இந்தியாவில் பலருடைய கனவு அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பிட வேண்டும் என்பது. இந்த கனவு சில நாட்களுக்கு முன்பு முளைத்த கனவு அல்ல ஐநூறு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக கண்டுவரும் கனவாகும் இன்று அந்த கனவு நினைவாகி இருக்கிறது. அந்த வகையில் இந்து மக்களில் பலர் நிறைவான மனநிலையை இன்று அடைந்திருப்பார்கள்
ஸ்ரீராமன் இறைவன் அவனுக்கு இந்த உலகமே சொந்தமானது உலக நாயகனான ராமனுக்கு ஒரு சிறிய கோவில் கட்ட வேண்டுமா? அதுவும் இன்னொரு மதத்தினரை காயப்படுத்தி கட்டவேண்டுமா? என்ற கேள்வியெல்லாம் இப்போது அவசியமற்றது. இந்திய நீதிமன்றம் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கிவிட்டது. இதற்கு மேல் அதில் கருத்து சொல்லுவது சரியல்ல
ஆனாலும் சில விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை ஐநூறு வருடமாக எதிர்பார்த்த ஒரு நிகழ்வு கனியாக கனிந்து நமது கைகளிலேயே விழுந்துவிட்ட பிறகு அந்த கனியை நல்ல நேரத்தில் சுவைக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவசர கோலத்தில் அள்ளி தெளிப்பது போல சுவைக்க கூடாது என்பது என் எண்ணம். சிலர் கூறுகிறார்கள் ராமர் கோவில் கட்டுவது என்பது இந்துக்களுடைய விஷயம் இதில் நாட்டின் பிரதமர் கலந்து கொள்ளுவது பிரதமர் பதவி பொதுவானது என்ற கருத்திலிருந்து மாறுபட்டுவிடும் என்கிறார்கள்.
ஆனால் இதை நான் ஏற்றுகொள்ள வில்லை ஒருவர் பிரதமராகவே இருந்தாலும் கூட அவரும் ஒரு மனிதர் அவருக்கென்று சில அபிலாசைகள் இருக்கலாம் அதை அவர் செயல்படுத்தவும் செய்யலாம் விடுதலை அடைந்த சில நாட்களில் ஒளரங்கசிப் மன்னனால் தரைமட்டமாக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை மறுகட்டமைப்பு செய்து கும்பாபிசேகம் நடந்த போது அன்றைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் விழாவில் கலந்து கொண்டு இறை தரிசனம் செய்தார். அதை அப்போது யாரும் குறை கூறவில்லை அப்படி தான் இப்போதும் மக்களாகிய நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்தாகும்
நான் சொல்ல வந்தது வேறு விஷயம் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுகிற இந்த நாளை பற்றிதான் பேச வருகிறேன். இரண்டாயிரத்து இருபது ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பூமி பூஜை நடத்தலாம் என்று தேதி குறித்து கொடுத்ததையும் அதில் எந்தவித மறு ஆய்வு செய்யாமல் அதை நடைமுறைபடுத்த முயற்சித்து இருப்பதை என்னால் ரசிக்க இயலவில்லை.
ராமன் கால நேர கணக்குகளுக்கு அப்பாற்பட்டவன் அவனுக்கு கோவில் எழுப்புவது எந்த நேரம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுவது வாதத்திற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் அது நமது இந்திய மரபுக்கு உகந்ததாக இருக்காது. பொதுவாக இந்தியாவில் வாழுகிற இந்துக்கள் அவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும் ஆடி மாதத்தில் அதாவது சாதுர் மாதத்தில் நல்ல காரியங்கள் எதையும் செய்வது இல்லை. அப்படியே செய்தாலும் அதை வளர்பிறையில் செய்வார்களே தவிர தேய்பிறையில் ஒருப்போதும் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கே ராமர் ஆலயம் எழுப்ப குறிக்கப்பட்ட நாள் ஆடி மாதம் தேய்பிறை நேரம்
அதுவும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி மதியம் பனிரெண்டு மணிமுதல் முகூர்த்தம் செய்வதாக கூறுகிறார்கள். இன்று புதன் கிழமை இந்த நேரத்தில் தான் ராகுகாலம் ஆரம்பமாகிறது ஐநூறு வருடம் காத்திருந்த ஒரு நல்ல காரியத்தை ராகுகாலத்தில் செய்ய வேண்டுமா? என்று யோசிக்க வேண்டும் அதுவும் இன்று வாஸ்து நேரம் எதுவும் இல்லை
வடஇந்தியாவில் ராகுகாலத்தை யாரும் பொருட்படுத்துவது கிடையாது அன்றைய பொழுதில் நட்சத்திரத்தை கணக்கிட்டால் அது மேல்நோக்கு நட்சத்திரமாக இருந்தால் மட்டும் போதும் ஆலயம் எழுப்புவது வீடு கட்டுவது போன்ற சுபகாரியங்களை செய்யலாம். இஸ்ரோவில் ராக்கெட் அனுப்புவதற்கு கூட இப்படி தான் நாள் பார்கிறார்கள் அது தான் இப்போதும் நடந்திருக்கிறது என்று சிலர் கூற கூடும்.
ஒன்று மட்டும் நிச்சயம் இன்று சதய நட்சத்திரம் இது மட்டும் தான் இன்றைய நாளில் சரியாக இருக்கிறதே தவிர மற்ற எதுவும் மனதிற்கு திருப்தியாக இல்லை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது ஆண்டிபட்டியில் கோவில் கட்டுவது போன்று சாதாரண விஷயமல்ல ராமன் என்பவன் இந்தியாவின் ஆன்மா அவன் பிறந்த இடம் எல்லாவிதத்திலும் மிக புண்ணியமான சேத்திரமாகும் அங்கே ஒரு நல்ல காரியம் தவறான நேரத்தில் நடக்கிறது என்றால் அது நாட்டுக்கும் நாட்டு தலைவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது அல்ல.
ஸ்ரீ ராமச்சந்திரன் தசரத மன்னரின் திருக்குமாரானாக அவதரித்த வருடம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 5114 ஆம் வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி மதியம் 12.05 நிமிடமாகும். இந்த நேரத்தில் அமைந்த கிரகநிலை கடக லக்கனம் கடகராசியாகும் ஒன்றாம் இடத்தில குருவும் சந்திரனும் நான்காம் இடத்தில் சனியும் ஆறாம் இடத்தில ராகுவும் ஏழாம் இடத்தில் செவ்வாயும் ஒன்பதாம் இடத்தில சுக்கிரனும் பத்தாம் இடத்தில் சூரியனும் புதனும் பனிரெண்டாம் இடத்தில் கேதுவும் அமைந்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் ஐந்து கிரகங்கள் உச்சம் அடைந்து இருப்பதாகும். இது தான் ஸ்ரீ ராமனின் நிஜமான ஜாதகம் பிறந்த குறிப்பு என்று பல ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.
இந்த ஜாதகத்தை மையமாக வைத்து பார்க்கும் போது ஒரு உண்மை பளிச்சென்று தெரிகிறது ஸ்ரீ ராமன் சக்கரவர்த்தி திருமகனாவான் உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியன் ஆவான் பால்லாயிரம் கணக்கான மக்களின் நிஜமான இதய தெய்வம் ஆவான் ஆனால் அந்த ராமனின் சொந்த வாழ்க்கையில் பெண்ணாலும் நிலத்தாலும் எப்போதும் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும் இன்றைய காலத்தில் கூட ராமர் கோவில் கட்டுகிற இடம் குழந்தை ராமருக்கே சொந்தமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் ராமர் பிறந்தது இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல நேபாளத்தில் தான் அவர் பிறந்தார் என்று நேபாள பிரதம மந்திரி சர்மா ஒலி பிரச்சனை கிளப்புகிறாரே அதை நினைத்தது பாருங்கள்.
ராமரின் பிறந்த தினத்தையும் அவருக்கான ஆலயம் எழுப்பப்படும் இன்றைய தினத்தையும் ஜோதிட சாஸ்திர ரீதியில் ஒப்பிட்டு பார்த்தால் சில அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதாவது ஆலயத்திற்கு பூமி பூஜை செய்ய மண்ணை தோண்டுகிற இந்த நேரத்தில் ராகுவின் ஆகர்ஷணம் முழுமையான விஷ தன்மையோடு அயோத்தியில் ரேகாம்ச தீர்க்காம்ச நிலையில் பார்க்கிறது. அப்படி ராகுவின் பார்வை அமையும் போது அஸ்திவாரத்தை அமைத்தால் ஆலயம் சம்மந்தமாக சில சர்ச்சைகளும் சச்சரவுகளும் ஏற்படும் ஆலய கட்டுமானம் மூன்று வருடத்தில் முடியுமென்று கணக்கு போட்டு இருப்பது நிறைவேறாமல் காலம் இழுத்து கொண்டு போவதற்கும் வழி ஏற்படும் மேலும் ஆலயம் எழுப்புவதற்கு முன்னின்று உழைக்கும் அறக்கட்டளையின் உள்விவகாரங்களில் விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறும் என்றும் அதில் கலந்துகொள்ளும் தேச தலைவர்களுக்கு ஆரோக்கிய வகையிலும் ஆயுள் வகையிலும் சிக்கல்கள் ஏற்படும் என்று சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.
இனி இது சம்மந்தமாக ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றாலும் ஆலயமும் மக்களும் நிச்சயம் எந்த பாதிப்பும் சந்திக்க கூடாது என்பது ஒவ்வொரு மனிதனின் பிரார்த்தனையாகும். எனவே இதிலிருந்து விடுபட பரிகாரம் ஏதேனும் உள்ளதா என்று தெய்வ பிரசன்னம் மூலம் கணக்கிட்டால் நாட்டின் உள்ள விளக்கேற்ற கூட வசதி இல்லாத நிலையிலிருக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கு குறைந்த பட்சம் தீபம் ஏற்றி ஒருவேளை பூஜையாவது சரியாக செய்ய வேண்டும் என்று பிரசன்னம் கூறுகிறது.
என்னை கேட்டால் நான் இதற்கு பரிகாரமாக கருதுவது என்னவென்றால் நீதிமன்றம் இந்துக்களுக்கு தான் இந்த இடம் என்று உறுதியாக கூறிவிட்டாலும் கூட அது பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய பெருமக்களின் மனதை பாதிப்படையவே செய்திருக்கிறது இதை யாரும் மறுக்க இயலாது எனவே மனதால் பாதிப்படைந்த இஸ்லாமிய மக்களுக்கு பரிகாரமாக அவர்கள் மசூதி கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்ட ஆரம்பிக்கும் தினத்தில் இன்று எப்படி இந்துமக்கள் கோலாகலமாக ஆலய நிர்மாணத்தை கொண்டாடுகிறார்களோ அதே போன்றே மசூதியும் நிர்மாணத்தை கொண்டாட வேண்டும் அதுமட்டுமல்லாது இதில் பிரதமர் கலந்து கொள்ளுவது போலவே அதிலும் கலந்துகொண்டு அஸ்திவாரத்திற்கான முதல் செங்கலை எடுத்து வைக்க வேண்டும். இதை செய்தால் ராமர் கோவில் கட்டுவதில் உள்ள தோஷம் நிஜமாக விலகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
குருஜி