Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆசையில்லாதவரின் ஆசை !

 


ஒரு மூங்கில் தட்டு அதில் இரண்டு மூன்று சீப்பு வாழைப் பழங்கள் இதுதான் பச்சையப்ப முதலியாரின் மூலதனம் ஆஸ்த்தி வாழ்கை எல்லாம் தினசரி எப்படியோ பத்து பதினைந்து வரும்படி வந்து விடும் அரைக் கிலோ அரிசிக்கும் ஐம்பது கிராம் பருப்புக்கும் வழிவந்தால் போதாதா? அதுக்கு மேலே வருமானம் வந்தால் புத்தி தடுமாறிபோகும் என்பது அவரது சித்தாந்தம்

பிள்ளை குட்டிகள் என்று எதுவும் கிடையாது இவரை எதிர் பார்க்கும் உறவுகளும் கிடையாது காது செவிடான பெண்டாட்டியும் அதிகம் எதிர்பார்ப்பதில்லை அதனால் மனிதனுக்கு பிச்சல் பிடுங்கல் இல்லாமல் நேரம் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது

முதலியார் காலை நாலு மணிக்கே விழித்து விடுவார் தூக்கம் கலைகிறதோ இல்லையோ இயந்திர கதியில் தெருமுனையில் உள்ள கைபம்புவில் தண்ணீர் அடித்து குளித்து விடுவார் ஈர உடம்பு காய்வதற்கு முன்பே நெற்றி நிறைய விபூதி பூசி"நமச்சிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க" என்று சிவபுராணத்தை முணுமுணுத்தவாரே தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு டீ கடைக்கு கிளம்பி விடுவார்

போலீஸ்ட்டேஷன் மூலையில் உள்ள விஜயன் டீ கடை அப்போதுதான் நெறுப்பு ஏற்றப்பட்டு புகைய ஆரம்பித்திருக்கும் முதலியார் தான் முதல் போனி சூடான தேனீரை தொண்டையில் இறக்கி சலாம் பீடி ஒன்றை பற்ற வைத்து நெஞ்சு நிறைய புகையை இழுத்து வெளியில் விட்ட பிறகு தான் அவருக்கு நாளே துவங்கும் பிறகு செவிட்டு மனைவிக்கும் தேனீர் வாங்கி கொண்டு வீட்டுக்கு வருவார்

வாசல் பெறுக்குவது சாணம் தெளிப்பது எல்லாம் முதலியார்தான் தொடைக்கு மேலே வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு இவர் கோலம் போடுவதை பார்த்தால் அச்சு அசலாக கிராப்பு வெட்டிய பொம்பளை மாதிரியே இருக்கும்

இது ஆம்பளை செய்ய வேண்டிய வேலை அது பொம்பளை செய்யுற வேலைன்னு வித்தியாசம் எல்லாம் அவருக்கு கிடையாது பொண்டாட்டி பாவாடையைக் கூட துவைத்து வீட்டு முன் வாசலில் காய போடுவார் யாராவது கேட்டால் ஆம்பளை வேஷ்டியை பொம்பளை துவைக்கும் போது யாரும் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறீர்களே அது ஏன் என்று திருப்பிி கேட்பார் கேள்வி கேட்டவர் வாயை திறக்க முடியாாது 

இடி இடித்தாலும் சரி மழை கொட்டினாலும் சரி புயலோ பூகம்பமோ எது நடந்தாலும் அதை பற்றியெல்லாம் சிறிதும் கவலை இல்லாமல் காலை ஆறுமணிக்கெல்லாம் தனது கடையை முதலியார் திறந்துவிடுவார்.

கடை என்றவுடன் நாற்காலி மேஜை போட்டு இரும்பு கதவுகள் மாட்டி இருக்குமென்று யாரும் நினைத்துவிட வேண்டாம். அண்ணாச்சி பாத்திர கடைக்கு எதிரே உள்ள பிளாட் பாரம் தான் முதலியாரின் வாழைப்பழ கடை வாடகை கிடையாது. மின்சார வரி கிடையாது. வானம் தான் கூரை காற்று தான் எல்லை

முதலியாரின் மிக நெருங்கிய நண்பர் சாகுல் பாய் கேட்பார் ஒய் முதலியாரே அண்ணாச்சி எப்படி அவர் கடைக்கு எதிரே உன்னை கடைபோட அனுமதிச்சாரு உன் கடைக்கு வரும் ஆட்கள் அவர் கடையை மறைப்பது இல்லையா? அதனால் அவருக்கு இடைஞ்சல் இல்லையா? என்று கேட்பார். 

பீடியின் இறுதிப் பகுதியை இழுத்து புகைவிட்டவாறே பச்சையப்பன் முதலியார் திருவாய் மலருவார் அண்ணாச்சியின் கடையிலிருக்கும் ஒரு அண்டாவின் விலை தான் என் கடையின் மூலதனமே அவரோடு ஒப்பிடும் போது நான் ஒன்றுமே இல்லாத பரதேசி ஆனால் எனக்கும் அண்ணாச்சிக்கு உள்ள உறவு பணம் காசுக்கு அப்பாற்பட்டது. அன்பு என்ற ஒன்று பாலமாக இருக்கும் போது எந்த இடைஞ்சலும் யாருக்கும் கிடையாது என்று பதில் கூறுவதை பார்த்து சாகுல் பாய் சரிதான் என்று போய்விடுவார். 

வாழைப்பழக்கடை என்றவுடன் விதவிதமான பழவகைகள் அவரிடம் இருக்குமென்று யாரும் நினைத்துவிட வேண்டாம். கதலி என்றால் அதில் நான்கு சீப்பு ரஸ்தாளி , பச்சை நாடா. மொந்தன், பேயன் என்று வந்தால் வகைக்கு நாலு சீப்பு என்று இருக்குமே தவிர அதிகப்படியாக எதுவும் இருக்காது. நிறைய பழரகங்கள் வைக்க வேண்டும் கைநிறைய சம்பாத்தியம் வரவேண்டும் என்றெல்லாம் முதலியார் எப்போதுமே நினைத்ததில்லை அவரை பற்றி இப்படியே இருந்தால் வயதாகி போனபிறகு சம்பாதிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? நாலு காசு சேர்த்து வைக்க வேண்டாமா என்று சாகுல் பாய் தான் அக்கறையோடு விசாரிப்பார் 

ராவுத்தரே எங்க பாட்டன் அப்பனும் சம்பாதிக்காத காசையா நான் சம்பாதிக்க போகிறேன் அவனுங்க மலையளவு சம்பாதித்தானுங்க பணத்தை எல்லாம் சாராயம் குடிப்பதற்கும் ஊருக்கு ஊரு கூத்தியாள் வைப்பதற்கும் செலவு பண்ணினார்கள். கடைசியா சம்பாதித்ததை எல்லாம் இழந்துவிட்டு அன்னக்காவடியா தெருவில் நின்றார்கள் நான் சம்பாதிக்கவும் வேண்டாம் கூத்தியா வைக்கவும் வேண்டாம் நடுத்தெருவில் நிற்கவும் வேண்டாம். கடவுள் கொடுப்பதை வைத்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவிட்டு சாகுறேன். கடேசிகாலம் எதை நீர் சொல்கிறீர்? வயதான பிறகா? வயது கடந்தால் தான் மரணம் வரவேண்டுமா என்ன? நாளைக்கே எமன் வந்து கூப்பிட்டால் வரமாட்டேன் என்று சொல்லிவிட முடியுமா? எதுவும் நம் கையில் இல்லை என்று கைதேர்ந்த வேதாந்தி போலா பேசுவார். அதற்க்கான பதில் சாகுல் பாயிடம் எப்போதுமே இருந்தது இல்லை.

 முதலியாருக்கு பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லையே தவிர மற்றவர்களை சம்பாதிக்க தூண்டுவது அவர் எப்போதும் சளைத்தவர் அல்ல வாலிப பசங்க அவர் கடைக்கு வந்தாலும் தம்பிகளா நல்ல படியுங்க பெரிய உத்தியோகமாகஅமருங்க கைநிறைய சம்பாதித்து கார் பங்களா என்று வாங்கி வாழ்க்கையில உல்லாசமாய் இருங்க அக்கா தங்கச்சிகள கைவிட்டுவிடாதிங்க என்று உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுவார். இதனாலயே அவர் கடைக்கு இளைஞர்கள் வருவதில்லை என்பது வேறு விஷயம்.

ஆசைப்பட கூடாது அதனால் அவதிப்பட கூடாது என்று பெரியவர்கள்  சொல்லியிருக்காங்க ஆசைப்படாம வாழ்ந்துவிட முடியுமா? பொண்டாட்டி மேலே ஆசையில்லனா பிள்ளைகள் பிறக்குமா? குழந்தைகள் உற்பத்தியே இல்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்? மனிதனுக்கு ஆசை வேண்டும் ஆசை இருந்தால் தான் செயல்பட முடியும். எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்ய இயலும். ஆசை இல்லை என்றால் செயல்பாடு இல்லாமல் ஜடம் போல கிடைக்கவேண்டியது தான். இயக்கம் இல்லை என்றால் அழிவு தானே வரும். அப்படியே போனானால் உலகம் ஒருநாள் சூன்யமாக மாறிவிடாதா? என்று கூறுவார். 

நீங்க சொல்லுவது சரிதான் முதலியாரே ஆசை செயலுக்கு மூலக்காரணம் என்பதை மறுக்க இயலாது. ஆனால் ஆசை ஒன்றே பிரதானம் என்று எப்படி கருத இயலும் பெண்டாட்டியின் மேல் ஆசை பிள்ளையின் மேல் ஆசை பணத்தின் மேல் ஆசை பதவியின் மேல் மண்ணின் மேல் உடம்பின் மேல் ஆசை ஆசை என்று வளர்த்து கொண்டே போனால் நிம்மதி என்பது எப்படி கிடைக்கும். ஆசை படுபவர்கள் அவதிப்பட்டு கண்ணீர் விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம். அதனால் உங்கள் உபதேசம் சரியில்லை என்று யாராவது மறுப்பு சொன்னாலும் முதலியார் வாஸ்தவம் தான் என்று அதையும் ஏற்றுக்கொள்ளுவார். காரணம் தனது எண்ணத்தை வெளியிடுவதற்கு தனக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை மறுப்பதற்கு மற்றவர்களுக்கு உண்டு என்பது அவரது அசைக்க முடியாத எண்ணம். 

அதனால் தான் கடைத்தெருவில் முதலியாருக்கு எதிரிகள் என்பதே கிடையாது. எல்லோருமே அவர் நேசித்தார் எல்லோரும் அவரை நேசித்தார்கள் ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தனது சொந்த எண்ணங்களை விட்டு கொடுத்தது இல்லை.

அவருக்கென்று உறுதியான கருத்துக்கள் உண்டு ஒருமுறை பாத்திரக்கடை அண்ணாச்சி முதலியாரே உங்களது குலத்தொழில் வியாபாரம் செய்வது இல்லை நெசவு நூட்பது தான் அதை நீங்கள் செய்துவந்தால் சமுதாயத்திலும் ஆடைபற்றக்குறை ஏற்படாது. உங்களுக்கு பணத்தட்டுபாடு இருக்காது. அதை செய்யவேண்டியது தானே என்று கேட்டார். 

அதற்கு முதலியார் அண்ணாச்சி உங்க தாத்தா கொள்ளுத்தாத்தா எல்லோரும் பனைமரம் ஏறி பதநீர் எடுத்தார்கள் கருப்பட்டி காய்தார்கள் கள்ளு விற்றார்கள் அதை ஏன் நீங்களும் உங்கள் அப்பாவும் விட்டு விட்டிர்கள் உங்கள் இயல்பு உங்கள் விருப்பம் பனை ஏறுவதில் கிடையாது வியாபாரம் செய்வதில் தானே இருக்கிறது. மனதிற்கு விரோதமாக இருக்கும் எந்த செயலையும் செய்தாலும் அதில் திருப்தி ஏற்படாது அதனால் தான் நான் வாழைப்பழக்கடை நடத்துகிறேன் என்றார்.

முதலியாருக்கு அவர் மனைவி விட்டால் சொந்தபந்தமென்று யாரும் கிடையாது தூரத்து உறவு என்று சொல்லிகொள்வதற்கு மனிதர்கள் இல்லை. ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது. இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு என்பது அவர் சித்தாந்தம் 

சொந்தக்காரன் என்று யாரும் இல்லை என்றாலும் என்ன? எனக்கு முஸ்லீமாக பிறந்த சாகுல்பாய் சொந்தக்காரர் தானே எங்கோ தெற்கே பிறந்த பாத்திரக்கடை அண்ணாச்சியும் உறவுக்காரர் தெருவெல்லாம் எனக்கு சொந்தங்கள் இருக்கிறது. நானோ என் மனைவியோ செத்து போனால் எங்கள் பிணம் அனாதை பிணமா கிடந்து அழகி போகாது. ஊரே சேர்ந்து அடக்கம் செய்வார்கள். என்று கூறி கபடம் இல்லாமல் சிரிப்பார். 

பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் முதலியார் வாழ்ந்தாலும் அவருக்கு எதோ எதிர்பார்ப்பு இருந்தது என் பெண்டாட்டி காது செவிடா அவளுக்கு சூதனமாக வாழ தெரியாது இந்த உலகத்தோடு போட்டி போட முடியாது. நான் இல்லை என்றால் அவள் கதை சிக்கலாகிவிடும். அதனால் எனக்கு முன்னால் அவள் சாகவேண்டும் அவளுக்கு செய்யவேண்டியதை எல்லாம் நான் உயிரோடு இருந்து செய்ய வேண்டும். அதற்கு பின்னால் எப்போது வேண்டுமானாலும். நான் சாக தயாராக இருக்கிறேன். என்று சொல்லுவார். 

அப்படி சொல்லும் போது அவர் கண்களில் ஈரம் சுரந்து நிற்பதை பார்க்கலாம். நான் இல்லை என்றால் என் மனைவி அனாதையாகிவிடுவாள் அவளை அப்படி நிற்கதியாக விடமாட்டேன் என்று நினைப்பது எவ்வளவு பெரிய உயர்ந்த சிந்தனை இப்படி உயர்ந்த சிந்தனை வருவதற்கு பணம் வேண்டாம். பதவி புகழ் என்று எதுவும் வேண்டாம். நல்ல மனது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பது முதலியார் என்ற உயர்ந்த மனிதனின் முழு சித்திரமாக இருக்கிறது அந்த சித்திரங்களை பராமரிக்காமல் பாழ்பட விட்டுவிடுவது யார் குற்றம்? குருஜி


Contact Form

Name

Email *

Message *