ஆறு என்ற அம்மா எங்கே?
வெண்ணெய் உருகும் முன்னர்
பெண்ணை பெருகும் என்ற கதைகள்
பொய்யாய் பழங்கதையாய் வெறுங் கனவாய்
நதிக்கரை ஓரத்து நாணல்கள்
சருகாய் சாம்பலாய் ஆனதைய்யா
ஆற்றில் வாய்க்கால் வெட்டி
ஏரி குளம் நிரப்பி
பச்சை வயல்வெளியில்
கெண்டைக்கு தூண்டில் வைப்போம்
சிவப்பாக வெள்ளம் சீறி பாய்ந்தாலும்
ஆழமாய் குதித்து அடியில் மண்ணு எடுப்போம்
கை குலுக்கி கூட வரும்
குடமுருட்டி ஆற்றில் மிதந்து வரும்
தேங்காய் நெற்றுக்களுக்கு
ஆடை நழுவ சண்டை போடுவோம்
ஆடி பெருக்கில் வளைய வலம் வரும்
அத்தை மகள் தாவணிக் காற்றுக்கு
உச்சி வெயிலானாலும்
ஒளிந்திருந்து காத்திருப்போம்
இளமைக் கால முதலாய் எங்களோடு
மல்லுக் கட்டி விளையாடிய
பெண்ணை நதி எங்கே? - அதன்
பெருமை மிகு நடை எங்கே?
கயல் துள்ளி விளையாடும்
நீராடும் கரைகள் எங்கே
பயிர் பச்சை மரத்தையெல்லாம்
பாராபட்சம் இல்லாமல்
அணைத்து அமுதூட்டிய
நதியின் மேனியெல்லாம்
கருவேலம் முள்ளாய் ஆனதெப்படி?
எங்கள் அன்னையின்
அடிவயிற்று மண்ணை
சூராவளியாய் சுரண்ட பட்டதெப்படி?






