அது நான், இது நான், எதுவும் நான்!
எனக்குள் என்னை தேடி தேடி
என்னை நான் கண்டு கொண்டேன்
சுரங்கத்தை அகழியை
தோண்டும் பொருள் நானே
தோண்ட வேண்டியதும் நானே
தோண்டினால் கிடைப்பதும் நானே
காடுகளில் சுள்ளி பொருக்கி
கானகத்தில் மரத்தை தேடி
ஊனமில்லா கூடு சமைத்து
முட்டையிட்டு குஞ்சிக்காக்கும்
பாடும் பறவையினம் நான்தான்
குருதி கசியும் மாமிசத்தை
கொத்தி தின்னும்
கழுகும் நான்தான்
மண்ணுக்குள் விதையாய் விழுந்து
மரமென்று ஓங்கி நின்று
விண்ணைச் சாடும் உயிரினம் நான்
செடியும் நான்
கொடியும் நான்
மலரும் நான்
உலரும் சருகும் இலையும் நான்
வெட்ட வெட்ட வளர்ந்து நிற்கும்
நகமும் நான்
ரோமமும் நான்
மேகம் கொண்டு வந்து
பூமியை நனைக்கும் மழை நான்
சுனையாய் பெருகி அருவியாய் குதித்து
நதியாய் நடப்பதும் நான்
கடலும் நான் அலையும் நான்
அலைமேல் எரியும் நெருப்பும் நான்
மலையும் நான் மணலும் நான்
உளிகள் செதுக்கும் சிலைகள் நான்
உளி கொடுக்கும் ஓசையும் நான்
வீணை நான் மீட்டும் விரல்கள் நான்
இசையும் நான் அசைவும் நான்
புவி நான் கவி நான்
செவியும் குண்டலமும் நான்
சொற்குவியல் நான் பொற்குவியலும் நான்
பூக்கடை நான் சாக்கடை நான்
போக்கிடம் இல்லா பேயும் நான்
பொருக்கித் தின்னும் நாயும் நான்
மலமும் நான் சலமும் நான்
மறைகள் நான் சிறைகள் நான்
உறைக்குள் உறங்கும் கத்தி நான்
நானே அனைத்தும் என்றால் காமம் என்பது இல்லை
நானே அனைத்தும் என்றால் கோபம் என்பது இல்லை
நானே அனைத்தும் என்றால் பகமை என்பது இல்லை
நானே அனைத்தும் என்றால் அன்பே உலகின் எல்லை
குருஜி