பிரகதீஸ்வரன்:- இரண்டுபேருடைய வாழ்க்கை முடிவையும் பார்க்கும் போது மனம் மிகவும் சோகமாக மாறுகிறது இதிலொரு கேள்வியும் வருகிறது. இயேசுவின் மரணம் பெரியதாக பேசப்படுவது போல கிருஷ்ணனின் மரணம் பேசப்படுவது இல்லையே அது ஏன்? மேலும் அவரது உபதேசங்களும் கிருஷ்ணனின் கீதையிலிருந்து எடுக்க பட்டதா அல்லது வேறு யாருடைய உபதேசத்தில் இருந்தாவது எடுக்கபட்டதா?
குருஜி:- இந்தியர்களான நமது சிந்தனைப்படி மரணம் என்பது முடிவு அல்ல புதிய ஒரு அத்தியாயத்தின் துவக்கமாகும். எனவே நமக்கு சாவு என்பது தத்துவ நோக்கில் அமங்கலமாக கருதப்படுவது கிடையாது. மேலும் குறிப்பாக சொல்வது என்றால் ஒரு மரணத்தை பெரிதுபடுத்தி காட்டுவதனால் அதை கேட்பவர்களின் மனது பாதிப்படையுமே தவிர செம்மை அடையாது. அதனால் தான் கிருஷ்ணனின் இறுதி நாட்களை பற்றி நாம் பேசுவதே கிடையாது. ஆனால் ஐரோப்பிய சித்தாந்தம் அப்படிப்பட்டது அல்ல அவர்களுக்கு மரணம் என்பது ஒரு முடிவு அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை என்பது தான் அவர்களின் கருத்தாகும். அதனால் தான் ஏசுவின் மரணத்தை பற்றி திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் ஒரு அவலச்சுவையை ஏற்படுத்துகிறார்கள். கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள வித்தியாசம் அப்படி.
மேலும் ஏசுவின் உபதேசம் என்பது முழுமையாக கீதையிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல அதற்காக அது ஒட்டுமொத்தமாக மேற்கத்திய சித்தாந்தம் என்று கருதவும் கூடாது. ஏசுவினுடைய மலை பிரசங்கத்தை கூர்ந்து கவனித்தால் அதில் இந்திய வாசனை மிக அதிகமாக வீசுவதை காணலாம். குறிப்பாக புத்தரின் போதனைகளை பல ஏசுவினுடைய போதனைகளோடு பொருந்தி போவதை அவதானிக்க முடிகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வு என்று கூற இயலாது.
நமது நாட்டு சரித்திரத்தை பற்றி கருத்து கூறும் பல அறிஞர்கள் இந்திய வரலாறு என்பது சனாதனமான இந்து தர்மத்திற்கும் புத்த தர்மத்திற்கும் இடையே நடந்த போராட்டமே என்று கருதுவார்கள். இதை முழுமையான உண்மை என்று கருத்தாவிட்டாலும் முற்றிலுமாக பொய் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. காரணம் புத்தர் தோன்றிய காலத்தில் நம் நாட்டில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது பல அரசுகளின் ஆயுள் காலத்தை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவர்களாக பிராமண புரோகிதர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆதிக்கத்தை பல மன்னர்கள் விரும்பவில்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் பிராமணர்களுக்கு இருந்த செல்வாக்கினால் அவர்களை எதிர்க்க அரசர்களுக்கு துணிச்சல் இல்லை.
அந்த நேரத்தில் தான் புத்தர் தோன்றுகிறார். புத்தர் பிராமணர் அல்ல அவர் அரசகுலத்தை சேர்ந்த சத்திரியர் எனவே சத்திரிய மன்னர்கள் பலர் புத்தரின் போதனைகளை தூக்கிப்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். சனாதன புரோகிதர்களாக மாறுவதற்கு பல கட்டுத்திட்டங்கள் இருந்தன. ஆனால் புத்த பிக்குகளாக மாறுவதற்கு பெரிய கட்டுத்திட்டம் எதுவும் கிடையாது. அதனால் எளிமையான பல மக்கள் புத்த தர்மத்தை கடைபிடிக்க துவங்கினார்கள்.
மெளரிய சாம்ராஜ்யத்தின் அரசரான சாம்ராட் அசோகர் புத்த மதத்தை உலக முழுக்க பரப்பினார். அந்த வகையில் சீனாவிலிருந்து ஜப்பானுக்கும் ஈரானிலிருந்து கிரேக்கத்திற்கும் மிக சுலபமாக புத்தரின் கருத்துக்கள் பரவின. அப்படி பரவிய புத்த கருத்துக்கள் சில ஐரோப்பிய அரசர்களையும் கத்தோலிக்க போப் ஆண்டவர்களையும் கவர்ந்தது. எனவே அவர்கள் புத்தரின் கருத்துக்களை ஏசுவின் கருத்துக்களோடு மிக சுலபமாக இணைக்க ஆரம்பித்தன.
பிரகதீஸ்வரன்:- எதை வைத்து புத்தரின் கருத்துக்கள் ஏசுவின் கருத்துக்களாக மாற்றப்பட்டது என்று கூறுகிறீர்கள்? அதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?
குருஜி:- பொதுவாக புத்தரின் போதனைகள் அனைத்துமே அந்த காலத்தில் பாலி மொழியில் எழுதப்பட்டதாகும். ஆனால் மிக அரிதான லலிதா விஸ்தாரம் என்ற சம்ஸ்கிருத நூல் புத்தரின் போதனைகளை தாங்கி அப்போது கிடைத்தது. அந்த நூல் தான் கிரேக்கம் மற்றும் யூத மொழிகளில் மொழிபெயர்க்க பட்டு அறிஞர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது. அந்த புத்தகத்தில் என்னென்ன கருத்துக்கள் முக்கியகமாக கூறப்பட்டு இருந்ததோ அதே கருத்துக்கள் தான் ஏசுவின் மலை பிரசங்கத்தில் தெளிவாக இருக்கிறது.
உதாரணமாக ஆசையை துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பது புத்தரின் கருத்தாகும். இந்த கருத்தை அப்படியே பிரதி எடுப்பது போல ஏசு பேசுகிறார் ஊசியின் காதுகளுக்குள் ஒட்டகங்கள் நுழைந்தாலும் செல்வந்தர்கள் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது என்று ஏசு புது உவமையோடு பேசுகிறார்.
அதாவது செல்வம் என்பது அதிகமான ஆசை உடையவர்களிடமே இருக்கும். யார் செல்வத்தின் மீது அதிகமான பற்று கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நியாய தர்மத்தின் மீது ஆர்வம் இருக்காது. இதனால் அவர்கள் எதையும் நம்பாமல் யாரையும் நம்பாமல் மனத்திற்க்குள்ளையே நடுங்கி கொண்டிருப்பார்கள். அந்த நடுக்கமே பெரிய துக்கம். ஆசையினால் வரும் இந்த துக்கத்தை வைத்து கொண்டிருப்பவன் எப்படி இறைவனை தேடி அடைய முடியும்? அழிந்து போகும் செல்வத்தின் மீது பற்று இருக்கிற வரை அழியாத செல்வமான பரமபதத்தை அடைய இயலாது. இது தான் புத்தரின் கருத்துக்களுக்கு ஏசு சொன்ன அருமையான விளக்கம்.
இதை போலவே ஏசு இன்னொரு கருத்தை கூறுகிறார் பறவைகளை பாருங்கள் அவைகள் விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை அதை போன்று வாழ்பவனே பாக்கியவான் என்பது ஏசுவின் வாக்கு. இந்த வாக்கு எதிலிருந்து வந்தது என்றால் அனைத்துவிதமான பற்றுகளை விட்டுவிட்டு உலக மக்கள் அனைவரும் பிக்குகளாக அதாவது துறவிகளாக மாறிவிடுங்கள் என்ற புத்தரின் வாக்கிலிருத்து வந்ததாகும் என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் தெரியவரும்.
ஏனென்றால் புத்த பிக்கு என்ற சந்நியாச வாழ்வை ஒருவன் மேற்கொள்ளும் போது அவன் உடலை வருத்தி உழைக்க கூடாது. உடம்பில் உயிர் தங்குவதற்காக பசியை போக்க பிச்சை எடுத்து உண்ண வேண்டும். நாளைக்கு வேண்டும் என்று எதையும் சேர்த்து வைக்க கூடாது. பொருட்களை சேமிக்கும் எண்ணம் வந்துவிட்டால் ஆசையும் உலகியல் வாழ்வும் வந்துவிடுகிறது. இதை அறிந்து தான் ஏசு பறவைகளை போல விதைக்காமலும் அதாவது உழைக்காமலும் அறுக்காமலும் அதாவது சேமிக்காமலும் வாழுங்கள் என்று கூறுகிறார்.
இந்த இடத்தில நமக்கு நியாயமாக ஒரு சிந்தனை வந்துவிடும். ஆன்மீக வாழ்க்கை என்பது எளிமையாக வாழுவது தான் இது உலக பற்றுகளை விட்டுவிட்டவர்களுக்கு பொருந்துமே தவிர இல்லற வாசிகளுக்கு எப்படி பொருந்தும்? நாளைக்கு என்று கைப்பிடி விதையாவது சேர்த்து வைக்காவிட்டால் நாளைய வேளாண்மையை எப்படி நடத்துவது? என்பது தான் அந்த சிந்தனையாகும். மிக முக்கியமாக இந்த கருத்தை ஏசு கிறிஸ்து கூறுவதாக பைபிளில் வலிந்து கூறப்படுவதற்கு காரணம் இருக்கிறது. வறுமையும் பசியும் வெறுக்கத்தக்கது அல்ல அது போற்ற தக்கது காரணம் நீ விரும்புகிற உல்லாசகரமான வாழ்க்கை பரலோகத்தில் துன்பத்தையே தரும் அதனால் அதை அடைய முயற்சிக்காதே ஆசிர்வதிக்கப்பட்ட வறுமையிலேயே இரு அதுவே நீ ரச்சிக்கப்படுவதற்கு சரியான மார்க்கமாகும் என்று அன்றைய ஆளும் வர்க்கம் சாதாரண மக்கள் மனதை வசியப்படுத்தி தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தி கொள்ள ஆசைப்பட்டார்கள் அதற்கு இந்த வாசகத்தை புத்தரிடமிருந்து பெற்று ஏசு என்ற முலாமை பூசி கொண்டார்கள்.
பிரகதீஸ்வரன்:- கிறிஸ்தவம் என்பது அன்பு மார்க்கம் என்று இன்றுவரை கருதப்படுகிறது. நிலைமை அப்படி இருக்க அது ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் மார்க்கம் என்று நீங்கள் கூறுவது என்னை பொறுத்தவரை நெருடலாக இருக்கிறது. ஆயிரம் தான் அரசியல் இருந்தாலும் ஒரு மதத்தை இவ்வளவு தந்திரமாகவா உருவாக்குவார்கள் நம்ப முடியவில்லை.
குருஜி:- நீ நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி இப்படி தான் பல விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்று நான் உணருகிறேன். காரணம் கிறிஸ்தவ மதம் அரசியல் காரணமாகவே உலக முழுவதும் பரவியதே தவிர அதனுடைய தத்துவ சிந்தனைகளுக்காக யாரும் அதை நாடி போனது கிடையாது. இன்னொரு விஷயத்தையும் இங்கு நான் கூறினால் உனக்கு எளிமையாக புரியும் என்று நினைக்கிறேன்.
ஒருநாள் புத்தர் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் அப்போது ஒரு பெண் இறந்து போன தனது மகனின் சடலத்தை எடுத்துவந்து புத்தரின் காலடியில் போட்டுவிட்டு புத்த தேவா எனது ஒரே மகன் இவன் எனக்கென்று இருந்த ஒரே துணையும் இவன் தான் சிறுமியாக இருந்த போது தந்தையை இழந்தேன் கர்ப்பிணியாக இருந்த போது அன்பு கணவனை இழந்தேன் பிறந்த இந்த ஒரே மகன் என்னை காப்பான் என்று கனவுகண்டு கொண்டிருந்தேன். இறக்கமே இல்லாத காலதேவன் என் மகனின் உயிரையும் பறித்துவிட்டு என்னை மீண்டும் அனாதையாக்கி விட்டான். நீ தீனதயாளன் அனாதை இரட்சகன் அருளே நிரம்பிய இறைவனின் வடிவம் உனது சக்தியால் என் பிள்ளைக்கு உயிரை திருப்பி கொடு என்று கூறி கதறி அழுதாள். அவள் அழுத அழுகை அங்கிருந்த அனைவரின் உள்ளத்தையும் உலுக்கியது. அன்பே வடிவான புத்தனை மட்டும் உலுக்காமல் இருக்குமா என்ன?
ஆனால் புத்தர் உணர்ச்சிவயமானவன் மட்டுமல்ல அறிவுமயமானவனும் கூட மரணம் என்பது தவிர்க்க முடியாத சம்பவம் சாவு ஊருக்கு பயணப்பட்ட எவனும் திரும்பி வரமுடியாது என்று புத்தனுக்கு தெரியும். ஆனாலும் இந்த உண்மையை அபலையாக நிற்கும் அந்த பெண்ணிற்கு எப்படி எடுத்து கூறுவது? சொன்னாலும் இந்த நேரத்தில் புரிந்து கொள்ளும் மனநிலை அவளுக்கு இருக்கிறதா என்ன? எனவே புத்தன் யோசித்தான் அன்பு மகளே உனது பிள்ளை உயிர்பெற்று எழவேண்டுமென்றால் ஊருக்குள் சென்று சாவே ஏற்படாத எதாவது ஒருவீட்டில் பிடியளவு சாம்பல் வாங்கி வா என்று அனுப்பி வைத்தான்.
அவள் ஓடினாள் ஒவ்வொரு வீட்டு வாசல் கதவையும் தட்டினாள் பிடி சாம்பலுக்காக கையேந்தி நின்றாள் எல்லோரும் சொன்னார்கள் என் தகப்பன் இறந்துவிட்டான் என் மனைவி மடிந்துவிட்டாள் என் பிள்ளையை சாவு கொண்டுபோய் விட்டது. என் பாட்டனும் எமனுக்கு பலியாகிவிட்டான் என்று ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமான மரண செய்திகள் அவளுக்கு சொல்லப்பட்டது
ஓடி ஓடி ஓய்ந்து போன அந்த அபலை பெண்ணிற்கு இப்போது ஞானம் பிறந்தது. மரணம் என்பது எல்லோருக்கும் வரும் பிறந்தவர் அனைவரும் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். மரணத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப இயலாது. இன்று நம் பிள்ளை இறந்துவிட்டான் நாளைக்கு நானும் சாவேன் என் வாழ்க்கை மரணத்தால் முற்றும் அடைய போகிறது என்பதை உணர்ந்தாள். மனதால் ஆறுதல் அடைந்தாள். இறந்த மகனை தகனம் செய்துவிட்டு புத்தர் பின்னால் தனது வாழ்க்கை பாதையை அமைத்து கொண்டாள்.
புத்தரிடமிருந்து சற்று விலகி இயேசுவினிடம் வருவோம் சாலையிலே இயேசு தனியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார் தூரத்தில் இளம் பெண் ஒருத்தியை ஒரு கும்பல் கல்லால் அடித்து துரத்தி வருகிறது. கல்லடிபட்டு இரத்தம் வடிந்தோட அந்த அப்பாவி பெண் இயேசுபிரானின் திருவடியில் வந்து வீழ்கிறாள் மேய்ப்பரே என்னை காப்பாற்றும் என்று கெஞ்சிக்கிறாள் அவள் விழியில் மரண பயம் தாண்டவம் ஆடுகிறது. வேங்கை புலியிடம் அகப்பட்டு கொண்ட புள்ளிமான் போல அவள் கதறுகிறாள்
இயேசு கூட்டத்தை நோக்கி கேட்கிறார் எதற்க்காக இவளை கல்லால் அடிக்கிறீர்கள் இவள் செய்த தவறு என்ன? என்று கூட்டம் கூக்குரல் இடுகிறது இவள் விபச்சாரி இளைஞர்களை கெடுக்கிறாள் யூத சட்டப்படி இவளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் தடுக்காதே என்கிறது வெறிபிடித்த கூட்டம்.
இயேசு தடுமாறாமல் அமைதியாக தனது அருள்மொழியை அங்கே பேசுகிறார். உங்களில் யார் குற்றமற்றவரோ அவரே முதல் கல்லை எடுத்து இங்கே இவளை அடியுங்கள் என்கிறார். கூட்டம் யோசிக்கிறது ஒவ்வொருவனுக்கும் அவனவன் செய்த தவறுகள் மனக்கண் முன்னால் படம் போல ஓடுகிறது மாற்றான் மனைவியோடு சல்லாபிக்க நினைத்தவன் சகோதரனை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்க நினைத்தவன் நம்பியவனை கெடுத்தவன் நட்டாற்றில் கைவிட்டவன் போலியாக வழக்கு தொடர்ந்தவன் எல்லோருக்கும் எல்லா தவறுகளும் நினைவுக்கு வந்து நெஞ்சை சுட்டது. யாரும் கல்லெடுக்க வில்லை கலைந்து போனார்கள். காப்பாற்றப்பட்ட பெண் தனது கண்ணீரால் இயேசுவின் பாதங்களை அபிஷேகம் செய்தாள். அவர் சிலுவையில் அறையப்படும் நாள்வரை நிழல்போல அவரை தொடர்ந்தாள்
இரண்டு சம்பவத்தை சற்று ஒப்பிட்டுபார் மரணம் என்பது பொது என்று புத்தர் வாய்திறந்து கூறவில்லை ஆனாலும் அந்த பெண்ணை உணர வைத்தார். இந்த சம்பவமே சிறிது மாற்றம் செய்யப்பட்டு குற்றம் என்பது ஒருவர் மட்டுமே செய்வது இல்லை எல்லோருக்கும் அதில் பங்கு இருக்கிறது சொல்லாமல் சொல்லி ஏசு மக்களை உணரவைப்பது போல் இந்த சம்பவம் மாற்றப்பட்டது.
பிரகதீஸ்வரன்:- அப்படி என்றால் இயேசுவின் உபதேசங்கள் எல்லாம் புத்தமதத்தில் இருந்து தான் காப்பி அடிக்கப்பட்டதா? கிறிஸ்தவ மதத்திற்கு என்று சொந்தமான கருத்து எதுவும் கிடையாதா?
குருஜி:- புத்தரின் கருத்துக்களை மட்டும் இயேசு கருத்து என்று ஒட்டுமொத்தமாக நான் சொல்லமாட்டேன். அவருடைய சித்தாந்தத்தில் மஹாவீரின் கருத்துக்கள் கூட இடம் பெற்று இருக்கிறது. உதாரணத்திற்கு அஹிம்சையை எடுத்து கொள்வோம் உன் வலது கன்னத்தில் ஒருவன் அறைந்தால் இடதுகன்னத்தையும் காட்டு என்று இயேசு கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுவார்கள். இந்த கருத்து சில பைபிளில் இல்லை. பழைய பதிப்புகளில் தான் இது இருக்கிறது. அடித்தவனை திருப்பி தாக்க கூடாது என்பது ஜைன சமயத்தில் மிக முக்கிய குறிக்கோளாகும். இதை இயேசுவின் கருத்தாக வைத்து அவரை அன்புமிகுந்த தேவன் என்று பிரச்சாரம் செய்ய கிறிஸ்தவர்கள். இன்றுவரை முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவத்தில் உள்ள வேறு சில கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த அன்பு மார்க்கத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.
கிறிஸ்தவ மதத்தில் பத்து கட்டளைகள் என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் முதலாவது கட்டளையே இயேசுவை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது அப்படி வணங்கினால் கர்த்தரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற மிரட்டல் வார்த்தை வருகிறது. சாதாரண மனிதருக்கு வரவேண்டிய கோபம் கடவுளுக்கே வந்தது என்றால் அவர் எப்படி அன்புமயமான கடவுளாக இருப்பார். பிள்ளை எத்தனை தவறு செய்தாலும் அதை பொறுக்க கூடிய மன்னிக்க கூடிய இயல்பு தானே தாயிடம் இருக்க வேண்டும் இறைவன் தாயினும் சாலப்பறிவுடையவன் என்கிற போது அவனுக்கு எப்படி கோபம் வரலாம்.
முக்கியமாக ஒரு விஷயத்தை இங்கே கூறவேண்டும். இயேசுவினுடைய ஆரம்ப கால வாழ்க்கை பனிரெண்டு வயது வரையில் தான் பைபிளில் காட்டப்படுகிறது. பிறகு முப்பதாவது வயதில் தான் அவர் ஜோர்டான் நதிக்கரையில் யோவான் என்ற தீர்க்க தரிசியிடம் ஞானஸ்தானம் வாங்கவருகிறார். அதுவரையில் அதாவது பனிரெண்டுக்கும் முப்பதுக்கும் இடையில் உள்ள பதினெட்டு வருடங்கள் இயேசுவினுடைய வாழ்க்கை எப்படி இருந்தது அவர் எங்கே போனார் என்ற விளக்கங்கள் எதுவும் கிறிஸ்தவ மதத்தால் சொல்லப்பட வில்லை. முதல் முதலில் ஒரு ரஷ்ய வரலாற்று ஆய்வாளர் தான் இயேசு பதினெட்டு ஆண்டுகள் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரத்தில் வாழ்ந்ததாககூறுகிறார் . அந்த கருத்து சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் காஷ்மீரம் தான் கஷ்யப மகரிஷி என்பவர் வாழ்ந்த இடம் இந்த ரிஷியே காஷ்மீர சைவம் என்ற சைவ சமய பிரிவை உருவாக்கியனவர் இதில் பதஞ்சலி மஹரிஷியின் பல யோக வழிமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்படும். இயேசு நிகழ்த்தியதாக கூறப்படும் பல அற்புதங்கள் இந்த பதஞ்சலியின் யோக மார்க்கத்தை கற்றுக்கொண்டால் மட்டுமே செய்ய இயலும் என்பது பல ஆன்மீக அறிஞர்கள் அறிந்த இரகசியமாகும். எனவே என்னை பொறுத்தவரை இயேசு என்பவர் நிஜமாக வாழ்ந்தவராக இருந்தால் அவர் தனது பதினெட்டு ஆண்டுகால வாழ்க்கையை காஷ்மீரில் தங்கி யோக சித்துக்கள் பெற்றிருக்க வேண்டும். இது தான் எதார்த்த உண்மை.
பிரகதீஸ்வரன்:- இயேசு பிறந்ததில் சந்தேகம் அவர் இறப்பில் சந்தேகம் உயிர்தெழுதலில் சந்தேகம் அவர் அற்புதங்களில் சந்தேகம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய உபதேசங்களிலேயே சந்தேகம் என்று இப்படி ஆயிரம் குளறுபடிகள் இருந்தும் கிறிஸ்துவ மதத்தை நோக்கியே பல இந்துக்கள் மதம் மாறி இன்று செல்வதற்கு என்ன காரணம்? ஒன்றுமே இல்லாததை நோக்கி யாராவது இப்படி ஆர்வத்தோடு செல்வார்களா?