கருகிய வீதி
யாரும் இல்லாத தெருவில்
ஒற்றைத் தின்னையில்
உட்கார்ந்திருக்றேன்...
சின்னதும் பெரிதுமாய்
குஞ்சும் குரும்பானுமாய்
எத்தனை ஜீவன்கள் நடந்து போயிருக்கும்
அவர்களுக்குள்
எத்தனை கனவுகள் கனத்து போயிருக்கும்
இன்று
யாருமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது
வீதி
என்னைப் போல
அலமேலு கிழவியின் காய்கறி கடை
முனுசாமியின் தேனீர் கடை
முதலியாரின் சைக்கிள் கடை
எல்லாக் கடைகளும்
கால வெள்ளத்தில் அடித்து சென்று விட்டன
கூரை ஓடுகள் மட்டும்
குவிந்து கிடக்கின்றது
தேடுவாரற்ற தெருக் கம்பமாய்
நானும் நிற்கிறேன்
தேவைகளை கொடுக்காத தெரு
தேய்ந்து கருகிப் போகும்
பாதச்சுவடுகளை தாங்காத பாதை
முள்ளுக் காடாய் மாறிப் போகும்
முதுமையும் வறுமையும் சுமக்கும் நான்
அரவமற்றத் தெரு
ஆள் நடக்காத கரடு
அதனால்
யாரும் இல்லாதத் தெருவில்
ஒற்றைத் தின்னையில்
உட்கார்ந்திருக்கிறேன்...
குருஜி