கம்பனின் மேன்மையை அறியாத எவனும் தமிழனாக இருக்க முடியாது தமிழ் அறிந்தவனாகவும் இருக்க இயலாது. கம்பன் கவிதைகளின் அரசன் அறிவின் சக்கரவர்த்தி வார்த்தைகளின் வள்ளல் தத்துவங்கள் படைத்த வித்தக விஞ்ஞானி சத்தியத்தை நிலைநாட்டிய உத்தம திருவிளக்கு அத்தகைய கம்பனையே பழித்தும் இழித்தும் தரக்குறைவாக விமர்சனம் செய்தும் கம்பரசம் என்ற காம களஞ்சியத்தை உருவாக்கிய கழக கூட்டத்தார் இன்று கந்தனை வம்புக்கு இழுத்து நிந்தனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு இதுவே சரியான உதாரணமாகும்.
சனாதன மதத்தை ஏளனம் செய்தார்கள் ஸ்ரீ ராமச்சந்திரனை நிந்தனை செய்தார்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எள்ளி நகையாடினார்கள் அன்னை ஆண்டாளின் அருமை பெருமைகளை குலைத்து தெருவிலே நின்று குரைதார்கள் அப்போதெல்லாம் கூட தமிழ் சமூதாயம் ஆத்திரம் பட்டதே தவிர இந்த அளவிற்கு பொங்கி எழுந்ததில்லை ஆனால் சிவகுமாரரான முருக பெருமானை எமன் ஏறும் வாகனம் ஒன்று இடிக்க வந்து துடித்து போய் இருக்கிறது. இது மக்கள் எழுச்சியால் கிடைத்த நீதி மட்டுமல்ல இறைவனின் அருளால் நடந்த ஸம்ஹரமும் ஆகும் இனி ஒருவன் நமது தெய்வங்களை பற்றி குறை கூறுவதாக இருந்தால் நிச்சயமாக யோசித்தே காரியத்தை செய்வான்
முருகனை பற்றி அவனது தோத்திர பாமாலையான கந்தசஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக கருத்து எழும்பியதும் அதைக்கண்டு எரிமலையாக தமிழ்மக்கள் கொதிப்படைந்ததும் பார்ப்பதற்கு சந்தோசமாக தான் இருக்கிறது. ஆனால் அந்த சந்தோசத்திற்குள் ஒரு விஷ விதை மறைந்திருப்பதை நம்மில் பலர் பார்க்க தவறிவிட்டார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
முருகபக்தர்கள் அனைவருக்கும் முருகனை அறிந்த அனைவரும் அவன் சிவபெருமானின் திருக்குமாரன் என்பதை நன்றாக அறிவார்கள். அன்னை ஆதிசக்தி தனது ஞானவேலை கொடுத்து அறியாமையின் சின்னமான சூரபத்மனை வதம் செய்ய வைத்ததும் நாம் அறியாதது அல்ல கந்தனை கார்த்திகை மைந்தனை மால்மருகனை அன்பருக்கு அன்பனை தேவ சேனாதிபதியாக தேவர்களை மீட்டவனாக பிரணவ மந்திரத்தின் பொருள் அறிந்தவனாக படைக்கும் கடவுளான பிரம்மாவாக இருந்தால் கூட குற்றம் செய்தால் குற்றமே என்று கடிந்து கொண்ட நீதி மானாக நாம் அவனை போற்றுகிறோம் வணங்குகிறோம்
முருகவழிபாடு இமயம் முதல் குமரி வரை இருக்கிறது பகவான் கிருஷ்ணன் தேவர்களை காக்கவும் சேனாதிபதியாக தான் வரும் போது முருகனாக காட்சி தருவதாக சொல்கிறான் மராட்டிய மாநிலம் கர்நாடக மாநிலம் போன்ற பகுதிகளில் அவன் கார்திகேயனாக வழிபடபடுகிறான். பனிபடர்ந்த இமையசாரலில் காஷ்மீர பெருநிலத்தில் அவன் குமாரனாக அழகனாக வர்ணிக்கப்படுகிறான். மஹாகவி காளிதாசன் முருகனின் அழகையும் வீரத்தையும் ஞானத்தையும் குமார சம்பவம் என்ற அழகு மிகுந்த காவியமாக படைத்து வைத்திருக்கிறான்.
எங்கெல்லாம் சனாதன தர்மம் இருக்கிறதோ எங்கெல்லாம் சனாதன தர்மத்தை பின்பற்றுகிற மக்கள் வாழுகிறார்களோ அங்கெல்லாம் முருகபெருமான் வணங்கபடுகிறான். அவன் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் யாருடைய தனி சொத்தாகவும் இல்லாமலும் அவனை நிலம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளோ மொழி என்ற சிறிய பானைக்குள்ளோ அடைக்க முடியாது. அடைக்கவும் கூடாது.
ஆனால் இன்று விந்தையான அரசியல் பேசுகின்ற ஒரு கூட்டத்தால் ஆகாயத்தை கைகளுக்குள் அடக்குவது போல் சமூத்திரத்தை கலசத்திற்குள் அடைப்பது போல் முருகன் என்ற தெய்வத்தை தமிழ் என்ற மொழிக்குள்ளே அடைக்க திட்டமிட்டு பிரிவினை வாதத்திற்கான வித்தை ஊன்றுகிறார்கள் முருகன் தமிழ் கடவுளாக இருக்கட்டும் தமிழ் நாட்டிற்கே உரிய கடவுளாக இருக்கட்டும் தமிழர்களுக்கே சொந்தமானவனாக இருக்கட்டும் அப்படி இருப்பது நமக்கு சந்தோசமே ஆகும் ஆனால் அவனை தமிழனுக்கு மட்டுமே தனி சொந்தமானவன் சனாதன தர்மமான இந்து மதத்திற்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற விஷம பிரச்சாரத்தை நம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. வீடு பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் போல சில சுயநலவாதிகள் முருகனை இந்து மதத்திலிருந்து பிரித்துவிட சதி செய்கிறார்கள் அதை நாம் உணர்ந்து தடுக்க முற்பட வேண்டும்.
கால்டுவெல் போப் என்ற பரங்கித்துரை என்று தமிழகத்தில் காலெடுத்து வைத்தானோ என்று அவன் தன்னை தமிழ் மாணவன் என்று விளம்பர படுத்தி கொண்டானோ என்று காவி ஆடையும் மொட்டை தலையுமாக இந்து சந்நியாசி வேடத்தை தரித்து கொண்டானோ அன்றே தமிழ்நாட்டிற்கு ஏழரை சனி பிடித்தது என்று சொல்லலாம்.
தமிழ் மொழியின் மாண்பை அறியாத தமிழர்களின் பண்பாட்டை உணராத அந்த வெள்ளைக்கார கபட சந்நியாசி திட்டமிட்டே ஒரு கருத்தை உருவாக்கினான். தேவாரம் திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து உலகமெங்கும் பரப்ப போகிறேன் என்று பாசாங்கு செய்த அவன் ஆரியம் திராவிடம் என்று இந்திய மக்களை இருகூறாக பிரித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்ள சதி செய்தான். அது மட்டுமல்ல தமிழ் மொழி திராவிட மொழி சமஸ்கிருதம் ஆரிய மொழி சமஸ்கிருதத்தில் உள்ள கருத்துக்களுக்கும் தமிழில் உள்ள கருத்துக்களுக்கும் சம்மந்தமே கிடையாது. ஆதிகால தமிழர்கள் நான்கு வேதங்களையும் வேதபண்பாடுகளையும் ஏற்றுக்கொண்டதே கிடையாது ஆரியம் மதம் தான் இந்து மதம் தமிழர் மதம் என்பது வேறு அது சைவ மதம் அதற்கும் ஆரிய மதத்திற்கும் சம்மந்தமே இல்லை ஆரியர் திராவிடர்களை நயவஞ்சகமாக சதி செய்து ஆரிய கடவுள்களை தமிழ் கடவுள்களோடு இணைத்து புதிய உறவுமுறைகளை கற்பனையாக உருவாக்கி தமிழர்களை மோசம் செய்துவிட்டார்கள் என்ற கதையை உருவாக்கி அதற்கு இல்லாத ஆதாரம் இருப்பது போல் காட்டி இது தான் விஞ்ஞானம் என்று சாதிக்க ஆரம்பித்தான்
என்றுமே வெள்ளைகாரன்களுக்கு ஒரு புத்தி உண்டு தான் கண்டுபிடித்த பொய்யை உண்மை உண்மை என்று நிரூபிப்பதற்காக சில போலி சாட்சிகளை உருவாக்கிவிடுவான். அப்படிபட்ட போலி சாட்சிகளே நீதி கட்சி குழுவினர்கள். இவர்கள் பரங்கிகாரங்களுக்கு கால்பிடித்தும் விட்டார்கள் அவனது குருட்டு கதைகளை மக்கள் மத்தியில் பரவவும் செய்தார்கள்.
அன்று அவர்கள் விதைத்த அந்த விஷ விதை தான் இன்று திராவிட தேசியம் என்றும் தமிழ் தேசியம் என்றும் ஆட்டோபாஸ் போல் வளர்ந்து நிற்கிறது. அறிவை அடகுவைத்து ஆணவத்தை மட்டுமே துணையாக கொண்ட அந்த கூட்டத்தார் நம்மிடம் கேட்கிறார்கள் வேதம் என்பது பார்ப்பான் ஆடுமாடு மேய்ப்பதற்காக கட்டிவைத்த கட்டுச்சோறு அதை இன்று ஊசிவிட்டது தமிழனுக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை ஒருபோதும் தமிழ் நாட்டில் வேத கலாச்சாரம் என்பது இருந்தது கிடையாது என்று கொக்கரிக்கிறார்கள்.
இன்றைக்கு மூவாயிர்த்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட மிக அருமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும் உலகில் முதல் முறையாக மொழி ஒன்றிற்கு இலக்கணம் வகுத்து அதற்கென்று ஒரு தனிநூலாக எழுதப்பட்ட ஒரே ஒரு படைப்பு தொல்காப்பியம் ஆகும். அந்த தொல்காப்பியத்தில் ஒரு வரிவருகிறது அதாவது
" அறங்கரை நாவில் நான்மறை முற்றிய "
என்பதே அந்த வரியாகும் இதில் குறிப்பிடப்படும் நான் மறை என்பது ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்கள் தான் என்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் ஆனால் இந்த திராவிட பரிவாரங்களுக்கு அது தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது மட்டுமல்ல புறநானூற்றில் பல பாடல்களில் வேதங்கள் பற்றி குறிப்புகள் வருகின்றன அவற்றில் இறை வணக்கமான முதல் பாடலிலேயே சிவபெருமானை குறிப்பிட்டு வேதம் ஓதுகிற அந்தணர்களின் நாவிலும் சிவன் இருப்பான் என்ற பொருள்பட
" கறைமிடறு அணியலும் அணிந்தற்று
அக்கறை மறைநவில் அந்தணர் நுவலும் படுமே "
என்று புலவர் பெருந்தேவனார் பாடுகிறார் இவர் மட்டுமல்ல புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர்
" பாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுது சேண்விளங்கி "
அதாவது பால் புளித்தாலும் பகல் இருண்டாலும் வேதங்கள் நாலும் நெறி தவறினாலும் நீ உன் சுற்றத்தோடு விலகாது வாழ்வாயாக என்பது இதன் பொருளாகும். இன்னும் எத்தனையோ சங்க இலக்கிய சான்றுகள் நான்கு வேதங்களை பற்றி அழகாக பேசுகிறது. இதையெல்லாம் மூடி மறைத்து விட்ட கழக கண்மணிகள் வேதத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் சம்மந்தம் இல்லை என்று பாட்டு பாடுகிறார்கள்.
இத்தோடு விட்டால் பரவாயில்லை இந்த அறிவு மேதாவிகள் நமக்கு சொல்கிறார்கள் முருகன் ஒருவன் தான் தமிழினத்து கடவுள் மற்ற அனைவருமே பார்ப்பனர்கள் திணித்த திணிப்புகள் இவர்களிடம் ஒன்று கேட்கிறேன் நமது பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே
"மாயோன் மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் மேய தீம்புனல் உலகமும்வருணன் மேய பெருமணல் உலகமும்முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
என்ற பாடலில் வேதங்களில் மிகமுக்கியமான தெய்வங்களாக கருதப்படும் இந்திரனையும் வருணனையும் தமிழ் இனத்து தெய்வமாக குறிப்பிடுகிறாரே தொல்காப்பியர் அவருக்கு தெரியாத சங்கதி இன்று இவர்களுக்கு எப்படி தெரிந்தது ஒன்றை நாம் தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் வேதம் என்பதும் சனாதன தர்மம் என்பதும் எப்போதுமே தமிழர்களுக்கு அந்நியமானதாக இருந்தது கிடையாது. தமிழ் மக்களில் இரத்தத்தோடு கலந்துதான் வேத பண்பாடு. அந்தணர்கள் என்பவர்கள் இவர்கள் கூறுவது போல் கைபர்கோன் கணவாய் வழியாக இங்குவந்து குடியேறியவர்கள் கிடையாது. வேண்டுமானால் அவர்களை அப்படி கூறுகிற இந்த திராவிட குஞ்சிகள் பறங்கியர்கள் போட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்தவர்களாக இருக்கலாம்.
இன்னொரு வேடிக்கை இருக்கிறது தில்லையில் ஆடுகிற சிதம்பர நடராஜ மூர்த்தி தமிழர்களின் தெய்வமாக ஆதியில் இருந்தது இல்லையாம். அவரையும் ஆரியர்கள் தான் கொண்டுவந்து புகுத்தினார்களாம். கண்ணன் என்ற திருமால் தமிழர்களுக்கு சொந்தமில்லையாம் எப்படி இருக்கிறது வேடிக்கை பாருங்கள்.
சிவனை ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்று கொடியுடையன், ஈசன், தாழ்சடை பெரியோன், நீல மேனியான், முக்கண் செல்வன், என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் சிவனை கொண்டாடுகிறதே என்று நாம் கேட்டால் ஒருவேளை இவர்கள் அது சிவனின் பெயரல்ல பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களை குறிக்கிற சொல் என்று கூட சொல்வார்கள். காரணம் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று மஹாகவி பாரதியார் குறிப்பிடுகிறார் அதை தான் இங்கு நான் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
முருகனை மற்ற இந்து தெய்வங்களை வசை பாடுவது எவ்வளவு அபாயகரமானதோ அதைவிட அபாயமானது நமது இந்து கடவுள்களை தமிழ் கடவுள் இந்து கடவுள் என்று பிரிப்பதாகும். இந்த பிரிவினை மறையவேண்டும் என்றால் திராவிடம் என்ற மாயையும் தமிழ் தேசியம் என்ற பித்தலாட்டமும் இந்த மண்ணைவிட்டு ஒழிந்து தேசிய உணர்வு மேலோங்க வேண்டும் அது தான் இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்குமென்று நான் கருதுகிறேன்.
குருஜி