இன்னும் கொஞ்சக் காலம் தான்
இப்படி படுத்திருந்து
கனா காணமுடியும்
புகை படிந்த ஒவியத்தில்
வருங்காலத்தை எண்ணிப் பார்க்கிறேன்
சம்மட்டி அடிகளும்
முள் கிரீடமும்
சாட்டை விளாசல்களும்
எனக்காக
காத்திருப்பதை உணர்கிறேன்
புகுந்த வீட்டின்
புரியாத கணக்குகளும்
புதுக் கணவனின்
புதிரான விழிகளும்
சொந்த பந்தங்களின் நச்சரிப்புக்களும்
பீஷ்மரின் அம்பு படுக்கையாய்
என்னை சாய்க்க போகிறது
நான் தொட்டு வளர்த்த
தென்னை மரமும்
என்னை கட்டிப் படுக்கும்
தம்பிப் பயலும்
சுட்டித்தனத்தில்
என்னை சொக்க வைக்கும்
பூனைக் குட்டியும்
விட்டுப் பிரிந்து எங்கோ
தூர தூர கனவுகளாய்
உதிரப் போகிறார்கள்
இதயக் குகையில்
மெளன விம்மல்களை
நெருப்பை உமிழும்
பெரும் மூச்சுகளை
காலம் என்னும் பாறை இடுக்குகளில்
வழிந்தோடும் கண்ணீர் துளிகளை
உள்ளுக்குள் அடக்கி
வெளியில் சிரிக்க போகிறேன்
இன்னும் கொஞ்சக் காலம்தான்
இப்படி படுத்திருந்து
கனா காணமுடியும்
குருஜி






