எங்கே பாட்டி?
பல்லு இல்லா வாய்திறந்தே
பாசம் காட்டி சிரித்திடுவாள்
முள்ளு நம்மை குத்தாமல்
முடிந்த வரையும் காத்திடுவாள்
அப்பா அம்மா தவறுகளை
அதட்டி உருட்டி திருத்திடுவாள்
தப்பா நானும் நடக்காமல்
தடுத்து கண்போல் காத்திடுவாள்
கண்ணன் கந்தன் கதைசொல்வாள்
காக்கா குருவி பாட்டிசைப்பாள்
மண்ணில் வளரும் செடிவகையை
வளர்க்கும் விதத்தை கற்பிப்பாள்
பேரன் பேத்தி உறவுகளை
பேச வைத்து மகிழ்ந்திருப்பாள்
ஊரான் பிள்ளை என்றாலும்
உணவு ஊட்டி வளர்த்திடுவாள்
பணத்தை தேடும் வேகத்தில்
பாட்டி உறவை மறந்திட்டோம்
கணக்கு போட்டு பாருங்கள்
காணாத பாட்டியை தேடுங்கள்
குருஜி