Store
  Store
  Store
  Store
  Store
  Store

இயேசு கடவுள் அல்ல !


குருஜியின் பைபிள் பயணம் - 5


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )

பிரகதீஸ்வரன்:- சிலைகள் வழிபாடு இருக்கட்டும் கிறிஸ்தவத்தில் இந்து மதத்தை போல பலதெய்வ வழிபாடுகள் இல்லையே நீங்கள் அக்கினியை தெய்வம் என்கிறீர்கள் நீரை தெய்வம் என்கிறீர்கள் படைக்க ஒரு கடவுள் காக்க ஒரு கடவுள் அழிக்க ஒரு கடவுள் என்றெல்லாம் முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்குகிறீர்கள். கிறிஸ்தவத்தில் அப்படி எதுவும் கிடையாதே அவர்கள் இயேசுவை வணங்குகிறார்கள் இயேசுவை சுமந்து பெற்றதனால் மரியாளை வணங்குகிறார்கள். இது தவிர வேறு தெய்வங்களை அவர்களுக்கு கிடையாதே? இது சிறப்பு இல்லையா?


குருஜி:- ஒரு மதத்தின் சிறப்பு என்பது அதில் பலதெய்வ வழிபாடு இருக்கிறதா? அல்லது ஒரே தெய்வ வழிபாடு இருக்கிறதா? என்பதை பொறுத்து அமைவது இல்லை. அந்த மதம் கூறுகின்ற அறிவார்த்தமான தத்துவங்களின் சிறப்பை பொருத்தே மதத்தின் மேன்மை அமைகிறது. கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரையில் அதில் ஒரே தெய்வ வழிபாடு தான் இருக்கிறது என்று பேசுவார்கள் ஆனால் ஆழமாக அதற்குள் நுழைந்து கேள்விகள் கேட்டால் அதற்கான பதிலை அவர்களால் கூற இயலாது. 


பைபிளில் பழைய ஏற்பாட்டை படித்தால் நீ மிரண்டு போய்விடுவாய் காரணம் ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு ஜாதியாருக்கும் தனித்தனியான கடவுள்கள் காட்டப்படுவார்கள். அவைகளை பற்றி பட்டியல் போட்டு பேசுவதாக இருந்தால் ஒருநாள் போதாது. பாலஸ்தினியரின் கடவுள், இஸ்ரேலியரில் கடவுள், ரோமர்களின் கடவுள் என்று ஏகப்பட்ட பெயர்கள் பைபிள் முழுவதும் உலாவுவதை காணலாம். அந்த கடவுளின் பெயர்களை கூட அது தனித்தனி இனத்தவர்கள் வைத்து கொண்ட பெயர் அதற்கும் கிறிஸ்தவத்திற்கு சம்மந்தம் இல்லை. என்று கூறி சமாளிக்கலாம் ஆனால் கிறிஸ்தவத்திலேயே பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று மூன்று பிரிவுகளை காட்டுகிறார்கள். இந்த மூன்று பிரிவுகளையே அவர்கள் கடவுளை போல தான் மதிக்கிறார்கள் பேசுகிறார்கள். 


இதில் பிதா என்ற சொல் கர்த்தரை அதாவது உலகை படைத்தவரை இறைவனை சுட்டுகிற சொல் எனலாம். சுதன் என்பது இறைவனின் குமாரனை சுட்டி காட்டுகிறது என்றும் கூறலாம். ஆனால் பரிசுத்த ஆவி என்பதை என்னவென்று எடுத்து கொள்ளுவது? அதற்கான விளக்கம் என்ன? அதை பற்றி பைபிளில் என்ன கூறுகிறார்கள்? என்பதை எல்லாம் விளங்கி கொள்ள முயற்சி செய்தால் நாம் தோற்று தான் போகவேண்டியது இருக்கிறது. 


ஒரு சமயத்தில் பரிசுத்த ஆவி தான் உலகை படைத்தது என்கிறார்கள். வேறொரு சமயத்தில் பரிசுத்த ஆவி தான் இயேசு என்கிறார்கள் மற்றொரு சமயத்திலோ பரிசுத்த ஆவியே வானத்திலிருந்து புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கியது என்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்ளுவது அர்த்தப்படுத்தி கொள்ளுவது என்பது கிறிஸ்தவர்களுக்கே வெளிச்சம். 


ஒருவேளை கர்த்தரின் சக்தி பரிசுத்த ஆவியாக பூமியின் மீது இறங்கி வருகிறதோ? அந்த சக்தி பெயர் தான் பரிசுத்த ஆவியோ? என்று நாம் எடுத்து கொள்ள போனால் இல்லை இல்லை அது கர்த்தரின் சக்தி இல்லை என்கிறார்கள். ஒருவேளை சாதாரண மனிதர்களை அப்படி கருதுகிறீர்களா என்பதும் புரியவில்லை 


இந்த குழப்பங்களை எல்லாம் விட்டுவிடுவோம் ஏன் கிறிஸ்தவத்தில் ஒரே கடவுள் இருக்கிறாரா? பல கடவுள் இருக்கிறாரா? என்பதை எல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால் இதைவிட மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. கிறிஸ்துவத்தின் ஆணிவேர் என்பதே இயேசு தான் அவருடைய சிலுவை மரணம் மட்டும் இல்லை என்றால் கிறிஸ்தவம் உலகத்தில் இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை போப்பரசர் இரண்டாம் ஜான்பாலே கூறி இருக்கிறார். இதிலிருந்து இயேசுவின் முக்கியத்துவம் என்னவென்று புரியும். ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால் இயேசு கடவுளா? இல்லையா? என்பது தான் 


பிரகதீஸ்வரன்:- இயேசு கடவுள் இல்லை என்று சொல்லுவது கூட அபச்சாரமாக என் மனதிற்கு தோன்றுகிறது. கிறிஸ்துவத்தின் ஆணிவேர் இயேசு அவர் கடவுள் இல்லை என்றால் வேறு யார் கடவுளாக இருக்க முடியும்? உங்களது இந்த கருத்து இதுவரை கிறிஸ்துவத்தை பற்றி நான் கொண்டிருந்த அனைத்து கருத்துகளையும் ஆட்டம் காண செய்வது போல இருக்கிறது. 


குருஜி:- உண்மை கசக்கிறது என்றால் அதை பேசாமல் இருக்க முடியாது. இன்று உலகில் மிக அதிகமான மக்கள் கிறிஸ்தவர்களாகவே இருக்கிறார்கள் சுமார் இருநூறு கோடி மனிதர்கள் இயேசுவை கடவுளாக நினைத்து வழிபாடு நிகழ்த்துகிறார்கள். இயேசு தான் மெய்யான கடவுள் என்று உலகம் முழுவதும் ஏராளமான பொருட்ச்செலவில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் யார் இயேசுவை கடவுள் என்று சொல்ல வேண்டுமோ அவர்கள் சொல்லவில்லை. அதாவது பைபிள் இயேசுவை கடவுள் என்று சொல்லவில்லை ஏசுவே கூட தனது சொற்பொழிவில் எந்த இடத்திலும் தன்னை கடவுள் என்று குறிப்பிடவே இல்லை. அவர் கடவுளாக இருந்தால் அதை ஆமாம் என்று அறிவிப்பதில் என்ன தடை இருக்கிறது. யார் தடுத்துவிட போகிறார்கள்? ஆனால் இயேசு ஒருபோதும் தன்னை அப்படி கூறவே கூறாமல் போனதற்கு என்ன காரணம் என்று நாம் யோசிக்க வேண்டும். 


பைபிளில் பல இடங்களில் இயேசு தனிமையை நாடி சென்றார் தனித்திருந்து ஜெபம் செய்தார் வானதிலிருக்கும் தந்தையோடு பேசினார் என்றெல்லாம் குறிப்புகள் வருகின்றன. இயேசு இறைவன் என்றால் அவர் யாரை நோக்கி தவம் செய்ய வேண்டும்? யாரிடத்தில் ஜெபம் செய்ய வேண்டும்? ஒருவேளை தனக்கு தானே பிரார்த்தனை செய்து கொண்டாரா? அப்படி செய்தால் அது சிறுபிள்ளை தனமல்லவா? 


இயேசு பல இடங்களில் கூறுகிறார் நான் தந்தையின் வேலையை செய்ய வந்திருக்கிறேன் நான் பிதாவின் வழியை காட்ட வந்திருக்கிறேன் என்றெல்லாம் கூறுகிறார். இதைவிட இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருக்கும் நேரத்தில் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று பேசுகிறார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இயேசு கடவுள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. 


இதில் வேறொன்றையும் நாம் யோசிக்க வேண்டும். இயேசு அடிக்கடி தந்தை பிதா என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார் பைபிளிலும் இந்த சொற்கள் பல இடங்களில் வருகிறது. இவைகள் கூறப்பட்டிருக்கின்ற விதத்திலிருந்து இது இறைவனை குறிக்கும் சொல் என்பது நமக்கு நன்றாக தெரிகிறது. அப்படி என்றால் தந்தை பிதா என்று அழைக்கபடுகிற அந்த கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விக்கு பைபிளில் எந்த பகுதியிலும் பதிலே இல்லை.


பிரகதீஸ்வரன்:- இயேசு தன்னை கடவுள் என்று கூறவில்லை என்று சொல்கிறீர்கள் பிறகு எப்படி அவர் கடவுளாக்கபட்டார் அவர் பெயரில் எப்படி மதம் உருவானது? ஒரு மதம் என்று சொன்னால் மதக்கொள்கைகளால் ஆனது அந்த கொள்கைகளை ஒருவர் உருவாக்கி வைத்திருப்பார் அதுவே பிற்காலத்தில் மதமாகவும் அவரே பிற்காலத்தில் கடவுளாகவும் வழிபடுகின்ற மஹானாகவோ ஆக்கப்படுவார் ஆனால் இயேசு தன்னை அப்படி வெளிப்படுத்தவில்லை என்கிறீர்கள் சற்று குழப்பமாக இருக்கிறது விளக்கமாக கூற முடியுமா? 


குருஜி:- இன்றைக்கு ஆயிரத்தி அறுநூறு வருடங்களுக்கு முன்பு ரோபாபுரியை கொன்ஸ்டன்டைன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் மன்னர்களுக்கே இயல்பான யுத்த வெறி இவருக்கு சற்று அதிகமாகவே உண்டு அடிக்கடி பக்கத்து நாடுகளோடு சண்டைக்கு கிளம்பி விடுவான் ஒரு சமயத்தில் முரட்டு தனமான ஒரு கும்பலோடு சண்டைபோட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது 


மன்னனுக்கோ வயதாகிவிட்டது முன்பே போல சண்டை போடுவதில் ஆர்வமும் குறைந்து இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட யுத்தம் மன்னனின் மனதை வெகுவாக பாதித்தது அப்போது இரவில் உறங்கும் போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் சிலுவை பொறித்த தொப்பிகளோடு வீரர்கள் சண்டை போடுவது போல கண்டான் விடிந்ததும் தனது மந்திரிகளிடம் தான் கண்ட கனவை விரிவாக எடுத்து சொன்னான். 


உடனை மந்திரிகள் இந்த சிலுவை குறி என்பது இஸ்ரேல் நாட்டில் மரண தண்டனைக்காக பயன்படுத்துகிற ஒரு ஆயுதம் என்பதும் அதில் இயேசு என்பவரை ஆணியால் அறைந்து கொலை செய்தார்கள் என்றும் அந்த இயேசுவை சில யூதர்கள் மேசியா அதாவது கடவுள் என்று வழிபடுகிறார்கள் என்று கூறினார்கள். 


உடனே அந்த மன்னன் தனது போர் வீரர்களுக்கு சிலுவை குறிப்போட்ட தொப்பிகளை அணிவித்து யுத்தகளத்திற்கு சென்றான். யுத்தத்தில் வெற்றியும் கண்டான் உடனே அவனுக்கு இயேசுவின் மேல் நம்பிக்கையும் பக்தியும் வந்தது. அதனால் ரோமாபுரி முழுவதும் இயேசுவை மட்டுமே வழிபட வேண்டும் என்று கட்டளையிட்டான் இப்படி உதயமானது தான் கிறிஸ்தவ மதம். இதனால் தான் இது ரோமன் கத்தோலிக்கம் என்று அழைக்கப்படுகிறது. இப்படி கிறிஸ்தவ மதம் தோன்றியபோது இயேசு கிறிஸ்து சிலுவையில் மாண்டு நானூறு வருஷங்கள் ஓடி இருந்தது. அதாவது இயேசுவை நேரில் பார்க்காத அவர் உபதேசங்களை கேட்காத மனிதர்களால் அவசரப்பட்டு உருவானது தான் கிறிஸ்தவ மதம். 


இதுமட்டுமல்ல கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்யத்தின் மதமானவுடன் ரோம அரசர்கள் தங்களை மதத்தலைவர்களாகவும் பிரகடனம் படுத்தி கொண்டார்கள். இவர்களின் வழியாக உருவானது தான் போப் என்ற பதவி. போப்களில் அதிகாரம் பல நாட்டு அரசர்களின் அதிகாரங்களை விட அதிகமாக இருந்தது. தேவை இல்லாமல் அரசியல் தலையீடுகள் உலக முழுவதும் போப் ஆண்டவர்களால் இருந்ததனால் அவர்களை எதிர்த்து உருவானது தான் கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான பிராட்டஸ்டன்ட் என்ற பிரிவாகும் இந்த வார்த்தையின் பொருளே சீர்திருத்த திருச்சபை என்பதாகும். 


ஆதியில் தோன்றிய கிறிஸ்தவமான கத்தோலிக்கத்தில் இயேசுவும் அவரின் அருளை பெற்று தருகிற அன்னை மேரியும் சிறப்பான வழிபாடுகளை பெற்றார்கள். பிராட்டஸ்டன்ட்கள் மரியாளை ஒதுக்கிவிட்டு இயேசுவை மட்டுமே பிடித்து கொண்டனர். 


இப்படி இயேசுவின் சம்மந்தம் இல்லாமலே உருவானது தான் கிறிஸ்தவ மதம் என்பது உண்மையை சொல்ல போனால் ஆன்மீக முன்னேற்றத்திற்க்காக இயேசுவை இதுவரையிலும் யாரும் பயன்படுத்தவில்லை அரசியல் காரணங்களுக்காக தங்களது சுயலாபங்களுக்காக மட்டுமே இதுவரை இயேசு பயன்படுத்தபட்டு வருகிறார். ஒரு பெரிய மஹானின் பரிதாபகரமான நிலை இது யானையை பார்த்து குருடர்கள் கணக்கு போடுவது போல் இயேசுவை பார்த்து பலரும் பல கணக்கு போடுகிறார்கள் ஆனால் நிஜமான இயேசுவை யாரும் கணக்கே போடமாட்டேன் என்கிறார்கள். 


இன்னொரு கூட்டத்தார் இருக்கிறார்கள் இவர்கள் கூறுகிற கருத்துக்களை பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்தே போய்விடுவோம் அதாவது ஐரோப்பியர்களின் தரமான கற்பனை தான் இயேசு என்ற கதாபாத்திரம் உண்மையில் இயேசு என்ற மனிதர் உலகில் பிறக்கவே இல்லை என்று கூறுகிறார்கள். 


பிரகதீஸ்வரன்:- கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்கிற நீங்கள் கூட இயேசுவை ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அவரை கடவுளாக அல்ல மஹானாக அல்ல மனிதனாக கூட ஏற்க முடியாத மனிதர்கள் இருப்பது விந்தையிலும் விந்தை உண்மையில் இயேசு உலகில் வாழ்ந்தாரா? இல்லையா?தொடரும்.... 


Contact Form

Name

Email *

Message *