Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஹெர்குலிஸ் இயேசுவான கதை !  

 


குருஜியின் பைபிள் பயணம் - 8


( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )


பிரகதீஸ்வரன்:- இவற்றை மட்டும் வைத்து கொண்டு இயேசுவின் வாழ்க்கை கற்பனை என்று எப்படி கூற இயலும்? ஒருவேளை கிறிஸ்துவத்தில் மேல் உங்களுக்கு இருக்கும் கோபத்தால் அப்படி கூறுகிறீர்களா?


குருஜி:- கிறிஸ்தவத்தை குறை கூறுவதற்கோ யேசுநாதர் கற்பனை கதாபாத்திரம் என்று கூறுவதற்கோ நான் முனைவது இல்லை. ஆனால் தன்னை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சில மனிதர்கள் இயேசு மட்டும் தான் நிஜமான கடவுள் மற்றவர்கள் வழிபடுகின்ற கடவுள்கள் அனைத்தும் பொய்யானது கற்பனையானது என்று கூறும் போதும் மற்றவர்கள் வழிபாட்டு முறைகளை ஒட்டுமொத்தமாக சாத்தான் வழிபாடு என்று அவர்கள் சாடும் போது தான் அதற்கு பதில் சொல்ல வேண்டிய வேலை நமக்கு வருகிறது. 


அந்த வகையில் இயேசு என்ற மனிதனை சுற்றி கூறப்படுகின்ற விஷயங்களில் எத்தகைய பலவீனங்கள் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிர்பந்தம் வருகிறது ராமரை பற்றி கிருஷ்ணனை பற்றி புராணங்கள் தான் பேசுகிறதே தவிர வரலாற்று ஆவணங்கள் எதுவும் கிடையாது எனவே அவர்கள் கற்பனையான கடவுள்கள் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் படுத்தும் போது ராமர் கிருஷ்ணர் மட்டுமல்ல இயேசுவும் கூட வரலாற்று ஆதாரமில்லாத உருவகம் தான் என்று பேசவேண்டிய நிலைக்கு நம்மை தள்ளுகிறது. அவர்கள் வாயை மூடிக்கொண்டு அடுத்தவர்களை சீண்டாமல் இருந்தால் நாமும் அவர்களை சீண்டவேண்டிய அவசியம் இருக்காது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


பிரகதீஸ்வரன்:- பண்டையகால வரலாறுகள் என்று வருகிற போது அதற்கான நேரடி அத்தாட்சிகள் எதுவும் இருக்காது. இலக்கிய குறிப்புகள் கல்வெட்டுகள் நாணயங்கள் இவற்றை வைத்து தான் யூகித்து வரலாற்றை புரிந்து கொள்ளவேண்டிய நிலை இருக்கிறது. இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் இல்லாததை இருப்பது போல் புனைவு செய்து எழுதி இருந்தால் அது எப்படி நமக்கு தெரியும். நூற்றாண்டுகள் பல கடந்துவிட்ட பிறகு அவைகளை நம்பி தான் ஆகவேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்படி தான் இயேசுவினுடைய வாழ்க்கையையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு அவரை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்வது எந்த வகையில் சரியானதாக இருக்கும்? 


குருஜி:- நீ கூறுவது ஒருவகையில் சரிதான் இன்று நாம் வரலாறு என்று நம்புவது முன்னோர்களின் குறிப்புகளை தான். அதில் தவறுதலான விஷயங்களை முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். என்றால் அதற்கு நாம் ஒன்று செய்ய இயலாது. ஆனாலும் ஒருவர் குறிப்போடு இன்னொருவர் குறிப்பை ஒப்பிட்டு நோக்கும் போது ஓரளவு உண்மை எது பொய் எது என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதன் அடிப்படையில் தான் இயேசுவினுடைய வாழ்க்கையை நாம் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. 


ஹெர்குலிஸ் என்ற பெயரை நீ கேட்டிருப்பாய் ஒருகாலத்தில் நம் நாட்டில் பிரபல சைக்கிள் கம்பெனி ஒன்று அந்த பெயரில் இருந்தது. அதன் சின்னம் என்னவென்றால் திடகாத்திரமான ஒருமனிதன் உலகத்தை முதுகில் தாங்குவது போல் இருக்கும். இந்த ஹெர்குலிஸ் என்ற கதாபாத்திரம் கிரேக்க புராணங்களில் கூறப்படும் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாற்றையும் இயேசுவின் வரலாற்றையும் ஒப்பிட்டு பார்த்த போது நமக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படும். காரணம் இரண்டு வாழ்க்கையும் அமைப்புகளும் ஒன்றாகவே இருக்கிறது. 


ஜீயஸ் என்றும் கடவுளுக்கும் அல்மினி என்ற கன்னி பெண்ணிற்கும் ஹெர்குலிஸ் பிறக்கிறான். இயேசு எப்படி கர்த்தரின் பரிசுத்த ஆவியால் கன்னிமேரியின் கர்ப்பத்தில் வந்தாரோ அப்படி தான் இதுவும். ஹெர்குலிஸ் தான் வாழ்ந்த காலத்தில் நிறைய அதிசயங்களை நிகழ்த்துகிறான். நோயாளிகளை குணப்படுத்துவது, இறந்தவர்களை உயிரோடு எழுப்புவது என்று ஏராளமான அற்புதங்கள் ஹெர்குலீஸால் நடத்தப்படுகிறது. இயேசுவும் இதையே தான் செய்கிறார். தனது இறுதி காலத்தில் ஹெர்குலிஸ் மிக கொடுமையான முறையில் இறந்து போகிறான் பிறகு மூன்றாவது நாள் உயிரோடு எழும்பி வருகிறான். ஏசுவின் மரணமும் இப்படி தான். ஆனால் ஒரு சிறு வித்தியாசம் ஹெர்குலிஸ் பற்றி கிரேக்க மொழியில் காவியம் எழுதப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகே இயேசு பிறந்ததாக எழுதப்படுகிறது. இது எதை காட்டுகிறது என்றால் ஏசு என்ற ஒரு சாதாரண மனிதனின் பிறப்பில் தெய்வத்தன்மையை காட்டுவதற்காக பிரபலமான காவிய நாயகனின் வாழ்க்கையை எடுத்து இவருடைய வாழ்க்கையோடு இணைத்து எதற்காகவோ புதியதாக புனைய பட்டுள்ளது என்பதை தான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 


ஏரோது என்ற மன்னன் இயேசுவின் பிறப்பால் தனக்கு மரணம் நிகழுமென்று கருதி யூதநாட்டில் இரண்டு வயதிற்குள் உள்ள ஆண்குழந்தைகள் அனைவரையும் கொலை செய்ய கட்டளையிட்டதாகவும் அதன்படி அரசாங்க ஊழியர்கள் கொலைகளை செய்ததாகவும் ஜெருசலேம் நகரம் முழுவதும் குழந்தைகளின் மரண ஓலமும் பிள்ளையை பறிகொடுத்தவர்களின் ஒப்பாரியும் கேட்டதாக பைபிள் சொல்கிறது. 


ஆனால் ஏரோது மன்னன் வாழ்க்கை வரலாற்றில் எடுத்து பார்த்தால் அவன் அப்படி ஒரு காரியத்தை செய்ததாக வேறு எந்த வரலாற்று ஆசிரியர்களும் எழுதி வைக்கவில்லை. அதுமட்டுமல்ல ஏரோது மன்னன் இறந்த பிறகு இரண்டு வருடங்கள் கழித்த பிறகே ஜெருசலேம் நகரில் குழந்தைகளின் பிறப்பு கணக்கெடுப்பு நடந்ததாக குறிப்புகள் இருக்கிறது. 


இன்னொரு முக்கியமான விஷயத்தை உனக்கு கூற விரும்புகிறேன். இயேசுநாதர் யூதநாட்டில் பிறந்தார். அவர் பிறந்த போது இஸ்ரேல் நாடு கிரேக்கத்திற்கு அடிமை நாடாக இருந்தது. ஏசுவை கூட தனது பல சொற்பொழிவுகளில் யூதர்களுக்கு விடுதலை வாங்கி கொடுப்பதே தனது நோக்கமென்று கூறுகிறார். அன்றைய நாளில் கிரேக்கத்தின் அரசனாக இருந்தவன் பெயர் அகஸ்டஸ் அவனுடைய பிரதிநிதியாக யூத நாட்டை ஆண்டவன் பிலாத்து இந்த பிலாத்து தான் இயேசுவை சிலுவையில் அறையும்படி கட்டளையிடுகிறான். ஆனால் இதிலொரு விஷயம் கவனிக்க வேண்டும் பிலாத்து தனது ஆட்சி காலத்தில் தன்னால் யூத நாட்டிற்கு வழங்கப்பட்ட எல்லா மரணதண்டனை பற்றியும் கிரேக்கத்திற்கு அறிக்கை தருகிறான். அந்த அறிக்கை குறிப்புகள் இன்றும் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு குறிப்பு கூட இயேசு என்ற மனிதனை சிலுவையில் அறையும்படி தான் கட்டளையிட்டதாக எந்த குறிப்பும் இல்லை இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 


பிலாத்து என்பவன் அரச பிரதிநிதியே தவிர அவனே அரசன் அல்ல. தனது ஒவ்வொரு செயலையும் மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவனது முக்கிய கடமையாகும். அதை அவன் தனது ஆட்சி காலத்தில் சரியாக செய்தும் இருக்கிறான். நிலைமை இப்படி இருக்கும் போது இயேசுவின் மரணத்தை பற்றி மட்டும் நமக்கு ஏன் கூறாமல் இருக்கவேண்டும்?அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எப்படி கூறாமல் இருப்பான்?


இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது வானம் இருண்டதாகவும் பூமி குலுங்கியதாகவும் ஜெருசலேம் நகரிலுள்ள இடுகாடுகளில் இருந்த அனைத்து கல்லறைகளும் திறந்து அதன் உள்ளே இருந்த பிணங்கள் எல்லாம் உயிர்பெற்று நகரத்து வீதிகளில் நடந்து சென்றதாகவும் பைபிளில் மத்தேயூ எழுதிய சுவிஷேசம் இருபத்தி ஏழாம் அதிகாரம் ஐம்பத்தி மூன்றாம் வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. வானம் இருண்டதையும் பூமி குலுங்கியதையும் ஒரு அலங்காரத்திற்காக சொல்லப்பட்டது என்று ஒதுக்கி விடலாம். ஆனால் இறந்தவர்கள் எழுந்து தெருவில் நடந்து போனார்கள் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அதை கண்டவர்கள் கேட்டவர்கள் எதாவது ஒருவகையில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு பதிவு உலகில் வேறு எந்த குறிப்பேடுகளிலும் கிடையாது பைபிளில் மட்டும் தான் இருக்கிறது. அதுவும் மத்தேயூ சுவிஷேசம் என்பது இயேசு மறைந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது ஆகும். இதை நம்பதகுந்த சான்று என்று எப்படி கருதமுடியும்?


இதுமட்டுமல்ல இயேசு வாழ்ந்ததாக கூறப்பட்ட காலத்தில் ஜெருசலேம் நகரத்தில் வாழ்ந்தவர் ஜோஷ்பியஷ் என்ற யூத வரலாற்று அறிஞர் ஆவார் அவர் தமது வாழ்நாளில் ஜெருசலேம் நகரில் நடந்த சிறு சிறு நிகழ்ச்சிகளை கூட டைரி குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார். அந்த குறிப்புகள் ஒரு சிறிய புத்தகம் அல்ல. இருபது பாகங்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகமாகும். அந்த புத்தகத்தில் ஒரு இடத்தில கூட இத்தகைய சம்பவத்தை பற்றி அவர் எதுவும் எழுதவில்லை அத்தோடு இயேசு என்ற ஒரு பெயரையே அவர் குறிப்பிடவில்லை. ஆனால் பிற்காலத்தில் அதாவது கிபி 260 ஆம் ஆண்டில் ஈஸ்பியஸ் என்ற போப் ஆண்டவர் மூலம் அந்த பெரிய புத்தகத்தில் இரண்டு பத்திகள் இயேசுவை பற்றி எழுதி இடைச்செருகலாக சொருகப்பட்டது. அது அப்போது இஸ்ரேல் நாட்டில் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது. அதற்கு ஈஸ்பியஸ் கூறிய காரணம் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியது. விட்டுபோன வரலாற்று குறிப்புகளை இடைச்செருகலாக வைப்பதில் தவறு ஒன்றுமில்லை என்றார். இந்த மோசடியை வரலாற்று ஆய்வாளர்கள் எட்வார்ட் மற்றும் ஜாகோப் ஆகியோர்கள் கண்டித்து அறிக்கை எழுதி இருக்கிறார்கள். இது இன்றும் இங்கிலாந்து வரலாற்று ஆவணங்களில் இருக்கிறது. 


பிரகதீஸ்வரன்:- நீங்கள் கூறுகின்ற விஷயங்களை வைத்து பார்த்தால் இயேசு என்ற ஒருவரே பிறக்கவில்லை என்பது போல் தெரிகிறது நிச்சயமாக இதை ஏற்றுக்கொள்ள இயலாது. காரணம் ஒன்றுமே இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டி எத்தனை நாள் பிழைப்பு நடத்த முடியும். எனவே நீங்கள் கூறும் கருத்து பலவற்றை நம்புவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இயேசு பிறக்கவே இல்லை என்றால் பிறகு எப்படி அவரது பிம்பம் கட்டமைக்கபட்டது. அதன் மூலம் என்ன? 


குருஜி:- இயேசு இருந்தாரா? இல்லையா? என்பதை பற்றி எனது சொந்த கருத்தை இதுவரை கூறவில்லை அவருடை இருப்பில் இத்தகைய சந்தேகங்களும் குளறுபடிகளும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே செய்திருக்கிறேன். கிறிஸ்துவின் வாழ்க்கை எந்தளவு நிஜம் என்பதை நான் பிறகு சொல்கிறேன். இப்போது நான் கூறுவதை கவனி. 


இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசர் அசோகர் என்பது நமக்கு தெரியும். இவரது ஆட்சி அதிகாரம் ஆப்கானிஸ்தானையும் தாண்டி ஈரான் வரையில் இருந்ததை நாம் அறிவோம் இவர் காலத்திய கல்வெட்டுகள் பல எகிப்த் வரையிலும் பரவி கிடக்கிறது அந்த கல்வெட்டுகளில் பல இந்திய பண்பாட்டின் சிறப்புகளை கூறுகிறது. 


எகிப்து நாட்டில் ராமன் என்ற பெயரில் ஒரு அரசரே இருந்திருக்கிறார். அரபு நாட்டிலுள்ள மெக்காவில் உள்ள காபாவில் ஆதிகாலத்தில் பல சிலைகள் இருந்திருக்கின்றன. அவற்றில் லிங்கங்களும் இருந்தன என்பது ஆய்வாளர்களின் கூற்று. இதுமட்டுமல்ல இந்தியாவின் பெருமை கிரேக்கத்தையும் தாண்டி உலகம் முழுவதும் நிரம்பி இருந்தது. அலெஸ்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வருகிற போது அவரது ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இந்தியாவிலிருந்து தான் பேசி பழக ஒரு ரிஷியை அழைத்து வரும்படி சொல்கிறார். பைபிளில் கூட சாலமன் என்ற அரசனின் அவையில் நமது தூத்துக்குடி முத்துக்களும் மயில் தோகைகளும் சேரநாட்டு ஏலம் கிராம்பு போன்ற வாசனை திரவியங்களும் பரிசாக வந்திருந்தது. என்ற குறிப்புகள் உண்டு. 


இவற்றை எல்லாம் இங்கே இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய சிந்தனை மரபு இயேசு பிறப்பதற்கு முன்பே கிரேக்கம் வரையிலும் பரவியிருந்தது இந்திய செல்வத்தின் மீது அவர்களுக்கு நிறைய கவர்ச்சி இருந்தது. அந்த வகையில் அங்கிருந்து இங்கேயும் இங்கிருந்து அங்கேயும் நிறைய யாத்திரிகர்கள் சென்று வந்தவண்ணம் இருந்தார்கள். அப்போது இந்து ஜைன பெளத்த மத கருத்துக்களும் யூத நாட்டு அறிஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இம்மத கருத்துக்களை மையமாக வைத்து எஸ்ஸீன்ஸ் என்ற மத பிரிவை யூதத்தில் இருந்தது பல மக்களும் அதை பின்பற்றினார்கள். இவர்கள் யூத மத ஆலயங்களையும் வழிபாட்டு முறைகளையும் ஒதுக்கி தள்ளிவிட்டு மலைப்பகுதிகளில் தங்கி தனியாக வழிபாடு நடத்தினார்கள். 


இந்த வகையில் பரவிய இந்திய மதங்களின் உள்ள முக்கிய கூறுகளை முக்கியமாக இந்து மதத்தின் மிக முக்கிய தெய்வமாக இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனின் வாழ்க்கை சம்பவத்திலிருந்து பலவற்றை நகலெடுத்து இயேசுவின் வாழ்க்கை வரலாறு உருவாக்கப்பட்டது என்றும் புத்தருடைய போதனைகளில் இருந்து சிலவற்றை எடுத்து இயேசுவின் உபதேசங்கள் என்று உருவாக்கினார்கள் என ஒரு கருத்து இருக்கிறது. 


பிரகதீஸ்வரன்:- அப்படி என்றால் கிருஷ்ணன் தான் கிறிஸ்து என்று சொல்ல வருகிறீர்களா? 


தொடரும்.... 



Contact Form

Name

Email *

Message *