Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிலைகளை வணங்கும் கிறிஸ்தவர்கள் !



குருஜியின் பைபிள் பயணம் - 4


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )




பிரகதீஸ்வரன்:- எனக்கென்னவோ நீங்கள் உங்கள் மதத்தை பற்றி பேசும் போது மட்டும் தத்துவம் கொள்கை சித்தாந்தம் என்று கூறுகிறீர்கள். மாற்று மதத்தை பற்றி கூறுகிற போது அவைகளை தவிர்த்து விடுகிறீர்கள் என்று தோன்றுகிறது. அது சரிதானா? 


குருஜி:- சட்டை என்பது உடம்புக்கு ஏற்றது போல இருக்க வேண்டும். மாறாக உடம்பை சட்டைக்கு ஏற்றது போல எப்போதுமே மாற்ற இயலாது. மதங்களும் அப்படி தான் தத்துவம் என்பது தான் மூலமே தவிர மதம் என்பது மூலம் அல்ல. இதை எளிமையாக சொல்வது என்றால் வெளியிலே கம்பீரமாக தெரிகிற கட்டிடம் தான் மதம் அந்த கட்டிடத்தை தாங்கி நிற்கின்ற அஸ்திவாரமே தத்துவம். 


நாம் என் மதத்தில் மட்டும் தத்துவத்தையும் சித்தாந்தத்தையும் தேடுவது இல்லை. மற்ற மதங்களிலும் அவைகள் இருக்கிறதா? மற்ற மதங்களும் அவைகளுக்கு ஏற்றவாறு இயங்குகிறதா? என்று பார்ப்பவன் அந்த வகையில் நான் கிறிஸ்தவ தத்துவங்களின் அடிப்படையில் அந்த மதத்தை பார்க்க முயற்சி செய்கிறேன். 


அப்படி பார்க்கும் போது கிறிஸ்தவ மதத்தின் நடைமுறைகளுக்கும் அதன் தத்துவங்களுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகளை காண்கிறேன். அந்த வேறுபாடுகள் இந்தியாவில் மட்டும் உள்ளது அல்ல. உலகளாவிய கிறிஸ்தவ மதத்திலும் நிறைய இருக்கிறது. இதனாலயே கிறிஸ்தவ மதம் மனித ஆத்மாக்களை கரை சேர்க்குமா? என்ற சந்தேகம் வலுவாக வருகிறது. 


பிரகதீஸ்வரன்:- அப்படி நீங்கள் காணுகிற முரண்பாடுகள் என்ன? 


குருஜி:- உதாரணமாக அவர்கள் இறைவனை தொழுகிற தேவாலயத்தை எடுத்து கொள்ளுங்கள் அந்த தேவாலயங்களுக்கு பைபிளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றே தெரியவில்லை. பைபிள் உருவவழிபாடு கூடாது என்று கருதுவதாக கூறுகிறார்கள். சிலைகள் என்பதே சாத்தானின் வடிவம் என்பது கிறிஸ்வத்தின் ஆதார கருத்தாகும். 


சில பெந்தேகோஸ்தே சபையினர் சிலுவை கூட ஒரு உருவம் தான் அதை வழிபாட்டு கூடங்களில் வைக்க கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இயேசு நாதரின் ஓவியத்தை கூட வீட்டில் வைக்க கூடாது அதன் வழியாகவும் சாத்தானின் சாபம் மனிதர்களை பிடித்து கொள்ளும் என்கிறார்கள். 


இப்போது எனக்கு ஒரு தடுமாற்றம் வருகிறது. பெந்தேகோஸ்தே என்பதும் கிறிஸ்தவம் தான். கத்தோலிக்கம் என்பதும் கிறிஸ்தவம் தான் ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களில் எண்ணிக்கையில் அடங்காத சிலைகள் இருக்கிறது. அந்த சிலைகள் சாத்தானின் வடிவம் இல்லையா? கிறிஸ்தவத்திற்கு எதிரானது இல்லையா?


இப்படி நான் கேட்பதற்கு காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ போதகர் இந்தியா முழுவதும் உள்ள கோவில்கள் சாத்தானின் கூடாரமாகவும் சாபங்களாகவும் இருக்கிறது காரணம் கோவில் முழுவதும் சிலைகளால் நிரம்பி இருக்கிறது அந்த சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தனது பக்தர்களுக்கு போதனை செய்தார். அவர் சொல்லுவது இந்து ஆலயங்களை மட்டும் தானா? அல்லது கத்தோலிக்க தேவாலயங்களையும் சேர்த்து தான் கூறினாரா? சேர்த்து தான் சொன்னார் என்றால் முதலில் அவர் சிலைகளை அப்புறப்படுத்தும் பணிகளை மாதாகோவிலில் இருந்து ஆரம்பிக்கலாமே என்று நான் நினைக்கிறேன். 


இதை கூட விட்டு விடலாம். கத்தோலிக்க தேவாலயங்களில் நமது ஆலயங்களில் செய்யப்படுவது போல ஊதுவத்தி சாம்பிராணி புகைகள் காட்டி பூஜைகள் நடத்தபடுகிறது. சில ஆலயங்களில் குத்துவிளக்கு கூட ஏற்றப்படுகிறது. நமது கோவில்களில் இருப்பது போலவே மிக உயர்ந்த கொடி மரங்களும் இருக்கின்றன வருடத்திற்கு ஒருமுறை கொடியேற்றி பத்துநாள் உச்சவமும் கோலாகலமாக நடைபெறுகிறது. 


நான் பிறந்த ஊரான கரைச்சுத்துபுதூரில் உள்ள மாதா கோவிலில் தைமாதம் திருவிழா அப்போது கொண்டாடப்படும் இப்போது அதை சித்திரை மாதம் என்று மாற்றி விட்டார்கள். குழந்தைகளுக்கு கோடைக்கால விடுமுறை அந்த நேரத்தில் வருவதனால் வெளியூரில் இருப்பவர்கள் வருவதற்கு வசதியாக இருக்குமென்று அப்படி மாற்றி விட்டார்களாம். 


அந்த கோவில் திருவிழாவின் போது மேளதாளத்தோடு கொடியேற்றப்படும் அன்று கையில் ஈட்டி வைத்திருக்கும் ஒரு சிலையை சப்பரத்தில் வைத்து ஊர் முழுவதும் சுற்றி வருவார்கள். அப்படி சுற்றி வந்தால் தோற்று நோயும் கொள்ளை நோயும் ஊருக்குள் வராது என்று ஒரு ஐதீகம் கூறுவார்கள். அத்தோடு மட்டுமல்ல பத்தாவது நாள் திருவிழாவில் அன்னை மரியாள் குழந்தையை சுமந்திருக்கும் அழகான சிலை ஒன்றை தேரில் வைத்து ஊர்வலமாக இழுத்து வருவார்கள். 


சிலைகளுக்கு பூஜை செய்வது கொடியேற்றி திருவிழா நடத்துவது தெய்வங்களை தேர்கள் மீதும் சப்பரத்தில் மீதும் வைத்து கொண்டு ஊர்வலமாக வருவதும் எந்த பைபிளில் சொல்ல பட்டிருக்கிறது. ஒருவேளை அதற்கும் பைபிளுக்கும் சம்மந்தம் இல்லை என்றால் கத்தோலிக்கம் என்பது கிறிஸ்தவம் இல்லையா? 


இந்துமத நடைமுறை போல இருக்கும் இந்த வழிபாட்டு முறைகள் இந்திய கத்தோலிக்கத்தில் மட்டும் தான் இருக்கிறது. என்று யாரும் கூற முடியாது. காரணம் கத்தோலிக்க தலைநகரான வாட்டிகன் நகரிலேயே போப் ஆண்டவர் முன்னிலையிலேயே கொடியேற்றுவதும் தேர் இழுப்பதும் நடைபெறுகிறது. இதை எப்படி கிறிஸ்தவ உலகம் ஏற்கிறது. பிறகு எதற்க்காக இந்து மதத்தினரை பார்த்து நீங்கள் கல்லை வணங்குகிறீர்கள் என்று ஏளனம் பேசுகிறார்கள். 


ஒருவேளை மாதா கோவிலில் இருக்கும் சிலைகள் கல்லால் செய்யப்படாமல் மாமிசத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாமோ? அதன் உள்ளே இயேசுவின் இரத்தம் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறதோ? இதற்கு அவர்கள் தான் பதில் கூறவேண்டும். மேலும் திருவண்ணாமலையில் நாம் கிரிவலம் வருவது போல திருச்சிக்கு பக்கத்தில் கிறிஸ்தவர்கள் ஒருமலையை சுற்றி வருகிறார்கள். அதன் பெயர் மேரி வலமாம் அன்னை வேளாங்கன்னியை தரிசனம் செய்ய பாதையாத்திரையாக பல பக்தர்கள் போகிறார்கள் இது பாராட்ட வேண்டிய விஷயம் தான் ஆனால் அப்படி போகிறவர்கள் காவி ஆடையை அணிந்து போகிறார்கள் காவிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? காவி ஆடை அணிந்து தான் செல்ல வேண்டுமென்று எந்த பைபிளில் கூறப்பட்டிருக்கிறது?


பிரகதீஸ்வரன்:- அதனால் தான் இவர்கள் செயலுக்கும் பைபிளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடுத்து கூறுவதற்கு பெந்தேகோஸ்தே சபையினர் இருக்கிறார்களே? அவர்களை மட்டுமே கிறிஸ்தவத்தின் ஒரே பிரதிநிதி என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளலாமே அதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? 


குருஜி:- அண்ணனுக்கு பைத்தியம் என்று தம்பி வேஷ்டியை கிழித்து கொண்ட கதையாக இருக்கிறது நீ சொல்லுவது. கத்தோலிக்கமாவது எதையும் ஒழிக்காமல் மறைக்காமல் நேரடியாக ஒப்பு கொள்கிறது. பெந்தேகோஸ்தே இருக்கிறதே அது மெளனமாக இருந்து மெளடிகம் செய்கிறது.


ஜெப கூட்டத்தில் சுவர்களில் கூட சிலுவை குறிகள் இருக்க கூடாது என்று பேசுகிற சில தீவிர பெந்தேகோஸ்தே நபர்கள் மற்றவர்கள் தலையின் மீது கைவைத்து ஜெபம் செய்யும் போது நன்றாக உற்றுப்பாருங்கள் மற்றவர்கள் நெற்றியில் தனது கட்டைவிரலால் சிலுவை குறியை இடுவார்கள். இது மோசம் இல்லையா? சுவற்றில் இருந்தால் அது உருவம் நீங்கள் கைகளால் போட்டால் அது உருவம் இல்லையா? 


அதை போல பேய் பிடித்தவர்கள் நோயாளிகள் இவர்களுக்காக ஜெபம் செய்யும் போது பைபிளை அவர்கள் தலையின் மீது அல்லது உடம்பில் ஏதாவது ஒரு பகுதியின் மீது வைத்து கொண்டு ஜெபிப்பார்கள். எதற்க்காக அப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் பைபிளில் தேவ வசனம் இருக்கிறது அதிலுள்ள சக்தி எல்லாவற்றையும் குணப்படுத்த வல்லது என்பார்கள். உண்மையில் பைபிளில் தேவ வசனம் இருக்கலாம் ஆனால் பைபிள் என்பது என்ன? சில வாசகங்கள் காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு கோர்க்க பட்ட ஒரு புத்தகமாகும். அதன் வழியாக சக்தி வருகிறது என்றால் பைபிளை ஒரு உருவமாக கருதுவதாக தானே எடுத்து கொள்ள முடியும்.


அடுத்தது இதோ இயேசு வருகிறார் அதோ தென்படுகிறார் என்றெல்லாம் ஆவேசமாக குரல் கொடுப்பார்கள் அப்படி இயேசு வருவது இவர்கள் எப்படி தெரிந்து கொள்கிறார்கள். எதோ ஒரு உருவமாக தானே இப்படி இவர்கள் செய்வது ஏறக்குறைய உருவ வழிபாடு தான் உருவமே இல்லாமல் வழிபட முடியாது என்பது வேறு விஷயம் ஆனால் உருவ வழிபாடு செய்பவர்களை நிந்திக்கும் போது தான் இந்த கேள்வியை நாம் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.


நான்கு கோணத்தில் அஸ்திவாரம் போட்டுவைத்துவிட்டு முக்கோணத்தில் வீடுகட்டுவது புத்திசாலித்தனம் ஆகாது. கிறிஸ்தவம் உருவவழிபாட்டை ஏற்க வில்லை என்கிறார்கள் அப்படி என்றால் அவர்கள் அந்த கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். யூதர்களை எடுத்து கொள்ளுங்கள் அவர்கள் நெருப்பை மட்டுமே ஜெஹோவா என்று அதாவது கடவுள் என்று வணங்குகிறார்கள். அதனால் அவர்களை பற்றி யாரும் விமர்சிப்பது இல்லை. இவர்கள் தான் சிலைகள் அது இதுவென்று வியாக்கியானம் செய்கிறார்கள் அதனால் தான் எதிர் கேள்வியும் கேட்க வேண்டிய நிலை வருகிறது.


பிரகதீஸ்வரன்:- சிலைகள் வழிபாடு இருக்கட்டும் கிறிஸ்தவத்தில் இந்து மதத்தை போல பலதெய்வ வழிபாடுகள் இல்லையே நீங்கள் அக்கினியை தெய்வம் என்கிறீர்கள் நீரை தெய்வம் என்கிறீர்கள் படைக்க ஒரு கடவுள் காக்க ஒரு கடவுள் அழிக்க ஒரு கடவுள் என்றெல்லாம் முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்குகிறீர்கள். கிறிஸ்தவத்தில் அப்படி எதுவும் கிடையாதே அவர்கள் இயேசுவை வணங்குகிறார்கள் இயேசுவை சுமந்து பெற்றதனால் மரியாளை வணங்குகிறார்கள். இது தவிர வேறு தெய்வங்களை அவர்களுக்கு கிடையாதே? இது சிறப்பு இல்லையா?



தொடரும்.... 


Contact Form

Name

Email *

Message *