Store
  Store
  Store
  Store
  Store
  Store

கீதையை எப்படி படிப்பது...?
   முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எனக்கொரு ஆசை பிறந்தது பகவத் கீதையை முழுமையாக வரிக்கு வரி படிக்க வேண்டும் என்பதே அந்த ஆசை இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே வேறொரு கேள்வி எனக்குள் எழுந்தது பகவத் கீதை படிப்பது நல்ல விஷயம் தான் ஆனால் அதை படிப்பதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தாயா? என்பது தான் அந்த கேள்வி 


கீதை படிப்பதற்கு தகுதி வேண்டுமா? காவியங்களை போல் இலக்கியங்களை போல் கீதை ஒரு புத்தகம் தானே வேண்டுமானால் அது மதத்தோடு சம்பந்தப்பட்டு இருப்பதனால் புனித நூல் என்று கருதலாம் அப்படி கருதினாலும் கூட பெளத்ததின் தம்மபதம் ஜெயினத்தின் ஸ்ரீபுராணம் இஸ்லாத்தின் அல்குரான் கிறிஸ்தவத்தின் பைபிள் போல இதுவும் ஒரு புனித நூல் தானே அவைகளை படிப்பதற்கு தனித்தகுதி தராதரம் வேண்டுமா என்ன? 


ஒருவேளை என்னிடம் தகுதி என்பது சிறிது கூட இல்லாமல் இருக்கலாம் உலகத்தில் உள்ள அயோக்கியத்தனங்கள் ஒட்டுமொத்தமாக எனக்குள் இருக்கலாம். அதற்காக நான் கீதையை படிக்க கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன? அப்படியே சட்டம் இருந்தாலும் தகுதி இல்லாதவர்களிடம் தகுதியை உருவாக்குவது தானே புனித நூலின் தலையாய கடமை ஆகவே கீதை படிப்பதற்கு விசேஷ தகுதிகள் எதுவும் தேவையில்லை என்று நான் கருதினேன் 


எதையும் நாம் சிந்திப்பது மட்டும் தான் சரியானது அதற்கு மற்றவர்களின் அபிப்ராயங்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுவது மூடத்தனம் என்று எனக்கு தெரியும் அதனால் ஒரு பெரியவரிடம் எனது இந்த எண்ணத்தை தெரியப்படுத்தினேன். அவர் பொறுமையுடன் என் கருத்துக்கு செவி சாய்த்து தனது எண்ணத்தை என்னிடம் வெளிப்படுத்தினார். 


தகுதி இல்லாதவனுக்கு தகுதியை உருவாக்கி கொடுப்பது தான் கீதையின் மிக முக்கியமான நோக்கமாகும். அந்த வகையில் கொலைகாரனும் காமாந்தகனும் கூட கீதையை படிக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் எந்த வகையிலான கீதை படிப்பது என்று ஒரு சங்கதி இருக்கிறது. அதை புரிந்து தெரிந்து கொண்ட பின் கீதையை படித்தால் தான் படித்தவனுக்கும் பயனுடையதாக இருக்கும் கீதைக்கும் கெளரமாக இருக்கும் எனவே அதை உணர்ந்து கீதை படி என்று அவர் கூறினார். 


அவரின் கூற்று எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை எனவே அதை கவனத்தில் வைக்காமல் கீதையை படிக்க ஆரம்பித்தேன். முதல் முதலில் மஹாகவி பாரதியார் தமிழில் மொழிபெயர்த்த கீதையை படித்தேன். அது ஒரு கவிதை நூலாகத்தான் எனக்கு பட்டதே தவிர வேறொன்றும் விசேஷமாக தெரியவில்லை. கீதை என்பது இவ்வளவு தானா? இதை போய் தான் இத்தனை பேர் புகழ்ந்து தள்ளுகிறார்களா? என்று எனக்கு தோன்றியது. அதன் பிறகு மஹாத்மாகாந்தியின் மிக நெருங்கிய சீடரான வினோபா ஜீ மொழிபெயர்த்த கீதையை எதேச்சையாக படிக்க நேரிட்டது. அந்த கீதை பாரதியாரின் கீதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக எனக்கு தோன்றியது. 


அப்போது தான் அந்த பெரியவர் சொன்ன வார்த்தையின் உண்மையான பொருள் ஓரளவு தெரிய ஆரம்பித்தது. கீதை என்பது கல்கி, குமுதம், ஆனந்த விகடனை போல் படித்துவிட்டு தூக்கி எரியும் சாதாரண புத்தகம் அல்ல அது தெய்வீகமானது அதை சொன்னவன் தெய்வம் அதை கேட்டவன் தெய்வ அம்சம் பொருந்தியவன் 


தண்ணீரை திரவ பொருளாக பாக்கலாம் திடப்பொருளாகவும் காணலாம் வாயு பொருளாகவும் உணரலாம் என்பது போல கீதை என்ற தெய்வ வாக்கை சாதாரண மனிதன் தனது விருப்பத்தின் படி எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தி கொள்ளலாம். மற்றவர்களை அர்த்தப்படுத்தவும் செய்யலாம் என்று தோன்றியது. 


உதாரணமாக காந்தி அஹிம்சை வழியில் சென்றவர் தீவிரவாதத்தை எந்த வகையிலும் கைகொள்ளாதவர் வன்முறையால் தான் சொர்க்கமே கிடைக்கும் என்றாலும் அந்த சொர்க்கம் தேவையற்றது என்ற கருத்து உடையவர் என்று நமக்கு தெரியும். அவரும் கீதைக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவருடைய வியாக்கியானம் எதிரிகளை அதாவது மனிதர்களை கொலை செய் உயிரை எடு என்பது போல இருக்காது கெளரவ சேனை என்பது அகங்காரத்தின் வடிவம் அதை வெற்றிகொள் என்பதாக தான் இருக்கும் என்று படிக்காமலே கூறிவிடலாம். 


பாலகங்காதார திலகரும் கீதைக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். திலகர் அமைதியான வழியில் எதையும் சாதிக்க வேண்டும் என்று கருதுபவர் அல்ல வெட்டுக்கு வெட்டு குத்துக்கு குத்து என்று கோதாவில் நிற்பவர். அவருடைய விளக்கம் காந்தியை போன்ற அஹிம்சை விளக்கமாக இருக்காது என்பது நமக்கு நன்றாக தெரியும். 


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கீதைக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிற போது நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் எப்படி கீதையுடைய உண்மையான பொருளை உணர்ந்து கொள்ள முடியும்? அதற்கு வழி என்ன இருக்கிறது என்று நான் யோசித்தேன். 


முதலில் நாம் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் என்று தெரிந்து கொள் என்று நான் கூற வருவது சாக்கிரட்டீஸ் போல ரமண மகரிஷியை போல தத்துவார்த்த அடிப்படையில் அல்ல. வெகு சாதாரணமாக நமது குடும்பத்தை பற்றி நமது பாரம்பரியத்தை பற்றி நமது பண்பாட்டை பற்றி ஆழ்ந்து அறிந்து அதற்கு பிறகு நாம் யார்? நமது மரபு என்னவென்று முடிவு செய்யலாம். 
முதலில் நாம் என்ன ஜாதி என்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் எதற்க்காக இந்த இடத்தில் ஜாதியை பேசுகிறேன் என்றால் ஜாதி வேண்டாம் என்று பேசுபவது எல்லாம் மேடைக்கு அழகாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு அது ஒத்து வராது. இந்துஸ்தானத்தில் ஜாதிகள் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. இருப்பதாக கூறுவது எல்லாம் வெறும் பொய். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ எனது அனுபவத்தில் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி குணங்கள் இருக்கிறது. ஆயிரம் தான் வெளிப்போர்வைகளை கொண்டு அந்த குணங்களை மூடிமறைத்தாலும் ஏதாவது வேளையில் நம்மையும் அறியாமல் நம் ஜாதியின் தன்மை வெளிப்பட்டுவிடும். இதனால் தான் நமது பெரியவர்கள் சந்நியாசம் வாங்கினாலும் ஜாதிபுத்தி போகாது என்று கூறுவார்கள். 


அடுத்ததாக நாம் பொதுவாக இந்துக்கள் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் நமக்குள் சில பிரிவுகள் உண்டு அது தான் நமது இனத்தின் தனி சிறப்பாகும். எனவே நாம் சைவமா, வைஷ்ணவமா, பராசக்தியை வழிப்படுகிற சாக்தமா முருகனை வணங்குகிற கெளமாரமா, கணபதியை துதிக்கின்ற கானாபத்தியமா, சூரியனை வணங்கும் செளரமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 


காரணம் ஒவ்வொரு இனப்பிரிவுக்கும் மதப்பிரிவுக்கும் ஏற்றவாறு கீதை விளக்கம் செய்யப்பட்டு உள்ளது. என் இயல்பை என் மரபை தெரிந்து கொண்டால் தான் எனக்கான கீதை விளக்கத்தை நான் படித்தால் எனக்கு புரியும். இல்லை என்றால் அந்நியபாஷை பேசுபவர்கள் மத்தியில் அகப்பட்டு கொண்டால் எப்படி விழிக்க வேண்டுமோ அப்படி கீதையை கையில் வைத்து கொண்டு விழிக்க வேண்டிய நிலை வரும்.


உதாரணமாக நான் மீனவன் என்றால் எனக்கு யாகம் செய்வதில் உள்ள பரிபாஷைகளை வைத்து கீதையை விளக்கினால் அடிப்படை என்ன தெரியும்? மீன் கூட்டம் வருவது போல ஆத்மாக்கள் பிறந்து கொண்டே இருக்கும் வலையில் அகப்படும் மீன்களை போல ஆத்மாக்கள் மறித்து கொண்டே இருக்கும் மீன்கள் வருவது போவதும் இருந்து கொண்டே இருப்பது போல உயிர்களும் இருந்து கொண்டே இருக்கும் ஒருநாளும் அது இல்லாமல் போகாது. என்று சொன்னால் தான் வலைவீசி மீன்பிடிக்கும் எனக்கு தத்துவம் தெரியும். 


இதை நன்கு உணர்ந்ததால் தான் நமது குருமார்கள் கீதைக்கு பலவிதமான பாஷியங்களை அதாவது விளக்கங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். பிரம்மம் மட்டும் தான் உலகில் உண்டு மற்ற எல்லாமே மாயை தான் இந்த அத்வைத கொள்கைக்கு ஏற்றவாறு ஆதிசங்கரர் கீதைக்கு விளக்கம் எழுதி இருக்கிறார் சிவனையும் சிவனது குடும்பத்தை சார்ந்த பார்வதி கணேசன் கார்த்திகேயன் போன்றர்களை வணங்குபவர்கள் ஆதிசங்கரரின் கீதை விளக்கத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆதி சங்கரரை படித்து புரிந்து கொள்ள இயலாது என்பவர்கள் திருச்சி திருப்பாயத்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவன சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரையை படித்து அறியலாம் 


அதை போல திருமாலை வழிபடுபவர்கள் ஸ்ரீ ராமானுஜர் விளக்கம் செய்த பகவத் கீதையை படித்தால் சட்டென்று அவர்களுக்கு விளங்கும். ராமானுஜரை தேடி கண்டுபிடிப்பது சிரமம் என்றால் உத்திர பிரதேசம் கோரக்பூரில் இருந்து வெளிவரும் கோபால் பிரஸ் நிறுவனத்தின் கீதையை படித்தால் நல்ல பலனை அடையாளம் 


மத்துவாச்சாரியார் கீதைக்கு மிக அழகான விளக்கம் தந்துள்ளார் அதை படித்தால் துவைதிகள் அதாவது கிருஷ்ண பக்தர்கள் மிக எளிமையாக கீதையை உணரலாம். மத்துவரின் நூல் கிடைக்காதவர்கள் அகில உலக கிருஷ்ண பக்த இயக்கம் வெளியிட்ட கீதையை படித்தால் சரியான விளக்கத்தை பெறலாம். 


இதை இங்கே நான் கூறுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு அழகான கதை சொல்லுவார் அம்மா மீன் சமைத்தால் அதை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு பரிமாறுவாள் ஏன் என்றால் குழந்தையின் வயிற்றின் பக்குவம் தாய்க்கு தான் தெரியும். அதை போன்று தான் மகான்களுக்கு தான் பக்தர்களின் உண்மையான நிலை தெரியும். அவனவனுக்கு ஏற்ற தன்மையில் கீதையை அதனால் தான் விளக்கி இருக்கிறார்கள். 


முதலில் உங்கள் தன்மைக்கு ஏற்றவாறு உள்ள கீதை விளக்கத்தை படியுங்கள் அதன் பிறகு வேறு எத்தனை வகை விளக்கம் இருக்கிறதோ அதை தேடி தேடி ஆழ்ந்து படியுங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வரும் கீதை தானே படிக்க வேண்டும் திராவிட கட்சி தலைவர் வீரமணி கூட கீதைக்கு விளக்கம் எழுதி இருக்கிறார் அதை படிப்போமே என்று நீங்கள் படித்தால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு கீதை பொறுப்பேற்க இயலாது. 


Contact Form

Name

Email *

Message *