Store
  Store
  Store
  Store
  Store
  Store

கிறிஸ்துமஸ் இயேசு பிறந்தநாள் அல்ல !

 


குருஜியின் பைபிள் பயணம் - 7


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )


பிரகதீஸ்வரன்:- யேசுநாதர் பிறக்கவே இல்லை அவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சிலர் கூறுவதாக கூறினீர்களே அதை இன்னும் நீங்கள் கூறவில்லை எப்போது கூறுவீர்கள்?


குருஜி:- ஆமாம் வேண்டுமென்றே தான் நான் அதை கூறவில்லை அதற்கு காரணம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் இல்லாத சரித்திரத்தை இருப்பது போல உருவாக்கி அதை மக்கள் நம்ப செய்வதில் எவ்வளவு பெரிய வல்லவர்கள் என்பதை காட்டுவதற்கே நேரடியாக விசயத்திற்கு வராமல் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அவர்கள் செய்த மாய்மாலங்களை உனக்கு சொன்னேன். 


உண்மையில் இயேசுவின் வரலாறு என்பது ஒரு மாயாஜால கற்பனை கதை போன்றது தான். தூரத்திலிருந்து பார்த்தால் நிஜமானது போல தெரியும் அருகில் சென்று ஆராய முற்படும் போது அதிலுள்ள ஓட்டைகள் தன்னை தானே வெளிச்சம் போட்டு காட்டிவிடும். அந்தவகையில் இயேசு கிறிஸ்து என்ற பெயரிலுள்ள ரகசியத்தை முதலில் அறிந்து கொள்ளுவோம். 


கிறிஸ்து என்ற வார்த்தை உண்மையில் யூதர்களின் பாஷையில் உள்ள வார்த்தை இல்லை அது கிரேக்க மொழியில் உள்ள சொல்லாகும். கிறிஸ்து என்ற சொல்லிற்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பது தான் நிஜமான பொருள். யூதர்கள் தங்களை மீட்பதற்காக வருங்காலத்தில் ஒரு திறமை வாய்ந்த அரசர் வருவார் அவர் பெயர் மேசியா அவர் அபிஷேகம் செய்யப்பட்டவராக அதாவது கிறிஸ்துவாக இருப்பார் என்று நம்பினார்கள். 


யூதர்களில் சமூக வழக்கங்களின்படி அவர்களுடைய அரசர்களாகவோ நீதிபதிகளாகவோ தளபதிகளாகவோ வருபவர்கள் அந்த பதவி ஏற்பதற்கு முன்னால் வாசனை எண்ணெய்யால் குளிப்பாட்டபடுவார்கள் அதுவொரு சடங்காகும். அப்படி அபிஷேகம் செய்யப்பட்டவர் அந்த சடங்கிற்கு பிறகே அதிகாரம் பெற்றவராக கருதப்படுவார். இந்த கிறிஸ்து என்ற வார்த்தை கிரேக்கத்தில் இருந்து யூதர்கள் பெற்றிருந்தாலும் இது இயேசு இஸ்ரேலில் பிறப்பதற்கு முன்பே அங்கே நடைமுறையில் இருந்த வார்த்தை என்பதை நாம் மறக்க கூடாது. 


ஒரு காலகட்டத்தில் இயேசு என்பவர் இஸ்ரேலில் தோன்றுகிறார் அவர்மேல் தெய்வ நிந்தனை செய்தார் என்ற குற்ற சாட்டு மக்களால் வைக்கப்படுகிறது. எதற்க்காக அந்த குற்ற சாட்டு இயேசுவின் மேல் வைக்கப்படுகிறது என்றால் யூத மத சட்டத்தின்படி ஒருவன் தன்னை கடவுள் என்று அழைத்து கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் யாரும் தன்னை இறைவனின் குமாரன் என்று அழைக்க கூடாது. அப்படி அழைத்தால் இறைவனின் புனித தன்மைக்கு கேடு வந்துவிடும். என்று அந்த மக்கள் நம்பினார்கள். இயேசு தன்னை பிதாவின் குமாரர் என்று அழைத்ததனால் அவர் மேலே அந்த குற்றச்சாட்டு தாக்கப்படுகிறது இதனால் அவர் சிலுவையில் அறைந்து கொலை செய்யப்படுகிறார். 


இயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவரோடு இருந்தவர்கள் இயேசுவை குருவாக ஏற்று இவரும் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று அழைத்து கொள்கிறார்கள். இப்படி தான் இயேசு என்ற பெயரோடு கிறிஸ்து என்ற பெயர் ஓட்ட வைக்கப்படுகிறது. நன்றாக கவனிக்க வேண்டும் இயேசு உயிரோடு இருந்த போது அவர் கிறிஸ்து அல்ல இறந்த பிறகே அதுவும் மரணித்து நூறுவருடம் கழித்த பிறகே அந்த பெயர் அவருக்கு வைக்கப்படுகிறது. 


அதன்பிறகு சுமார் முன்னூறு ஆண்டுகள் சென்ற பிறகே இயேசு சாதாரண அரசர்களை போலவும் நீதிபதிகளை போலவும் வாசனை எண்ணெயால் மட்டும் அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்ல பரலோக ராஜ்யத்தில் இருந்து கர்த்தரால் அவரது பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற புனைவு ஏற்படுத்தப்பட்டு யேசுவிற்கு தெய்வ தன்மை பூசப்பட்டது. 


பிரகதீஸ்வரன்:- இயேசு கிறிஸ்து என்ற பெயருக்குள்ளையே இத்தனை பூகம்பம் என்றால் மற்ற விஷயத்தில் இன்னும் அதிகப்படியான அதிர்ச்சிகள் இருக்குமென்று நான் நம்புகிறேன். அவற்றை விளக்கமாக சொல்லுங்கள். 


குருஜி:- இயேசு பிறந்த தினம் கிறிஸ்துமஸ் என்பது உலகறிந்த செய்தி உலகம் முழுவதும் அவரின் அவதார திருநாள் டிசம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி கொண்டாட படுகிறது இதில் முக்கியமான ஒரு சந்தேகம் இருக்கிறது எதை வைத்து அவர் இந்த தேதியில் பிறந்தார் என்று யாரும் உறுதியாக கூறவே இல்லை. அதற்கான சரியான ஆதாரங்களும் இதுவரையில் உலகத்திற்கு கொடுக்கப்படவில்லை. 


காரணம் பழைய புதிய ஏற்பாடுகள் எதிலும் ஏசு டிசம்பர் மாதம் இந்த தேதியில் தான் பிறந்தார் என்று எங்கையும் சொல்லப்படவில்லை. அதோடு மட்டுமல்ல இயேசு வாழ்ந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த யாரும் அவரது பிறப்பு தேதியை சொல்லவே இல்லை. இன்னும் சற்று ஆழமாக இந்த தேதியை பற்றி நாம் சிந்தித்தால் வேறுசில அவநம்பிக்கைகளும் நமக்கு தோன்றும். 


இயேசு பிறந்த நாடு பாலைவனங்களால் சூழப்பட்ட பகுதியாகும். அங்கே டிசம்பர் மாதம் என்பது பனிமிகுந்த காலமாகும். பாலைவனத்தில் பனிக்காலம் என்பது வானமே தெரியாத அளவிற்கு தூசுமண்டலமும் மேக மண்டலமும் சூழ்ந்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு பிறந்தார் அவர் பிறந்ததற்கு அறிகுறியாக வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றியது என்று பைபிள் கூறுகிறது. பனி நேரத்தில் வானம் முழுமையாக மறைவாக இருக்கும் காலத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றுகிறது என்றால் அதை தூரத்திலிருந்து பார்ப்பது முடியாத காரியம் ஆனால் அந்த நட்சத்திரத்தை சில பயணிகள் பார்த்ததாகவும் நட்சத்திரத்தை அடையாளமாக கொண்டு நடந்துவந்து பெத்தலகேமில் நாசரேத் என்ற சிற்றூரில் மாட்டு தொழுவத்தில் பிறந்திருந்த குழந்தை ஏசுவை பணிந்து வணங்கினார்கள் பரிசுகள் வழங்கினார்கள் என்பதை நம்புவது மிகவும் கடினமாக இருக்கிறது. 


அத்தோடு மட்டுமல்ல டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது கடந்த சில நூற்றாடுகளாக தான் நடைமுறையில் இருக்கிறது. ஆதிநாளில் கிறிஸ்துமஸ் ஏப்ரல் மாதத்திலும் ஜூலை மாதத்திலும் கொண்டாடப்பட்டதாக வரலாற்று சான்றுகள் நிறையவே இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இயேசுவின் பிறந்தநாளே செயற்கையாக உருவாக்கப்பட்டதாக தான் இருக்க வேண்டுமென்ற சந்தேகம் நமக்கு வலுவாக ஏற்படுகிறது. 


ஏரோது என்ற மன்னன் ஏசு பிறப்பால் தனக்கு அபாயம் இருப்பதாக அறிந்து கொண்டு பிறந்த இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டதாக மத்தேயு எழுதிய சுவிசேஷத்தில் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மரியாளும் அவளது கணவனும் குழந்தை ஏசுவை தூக்கி கொண்டு எகிப்து நாட்டிற்கு தப்பி ஓடியதாக கருதப்படுகிறது. ஆனால் லூக்கா என்பவர் தான் எழுதிய சுவிசேஷத்தில் இந்த தகவல்கள் எதையும் கூறவில்லை. இயேசு பிறந்து நாற்பது நாட்கள் சென்றபின்பு சுத்திகரிப்பு சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு குழந்தையை இஸ்ரேலில் உள்ள ஆலயத்திற்கு கொண்டுவந்ததாக எழுதுகிறார். உண்மையாகவே ஏரோது மன்னன் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருக்கலாம். இதை நாம் சிந்திக்காமல் ஒதுங்கிவிட்டால் கூட மிக முக்கியமான இந்த சம்பவத்தை பற்றி இரண்டு பேர் இரண்டு விதமாக கூறுவது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. 


இயேசுவின் சீடர்களாக பனிரெண்டு பேர்கள் கருதப்படுகிறார்கள். பைபிளில் மிக ஆழமான பகுதிக்குள் நுழைந்து பார்த்தால் பனிரெண்டு பெயரில் சிலர் மட்டுமே பேசக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களின் பெயர்கள் சும்மா ஒப்புக்காக கூறப்படுகிறது. மேலும் மத்தேயு, மார்க்கு, யோவான், பேதுரு, மரியான், யூதாஸ் போன்ற பெயர்களை பைபிளில் மட்டும் தான் காணமுடிகிறதே தவிர அதை தவிர்த்த மற்ற சரித்திர குறிப்புகள் எதிலும் அவர்களின் பெயர்கள் இல்லை. அப்படி சிலர் ஏசுவின் சீடர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. 


அடுத்ததாக இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை எடுத்துக்கொள்வோம் அவர் வசந்தகாலத்தில் வருகிற வெள்ளிக்கிழமை ஒன்றில் சிலுவையில் அறையப்பட்டதாக கூறுகிறார்கள். அவரே மூன்றாவது நாள் தனது கல்லறையில் இருந்து உடம்போடு உயிர் பெற்று எழுந்ததாகவும் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாவது நாள் என்றால் ஞாயிற்றுகிழமை வரும் ஆனால் மூன்று நாட்கள் சரியானதா? என்று கணக்கு போட்டால் அதிலும் குழப்பம் இருக்கிறது. பைபிளில் காட்சி அமைப்புபடி வெள்ளிக்கிழமை மதியம் ஏசு சிலுவையில் அறையப்படுகிறார். 


சிலுவையில் அறையப்பட்ட ஒருவருடைய உயிர் எப்படி பிரியும் என்றால் ஆணி அடித்து அதனால் ஏற்பட்ட காயத்திலிருந்து இரத்தம் நிற்காமல் ஒழுகி உடம்பில் சுத்தமாக இரத்த ஓட்டம் நின்ற பிறகே மரணம் ஏற்படும். இது மிகப்பெரிய கொடுமையான சாவு என்பதில் ஐயமில்லை நம் ஊரில் குற்றவாளிகளை கழுமரம் ஏற்றியதாக கேள்விப்படுகிறோம். அது எப்படி என்றால் ஒரு மனிதனின் ஆசன வாய் வழியாக கூரான மரக்கட்டையை சொருகி அவன் முதுகு வழியாக அது வெளிவந்த பிறகு நட்ட நடு வெயிலில் கழுமரத்தை நட்டுவிடுவார்கள். அதில் மாட்டப்பட்ட மனிதன் சிறிது சிறிதாக இரத்தம் ஒழுகி எறும்புகள் அரித்து பறவைகள் கொத்தி மிருகங்கள் கடித்து இறந்து போவான் இதற்கு சில நேரத்தில் இரண்டு நாட்கள் கூட ஆகுமாம். உயிர் போகும் வரையில் குற்றவாளி துடியாக துடித்து சாகவேண்டும். இதே போன்ற கொடுமையான மரணம் தான் சிலுவையில் அறைவது என்பது. 


மதிய நேரத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தால் அவர் உயிர் பிரிவதற்கு ஆறேழு மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகே அவரது உடல் அடக்கம் செய்திருக்க வேண்டும். அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிர் பெற்றால் இரண்டரை நாளில் உயிர் பெற்றதாக எடுத்து கொள்ள முடியுமே தவிர மூன்று நாள் என்ற கணக்கில் சிக்கல் வருகிறது. 


மூன்று நாளைக்கு பிறகு உயிர் பிழைத்து வருதல் என்பது கிரேக்க ரோமானிய யூத புராணங்களில் புகழ்பெற்ற சம்பவங்கள் ஆகும். யோனா என்பவன் மீனின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் இருந்து வெளிவந்து கடவுளானான் என்ற புராணமும், ஹெர்குலிஸ் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் இருந்தான் என்ற புராணமும் ரெட் ரைடிங் சூட் என்பவன் ஓநாய் வயிற்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து வெளிவந்தான் என்ற புராண கதைகளும் அந்த பகுதியில் ஏராளமாக நிலவிவந்தது. அந்த கதைகளின் அடிப்படையிலேயே ஏசு மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தார் என்ற கதையும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படும் ஈஸ்டர் என்ற பண்டிகையின் பெயர் ஆஸ்டிரா என்ற கிரேக்க கடவுளின் பண்டிகையின் பெயரை இணைத்து பார்த்தால் கிரேக்க புராணங்களில் தாக்கம் கிறிஸ்துவினுடைய வாழ்க்கை சம்பவங்களோடு பிணைக்கப்பட்டிருப்பதை காணலாம். 


பிரகதீஸ்வரன்:- இவற்றை மட்டும் வைத்து கொண்டு இயேசுவின் வாழ்க்கை கற்பனை என்று எப்படி கூற இயலும்? ஒருவேளை கிறிஸ்துவத்தில் மேல் உங்களுக்கு இருக்கும் கோபத்தால் அப்படி கூறுகிறீர்களா?



தொடரும்.... 



Contact Form

Name

Email *

Message *