Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாதிரியார்கள் கிறிஸ்தவர்கள் அல்ல !



குருஜியின் பைபிள் பயணம் - 3


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )


பிரகதீஸ்வரன்:- கிறித்தவத்தில் ஆவிகள் இல்லை என்று நீங்கள் கூறுவது வியாப்பாக இருக்கிறது அப்படி என்றால் பைபிளில் சாத்தானை பற்றி நிறைய விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறதே அவைகள் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது பொய்யா? 



குருஜி:- சரியான நேரத்தில் சரியான கேள்வியை கேட்டாய் பைபிளில் வருகிற கதாபாத்திரங்களிலேயே எனக்கும் மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் சாத்தான் தான் காரணம் அவன் ஒருவன் மட்டும் தான் தனது கொள்கையை உறுதியாகவும் பேசுகிறான் தெளிவாகவும் பேசுகிறான். 


பிரகதீஸ்வரன்:- இப்போது எனக்கும் வியப்பு வருகிறது. சாத்தான் தான் பைபிளில் உங்களை கவர்ந்தவர் என்கிறீர்கள் அத்தோடு இல்லாமல் அவர் மட்டுமே உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பதாக கூறுகிறீர்கள் நீங்கள் பேசுவது வாதமா? விதாண்டா வாதமா? என்பதை விளங்கி கொள்ளும் பக்குவம் எனக்கு இல்லை. பையில் என்பது என்னை பொறுத்தவரை பழைய ஏற்பாடு என்றும் புதிய ஏற்பாடு என்றும் இரண்டாக இருப்பதாக அறிவேன் பழைய ஏற்பாட்டில் ஏசுவின் வருகைக்கு முன்பு உள்ள விஷயங்களும் புதிய ஏற்பாடு ஏசு வந்த பிறகு உள்ள விஷயங்களையும் கூறுகிறது. இரண்டு பைபிளிலும் சாத்தானை பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன. எல்லா தகவலுமே எதிர்மறையான விஷயங்களை தவிர நேர்மறையான கருத்துக்கள் எதுவுமே கிடையாது. பிறகு எப்படி சாத்தான் தெளிவாக பேசுவதாக கருதுகிறீர்கள்? 


குருஜி:- பைபிளில் ஆதி ஆகமத்தில் மனிதனின் படைப்பை பற்றி கூறப்படுகிறது. தேவன் தனது சாயலாக ஆதாம் என்பவனையும் அவனுக்கு துணையாக ஏவாள் என்பவளையும் படைத்து ஏதேன் என்ற தோட்டத்தில் விடுகிறான். அப்போது அவர்களிடத்தில் இங்குள்ள எல்லா கனிகளையும் நீங்கள் புசிக்கலாம் ஆனால் அதோ தூரத்தில் தெரிகிறதே அந்த மரத்து கனியை மட்டும் புசிக்கவே கூடாது மீறி அதை நீங்கள் உண்டால் மரணம் அடைவீர்கள் என்று கட்டளை இடுகிறார். அவர்கள் இருவரும் அதன்படியே நடக்கிறார்கள்.


ஒருநாள் அந்த தோட்டத்திற்கு பாம்பு வடிவமாக சாத்தான் வருகிறான் அவன் ஏவாளை அழைத்து குறிப்பிட்ட அந்த மரத்தை காட்டி அதன் கனிகளை நீங்கள் புசித்தால் மரணம் அடைய மாட்டீர்கள் மாறாக உங்களுக்கு அறிவுக்கண் திறக்கும் என்று கூறுகிறான். சாத்தானின் அறிவுரையை ஏற்ற ஏவாள் கனியை தானும் உண்டு தனது துணையான ஆதாமுக்கும் கொடுக்கிறாள்.


அந்த பழத்தை உண்ட உடனேயே இருவருடைய அறிவு கண்ணும் திறக்கிறது. தாங்கள் நிர்வாணமாக இருப்பதை அறிந்து இலைதழைகளை ஆடைகளாக சுற்றி கொள்கிறார்கள். இப்போது நீ சொல் கடவுள் சொன்னபடி நடந்திருந்தால் அவர்கள் இரண்டுபேரும் அப்போதே மாண்டு போயிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை சாத்தான் கூறியபடி தான் அறிவு கண் திறந்தது இதிலிருந்து உனக்கு எனது எண்ணம் என்னவென்று புரியுமென்று நினைக்கிறேன். 


பிரகதீஸ்வரன்:- ஓரளவு புரிகிறது அதே நேரம் எனக்கு வேறொரு கேள்வியும் புதியதாக தோன்றுகிறது சாத்தான் என்பது யார்? அதை படைத்தது கடவுளா? சாத்தான் கடவுளுக்கு விரோதி என்றால் தனது விரோதியை தானே ஏன் கடவுள் படைக்க வேண்டும்? 


குருஜி:- உனக்கு தோன்றுகிற இதே கேள்வி எனக்கும் தோன்றியது அதற்கான பதிலை முழுமையாக பெறுவதற்கு பைபிளில் பல இடங்களில் நான் தேடினேன். ஆனால் எனக்கு சரியான பதில் பைபிளில் கிடைக்கவில்லை. ஆனால் அதற்காண ஓரளவு தெளிவான பதில் யூதர்களின் மதமான ஹீபுரு மதத்திலும் பழைய சுமேரிய மதமான சோரஸ்த்திரியத்திலும் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடவுள் என்பவரும் சாத்தான் என்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை. 


அதாவது வெளிச்சம் என்பது எப்போது ஏற்பட்டதோ அப்போதே இருட்டும் உருவாகிவிட்டது. கடவுள் என்பதை நல்லது என்று கொண்டால் சாத்தான் என்பதை கெட்டது என்று கொள்ளலாம். கடவுள் பிரபஞ்சத்தில் நன்மையே செய்து கொண்டு வருகிறார். அந்த நன்மைகள் அனைத்தையும் சாத்தான் தீமைகளாக மாற்றி வருகிறான். சாத்தானுக்கும் கடவுளுக்கும் உலகம் தோன்றிய நாளிலிருந்து யுத்தம் நடந்து கொண்டே வருகிறது. என்று கடவுள் சாத்தானை வெல்லுகிறாரோ அன்றே உலகத்தின் இறுதி தீர்ப்பு நாள் என்று யூதர்கள் மதமும் சுமேரிய மதமும் கருதுகிறன்றன. 


இந்த இரண்டு மதத்தில் உள்ள விஷயங்கள் பலவற்றை எடுத்து கொண்டு தான் கிறிஸ்துவத்தின் பழைய ஏற்பாடு உருவானது. அதனால் அந்த மதங்களில் உள்ள சாத்தான் என்ற கதாபாத்திரமும் பைபிளோடு இணைக்கப்பட்டு விட்டது. இயேசுநாதரின் வாழ்க்கையில் பல இடங்களில் இந்த சாத்தான் வருவான். 


மிகப்பெரிய பட்டிணங்களை உனக்கு தருகிறேன் உலகத்தின் ராஜாவாக உனக்கு முடி சூட்டுகிறேன் அழகான மாதர்களும் மது வகைகளும் கால்நடைகளும் பரிசளிக்கிறேன் என்று ஏசுவுக்கு ஆசை வார்த்தை காட்டுவான். ஆனால் ஞானியான இயேசு சாத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் அப்பாலே போ சாத்தானே என்று அதை துரத்தி விடுவார். இப்போது நன்றாக கவனி பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சாத்தானுக்கும் ஆவிகள் பேய்கள் என்பவற்றிற்கு எந்த தொடர்பும் கிடையாது. 


பிரகதீஸ்வரன்:- அப்போது நான் பல ஜெப கூட்டங்களில் நேரடியாகவே பேய்கள் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன் மத போதகர்கள் கைகளை அசைத்தவுடன் வேரற்ற மரங்களை போல பேய்பிடித்தவர்கள் என்று சொல்லப்படுகிற மனிதர்கள் தரையில் சாய்ந்து விழுவதும் சிலர் பித்து பிடித்தவர்களை போல குதிப்பதும் நடக்கிறதே அவைகள் எல்லாம் பேய்களால் ஏற்படுகிற விபரீதங்கள் இல்லையா? 


குருஜி:- இந்த உண்மையை தெரிந்து கொள்ள முதலில் பேய்கள் என்றால் என்னவென்று தெரியவேண்டும். ஒருமனிதன் நிறைவேறாத பல ஆசைகளோடு இறந்து போகிறான் அப்படி இறந்தவன் தனது மரணத்தை ஒப்புக்கொள்ளாதவரையில் பூமியில் அங்கும் இங்கும் அலைகிறான் அவனுக்கு மறுபிறப்பு என்ற ஒன்று கிடைக்கும் வரை பேயாகவே இருக்கிறான். இது தானே நம்மில் பலரும் அறிந்த பேய் தத்துவம். 


பிரகதீஸ்வரன்:- ஆமாம் நான் அறிந்த வரையில் இறந்த மனிதர்கள் தான் பேயாக அலைகிறார்கள் மீண்டும் பிறந்து விட்டால் அவர்களது பேய் தன்மை போய்விடும் என்பது தான். 


குருஜி:- இந்த ஆவி தத்துவம் என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தான் சரியானது. கிறிஸ்தவத்தை பொறுத்தவரை அவர்களின் ஆதி மூல தத்துவப்படி இந்த கருத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களால் கிறிஸ்தவர்களாக வாழ இயலாது. காரணம் கிறிஸ்தவ மதத்தின் கருத்தப்படி மனிதனுக்கு மறுபிறப்பே கிடையாது. 


அவர்கள் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையை பற்றி கருதும் போது ஒருவன் இறந்து விட்டால் அவனது ஆத்மாவும் உடம்பும் கல்லறையில் வாழ்கிறது. உலகத்தின் இறுதி தீர்ப்பு வருகிற நாளில் வானத்திலிருந்து கர்த்தர் பூமிக்கு இறங்கி வருவார். அப்போது கல்லறையில் இருக்கிற இறந்து போன மனிதர்கள் அனைவரும் கர்த்தரின் முன்னால் நிறுத்த படுவார்கள் அவர்களை பார்த்து கர்த்தர் அவரவரின் செயலுக்கு ஏற்ற சொர்க்கத்தையோ நரகத்தையோ கொடுப்பார். அப்படி அவர் கொடுக்கிற நாள் வரையில் அதாவது உலகம் அழிந்து போகிற நாள் வரையில் அந்த ஆவிகள் கல்லறையிலேயே தங்கி இருக்கும். மீண்டும் மனிதனாக பிறவி எடுக்காது. 


இப்போது யோசி கல்லறையில் உறைந்து போகிற ஆவி எப்படி வெளியே வரும்? எப்படி மனிதர்களை பிடிக்கும் பிறகு துரத்தினால் எங்கே அது ஓடி போகும்? பலவிதமான கொள்கை குழப்பங்கள் வந்துவிடும் அல்லவா? பரிதாபம் கிறிஸ்தவ மத போதகர்கள் குறிப்பாக ஆவிகளை விரட்ட ஜபம் செய்கிற போதகர்கள் கிறிஸ்வதத்தில் மறுபிறப்பு இல்லை என்பதை வெகு சுலபமாக மறந்து தங்கள் மதத்திற்கு விரோதமான காரியத்தை கனகச்சிதமாக செய்து வருகிறார்கள். 




இப்படி பேய் விரட்டுகிற காரியம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடந்துவருகிறது ஆப்பிரிக்க நாடுகளில் பேய் விரட்டுதல் என்பது மிகப்பெரிய தொழில் நம்ம ஊர் ஜெப வீரர்கள் சிலர் தான் சொந்த விமான வைத்திருக்கிறார்கள் அங்கே அப்படி இல்லை அரண்மனையும் விமானமும் இல்லாத போதகர்களே கிடையாது. பாவம் அப்பாவி கிருத்தவர்கள் தான் இன்னும் தசமபாக காணிக்கையை செலுத்தி கொண்டு இருக்கிறார்கள் 


பிரகதீஸ்வரன்:- நமது மதத்தில் உள்ளவர்கள் பேய் விரட்டுவது இல்லையா? அதே போன்று தானே இதுவும் ?


குருஜி:- ஐயா நம்ம மதத்தில் மறுபிறப்பு கொள்கை உண்டு இன்னும் சொல்ல போனால் மறுபிறப்பை பற்றி உலகத்தில் பேசுகிற ஒரே மதம் நமது மதம் மட்டும் தான். அதே போன்று ஆத்மாவுக்கு கர்ம வினைகள் உண்டு அதன் அடிப்படையிலேயே ஆத்மாவின் பரவுலக வாழ்வும் இக உலக வாழ்வும் அமைகிறது. அமைதி அற்ற ஆன்மா பேயாக பிசாசாக அலையுமென்று நமது மதம் தெளிவாகவே கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் நமது இறைவன் சிவபெருமான் பேய்கள் உலாவுகிற மயானத்தில் தான் நர்த்தனம் புரிகிறார். அதனால் நம் மதத்தின் பெயரால் ஆவிகள் விரட்டப்பட்டால் அது தத்துவ ரீதியிலும் சரிதான் செயலிலும் சரிதான். 


பிரகதீஸ்வரன்:- எனக்கென்னவோ நீங்கள் உங்கள் மதத்தை பற்றி பேசும் போது மட்டும் தத்துவம் கொள்கை சித்தாந்தம் என்று கூறுகிறீர்கள். மாற்று மதத்தை பற்றி கூறுகிற போது அவைகளை தவிர்த்து விடுகிறீர்கள் என்று தோன்றுகிறது. அது சரிதானா? 



தொடரும்.... 


Contact Form

Name

Email *

Message *