ற ஒவ்வொரு வினாடியும் இறந்து போன அம்மா மைனாவின் நினைப்பு  வந்தது 

இப்போது மைனாவால் நன்றாக மூச்சுவிட முடிந்தது. உடம்பில் ஒரு சக்தி பிறந்தது போல தோன்றியது. தன்னால் இனி நன்றாக பறக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது. கைகளில் புரண்டுகிடந்த மைனா எழும்புவதற்கு எத்தனிப்பதை அறிந்த பெண் அதை தரையில் வைத்தாள் ஆனாலும் சாய்ந்து விடாமல் தன் கரங்களால் அணைத்திருந்தாள்

காட்டு மைனாவுக்கு வெட்கமாக இருந்தது. மனிதர்களை பற்றி முழுமையாக தெரியாமல் அவர்களை வெறுத்துவிட்டோமே இப்படியும் தாயை போன்ற உள்ளம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்களே என்று நினைத்த போது ஏனோ அழுகை வந்தது

 இப்படி தான் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ளாமல் வெறுப்பதும் பகைமை கொள்வதும் சண்டையில் மோதுவதும் அழிக்க பார்ப்பதும் நடந்து வருகிறது. இந்த அறியாமைக்கு தானும் அடிமையாகி விட்டோமே என்று காட்டு மைனா தன்னை தானே நொந்து கொண்டு அந்த பெண்ணின் கையில் வலிய ஆதரவாக சாய்ந்து கொண்டது.









Contact Form

Name

Email *

Message *