Store
  Store
  Store
  Store
  Store
  Store

மோடியும் ஸ்டாலினும் நண்பர்களா...?தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணியாக சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதா? 


இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வியை அதிகமாக யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் அதற்காக அப்படிவொரு சிந்தனையை நாம் செய்ய கூடாது என்று கட்டாயம் இருக்கிறதா? தாராளமாக செய்து பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பாக இருக்கும் பிரச்சனை என்னென்னவென்று கண்டிப்பாக யோசிக்க வேண்டும். 


முருகனுக்கான காவடியில் துடைப்பத்தை வைத்து ஊர்வலம் சென்ற திமுக, ராமர் சிலைக்கு செருப்புமாலை அணிவித்த திமுக, விநாயகருக்கு மலத்தால் அபிஷேகம் செய்த திமுக, இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று ஏளனம் செய்த திமுக, ராமர் படிக்காதவர் குடிகாரர் என்றெல்லாம் விமர்சனம் செய்த திமுக, இந்து திருமண மந்திரங்கள் அசிங்கமானவைகள் என்று கருதிய திமுக, இந்துதுவா கட்சியோடு எப்படி கூட்டணிவைக்க முடியும். எந்த முகத்தோடு மக்களை அவர்கள் சந்திப்பார்கள் என்று கேள்விகேட்பது நிச்சயம் அப்பாவி தனமாகும். 


இன்றைய காலகட்ட திமுக தனது கடந்தகால நடவடிக்கைகளை முற்றிலுமாக மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு நாங்கள் இந்துக்களில் விரோதிகள் அல்ல எங்கள் கட்சியில் முக்கால் பங்கிற்கு அதிகமான தொண்டர்கள் இந்துக்களே என்று கூறுவது எதனால் என்று நின்று நிதானமாக யோசித்து பாருங்கள். உண்மை தெரியும். 


கறுப்பர் கூட்டம் செய்த அசிங்கமான பிரச்சாரத்தாலோ கந்தசஷ்டி கவத்திற்கு மக்களிடம் பெருகிய அதீதமான ஆதரவுனாலோ தங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பாய்ந்து விடும் என்ற அச்சத்தாலோ அவர்கள் நாங்களும் இந்துக்களை நேசிக்கிறோம் என்று கூறவறவில்லை.


திமுகவில் வரலாற்றை சற்று திருப்பி பார்த்தோம் என்றால் அவர்களது ஒவ்வொரு செயலுக்கு உள்ளேயும் எதோவொரு காரணம் மறைந்திருக்கும். அந்த காரணம் நிச்சயம் கலைஞர் அவர்களின் சொந்த நலனை சார்ந்ததாகவே இருக்கும். அவசரநிலை பிரகடன படுத்தியவுடன் இந்திராகாந்தியை எதிர்க்காத கருணாநிதி அவர் எம்.ஜியாரோடு நட்பாக மாறிவிடுவாரோ என்ற சந்தேகம் வலுவடைந்தவுடன் அவசர நிலையை எதிர்க்க துணிந்தார். 


திருமதி காந்தி கலைஞர் மீதும் அவரது கட்சியினர் மீதும் பலவிதமான குற்றசாட்டுகள் இருந்ததனால் திமுக அரசை கலைத்தார் வரிகேட்டவுடன் வெள்ளைக்காரனை எதிரித்து வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி கர்ஜனை செய்தேனோ அதே கர்ஜனையை இந்திராவை எதிர்த்து கலைஞர் செய்தார். அது மட்டுமா விமானநிலையத்தில் வைத்து திருமதி காந்தி கொலை செய்வதற்கும் முயன்றார்கள். 


புருஷன் செத்தவுடன் கற்புக்கரசியான பெண்ணொருத்தி அவனது கல்லறைக்கு சென்று விசிறி வீசி கொண்டிருந்தாளாம் ஐயோ பாவம் கணவன் மீது இந்த பெண்ணிற்கு என்ன பாசம் என்று வியந்த ஒரு வழிப்போக்கன் அம்மா புதைத்தவர்களுக்கு விசிறி வீசுவதனால் எந்த பயனுமில்லை நீ வீட்டிற்கு போ என்று சொன்னாராம். அதற்கு அந்த பெண் அண்ணாச்சி நான் அவருக்காக காற்று வீசவில்லை கல்லறை ஈரமாக இருக்கிறது நான் வேறொருவரை திருமணம் செய்ய வேண்டும் கல்லறை ஈரம் காய்வதற்குள் மறுமணம் செய்துகொண்டாள் என்று யாரும் என்னை குறைகூற கூடாது அல்லவா அதற்கா தான் காற்று வீசுகிறேன் என்றாளாம். 


இதே மாதிரியான கதையை தான் கலைஞர் அன்று செய்து காட்டினார். தனது கட்சியினர் மீது மிசா சட்டத்தை பிரயோகம் செய்த இந்திராவை தனது மந்திரி சபையை கலைத்து தெருவிலே நிறுத்திய இந்திராவை கொலை செய்யும் அளவிற்கு தன்னை தள்ளவிட்ட இந்திராவை பார்த்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக என்று தமிழ் பரணி பாடினார் முத்தமிழ் அறிஞர் மூதறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள். 


கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் திமுகவின் பரம்பரை குணம். உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல்கொடுப்போம் என்று ஆயிரம் வசனங்கள் பேசினாலும் அவர்களின் அடிப்படை சிந்தனை என்னவோ சுயநலம் மட்டும் தான். பழையகால சரித்திரத்தை விட்டு விடுவோம் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட திமுகவில் நடந்தது என்ன? என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். 


திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் மேடையெங்கும் பாரதிய ஜனதாவை பற்றி பேசுகிற போது அது பண்டாரம் பரதேசிகளின் கட்சி பார்ப்பனிய கூட்டத்தாரின் பிரச்சார பீரங்கி சனாதன நாஜிக்களின் கூடாரம் என்று தான் முழங்குவார்கள் ஆனால் அரசியல் காரணங்களுக்காக வாஜ்பாய் அவர்களோடு கூட்டணி வைத்தவுடன் அவர்கள் முன்பு பேசிய வார்த்தைகள் எல்லாம் மறைந்து போய்விட்டது. பண்டாரம் பரதேசிகளாக தெரிந்த பாஜகவினர் கலைஞருக்கு வரங்கொடுக்கும் சாமியாகவும் வாரிக்கொடுக்கும் வள்ளலாகவும் தெரிந்தார்கள். வாஜ்பாய் அவர்களின் ஆட்சியிலே முழுக்க முழுக்க நன்மையை மட்டுமே அனுபவித்து விட்டு முரோசொலி மாறனுக்கான மருத்துவ செலவை கூட மத்திய அரசின் தலையிலே கட்டிவிட்டு ஆட்சிக்காலம் முடிந்த அடுத்த நிமிடத்திலேயே காங்கிரஸ் பக்கம் தாவி போனதை யாரால் மறக்க முடியும்? எனவே ஆயிரம் நாத்திகம் பேசினாலும் தனது வயிறு நிறையும் என்று தெரிந்தால் இந்துதுவா தான் எங்கள் ஜீவாதாரம் என்று முழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 


ஜெயலலிதா அம்மையார் காலமானவுடன் அவரது கட்சி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவாக ஆனவுடன் திமுகவின் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் தன்னை முதல்வர் ஆக்கும்படி டெல்லிக்கு பாஜக தலைமையிடம் தூது அனுப்பினார். தான் முதல்வராக ஆவதற்கு மேலிடம் ஆதரவு தந்தால் ஆட்சிக்காலம் முடியும் வரையிலும் அதற்கு பின்பும் மோடியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்து நிற்பேன் என்ற உறுதி மொழியையும் நாசுக்காக அனுப்பி வைத்தார். தமிழகத்தின் நல்ல காலம் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவே இல்லை. மெளனமாக இருந்துவிட்டார் இதனால் தான் நமது ஸ்டாலின் அவர்கள் அரசியல் சித்து விளையாட்டுகளை ஆடாமல் நிறுத்தி கொண்டார் 


நரேந்திர மோடி அவர்கள் ஸ்டாலினை புறம் தள்ளியதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு பொதுவாக நாம் மோடியை பற்றி நினைக்கிற போது அவர் உறுதியானவர் எதையும் அறிவு பூர்வமாக யோசனை செய்து முடிவுகளை எடுப்பார் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டார் என்று மட்டும் தான் நினைக்கிறோம் ஆனால் திரு மோடி எந்த அளவிற்கு அறிவுபூர்வமானவரோ அதே அளவிற்கு உணர்ச்சிமயமானவர் என்பதையும் நாம் மறக்க கூடாது. 


கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயதாகி நோய்வாய்ப்பட்டு அரசியலிருந்து விலகி வீட்டிலே ஓய்வில் இருந்த போது பிரதமராக இருந்த மோடி பதவி ஏற்ற சில தினங்களிலேயே மரியாதை நிமித்தம் கலைஞரை காண கோபாலபுரம் வந்தார் அப்படிவந்த திரு மோடி அவர்களுக்கு சில நாட்களிலேயே கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தி.மு.க முன்னின்று நடத்தியது இது பிரதமரின் மனதை மிகவும் பாதித்து விட்டது அவர்கள் தலைவரை நான் சந்தித்து ஆறுதல் கூறியதை கூட மறந்துவிட்டு கறுப்புக்கொடி காட்டுகிறார்களே என்று அவர் முணுமுணுத்தது டெல்லி அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டது. 


அடுத்தது பொதுதேர்தல் அறிவிக்கபட்டவுடன் ராகுல்காந்தியை பிரதம வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சியே கூட அறிவிக்காத நிலையில் அவர்களில் கூட்டணி தலைவர்களான மம்தா பேனர்ஜி, அகிலேஷ் யாதவ் போன்றோர்கள் சொல்ல தயங்கி இருந்த போது கூட திமுக தலைவர் இந்தியாவிலேயே முதல் முறையாக ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக முந்திக்கொண்டு பிரகடன படுத்தினார். இதுவும் பாஜக வின் மனதை வெகுவாக பாதித்தது எனலாம். 


இவைகள் எல்லாவற்றையும் விட இப்போது சில மாதங்களுக்கு முன்பு பிரசாந் கிஷோர் என்ற அரசியல் வியூக விற்பன்ன வியாபாரியை தங்களது கட்சிக்கு வழிகாட்டியாக கொள்கை வகுப்பாளராக ஆக்கியது மோடி அவர்களை மிகவும் கோபமடைய வைத்திருக்கிறது. காரணம் பிரசாந் கிஷோர் என்ற நபர் ஆரம்பத்தில் மோடிக்கு ஆலோசனை வழங்குபவராக தான் இருந்தார் ஆனால் வெற்றிபெற்ற பிறகு தனக்கு ராஜ்ஜிய சபா உறுப்பினர் பதவி வேண்டுமென்று நெருக்கடி கொடுத்தார். அதே நேரம் உள்துறை அமைச்சருக்கும் தலைமை அமைச்சருக்கும் இடையில் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் சில காரியங்களை செய்தார். அதே நேரம் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக பீகார் எல்லையோடு தனது அரசியல் கனவை நிறுத்தி வைத்திருந்த நித்திஷ் குமாரை உசுப்பேத்தி பிரதமமந்திரி வேட்பாளராக நிற்கும்படி பிரசாந் கிஷோர் தூண்டிவிட்டார். இவையெல்லாம் அவர் மீது மோடிக்கு வருத்தத்தை அதிகப்படுத்தவே அவரோடு உள்ள அனைத்து உறவையும் மோடி துண்டித்து கொண்டார். 


இந்த நிலையில் திமுக பிரசாந் கிஷோரை கொள்கை வகுப்பாளாராக பல ஆயிரம் கோடிகளை கொடுத்து குத்தகைக்கு எடுக்கிறது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இந்த செயல் மத்திய அரசுக்கு ஆகிவிட்டது. சகலவிதத்திலும் திமுக என்பது நம்மை விட்டு வெகுதூரம் போய்விட்டது எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்று ரஜினியை கட்சி ஆரம்பிக்க செய்து திமுக வின் ஒட்டு பலத்தை குறைக்க வேண்டும் அதிமுக வை கையிலே போட்டு திமுக கட்சியினருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் இரண்டாவதாக தமிழகத்தில் தனது சொந்த செல்வாக்கை வளர்த்து கொள்ள இந்துதுவா சக்திகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் 


இது தான் ஸ்டாலின் அவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது. ரஜினி யாருடைய ஆதரவுமின்றி தனியாக கட்சி ஆரம்பித்தால் மிக சுலபமாக அவரை ஓரம் கட்டிவிடலாம். ஆனால் தேசிய கட்சியுடைய மறைமுக ஆதரவோடு கட்சியை துவக்கினால் ரஜினியின் வேகம் அபரிதமாக இருக்கும் அது தனது கட்சியை தான் பாதிக்கும் எனவே அதற்குள் எந்த வகையிலாவது பாஜகவின் நட்பை பெறவேண்டும் என்று திட்டம் தீட்டியது தான் தற்போதைய நாங்களும் இந்துக்கள் தான் நாங்களும் இந்துக்கள் தான் என்ற அவசர அவசரமான அதிரடி அறிவிப்புகள். 


திமுக தான் கொள்கையை விட்டுக்கொடுத்து விட்டு யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி சேரும் மோடியின் கட்சி அப்படி அல்ல அதற்கு கொள்கை பிடிப்பு நிறையவே உண்டு என்று நாம் கருதினால் நம்மை போல அப்பாவிகள் யாரும் இருக்க மாட்டார்கள். 


எப்படி மோடிக்கு தமிழ்நாட்டின் ரஜினியின் செல்வாக்கு எந்த அளவு இருக்குமென்று மிக நன்றாக தெரியும் சரியாக சொல்லுவது என்றால் கமல்ஹசன், சீமான் இவர்கள் வாங்குகிற ஓட்டை விட ஒரு இரண்டு சதவிகிதம் அதிகமான ஓட்டுகளை ரஜினி பெறுவாறே தவிர ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு ரஜினியால் வரமுடியாது என்று அரசியல் சாணக்கியரான மோடி அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதே நேரம் அதிமுக பலவீன பட்ட இன்றைய காலத்தில் திமுக அச்சத்தோடும் குழப்பத்தோடும் கலங்கி நிற்கும் இந்த நேரத்தில் குட்டி குட்டி கட்சிகள் ஆளுக்கொருபக்கம் குறிவைத்து நிற்கும் இன்றைய பொழுதில் பாஜகவை தமிழ் நாட்டில் சட்டசபைக்குள் அனுப்பவில்லை என்றால் பிறகு எப்போதுமே அனுப்புவது மகாசிரமமாகி விடும் இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது. என்ற வகையில் மோடியின் அரசியல் கணக்கு இருக்கிறது. 


இதற்காக அவர் ஸ்டாலின் என்ற குதிரையை பயன்படுத்தவும் தவறமாட்டார். குதிரை மோடியை சவாரி செய்ய விடமாட்டேன் என்று பிடிவாதம் செய்யபோவதும் கிடையாது. சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதில் கைதேர்ந்த தமிழ் சாணக்கியனான கருணாநிதி அவர்கள் ஒரு வாசகத்தை அடிக்கடி கூறுவார் அரசியலில் யாரும் நிரந்தர பகைவர்களும் கிடையாது நண்பர்களும் கிடையாது என்பார். திருவள்ளுவரின் திருக்குறளை மொழிபெயர்த்து மோடிக்கு சொல்லும் யாரோ ஒரு ஆசாமி இந்த வாசகத்தையும் மோடியின் காதுகளில் போட்டிருக்கலாம். 


எது எப்படியோ வரக்கூடிய ஐந்து வருடங்களில் திராவிட கட்சிகளின் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்து விழுவது நிச்சயமாக நடக்குமென்று தெரிகிறது. கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட கொள்கை கலைஞர் மகனாலேயே முடிவுக்கு வரவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. 


குருஜி


Contact Form

Name

Email *

Message *


Copyright ©  Sri Guruji Ashramam - www.srigurujiashramam.comAll rights reserved.  Contact us