Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழனுக்கு மும்மொழி தேவையா...?




ருடம் தோறும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அமெரிக்க நாட்டை பொறுத்தவரை ஐயாயிரமாகும் ரஷ்யா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தலா நாலாயிரம் பேர்கள் சமர்பிக்கிறார்கள் சீனாவில் இருந்து மட்டும் சாதனை அளவாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சர்வதேச அளவில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. நமது இந்தியாவில் இருந்து எத்தனை ஆய்வு கட்டுரைகள் உலக அரங்கிற்கு கொடுக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் வருகிறதா? அவசரப்படாதீர்கள் இதோ அந்த அறிய பெரிய எண்ணிக்கையை சொல்லுகிறேன் வெறும் 70 முதல் 90 வரையிலான ஆய்வு கட்டுரைகள் மட்டுமே மாணவர்களால் உருவாக்கப்படுகிறது. 


புதிய இந்தியாவை உருவாக்கபோகிறோம் வல்லரசாகி உலகத்தை ஆளப்போகிறோம் என்றெல்லாம் நமது அரசியல் தலைவர்கள் கனவு காண்கிறார்கள் அந்த கனவை நிஜமாக்க போகும் இந்தியாவின் இளையதலைமுறை அறிவு வேகம் இந்த அளவிற்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை அறியும் போது நமக்கே வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 


இணையதள வசதியை அதிகமாக பயன்படுத்துவதில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு தவறு என்று கூற இயலாது காரணம் அது நிஜம் ஆனால் நமது நெஞ்சை தொட்டு பார்த்தால் இந்த இணையதள பயன்பாடு என்பது அறிவு வளர்ச்சிக்கா ஆக்கபூர்வமான வேலைகளுக்கா இல்லை பொழுது போக்கிற்கா என்று நாம் சிந்திக்கவேண்டும். 


சமையல் குறிப்புக்காக அழகு சாதன பொருட்களுக்காக ஜோதிடம் பார்ப்பதற்காக சீரியல்கள் ரசிப்பதற்காக இங்குள்ள இணையத்தளம் அதிகமாக பயன்படுகிறது என்பது எத்தனைபேருக்கு தெரியும்? நமது குழந்தைகளுக்கு ரசிகர் மன்றம் வைக்க கற்றுக்கொடுத்திருக்கிறோம் நடிகர்களின் பின்னால் ஆட்டுமந்தை போல அணிவகுக்க சொல்லி கொடுத்திருக்கிறோம் தேவையற்ற மூன்றாம் தர அரசியல் விவாதத்தை கற்று கொடுத்திருக்கிறோம் என்றாவது ஒருநாள் அவர்களை சொந்தமாக சிந்திக்க புதியவற்றை உருவாக்க கற்றுக்கொடுத்து இருக்கிறோமா? 


இதுவரை நமது பிள்ளைகளை பற்றிய நமது நோக்கம் எப்படி இருக்கிறது? நாலு எழுத்து ஆங்கிலம் கற்க வேண்டும் இன்ஜினியராகவோ அல்லது வேறு எதாவது தொழிலை தெரிந்தவராகவோ கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் அமெரிக்கா போகவேண்டும் சம்பளம் வாங்க வேண்டும் செட்டிலாக வேண்டும் இது தான் நமது கனவு லட்சியம் எல்லாமே. 


காரணம் என்னவென்றால் நமக்கு இவ்வளவு தான் தெரியும் நாம் இதைத்தான் கற்றுயிருக்கிறோம் சுயமாக சிந்திக்க சொந்த காலில் நிற்க நமக்கு கற்று தரப்படவில்லை. முதலாளிகளாக உருவாவதை விட குமாஸ்தாவாக்களாக இருப்பது தான் பாதுகாப்பானது என்று நமக்கு காலகாலமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இன்றல்ல இருநூறு ஆண்டுகளாகவே இது தான் இந்தியர்களின் உண்மையான நிலை. 


அடிமைகளாக சிந்திக்க தெரியாதவர்களாக பணக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கால்பிடிப்பதையே நோக்கமாக கொண்டவர்களாக நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம் இதற்கு யார் காரணம்? நமது இந்திய இனம் திட்டமிட்டே மூளை சலவை செய்யப்பட்டது எதற்க்காக? என்று யோசிக்க வேண்டிய காலகட்டயம் இப்போது நமக்கு வந்திருக்கிறது.


மெக்காலே என்ற வெள்ளைக்காரதுரை திட்டமிட்டே நமது அறிவு கருவூலத்தை சிதைத்தான். இந்தியர்கள் எப்போதுமே சுயசார்பு உடையவர்களாக மாறிவிட கூடாது என்று அன்றைய ஆங்கில அரசுக்காக நம்மை சதி செய்து கெடுத்தான். வெள்ளையன் தான் வெளியேறி விட்டானே அவனால் தான் நாம் கேடுகெட்டு போயிருந்தோம் என்பதை தெரிந்து புத்திசாதுர்யமாக அவன் வலையிலிருந்து வெளியில் வந்திருக்கலாமே? என்று சிந்திக்க தோன்றும் ஆனால் விடுதலை பெற்று இத்தனை நாளும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை நம்மை சிந்திக்க யாரும் விடவும் இல்லை அதற்கு இன்று சரியான நிவாரணம் கிடைத்திருக்கிறது அதன் பெயர் புதிய கல்வி கொள்கை .


இன்றைய மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய கல்வி கொள்கை பாஜக அரசின் கல்விக்கொள்கை அல்ல எத்தனையோ கல்வியாளர்கள் மேதாவிகள் அறிவு ஜீவிகள் ஆழ்ந்து அகன்று சிந்தித்து உருவாக்கி இருக்கும் மிக அற்புதமான செயல் திட்டம் இது இதை சற்றேற குறைய இந்தியாவில் உள்ள அனைவருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள் 


எதற்கெடுத்தாலும் மோடியை குற்றம் சாட்டும் மம்தா, மாயாவதி, லாலு, சோனியா, ராகுல் மற்றும் இடதுசாரி அமைப்பினர் கூட இந்த கல்வி கொள்கையை பற்றி அதிகமாக விமர்சனம் செய்யவில்லை. ஆனால் நமது தமிழ்நாட்டில் மட்டுமே சிறப்பாக பயிரிடபட்டிருக்கும் திராவிட வயலிலிருந்து அறுவடை செய்யப்பட்டிருக்கும் சில பொக்கு விதைகள் மட்டும் துள்ளி குதிக்கின்றன. தமிழும் தமிழ்நாடும் தமிழ்மக்களும் இந்த கல்வி கொள்கையால் நாசமாகி விடுவார்கள் என்று நாடகமாடுகிறார். 


மூன்றாம் வகுப்பிற்கும் ஐந்தாம் வகுப்பிற்கும் பொது தேர்வா? இப்படி செய்தால் குழந்தைகளின் பிஞ்சிமனம் வெந்து போகாதா? தோல்வியில் துவண்டு போவதா? என்று மேடையில் கொக்கரிக்கிறார்கள். முதலில் தவறான தகவல்களை பொதுவெளியில் பரப்புபவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு என்று சொல்லப்பட்டிருப்பது உண்மை தான் ஆனால் அதற்காக அந்த வகுப்புகளிலேயே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டு அவர்களது அடுத்த வகுப்பு தேர்ச்சி நிறுத்திவைக்கப்படும் என்று எதிலும் கூறப்படவில்லை 


அடுத்ததாக ஆறாம் வகுப்பிற்கு மேலே உள்ள மாணவர்களுக்கு தொழில் பயற்சி அளிக்கப்படும் என்ற விதியை பார்த்து இது குலக்கல்விக்கான வழிமுறையாகிவிடும் அப்பன் செய்த தொழிலை பிள்ளை செய்தே ஆகவேண்டும். என்று கட்டாயப்படுத்திவிடும் மேலும் இந்த வயதிலேயே தொழிலை கற்றுக்கொண்டால் மேல் வகுப்பிற்கு போக முயற்சிக்க மாட்டார்கள் என்று சில மேதாவிகள் பேசுகிறார்கள். அதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. 


ஒரு தொழிலை கற்றுக்கொள்வது அதை திறம்பட செய்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமா என்ன? மேடையில் ஏறிநின்று பொய்யை புளுகை வாய்கிழிய பேசி பதவிக்கு வருவது வேண்டுமென்றால் சுலபமாக இருக்கலாமே தவிர ஒரு நாற்காலியை செய்கின்ற வேலை அவ்வளவு சுலபமானது அல்ல எதை எடுத்தாலும் குறைகூறுவது என்பது ஒருவித மனவியாதி அதை போக்கி கொள்ள தகுந்த சிகிச்சை செய்யாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். 


தமிழ்நாட்டை பொறுத்தவரை மும்மொழி கொள்கை என்றவுடனே தமிழுக்கு ஆபத்து என்ற கூப்பாடு கேட்க துவங்கிவிடும். 1965 ஆம் வருடம் வரை தமிழ்நாட்டில் மும்மொழி திட்டம் தான் நடைமுறையில் இருந்தது. அப்போது தமிழ் தெரியாத தமிழ் குழந்தைகள் யாரும் இங்கே கிடையாது. ஆனால் இப்போது தான் தமிழ் நாட்டில் தமிழனுக்கு பிறந்தாலும் இங்கேயே படித்தாலும் பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழை தொட்டு பார்க்கமே ஒருவன் படித்து முடித்து வெளிவரலாம் இப்படிப்பட்ட துயரத்தை மும்மொழி கொள்கை முன்பு உருவாக்கவில்லை இருமொழி கொள்கையாக ஆனபிறகு தான் தமிழ் அறியாத தமிழர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்தார்கள். 


இந்தி வருவதனால் தமிழ் அழிந்துவிடும் என்றால் தமிழ் மொழி என்ன அவ்வளவு பலவீனமானதா? திராவிட கட்சிகள் பட்டுக்கம்பளம் விரித்து கொடுத்து சிம்மாசனத்தில் உட்காரவைக்கப்பட்ட ஆங்கிலத்தாலேயே தமிழை அழிக்கமுடியாத போது சுண்டக்காய் இந்தியால் என்ன செய்துவிட முடியும்? மேலும் இந்த கல்வி கொள்கை மூன்றாவது மொழியாக இந்தியை தான் வைக்கவேண்டுமென்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? எதாவது ஒருமொழியை விருப்பப்பட்ட மொழியை மூன்றாவது மொழியாக வைத்து கொள்ளுங்கள் என்று மட்டும் தானே சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ் எப்படி அழியும் ஒன்றும் புரியவில்லை 


மூன்றாவது மொழியாக இந்தியை வைப்பதற்கு பிரியமில்லை என்றால் தமிழ்நாட்டில் தமிழுக்கு அடுத்தபடியாக பேசப்படுகிற மொழி தெலுங்கு அந்த மொழியை வைக்கலாமே? அது ஒன்றும் திராவிட கொள்கைக்கு விரோதமானது இல்லையே? தமிழாய்ந்த தமிழக தலைவர்கள் இதைப்பற்றி யோசிக்கலாமே? தெலுங்கு கற்றுகொள்ளுவது ஒன்றும் தவறு இல்லையே? 



சமஸ்கிருதத்தை புகுத்துகிறார்கள் என்கிறார்கள் இது தான் எப்படி என்று புரியவில்லை. சரி அப்படியே புகுத்துவதாக கூட இருக்கட்டும். தமிழ்நாட்டில் சில பள்ளிகள் முழுக்க முழுக்க உருது பாடசாலையாக நடைபெறும் போது சமஸ்கிருதத்தை ஒரு விருப்பபாடமாக வைத்தால் என்ன கெட்டுவிட போகிறது? ரஷ்ய மொழியை கற்றுக்கொள்ளலாம் சீன பாஷையை கற்றுக்கொள்ளலாம் பிரெஞ்ச் மொழியை கற்கலாம் சமஸ்கிருதம் மட்டும் கற்க கூடாதா என்ன? 


இன்னொரு கேள்வி இருக்கிறது மும்மொழி வேண்டவே வேண்டாம் என்பவர்கள் அவர்களது குழந்தையை இருமொழி பாடத்திட்டம் இருக்கும் பள்ளியில் மட்டும் தான் படிக்கிறார்களா? அதன் விபரத்தை அவர்களால் வெளிப்படையாக தர இயலுமா? தனக்கொரு நீதி ஊருக்கொரு நீதி என்று பேசுவதை பெரிய மனிதத்தனம் ஆகாது. 


தமிழ்நாட்டில் உள்ள தேசியவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் யார் இந்த கல்வி கொள்கையை எதிர்கிறார்களோ அவர்களது குழந்தைகள் பேரப்பிள்ளைகள் என்று யாராவது மும்மொழி பாடத்திட்டம் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் உடனே அந்த குழந்தைகளை அரசாங்க பள்ளியில் சேர்க்கவேண்டுமென்று போராட்டத்தை துவங்குங்கள். இருமொழி கொள்கை கொண்டோரின் குழந்தைகளை மும்மொழி பள்ளிக்கூடங்கள் சேர்க்க கூடாது என்றும் போராட்டத்தை அறிவியுங்கள் 


இந்தமாதிரி குதர்க்க வாதிகளை வெறும்வாய் வார்த்தைகளால் நிறுத்திவிட முடியாது. சாட்டை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்து தான் தீரவேண்டும். ஜனநாயக வழியில் நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இப்போது நாம் போராடவில்லை என்றால் எப்போதுமே அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். 

குருஜி

Contact Form

Name

Email *

Message *