Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதிகள் வேண்டும் பாப்பா !

 



பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண்பார்வையின் தீட்சன்யம் சுவரை துளைத்து கொண்டு அடுத்த அறையில் இருப்பதை கூட பார்க்கும் அளவிற்கு இருக்கும் உங்கள் இளமையின் இரகசியம் என்னவென்று யாராவது கேட்டால் சின்ன குழந்தை போல கடவாய் பல் தெரியும் அளவிற்கு வாய்பிளந்து சிரிப்பார் ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை முதலாளி வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருக்கிறேன் அல்லவா அதனால் கூட இளமையாக இருக்கலாம். என்று பதில் கூறுவார் நிறைய பேசுபவர்கள் மனதில் எந்த எண்ணமும் விகல்பமாக உருவாகாது ரகசியங்கள் என்றும் எதுவும் தேங்கி நிற்காது என்பது அவரது நம்பிக்கை

பாண்டுரங்கன் பரம்பரையாக சவரத்தொழில் செய்பவர் சலூன் வைத்து உட்க்கார்ந்து இடத்தில் வாடிக்கையாளர்களை வரவைக்கமால் அவரின் வீட்டுக்கு சென்று தொழில் செய்யும் தலைமுறையின் கடைசி ஆள் இவர்தான்

ஒரு சிறிய தகரப்பெட்டி பக்கத்தில் வைத்திருப்பார் அதில் சவரம் செய்வற்கான கருவிகள் அனைத்தும் இருக்கும் இன்றைய தலைமுறையினர் சோப்பு போட்டு முகச்சவரம் செய்யவதை விரும்புவது இல்லை இதனால் பேஸ்ட்டு வாங்கி வைத்து இருப்பது நவீன கால வளர்ச்சி மேலும் பாண்டுரங்கனுக்கு வெற்றியில்லை பாக்கு போடாமல் தொழில் ஓடாது வெற்றிலை பாக்கு புகையிலைஎல்லாம் தயாராக இருக்கும் வீடு வீடு வீடாக சென்று தொழில் செய்தாலும் ஆறு மணிக்கு வீடு வந்து சேர்ந்து விடுவார் கையில் இருக்கும் காசை மனைவிடம் கொடுத்து விட்டு குளித்து முடித்து நெற்றிநிறைய விபூதி பூசி திணையில் உக்கார்ந்து விடுவார் இரவு பத்து மணி வரையிலும் தெருவில் தென்படுகிற யாரையாவது அழைத்து வைத்து கொண்டு பேசியபடியே இருப்பார் அவரிடம் அகப்பட்டு கொண்டவர்களிடம் காதுகளை புராணங்கள் தொடங்கி அரசியல் வரையிலும் அலசி பிழிந்து காய போட்டுவிடுவார் 

பாண்டுரங்கன் அதிகமாக பேசுபவராக இருந்தாலும் கூட ஊரில் உள்ள முக்கியஸ்த்தர்கள் அனைவரும் அவரிடமே சிகை அலங்காரம் செய்து கொள்ள விரும்புவார்கள் காரணம் அவருடைய தொழில் நேர்த்தி யாருக்கும் வாராது சிலை ஒன்றை சிற்ப்பி பார்த்து பார்த்து செதுக்குவது போல தலைமுடியை செதுக்குவார் கைகள் வேலை செய்துகொன்டு இருந்தாலும் வாயில் வெற்றிலை பாக்கு ஊரி கிடந்தாலும் கிழே தலை கொடுத்துவிட்டு குனிந்து இருப்பவர் கேக்கிறாரா இல்லையா எனபதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேசிக் கொண்டே இருப்பார் இப்படித்தான் ஓரு முறை அவரிடம் நான் மாட்டிக்கொண்டேன் 

பண்டுரகங்கனின் பாட்டனர் காலத்திலிருந்து எங்கள் குடுப்பதின் பரம்பரை நாவிதர் இவர்கள் தான் எந்த ஊரில் இருந்தாலும் மாதத்திற்கு ஒருமுறை பாண்டு ரங்கனிடம் வந்து தலை குனிந்து நின்றகவேண்டும் இல்லை என்றால் அவர் தொடுக்கும் கேள்வி கணைகள் நம்மை தொளைத்து எடுத்துவிடும்
இப்பிடித்தான் அன்றும் நடந்தது முதலாளியை ஒருவாரமாக காணவில்லையே எங்காவது வெளி ஊரில் அவசர வேலையா என்று பேச்சை ஆரம்பித்தார் அவர் எல்லோரையுமே முதலாளி என்று தான் அழைப்பர் முட்டை தூக்குபவனும் அவருக்கு முதலாளி தான் நகை கடை அதிபரும் முதலாளிதான் எப்படி எல்லாரையும் முதலாளி ஏன்று அழைப்பது ஏன் ?என்று ஒருமுறை அவரிடம் கேட்டுவிட்டேன்

அட அசடே இதுகூட தெரியாதா என்பதுபோல் என்னை ஒரு பார்வை பார்த்த அவர் எல்லோரையும் முதலாளி என்று அழைப்பதனால் இவனுக்கு அடிமை புத்தி அதிகமாக இருக்குமோ என்று தானே நினைக்கிறீங்க? அதுதான் இல்லை என்று கூறிய அவர் வெற்றிலை ஒன்றை எடுத்து காம்பு கிள்ளி நரம்பு நீவி அழகாக மடித்து வாயில் வைத்து கொண்டார் 

இந்த உலகில் காணப்படுகிற சகல சாதி மனிதர்க்களையும் கடவுள் படைத்தார் பெற்ற தகப்பன் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவது கிடையாது தனது சொத்து எவ்வளவுவாகஇருந்தாலும் அதை சமமாக பங்கு வைத்து பிள்ளைகளுக்கு கொடுப்பார் கடவுள் தகப்பன்மார்களை விட மிகவும் கருணை பொருந்தியவர் அவன் யாரிடம பாரபட்சம் காட்டியது கிடையாது எல்லாம் மனிதர்களை சமமாகவே படைத்தார் நாம் படைக்கும் போதே அறிவோடு தான் பிறந்தோம் பிறந்த குழந்தைக்கு கூட அறிவு இருக்க போய் தான் பசி எடுத்தவுடன் பால் எங்கே ?கிடைக்கும் என்று தாயின் முலையை தேடுகிறது அறிவுதான் நாம் பெற்ற மூலதனம் காண்பதாலேயே அவர்கள் முதலாளி மற்றபடி எனக்கு பணம் தருவார்கள் என்பதினால் அப்படி அழைக்கவில்லை என்று நீண்ட விளக்கம் தந்த எனக்கு புரிய வைக்க முயன்றார்

கட்டுப் பெட்டி ஞானம் இல்லாதவன் படிக்காதவன் முடி திருத்தும் நாவிதன் சொல்வதை ஏற்றுக்கொண்டால் கவுரவ குறைச்சல் என்று அவரை பார்த்து கேலியாக சிரித்து விட்டும் போய் விட்டேன் இன்று போக முடியாமல் பாண்டுரங்கனிடம் வசமாக மாட்டிக்கொண்டேன் 
தலையில் இடது புறமாக வளர்ந்து இருந்த முடியை பாதி வெட்டிய நிலையில் கேட்டார் கற்பு என்றால் என்ன முதலாளி என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது அட கஷ்ட காலமே இன்றைய பொழுது இப்படியா விடிய வேண்டும் பூனையிடம் மாட்டி கொண்ட எலியை போல நமது கதை ஆகிவிட்டதே என திருதிருவென விழித்தேன் கடலை மிட்டாய் என்ன வென்று கேட்டல் இதுதான் என காட்டலாம் கற்பு என்னவென்று எப்படி சொல்வது நான் என்ன புலவர் படிப்பா படித்து இருக்கிறேன். ஒருவார்த்தைக்கு ஒன்பது அர்த்தங்கள் புலவர்களால் தான் கூற இயலும் நானோ பாவம் அப்பாவி நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பவன் என்னை இப்படி வம்புக்கு இழுத்தால் நான் என்ன செய்வேன் இருந்தாலும் கெளவரத்தை விட்டுவிட முடியுமா? எதோ ஒரு பதிலை சொல்லி வைப்போம் ஒருவேள அது சரியான பதிலா கூட இருக்கலாம். என்று நினைத்த நான் கண்ணை மூடி கொண்டு பதில் சொல்ல துவங்கினேன். 

ஆம்பளையும் பொம்பளையும் உடம்பால் கெட்டுபோகாமல் இருப்பதன் பெயர் தான் கற்பு என்றும் உடம்பால் கெட்டவர்களையே கற்பு இழந்தவர்கள் என்று சொல்லுகிறோம். எனது இந்த பதிலை கேட்டதும் எனது முகத்தை அவர் பக்கமாக வலுவில் திருப்பி கொண்டு உடம்பால் கெட்டால் தான் கெடுதியா? மனத்தால் கெட்டால் கெடுதி இல்லையா? வேறு வழியில்லாமல் ஒரு புருஷனோடு வாழ்ந்துவிட்டு கண்ணில் அகப்படுவனிடம் படுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையை வளர விடுபவளை கற்புள்ளவள் என்று கூறலாமா? என்று பதில் கேள்வியை கேட்டார். எனக்கு சங்கடமாகி விட்டது. நானே கஷ்டப்பட்டு யோசித்து ஒரு பதிலை சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாமல் இன்னொரு கேள்வியை சேர்த்து கேட்டால் அதற்கும் பதிலை தேடி எங்கு போகமுடியும். 

பாண்டுரங்கன் எனது தவிப்பை வேறு மாதிரியாக புரிந்து கொண்டார் போலும் அவர் பேச்சியின் தடம் புரண்டது சற்று காரமாகவும் பேச துவங்கினார். இவனொரு முடிவெட்டும் நாவிதன் தானே இவனுக்கு அறிவுபூர்வமாக பேச தெரியாது சிந்திக்க தெரியாது என்பது தான் இதுவரையில் உங்கள் எண்ணம் இன்று என் கேள்வியை கேட்டவுடன் பதில் சொல்லாமல் எரிச்சல் அடைகிறீர்கள்.
நீங்கள் நினைப்பது போல் என் ஜாதி ஒன்றும் கீழானது அல்ல அரசாங்கத்தின் சூழ்ச்சியாலும் சில சமூக சீர்திருத்த வாதிகளின் சதியாலும் என் ஜாதி கீழே தள்ளப்பட்டு மிதிப்பட துவங்கி இருக்கிறது. நாங்கள் நாவிதர்கள் அல்ல இசை வேளாளர்கள் சங்கீதமும் நாட்டியமும் எங்கள் பரம்பரை சொத்து நாங்கள் இல்லாத சுபகாரியங்கள் எதுவுமே கிடையாது. கோவிலில் சுவாமிக்கு வாத்தியம் வாசிப்பது சாதாரண மனிதனின் திருமணத்தில் மங்களம் பாடுவது எல்லாமே நாங்கள் தான் 

நாங்கள் வெறும் கலைஞர்கள் மட்டுமல்ல மருத்துவர்கள் எங்கள் ஜாதிக்கு மருத்துவன் என்ற தனிப்பட்டமே உண்டு இன்று மருத்துவத்தை எங்கள் கைகளிலிருந்து பிடுங்கி கொண்ட மற்ற ஜாதிகாரர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து மூலிகைகளை சேகரித்த நாங்கள் இன்று தெருவிலே நிற்கிறோம். 

ஊரிலே பஞ்சாங்கம் பார்ப்பது பயிர் செய்ய நேரம் குறிப்பது இவையெல்லாம் நாங்கள் தான் அதனால் தான் எங்களுக்கு பண்டிதர் என்ற பட்டமே உண்டு. அந்த கால அரசர்களுக்கு ஊர் நிலவரத்தை எதிரிகளின் பலத்தை எடுத்து சொல்லும் உளவு வேலை எங்கள் கையில் தான் இருந்தது.

இது மட்டுமல்ல நந்தவம்சத்து மன்னர்கள் என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருப்பீர்களே அந்த அரசர்கள் எங்கள் ஜாதி தான் நாங்கள் ஒன்றும் அடிமை வம்சம் அல்ல ஆண்ட வம்சம் 
எங்கள் குலப்பெண்கள் நாட்டிய தொழிலை தெய்வ தொண்டாக செய்தார்கள் தில்லை அம்பலவாணனை கணவனாக வரித்து அவனுக்கு சேவை செய்வதே வாழ்வின் நோக்கம் என்று வாழ்ந்தார்கள்

. பாலியல் தொழிலை செய்த சில பெண்களும் நாட்டிய கலையை அறிந்தவர்களாக இருந்ததனால் ஒட்டுமொத்தமாக எங்கள் பெண்களையும் ஒரே பட்டியலில் சேர்த்து தேவதாசி என்று சட்டம் தீட்டி ஒழித்து கட்டினார்கள். நட்டுவாங்கம் நாட்டியம் என்று மட்டுமே வாழ தெரிந்த எங்களுக்கு தொழிலில்லாமல் வேறு தொழில் செய்ய தெரியாமல் பசி கொடுமை படுத்தியது வேறு வழியில்லாமல் முடிதிருத்தும் தொழிலை எங்கள் குலத்தொழிலாக எடுத்துக்கொண்டோம். 

நாங்கள் முடித்திருக்க வருவதற்கு முன்பு அந்த தொழிலை யார் செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறது அல்லவா? அந்தந்த ஜாதியிலுள்ள எதாவது ஒருநபர் தங்கள் சொந்த ஜாதியினருக்கு மட்டுமே சவரம் செய்து வந்தனர். அதற்கென்று யாருமில்லை. நாங்கள் தான் வறுமையின் காரணமாக அதை குலத்தொழிலாக எடுத்து செய்கிறோம். என்று படபடவென கூறிமுடித்தார். 

எனக்கு அவரது பேச்சு விசித்திரமாக பட்டது. எதற்க்காக இப்போது ஜாதியை பற்றி பேசுகிறார் நான் அதைப்பற்றி நினைக்க கூட இல்லையே பின்னர் எதற்க்காக அவர் ஜாதிய விளக்கத்தை தருகிறார். என்று புரியாமல் அவரிடமே பாண்டுரங்கன் நான் ஜாதியை பற்றி நினைக்கவுமில்லை உங்களிடம் கேட்கவும் இல்லை பின் எதற்க்காக இதையெல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்டேன்? 
இல்லை உங்கள் பார்வை என்னை மட்டரகமாக பார்ப்பது போல் இருந்தது அதனால் தான் ஜாதியை பற்றி பேசினேன் நீங்கள் அதை பற்றி நினைக்கவில்லை என்றால் அதை விட்டுவிட்டு நாம் பழையபடி கற்பை பற்றி பேசுவோமே என்று கூறினார். 

பாண்டுரங்கன் மட்டுமல்ல இவரை போன்ற பலரும் மற்றவர்களின் மெளனத்தையும் குழப்பத்தையும் தவறுதலாக கணித்து சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிவிடுகிறார்கள். இதனால் மற்றவர்களின் மனம் என்ன பாடுபடும் என்பதை பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவது கிடையாது. உண்மை சொல்வது என்றால் அதை அவர்கள் உள்வாங்கி கொள்வதே இல்லை. தங்கள் பேசுவதை மட்டும் திரும்ப திரும்ப பேசி கொண்டே இருப்பார்கள். இதற்கு மேலும் பாண்டுரங்கனிடம் பேச்சு கொடுத்தால் அது விபரீதத்தில் முடியுமென்று எனக்கு பட்டது. எனவே எனது வார்த்தைகளை சுருக்கி கொண்டேன்.

கற்பு என்றால் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் துரோகம் செய்யாமல் வாழ்வதும் மட்டும் தான் எனக்கு தெரியும். மற்றப்படி நான் அதைப்பற்றி அதிகம் யோசித்தது இல்லை. என்று கூறி நிறுத்திக்கொண்டேன்

. எனது மனநிலையை பாண்டுரங்கன் சிறிது புரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரது குரல் சற்று இறங்கியே இருந்தது. இல்லை முதலாளி ஒரு பெண் விபத்தின் காரணமாக பலாத்காரம் செய்யப்பட்டால் அவளை எப்படி கற்பிழந்தவள் என்று கூற முடியும் மனத்தால் விரும்பி அவள் சோரம் போயிருந்தால் அப்படி அழைப்பதில் தவறில்லை 

கற்பு என்றால் எல்லோரும் நினைப்பது போல் உடல் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை அதற்காக மனமட்டும் தான் கற்புக்கு உறவு என்று கருதிவிடவும் முடியாது. உங்கள் கைகளில் ஒரு எண்ணெய் கிண்ணம் இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அதில் தளும்ப தளும்ப எண்ணெய் நிறைந்திருக்கிறது ஒரு சொட்டு கூட கீழே கொட்டாமல் ஒற்றை கையில் அதை எடுத்து செல்ல வேண்டும். அப்போது உங்கள் மனம் எப்படி இருக்கும் சுற்றிலும் எது நடந்தாலும் அவைகள் எல்லாம் உங்கள் கவனத்திற்கு வராது எண்ணெயும் கிண்ணமும் மட்டுமே மனதில் நிற்கும் அதை போன்றது தான் கற்பும் நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் மனைவியின் மேல் மட்டுமே உங்களுக்கு அக்கறை இருந்தால் அதன் பெயர் தான் கற்பு என்பது ஆணும் பெண்ணும் ஒருவர் மேல் ஒருவருக்கு அக்கறை இல்லை என்றால் அது தான் கற்பிழந்ததாகும் இப்போது புரிகிறதா? என்று சொன்னார்.

நான் தலையை மட்டும் பூம்பூம் மாடு மாதிரி ஆட்டினேன் இந்த மனிதரிடம் வாயை திறந்தாள் வேறு எதாவது கதையை உருவாக்குவார் வாயை மூடிக்கொண்டு இருப்பதுவே நலமாக எனக்கு தோன்றியது

. நாட்டின் நிறைய பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே வெட்டி பேச்சு தான் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன் அதை இப்போது பாண்டுரங்கன் மூலம் நேருக்கு நேராக அறிந்து கொண்டேன். ஆனாலும் அந்த மனிதனை பார்க்கும் போது அவரது விசாலமான அறிவும் அசாதாரணமான நாவன்மையும் எனக்கு வியப்பையே தந்துகொண்டிருந்தது. அவரை இன்னும் அதிகமாக மதிக்க துவங்கினேன்.

குருஜி



Contact Form

Name

Email *

Message *