Store
  Store
  Store
  Store
  Store
  Store

எல்லோரும் பெண்களாகி விடுவோம் !
   ந்தன கடத்தல் வீரப்பனை பற்றி நமக்கு என்ன தெரியும்? அவன் ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரன், ஆட்களை கடத்தியவன், பத்தாயிரம் வீரர்கள் தேடியும் யார் கையிலும் கிடைக்காமல் வாழ்ந்த கில்லாடி என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அவன் தனிப்பட்ட ரீதியில் நுண்ணுனர்வு மிக்கவன் இயற்கையின் அமைப்புகளை மிக கூர்மையாக ஆராய்பவன் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நிச்சயமாக விரல்விட்டு சொல்லிவிடலாம். 


யானைகள் காடுகளில் ஒரே இடத்தில் வாழாது பயணப்பட்டு கொண்டே இருப்பது தான் அவற்றின் இயல்பு வீரப்பனும் அப்படி தான் பகல் பொழுதில் உறங்கி இரவு பொழுதில் அடர்ந்த காட்டிற்குள் பயணம் செய்வான். அப்படி பயணப்படும் போது கடினமான தாகம் எடுத்தால் ஓடுகிற தண்ணீரை குடிக்க அனுமதிப்பானே தவிர குட்டையாக ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை தானும் குடிக்க மாட்டான் தனது கூட்டாளிகளையும் குடிக்க அனுமதிக்க மாட்டான். 


காரணம் தேங்கி நிற்கும் தண்ணீரில் கிருமிகள் வளரலாம் எதிரிகள் விஷம் கலந்து வைத்திருக்கலாம் தண்ணீர் ஓடி கொண்டே இருந்தால் அதில் எந்த விஷமும் தங்காது எந்த கிருமியும் வாழாது. தேங்குதல் என்றாலே அது விஷம் தான் இது தண்ணீருக்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல மனித வாழ்க்கைக்கும் பொருந்த கூடியது ஆகும். 


இரண்டாயிரத்தி இருபது பிப்ரவரி மாதத்திலிருந்து நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் எடுத்து கொள்ளுங்கள் அது தேங்கி நின்றுகொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கண்ணுக்கு தெரியாத கொரானா என்ற நுண்ணுயிர் உலக மக்கள் அனைவரையும் ஆட்டுக்குட்டிகளை போல கட்டிபோட்டு விட்டது. 


காலையில் கண்விழிப்போம் நல்லதோ கெட்டதோ எதாவது வேலை செய்வோம். இரவில் உறங்க போகும் நேரம் வரையில் மனதாலும் உடம்பாலும் கட்டுபாடுயின்றி சுற்றிவருவோம். நமது சுதந்திரத்தை யாரும் பறித்தது கிடையாது. அப்படி யாராவது பறிக்க நினைத்தால் அவர்களை சும்மா விட்டு விடுவோமா? ஆனால் இன்று நம் நிலைமை என்ன? 


எனக்கு தெரிந்த பலர் வருடமுழுவதும் ஓடி ஆடி வேலை செய்ய வேண்டியது இருக்கிறது பணத்திற்காக நாய் ஓடுவது போல ஓடுகிறேன் ஓய்வு என்பதே இல்லை வாரத்தில் ஒருநாள் ஞாயிற்று கிழமை விடுமுறை என்று தான் பெயர் அன்றும் தலையை பிய்த்து கொள்ளுகிற அளவிற்கு வேலை கிடக்கிறது. ஒருநாளாவது வேலை எதுவும் செய்யாமல் கட்டிலேயே படுத்து கிடக்க மாட்டோமா என்று தோன்றுகிறது என்று கூறுவார்கள். ஆனால் இன்று அவர்கள் நினைத்தாலும் வேலை செய்ய முடியாது. ஒரு நாள் இரண்டு நாள் என்று இல்லாமல் மாதக்கணக்கில் வெளியே கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடைக்க வேண்டிய நிலை இருக்கிறது. 


பலருக்கு இது பழக்கமில்லாத விஷயம் தொடர்ந்து செய்கின்ற வேலையை செய்யாமல் விட்டால் மனம் பித்துபிடித்துவிடும். எதிலும் நிலைகொள்ள முடியாமல் பதட்டமும் அச்சமும் நடுக்கமும் ஒருவிதமான குழப்பமும் வந்துவிடும். நமது வருங்காலம் என்னவாகுமோ ?பிள்ளைகுட்டிகள் நிலை எப்படி இருக்குமோ? என்றெல்லாம் நினைத்து நினைத்து வீணான கற்பனையில் திளைத்து நிஜமான நோயாளியாகவே மாறிவிடுவார்கள். 


நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பைபிள் கிளாஸ் என்று வருடத்தில் பதினைந்து நாட்கள் என் பள்ளியில் நடத்துவார்கள் அதில் நான் ஆர்வத்தோடு கலந்து கொள்வேன். காரணம் பைபிள் மீதுள்ள ஆர்வத்தால் அல்ல அதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்தரமான சாக்லேட், கேக் போன்றவைகளும் நாற்பது வருடங்களுக்கு முன்பு மிக அரிதாகவே கிடைக்கின்ற ஐஸ்க்ரீம் போன்ற தின்பண்டங்களுக்காகவும் பைபிள் வகுப்பில் முனைப்போடு கலந்து கொள்வேன். 


அப்படி ஒருநாள் பைபிள் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது வகுப்பு எடுத்து கொண்டிருந்த பாதிரியார் உலகம் அழியும் விதத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தார். வானம் இருண்டு விடும் சூரியனே உதிக்காது வருடக்கணக்கில் மழை பொழியும் உயிர்கள் எல்லாம் தத்தளிக்கும் மலைகளையே மூழ்கடிக்கும் வெள்ளத்தின் மேற்பரப்பில் மின்னல்கள் விழுந்து நெருப்பு பற்றிக்கொள்ளும் வானத்திலிருந்து பெரிய பெரிய கற்கள் பூமியின் மீது வந்து மோதும் நாமெல்லாம் உடல் நசுங்கி கைகால் ஒடிந்து உயிருக்காக போராடுவோம் என்று பல்வேறு விஷயங்களை வர்ணனை செய்ய ஆரம்பித்தார். எனக்கு அப்போது அது பெரியதாக தெரியவில்லை. அம்புலிமாமா கதை படிப்பது போல கேட்டுவிட்டேன். 


ஒருநாள் இரவு திடிரென்று விழிப்பு வந்துவிட்டது. அந்த பாதிரியார் சொன்னது நினைவுக்கு வந்தது சுற்றிலும் இருட்டுவேறு பயத்திற்கு கேட்கவா வேண்டும் உடம்பெல்லாம் தந்தி அடித்தது வேர்த்து கொட்டியது. நாக்கு அன்னாக்கில் சென்று ஒட்டி கொண்டது வானத்திலிருந்து நிலா பெயர்ந்து தலைமேல் விழுவது போலவும் நட்சத்திரங்கள் உதிர்ந்து வீட்டு கூரைமேல் விழுவது போலவும் கற்பனை வந்தது. நெஞ்சு அடைத்து கொள்வது போலவும் மூச்சி நின்றுவிடுவது போலவும் தோன்றியது அந்த பயம் தான் அதே போன்ற பயம் தான் இன்று பலருக்கு கொரானா ஏற்படுத்தி இருக்கிறது. 


ரயில் இயங்காது பஸ் ஓடாது தொழிட்சாலை இயங்காது வேலை போய்விடும், வீட்டில் தோசைக்கு மாவு அரைக்க கூட க்ரேண்டர் வேலை செய்யாது காரணம் மின்சாரம் இருக்காது மின்சார பில் கட்ட காசு இருக்காது குழந்தைகள் படிப்பு அரோகரா வங்கி சேமிப்பு கோவிந்தா மீறி வேலைக்கு போனால் கொரானா வரும் உயிர் போகும் பெண்டாட்டி பிள்ளைகள் அனாதையாக தெருவில் நிற்பார்கள். என்று எத்தனை எத்தனையோ பயம் உலக முழுவதும் பலருக்கு ஏற்பட துவங்கி விட்டது. 


இந்த நிலையை மனநல மருத்துவர்கள் ஓசிடி நோய் என்று கருதுகிறார்கள். இது புதிய நோய் அல்ல பழசு தான் ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அதிகமான மனிதர்களை தாக்குவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நோயின் அஸ்திவாரமே விபரீத கற்பனையாலும் அச்சத்தாலும் வருகிறது என்று கூறலாம். உலகத்தில் இன்று நடைபெறுகிற சம்பவங்களை பார்த்தால் இதே போன்ற நோய்களும் வேறுபல விபரீதங்களை அதிகரித்து விடுமோ என்ற நியாயமான அச்சம் நமக்கு வருகிறது. 


பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் காட்டுகிற வன்முறை உணர்ச்சி இப்போது சற்று அதிகரித்து இருக்கிறது. முன்பு ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் சில மணிநேரங்களாவது ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இப்போது அது இல்லை. காலையிலிருந்து இரவு வரை ஒரே முகத்தையே பார்க்க வேண்டிய நிலைவரும் போது சிறிய குற்றமும் பெரியதாக தோன்றும். சோம்பேரியின் மூளை சாத்தானின் பட்டறை என்ற பழமொழியின் உண்மை விளக்கத்தை அப்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. இயக்கம் இல்லை என்றால் உயிர் இல்லை என்பார்கள் தனிமனித வளர்ச்சியாக இருக்கட்டும் சமூதாயத்தின் வளர்ச்சியாக இருக்கட்டும் அது தொடர்ச்சியான செயல்களால் தான் நடந்தேறும். 


இப்போது மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற கட்டாய தனிமை மிக கொடூரமானது. நம்மில் பலர் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு காஷ்மீரில் முழு அடைப்பு என்று தான் கேள்வி பட்டிருப்போம் தவிர அனுபவித்து அறிந்திருக்க மாட்டோம். நாம் என்றில்லை பெருவாரியான நாடுகளின் நிலையம் அப்படி தான். சில நாட்கள் என்றால் பரவாயில்லை எப்போது சகஜ நிலை வருமென்றே தெரியாத போது இந்த தனிமை யாரையும் கொல்லத்தான் செய்யும். 


போதை பழக்கம் புகையிலை பழக்கம் உடையவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். குறித்த நேரத்தில் சிகரெட் பிடிக்க முடியாத நிலை தற்காலிகமாக ஏற்படும் போதே பரபரப்புக்கு உள்ளாகும் மனது நாட்கணக்கில் மாத கணக்கில் காத்திருக்க வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி பொறுக்கும். அதிர்ந்து பேசவே அஞ்சுகிற நபர்கள் எல்லாம் கூட அடிதடி ஆசாமியாகி விடுவார்கள் அதிலும் குறிப்பாக போதை பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களை கஷ்டப்படுத்துவதோடு மட்டுமல்லாது தன்னை தானே கொடுமைப்படுத்தி துன்பப்பட ஆரம்பித்து விடுவார்கள். நான் அறிந்த வரையில் சில தொழில் அதிபர்களும் சினிமாகாரர்களும் இந்த மனநிலையால் மிக மோசமான பாதிப்பு அடடைந்து இருக்கிறார்கள். காரணம் உழைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அல்ல காசு பணம் வருவது நின்றுவிட்டதே என்ற பேரச்சமே ஆகும். 


தனிமை என்று வரும் போது ஆண்கள் கோழைகள் கூட்டத்தில் கும்பலாக சேர்ந்து தான் அவர்களால் கொக்கரிக்க முடியும். தனியாக அகப்பட்டு கொண்டால் அழுதுவிடுவார்கள் காரணம் குடும்பம் தொழில் சமூகம் என்று அனைத்துமே தனது தலையில் தான் இருக்கிறது தான் தான் அவைகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் வளர்க்க பட்டதே ஆகும். ஒருவர் என்னிடம் சொன்னார் என் ஒருவனுக்கு மட்டும் தான் பிரச்சனை என்றால் பரவாயில்லை என்னை நம்பி இருக்கும் ஐம்பது பணியாளர்களுக்கும் இது பிரச்சனை நான் ஓடவில்லை என்றால் நான் உழைக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். அவரது வருத்தம் நியாயமானது என்றாலும் அர்த்தமற்றது என்று யோசித்தால் புரியும். 


இந்த உலகில் யாரும் யாரை நம்பியும் பிறக்கவுமில்லை வாழவுமில்லை அருணாச்சல செட்டியார் வேலை தருவார் என்று தான் ஏழுமலை பிறந்தானா? அல்லது அவனது அப்பனும் அம்மையும் அப்படி தான் அவனை பெற்றார்களா? கடவுள் ஏழுமலையை படைத்தான் ஏழுமலைக்கு எப்படியும் அவன் உணவு கொடுப்பான் நான் பட்டினி கிடந்து தான் சாகவேண்டுமென்று இறைவன் எனக்கு விதித்திருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது. 


நமக்கு வருகிற இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் அதை அனுபவித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு தான் பகிரத பிரயத்தனம் செய்தாலும் வாழ்க்கையை விட்டு ஓடிவிட முடியுமா? இல்லை இந்த உடம்பில் பசி வருகிறது நோய் வருகிறது மூப்பு வருகிறது வேறு உடம்பை மாற்றி கொள்ளலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்குமா? எனவே எல்லா வற்றையும் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 


துன்பத்தை விரட்டி அடிப்பதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது அதற்கு துன்பத்தை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் கஷ்டம் வந்தால் உன் இதயம் படபடக்கிறதா அந்த தாளத்தை ரசி வயிற்றுகுள் இனம் புரியாத கனம் தெரிகிறதா? அந்த பாரத்தை ரசி தொண்டை அடைத்து கொண்டு விக்கல் வருகிறதா? அடக்க முடியாமல் அழுகை பொங்கி கொண்டு வருகிறதா? அழும்போது நீ எப்படி இருப்பாய் என்று கற்பனை செய் அழகாக நாசுக்காக அழவேண்டும் என்று பயிற்சி எடு துன்பம் உன்னை கண்டு பயந்து நடுங்கி தூரத்தில் நிற்பதை உன் கண்களாலேயே பார்ப்பாய் அதிகப்படியாக என்ன வந்துவிட போகிறது மரணம் வரும் அவ்வளவு தானே செத்து விட்டு மறுபடியும் பிறப்போம் அப்போதும் வாழ்வோம் என்று மனநிலையை மாற்றி கொள்ளுங்கள்.


உண்மையிலேயே ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள் தைரிய சாலிகள் காலகாலமாக துன்பத்தை அனுபவித்து அனுபவித்து அதற்கு பழகி நெஞ்சத்தில் உரமேறி விட்டது அவர்களுக்கு விபரீதமான எண்ணங்களால் நாம் அவதிப்படும் போது நம் தாயிடமோ மனைவியிடமோ மகளிடமோ மனமிட்டு துயரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்கள் கொடுக்கும் தைரியம் ஆயிரம் யானைகளின் பலத்தை நமக்கு கொடுக்கும். பெண்களுக்கு மட்டும் கஷ்டம் இல்லை என்று நினைக்கிறீர்களா அவர்களுக்கும் உண்டு ஆனால் ஆண்கள் எதையும் ஒழித்து மறைத்து வைத்து கொள்ள தெரியாதவர்கள் பெண்கள் அப்படி அல்ல தங்கள் மன உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார்கள். 


இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் கொரனவால் வந்திருக்கும் இந்த தற்காலிக தனிமையை துயரத்தை பயத்தை போக்கி கொள்ள ஆண்கள் எல்லாம் பெண்களை போன்ற மனநிலையை வளர்த்து கொள்ளுங்கள் பெண்கள் ஆண்களின் தவறுகளை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். இவைகளை மட்டும் பரஸ்பரம் செய்தால் இந்த துயரம் மட்டுமல்ல வேறு எந்த துயரம் வந்தாலும் அதையும் வெல்லலாம். 


குருஜி


Contact Form

Name

Email *

Message *