Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆங்கிலத்தை கொன்று விடு !

 


கதை



பிள்ளையாரப்பா வணக்கம் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் நீ ரொம்பவும் கோபக்காரனாமே உனக்கு யாரும் மரியாதை கொடுக்க தவறினால் அவர்களுக்கு பெரிய இடைஞ்சல் கொடுப்பீயாமே அது உண்மையா? ஒருமுற உங்க அப்பா மூன்று அரக்கர்கள் கிட்ட சண்டைபோட போனபோது உன்னை நினைக்காமல் போனதனாலே அவர் பயணம் செய்த தேரில் அச்சாணியை உடைத்து போட்டு விட்டாயாமே அது நிஜமா? 


நீ சாமிதானே உன்னை பார்த்து தானே மற்றவுங்க திருந்தனும் அப்பா என்பவர் உன்னை பெற்றவர் அல்லவா? அவர் வந்து உன்னை நினைக்க வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்? பெரியவர்களுக்கு அடிபணிந்து நடக்காமல் அச்சாணியை உடைப்பது தப்பு தானே? அந்த வகையில் உன் மீது எனக்கு சின்ன கோபம் உண்டு 


வேறொருமுறை வீணை வைத்து கொண்டு நாராயணா நாராயணா என்று பாடி திரிவாரே நாரதர் என்ற முனிவர் அவர் ஒரு மாம்பழத்தை தந்தபோது அம்மை அப்பன் தான் உலகம் அவர்களை சுற்றினால் உலகத்தை சுற்றியதற்கு சமமாகும். என்று தத்துவம் பேசி குறுக்கு வழியில் உன் தம்பிக்கு மாம்பழத்தை கொடுக்காமல் நீயே வாங்கி சாப்பிட்டு விட்டாயே அது எப்படி நியாயமாகும்? நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று கூறி நீ தப்பித்து விட முடியாது. எங்க அம்மா என்னை சினிமா கொட்டகைக்கு கூட்டிட்டு போகும் போது அந்த சினிமாவில இதை நான் நேராகவே பார்த்தேன் ஆயிரம் தான் நீ நியாயம் சொன்னாலும் செஞ்சது தப்பு தான் அதை ஒத்துக்க 


எனக்கொரு சந்தேகம் பிள்ளையாரே உங்க அப்பா உலகத்தையே படைத்த பரமசிவம் அவரு சவாரி போறதுக்கு காளைமாடு வச்சிருக்காரு உங்க அம்மா சிங்கம் மேல ஜம்முன்னு ஏறி போறாங்க உன் தம்பி சின்ன பையனா இருந்தா கூட மயில் மீது ஏறி வீரென்று பறந்து போறாரு ஆனா நீ யானை குட்டி மாதிரி பெருசா இருக்க பூமி உருண்டை மாதிரி உனக்கு தொப்ப இருக்கு இவ்வளவு பெரிய உடம்ப வச்சுக்கொண்டு ஒரு எலிக்குட்டி மேல ஏறி போறியே அந்த எலி உன்ன சுமக்க எவ்வளவு கஷ்டப்படும். அதை நீ நினைத்து பார்த்தியா? எலிமேல போவதற்கு உனக்கு கூச்சமாக இல்லையா? உங்க மாமா மஹாவிஷ்ணு மாமி மஹாலஷ்மியும் பெரிய பணக்காரங்களாகவே அவுங்க கிட்ட சொல்லி ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்க கூடாதா? 


ஏன் சாமி நீ மட்டும் அரசமரத்து அடியிலேயும் ஆற்றங்கரை ஓரத்திலேயும் நாலுமூல தெருவிலேயும் வெயிலுக்கும் மழைக்கும் பிடிக்க ஒரு குடை கூட இல்லாமல் தனியாக இருக்கிறாய்? ராத்திரி நேரத்தில் இருட்டுக்குள்ள தனியா இருப்பது உனக்கு பயமா இருக்காதா? அன்னைக்கி ஒருநாள் எங்க அம்மா வேலைக்கு போயிட்டு வர ரொம்ப நேரமாயிடிச்சி தெருவெல்லாம் இருட்டாயிடிச்சி அவுங்க வராமா நான் பயந்தே போயிட்டேன் அவுங்கள தேடி இருட்டுக்குள்ள போனேன் பயத்துல உடம்பெல்லாம் வேர்த்து கொட்டி நடுக்கமாயிடிச்சி அந்தமாதிரி தானே உனக்கும் இருட்டு பயமா இருக்கும். உன்னால மட்டும் எப்படி இருட்டுக்குள்ளையும் ஜாலியா இருக்க முடியுது?


சுண்டலும் கொழுக்கட்டையும் உனக்கு ரொம்ப பிடிக்குமாமே அது எப்படி? நீ யானைக்குட்டி மாதிரி கொழுகொழுன்னு அழகா இருக்க புல்லும் இலை தழையும் தானே நீ சாப்பிடணும் வெறுமனே கொழுக்கட்டை மட்டும் சாப்பிட்டால் வயிறு பசிக்காதா? நீ மெலிந்து போக மாட்டியா? எனக்கு கூட நிறைய நேரம் வயிறு பசிக்கும் எனக்கு தருவதற்கு அம்மா கிட்ட எதுவுமே இருக்காது. பசியால் உடம்பு கிடுகிடுன்னு ஆட்டம் காணும் பானையில இருக்கிற பச்ச தண்ணீரை குடித்து விட்டு சுருண்டு படுத்துக்குவேன். அதனாலதான் நான் ஒல்லியா இருக்கேன். நீ பசியோட இருக்காத கொழுக்கட்டையும் சுண்டலும் தினசரி உனக்கு யாரும் தரமாட்டாங்க இலை தழையை தின்ன பழகிக்க அப்பத்தான் உன்ன சமத்தான யானைகுட்டின்னு எல்லோரும் சொல்லுவாங்க. 


பிள்ளையாரப்பா உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா? நான் பள்ளிக்கூடம் போறேன் அஞ்சாம் வகுப்பு படிக்கிறேன் எனக்கு இங்கிலிஷ் பாடம் மட்டும் வரவே மாட்டேன்ங்கிறது சுவத்துல முட்டி முட்டி படிச்சாலும் A .B C D கூட வரிசையா சொல்ல வரல்ல வராத பாடத்தோட எதுக்கு முட்டி மோதி சண்டை போடணும். அதை விட்டு விடலாமே. என்று பார்த்தால் எங்கள் டீச்சர் விடமாட்டேன் என்கிறார்கள் படிக்காவிட்டால் முழங்காலுக்கு கீழே பிரம்பால் அடித்து தள்ளிவிடுகிறார்கள். வலி தாங்க முடியவில்லை பாளம் பாளமாக வீங்கி போகிறது. டீச்சர் அடிச்சத அம்மாகிட்ட சொன்னா இங்கிலிஷ் படிச்சாதான் நல்ல வேலை கிடைக்கும். வாய்க்கு ருசியா சாப்பிடலாம். புது துணி எல்லாம் போட்டுக்கலாம் அதனால் கஷ்டப்பட்டாவது படித்துவிடு என்கிறார்கள் நான் என்ன செய்யட்டும்? என் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறதே 


நீ ஒன்று செய் இந்த உலகத்தில்இருக்கிற இங்கிலிஷ் பாடத்தை எல்லாம் அழிந்து போகும்படி செய்துவிடு யாரும் இங்கிலீஷை பற்றி நினைத்து கூட பார்க்க கூடாது. முக்கியமா எங்க இங்கிலிஷ் டீச்சருக்கு சுத்தமா இங்கிலிஷ் மறந்தே போகணும் இப்படி நீ செய்து விட்டால் உனக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்


இங்கிலிஷ் படித்தால் தான் புத்திசாலியா? வேலை தருவார்களா? என்ன இது பெரிய அயோக்கிய தனமாக இருக்கு இதை பார்த்து கிட்டு நீ சும்மா இருக்காளாமா? எங்க எதிர்த்த வீட்டு மீனா இங்கிலீஷ் மீடியும் ஸ்கூலில் படிக்கிறதா சொல்லி பகட்டு காட்டுகிறாள் அவளுக்கென்ன அவுங்க அப்பா நிறையா சம்பாதிக்கிறாரு எனக்கு அப்பாவா இருக்கிறாரூ அவரு தான் சாராயம் குடிச்சி குடிச்சி செத்து போயிட்டாராமே எங்க அம்மா தான் நாலு வீட்டில் பாத்திரம் தேய்த்து துணி துவைத்து சோறு போடுறாங்க. இந்த நிலையில் இங்கிலிஷ் மீடியும் ஸ்கூலுக்கு நான் எப்படி போகமுடியும்? அதனால இங்கிலீஷே வேண்டாம். உன் சக்தியால் அதை அதை அழித்து விடு . 


பக்கத்து வீட்டு பரமசிவம் தாத்தா அரசாங்கம் என்றால் மக்களை காப்பாற்றுவது அவர்களுக்கு கஷ்டங்கள் வராமல் பார்த்து கொள்ளுவது என்று கதை சொல்கிறார் ஆனால் நம்ம அரசாங்கம் அப்படி எதையும் செய்ததாக பார்க்க முடியவில்லையே ஒவ்வொரு தெருவிலும் சாராயக்கடை திறந்து வைத்திருக்கிறார்கள் எங்கள் அப்பா மாதிரி ஆட்கள் அதை குடித்து விட்டு செத்து போய்விடுகிறார்கள் என்னை போன்ற சின்னபசங்க நிறையபேர் அப்பன் இல்லாத பிள்ளைகளாக அனாதையாக கிடக்கிறோம். அரசாங்கம் குழந்தைகளை அனாதையாக ஆக்கலாமா? அப்படி ஒரு அரசாங்கம் தேவைதானா? எனவே பிள்ளையாரே நீ என்ன செய்வீயோ எது செய்வீயோ தெரியாது இந்த அரசாங்கம் என்ற ஒன்று இல்லாமலேயே செய்துவிடு.


நேற்று ராத்திரி என்னா மின்னல் எவ்வளவு பெரிய இடிமுழக்கம் கண்கள் குருடாகி போகிற அளவிற்கு வெளிச்சமும் காது செவிடாகும் அளவிற்கு சத்தமும் அப்பப்பா நான் பயந்தே போய்விட்டேன். எங்கள் வீட்டில் கூரை ஓட்டை ஓட்டையாக கிடக்கிறதா அதனால் பெய்த மழையெல்லாம் வீட்டுக்குள் தான் கொட்டி தீர்த்தது எனக்கு தூக்கமே இல்லை ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு ராத்திரி முழுக்க கழித்தேன் புதிய கூரை போட்டால் தான் ஒழுகாது என்று அம்மா சொல்கிறாள் காசுக்கு எங்கே போவது வருகிற காசில் சோறு குழம்பு ஆக்குவதற்கே பெரியப்பாடாக இருக்கிறது. இதில் புதிய கூரை எப்படி போடுவது?


என் துணியெல்லாம் கிழிஞ்சி போய்விட்டது ஓட்டை பாவாடையும் சட்டையையும் போட்டுகொண்டு பள்ளிக்கூடம் போகிறேன் கூட படிக்கிற பிள்ளைகளெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். உன் பாவாடையில் தபால் பெட்டி வைத்திருக்கிறாயா என்று அவர்கள் நையாண்டி செய்யம் போது என் மானமே போய்விடுகிறது செத்துவிடலாம் போல இருக்கிறது. அம்மா பத்துப் பாத்திரம் தேய்த்து கொடுப்பவர் வீட்டில் என்னை போலவே ஒரு சின்ன பொண்ணு இருக்களாம் அவள் போட்டு பழசாகி போன துணிமணிகள் நிறைய கிடக்கிறதாம். அதை அந்த வீட்டுகார அம்மா எனக்கு தருவதாக சொன்னாளாம். தருவதை சீக்கிரம் தரும்படி ஏற்பாடு செய் பிள்ளையாரப்பா. 


உனக்கு மட்டும் எப்படியோ புது துணி அவ்வபோது கிடைத்து விடுகிறது யாராவது சுண்டலும் பொங்கலும் உனக்கு தந்துவிடுகிறார்கள். எனக்கு அப்படி தர யார் இருக்கிறார்கள்? நீ தான் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.


எங்கள் மாமாவிற்கு பள்ளிகொள்ள பாற்கடல் இருக்கிறது அப்பாவிற்கு பனிபடர்ந்த குளுமையான கைலாசம் இருக்கிறது என் தம்பிக்கோ காணுகிற மலையெல்லாம் சொந்தமாக இருக்கிறது எனக்கு என்ன இருக்கிறது? நானே நடுத்தெருவில் கேட்பாரற்று நிற்கிறேன் என்னிடம் போய் அதை கொடு இதை கொடு என்று கேட்கிறாயே இது சரியா? என்று நினைக்கிறாயா பிள்ளையாரப்பா?


சரியோ தவறோ எனக்கு தெரியாது என்னை ஒரு பொருட்டாக மதித்து என் பேச்சை பொறுமையாக கேட்பதற்க்கு இந்த உலகில் உன்னை தவிர வேறு யார் இருக்கிறார்? நீ தான் என் புலம்பலை கேட்டாக வேண்டும். சொல்லுவதை சொல்லிவிட்டேன் தேவைப்பட்டதை கேட்டுவிட்டேன் முடிந்தால் செய் இல்லை என்றால் சும்மா கல்லுப்பிள்ளையார் மாதிரி இருந்து விடு. என் குறைகளை கேட்பதற்கு மட்டுமாவது நீ இருக்கிறாயே என்ற சந்தோசத்தில் நானும் இருப்பேன். சரி நான் வீட்டுக்கு போகட்டுமா? அம்மா தேடுவார்கள். 


குருஜி


Contact Form

Name

Email *

Message *