Store
  Store
  Store
  Store
  Store
  Store

கலைஞரின் மகளே அழாதே !




    மிழையும் கலைஞரையும் பிரிக்க முடியாது சூரியனையும் அதன் வெப்பத்தையும் கூட பிரித்துவிடலாம் கலைஞரையும் தமிழ் தொண்டையம் அவரிடமிருந்து பிரிக்கவே இயலாது. கலைஞர் என்றால் தமிழ் தமிழ் என்றால் கலைஞர் என்று ஒருவரோடு ஒருவர் இணைபிரியாது ஒட்டி ஒன்றாக இருக்கிறார்கள் 


அப்படிப்பட்ட கலைஞர் மட்டுமல்ல கலைஞர் அவர்களின் குடும்பமே தமிழுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். தொல்காப்பியம் எழுதப்பட்டதும் சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலகேசி போன்ற இலக்கியங்கள் உருவாவதற்கும் ஏன் வள்ளுவன் திருக்குறளை படைப்பதற்கும் கலைஞர் குடும்பம் தான் காரணம் என்றால் அது மிகையாகாது இன்று மேடை தோறும் துண்டு சீட்டு கலாச்சாரத்தை உருவாக்கி இருப்பதும் அவரது குடும்பம் தான் என்பதை தமிழ்நாடு மறக்க கூடாது. 


கலைஞர் குடும்பத்தில் குறிப்பாக சொல்லுவதாக இருந்தால் கனிமொழி அவர்களின் தமிழ் தொண்டு இருக்கிறதே அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது காலத்தால் அழியாத வண்ணம் இமயமலை சாரலில் எழுதிவைக்கபடவேண்டியது. அந்த அம்மையாரின் தமிழ் தொண்டு ஒன்றா இரண்டா எதை சொல்லுவது எதை விடுவது என்றே தமிழக மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. 


தமிழே தான் இருக்கும் இடத்தில் இருந்து திருவீதி உலா கிளம்புவது போல் அன்னை கனிமொழி அவர்கள் தமிழகத்தின் தலைநகரிலிருந்து பாரதத்தின் தலைநகருக்கு திக்விஜயம் ஒன்றை ஆகாய விமானம் மூலம் நடத்தி இருக்கிறார். 


இமயத்தின் உச்சியில் சேரன் கொடிநாட்டியது போல இமய வரம்பன் தலையில் கல் ஏற்றி கண்ணகிக்கு ஆலயம் எழுப்ப எடுத்துவருவதை போல சரித்திர ஏடுகளால் புகழப்பட்ட வேண்டிய தமிழ் புலவர்களால் வெண்பா சூடி பாராட்டப்பட வேண்டிய இந்த அறிய பெரிய திக்விஜயத்தில் ஒரு சிறிய களங்கத்தை வடபுலத்தார் ஏற்படடுத்தி இருக்கிறார்கள். 


விமான நிலையத்திற்குள் அம்மாயாரோடு உரையாடிய அதிகாரி ஒருவர் உங்களுக்கு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியர் இல்லையா? என்ற ரீதியில் கேள்வி கேட்டிருக்கிறார் சிங்கத்தை பார்த்து சிறு நரி ஒன்று கேலி பேசுவது போல் இருக்கிறது. இந்த கேள்வி கனிமொழியார் யார் அவரது தகுதி என்ன? தராதரம் என்ன? என்பதை எல்லாம் தெரிந்திருந்தும் அந்த வடக்கு அதிகாரி இடக்கு தனமாக கேள்வி கேட்டிருக்கிறார். 


அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று வீர முழக்கமிட்டவரின் மகளை திண்னையில் படுத்தேனும் திராவிட நாடு பெற்றே தீருவோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சபதம் ஏற்றவரின் குடும்பத்தின் திருவிளக்கை இப்படி ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்றால் கேட்பவனுக்கு அந்த துணிச்சலை கொடுத்தது யார்? இந்த நாடு ஒரு வீர மங்கையை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு வளர்ந்து விட்டதா என்ன? சூரியனையே உதிக்காதே என்று உத்தரவு போட்டு நிறுத்தி வைத்த பரம்பரையை எங்கள் பரம்பரை அந்த வடக்கத்தியானுக்கு எப்படி தெரியும்? 


இந்தியை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? அல்லது எங்களை ஹிந்தி அறிந்து கொள்ள வேண்டுமா? என்று உணரவேண்டிய காலகட்டம் விரைவிலே வரும். அப்போது தெரியும் சுட்டெரிக்கும் சூரியன் எது குளிர்ச்சி தரும் வெண்ணிலவு எதுவென்று நாங்கள் ஏன் இந்தியை அறிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கும் ஹிந்திக்கும் என்ன சம்மந்தம்? நாங்கள் தான் மும்மொழி வேண்டாம் இருமொழியை போதுமென்று வடக்கு பக்கம் வாசலை இழுத்து மூடி விட்டோமே பிறகு எப்படி இந்தி எங்களுக்கு தெரியும்? 


அன்றொரு நாள் 1996 ஆம் வருடம் என்று நினைக்கிறன் இந்தியாவின் துணை பிரதமராக இருந்த தேவிலால் அவர்கள் சென்னைக்கு விஜயம் செய்கிறார் அவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் வடக்கிலே பொதுவாக நிறையபேர் பேசுகிற ஹிந்தியை அவர் பேசமாட்டார் ஹிந்தி மொழியிலேயே மிக கஷ்டமான ராஷ்டரபாஷா என்ற வட்டார மொழியை பேசுகின்ற பழக்கம் உடையவர் அவர். அவர் தன்னுடைய இயல்புக்கு ஏற்றவாறு தானறிந்த ஹிந்தியை சென்னையிலேயேபேசுகிறார் . சென்னை மக்கள் அந்த இந்தியை தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எனவே தேவிலாலின் இந்தி சொற்பொழிவை அதாவது ராஷ்டரபாஷா சொற்பொழிவை மிக அழகாக தமிழில் மொழி பெயர்த்து சொன்னது யார் தெரியுமா? 


யார் விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்பதற்காக அவமானப்பட்டாரோ யார் வடக்கு அதிகாரியால் கேலி பேசப்பட்டாரோ அந்த பெண் புலியான கனிமொழி தான் தேவிலாலின் இந்தி பேச்சை தமிழில் மொழிபெயர்த்து கொடுத்தவர் அப்பேர் பட்ட இந்தி தெரியாத அப்பாவியை இந்தியில் ஒரு வார்த்தை கூட இதுவரை காதில் கேட்காத ஒரு வெகுளியை வடக்கே அதிகார மையம் குவிந்து கிடக்கிறது என்பதற்காக கேட்க கூடாத கேள்வியை எல்லாம் கேட்டிருக்கிறார்கள் இதை நினைத்து பொதிகைமலை வெடித்து சிதறாமல் இன்னும் இருக்கிறதே இந்துமா கடல் பொங்கி எழாமல் இன்னும் அமைதி காக்கிறதே அதை நினைத்தால் நெஞ்சமெல்லாம் விம்புகிறது கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடி நதியாக பாய்கிறது. 


தமிழின தலைவர் இன்று இருந்திருந்தால்? வள்ளுவன் குறளுக்கு வாழ்க்கை தந்த வல்லவர் இன்று ஜீவனோடு இருந்திருந்தால் முத்தமிழ் அறிஞர் தத்துவ வித்தகர் அரசியல் ஞானி கலைஞர் கருணாநிதி அவர்கள் இன்று வாழ்ந்திருந்தால் அவருடைய குலக்கொடிக்கு அவரின் கண்ணின்மணிக்கு அவருடைய நெஞ்சமெல்லாம் நிறைந்த திருமகளுக்கு இத்தகைய அவமானம் ஏற்பட்டு இருக்குமா? 


ஓ நாடே சேரனும் சோழனும் பாண்டியனும் அரசாண்ட பொன்னாநாடே பல்லவனால் கலைவளர்க்க பட்ட திருநாடே வள்ளுவனும் இளங்கோவும் வான்புகழ் கம்பனும் பிறந்திருந்த வளநாடே உனக்காகவே தனது ஆயுள் முழுவதும் பாடுபட்ட ஒரு தியாக தலைவரின் திருமகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த கொடுமையை கண்டு நீ எரிமலை போல சீறி இருக்க வேண்டாமா? அரிமாவை போல தாவி தாக்கி இருக்க வேண்டாமா? பாவிகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் இந்நேரம் போயிருக்க வேண்டாமா?

Contact Form

Name

Email *

Message *