Store
  Store
  Store
  Store
  Store
  Store

கிருஷ்ணனின் ஞான லீலைகள் !
ன்று அன்பு பிறந்தநாள் 


இன்று அறிவு பிறந்தநாள் 


இன்று கருணை பிறந்தநாள் 


ஆமாம் 


இன்று கிருஷ்ணன் பிறந்தநாள் 


கிருஷ்ணன் என்றால் யார்? யாருக்குமே இல்லாத கவர்ச்சி அவனுக்கு மட்டும் ஏன் இருக்கிறது? 


கிருஷ்ணன் என்றால் கருப்பன் என்று வடமொழி இலக்கணம் கூறுகிறது கருப்பு என்றால் அகண்டது எல்லை இல்லாதது எங்கு துவங்குகிறது எங்கு முடிகிறது என்று கணக்கு போட இயலாததது ஆனால் அது மட்டும் தானா? கிருஷ்ணன் என்ற பெயருக்கு விளக்கம் இல்லை அதையும் தாண்டி அண்ட சராசரங்கள் எப்படி விரிந்து பறந்து கிடக்கிறதோ அதைவிட ஆயிரம் மடங்கு அர்த்தங்கள் அந்த திருநாமத்தில் மறைந்திருக்கிறது. 


கிருஷ்ணன் என்றால் ஈர்ப்பு விசை 
கிருஷ்ணன் என்றால் காந்த விசை 
கிருஷ்ணன் என்றால் காதல் விசை 
கிருஷ்ணன் என்றால் உணர்வு விசை 
கிருஷ்ணன் என்றால் பாச விசை 
கிருஷ்ணன் என்றால் நேச விசை 
கிருஷ்ணன் என்றால் அருள் விசை 
கிருஷ்ணன் என்றால் பொருள் விசை 
இப்படி எல்லாமான கிருஷ்ணன் எங்கே பிறந்தான்? சிறைச்சாலையில் அவன் நந்தவனத்தில் பிறந்திருக்கலாம் ஆற்றங்கரையில் அறிவிக்கரையில் பிறந்திருக்கலாம் அரண்மனையில் மாடமாளிகையில் கூட கோபுரங்களில் பிறந்திருக்கலாம் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு இருட்டுமட்டுமே குருட்டு தனமாக குடியிருக்கும் வறட்டு சிறைக்குள் அவன் ஏன் பிறக்க வேண்டும்? அதன் காரணம் என்ன? சற்று யோசிக்க வேண்டும். 


சிறை என்பது கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டு இரும்பு கம்பிகளால் பாதுகாக்கப்படும் கூடாரம் மட்டுமல்ல சிறை என்பது நமது உடலையும் குறிக்கும். எலும்பாலும் சதையாலும் இரத்தத்தாலும் சர்மத்தாலும் மூடபட்டிருக்கின்ற இந்த தேகதிற்குள் இதயம் இருக்கிறது மூளை இருக்கிறது இவற்றிற்குள் ஆசை இருக்கிறது ஆணவம் இருக்கிறது அகம்பாவம் இருக்கிறது மோகம் இருக்கிறது தாகம் இருக்கிறது கோபம் இருக்கிறது இதனால் பாவம் இருக்கிறது


ஆசை களவு கோபம் எல்லாம் குடிகொண்டிருக்கும் இதயத்தில் தெய்வீகம் பிறந்துவிட்டால் அந்த கணமே மாசுகள் எல்லாம் மறைந்து தென்றல் வீசுகின்ற இன்ப பூங்காவாக உடல் மாறிவிடும் அல்லவா? அந்த தத்துவத்தை விளக்கதான் உடல் என்ற சிறைக்குள் ஞானம் என்ற தெய்வம் பிறந்தது போல கம்சன் கட்டிவைத்த சிறைச்சாலைக்குள் கிருஷ்ணன் பிறந்தான் அவன் பிறந்த மறுகணமே இருண்ட சிறை வெளிச்சமானது மூடிய கதவு திறந்தது பூட்டுகளை எல்லாம் வெடித்து சிதறியது ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளம் கூட இரண்டாக பிளந்து வழிவிட்டது. விஷம் கக்கும் நாகம் வந்து குடைபிடித்து 


மனித மனம் இருண்டு போன சிறைச்சாலை தான் அதனுள் எத்தனையோ விஷ செடிகள் வளர்ந்து செழித்து தழைத்து கிடக்கிறது ஆசை என்ற நீர் ஊற்றி மோகம் என்ற பயிரை அந்த சிறைக்குள் வளர்த்து வருகிறோம் வளர வேண்டிய மனிதன் வாழ வேண்டிய மனிதன் தெய்வத்தோடு ஒப்ப வைக்கப்பட வேண்டிய மனிதன் தாழ்ந்து கிடக்கிறான். தவறி கிடக்கிறான் பாழ்பட்டு கிடக்கிறான் அவன் உயர வேண்டுமென்றால் அவனது மனச்சிறைக்குள் கிருஷ்ணன் என்ற தெய்வம் பிறக்க வேண்டும் 


கிருஷ்ணன் அழகான பானையை உடைத்து அதனுள் இருக்கும் வெண்ணையை அள்ளி அள்ளி உண்கிறானே அது ஏன்? வெண்ணை அத்தனை சுவையானதா? திருடி தின்னும் அளவிற்கு சுவையில் உயர்ந்ததா? இல்லை இல்லவே இல்லை வெண்ணையை எடுத்து நாவிலே வைத்து சுவைத்து பாருங்கள் அறுசுவையில் ஒருசுவை கூட அதில் இல்லை. சுவையில்லாத சுவை தான் அதிலிருக்கிறது. அதை ஏன் கிருஷ்ணன் விரும்ப வேண்டும்? 


விருப்பு வெறுப்பற்ற ஆத்மா வெண்ணையை போன்றது அதில் உலக பற்று என்ற சுவை எதுவுமே கிடையாது. பற்றில்லாத ஆத்மாக்கள் தான் பரந்தாமனை சென்றடையும் அந்த தத்துவத்தின் எளிய விளக்கம் தான் கிருஷ்ணனின் வெண்ணை திருடும் படலம் எல்லாம் சரி வெண்ணையை மட்டும் எடுத்து உண்ண வேண்டியது தானே? பானையை ஏன் உடைக்க வேண்டும்? ஆத்மா என்ற வெண்ணை மாயை என்ற பானையில் இருக்கிறது மாயையை உடைத்தால் தானே ஆத்மா விடுதலை அடைய இயலும். 


கோகுலத்தில் கோபியர்களோடு கிருஷ்ணன் ராஜ கிரீடை செய்தானே அது எதற்கு கோபிகைகளை மாராப்பு இல்லாமல் தன்னை நோக்கி கைகளை உயர்த்த சொன்னானே அது ஏன்? ஆண்டவன் இப்படி செய்யலாமா? இது இறைவனுக்கு அழகாகுமா? என்று யோசிக்க தோன்றுகிறது அல்லவா? 


நிர்வாணமாக இருப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல அந்தரங்கத்தில் யாருமில்லா இடத்தில் நிர்வாணமாக இருக்கலாம் அதில் விஷேசம் இல்லை ஆனால் பட்ட பகலில் வெட்ட வெளியில் நிர்வாணமாக இருப்பது என்றால் அதுவும் அடுத்தவன் முன்னால் நிற்பது என்றால் சாதாரணமாக நிகழ கூடிய நிகழ்வா அது ஒரு சராசரி மனித ஜீவனால் அது முடியுமா? 


இந்த உலகில் மூன்றுபேர் நிர்வாணமாக இருக்கலாம் ஒன்று குழந்தையின் நிர்வாணம் சின்னச்சிறு குழந்தை நிர்வாணம் அழகானது ரசிக்க தக்கது இன்னும் சிறிது நேரம் பார்க்க முடியாதா? என்று ஏங்க தக்கது இரண்டாவது நிர்வாணம் பைத்தியகாரனது நிர்வாணம் இது சகிக்க முடியாதது பரிதாபகரமானது நெஞ்சத்தை கசக்கி பிழிந்து சோகத்தில் தள்ளுவது மூன்றாவது நிர்வாணம் யோகியின் நிர்வாணம் இந்த நிர்வாணம் பிரம்மிக்க தக்கது உணர்சிகளை வென்றவர்கள் மட்டுமே இந்த நிர்வாணத்தை பெற இயலும். அதனால் இது வணங்க தக்கது இயற்கையோடு அல்லது இறைவனோடு தன்னை முழுமையாக ஐக்கியபடுத்தி கொண்டவர் மட்டுமே இந்த ஞான நிர்வாணத்தில் நிலைக்க முடியும். 


கோபிகள் கிருஷ்ண பிரேமத்தில் ஊறியவர்கள் அவர்களின் உள்ளும் வெளியும் கிருஷ்ணனை தவிர வேறு எதுவுமே இல்லை. அவர்கள் உண்ணும் சோறும் தின்னும் வெற்றிலையும் பருகும் நீரும் கிருஷ்ணனாகவே கொண்டவர்கள். தங்களது உள்ளதை மட்டுமல்ல உடலையும் கிருஷ்ணனுக்காக அர்பணித்தவர்கள் கிருஷ்ண பக்தியிலேயே சரணாகதியாகி போனவர்கள் அவர்களுக்கு உடம்பு முழுவதும் கிருஷ்ண உணர்வே பொங்கி வழிவதனால் ஆடைகள் கூட அந்நியமாக பட்டது. உண்மையான பக்தன் ஆடை அலங்காரம் ஆடம்பரங்களை களைந்து ஆண்டவன் ஒருவனை மட்டுமே சிந்தையிலே கொள்வான். அப்போது அவன் எந்த நிலையில் காட்சி தருகிறான் என்று அவனுக்கே தெரியாது. 


கோபிகையரின் காதல் ஆண்டாளின் காதல் மீராவின் காதல் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உணர்ந்த தெய்வீக உணர்ச்சி அந்த உணர்ச்சி உனக்கு வரவேண்டும் என்றால் நீ மான அவமான உணர்ச்சிகளை விட்டு வெளியே வரவேண்டும் உடல் என்ற கோட்டை சுவரை உடைத்து எரிய வேண்டும் உள்ளும் புறமும் நிர்வாணமாக அதாவது கள்ளம் கபடம் எதுவுமே இல்லாத குழந்தையாக அவன் முன் நின்று மாதவா கேசவா மதுசூதனா என்று கைகளை உயர்த்தி பாடவேண்டும் இது தான் கிருஷ்ணனின் ராஜ கீரீடையின் தத்துவமாகும். 


காளிங்கன் என்ற நாக படத்தின் மீது நர்த்தனம் செய்தானே கண்ணபெருமான் அதன் விளக்கத்தை அறிந்து கொண்டால் மாயை என்ற பிசாசு காமம் என்ற மோஹினி கோபம் என்ற அசுரன் நம்மை நெருங்கவே மாட்டான். கிருஷ்ணன் நர்த்தனம் புரிந்தது ஐந்து தலை நாகத்தின் மீது கிருஷ்ணன் ஆட ஆட ஒவ்வொரு தலையிலிருந்து விஷ அக்கினி கொட்டிக்கொண்டே இருந்தது. அந்த அக்கினியால் காளிங்க தீர்த்தமே ஆலகால விஷ தீர்த்தமாக ஆகிபோனது. கிருஷ்ணன் ஆடினான் நாகபடம் சோறும் வரை ஆடினான். கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் ஆடினான் நாகத்தின் விஷம் முழுமையாக வெளியேறும் வரை கிருஷ்ணன் நிற்காமல் நிதானிக்காமல் ஆடிக்கொண்டே இருந்தான் நாகத்தின் தலையிலிருந்து ஆணவம் என்ற விஷம் கொட்டி தீரும் வரை ஆடினான் ஆடினான் ஆடிக்கொண்டே இருந்தான் 


கிருஷ்ணனின் இந்த ஆட்டம் நமது ஐம்புலன்கள் மீது அவன் ஆடுகிற ஆட்டமாகும் உன்னிகிருஷ்ணன் புலன்களின் மீது நடனமாட ஆரம்பித்தால் புலன்களின் வேகம் குறையும் வீரியம் குறையும் நாசகார இருளுக்குள் மனித ஆன்மாவை தள்ளுவது குறையும் ஞானத்தை அறிவை தெளிவை உணர்வதை அதிகரிக்கும் 


நாகத்தின் தலைமீது கிருஷ்ணன் ஆடுவது போல் ஒவ்வொரு மனிதனின் ஆயிரம் இதழ் கொண்ட சகஸ்ரதின் மீது கிருஷ்ணன் எப்போதும் இடைவிடாது ஆடிக்கொண்டே இருக்கிறான். அவனை உணர உணர உனது பாவம் உனது சோகம் உனது ரோகம் உன்னைவிட்டு ஓடி கொண்டே இருக்கும். 


எனவே நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் போ ஓடிபோ இன்று புதிதாக பிறந்திருக்கும் குழந்தை கிருஷ்ணரின் திருவடிகளை இறுகப்பற்றி கொள் உன் பற்றுகளை எல்லாம் அறுத்தெறியும் படி அவனிடம் பிரார்த்தனை செய் எனக்கென்று யாருமில்லை எனக்கொரு துணையுமில்லை உன்னை விட்டால் எனக்கு கதி இல்லை என்று அவனை சரணடை 


அவர் நோய்க்கு மருந்து பசிக்கு விருந்து உன் பிறவி வினைதீர அவனையே அருந்து. 

Contact Form

Name

Email *

Message *