Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜியின் கூடவே வரும் சிவபெருமான்.!


யோகியின் ரகசியம் 6

   னக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கிருஷ்ணன் மேலே ஈடுபாடு உண்டு. சின்ன வயதில் மருத்துவமனையில் இருக்கும் போது என் தகப்பனார் சொன்ன ராமாயண - மகாபாரத கதைகளாலோ, எனது மூத்த சகோதரி கிருஷ்ணனின் பால லீலைகளை பற்றி சொன்னதாலோ அந்த ஈடுபாடு எனக்கு வந்திருக்கலாம். ஆனாலும், என்றும் நான் கிருஷ்ணனை வழிபடும் தெய்வமாக முழு முதற்கடவுளாக பக்தி கொண்டது இல்லை இது உண்மை. கண்ணன் என்றாலே எனக்கு அவன் தோழன், உறவினன் என்று தான் தோன்றும். பல நேரங்களில் அவனை மாமா என்று தான் உரிமையோடு அழைப்பேன். இது இப்படி இருக்கும் போது நான் வாழ்க்கையில் மிக நெருக்கடியான காலகட்டங்களில் மாட்டி தவிக்கும் வேளையில், என்னை காப்பதற்கு ஓடோடி வந்து நிதர்சனமாகவே உதவி செய்வது சிவபெருமான். அதனால் தான் அவரை அப்பா என்று மரியாதையோடு கூப்பிடுவேன்.

குருஜி கடவுள்களை உறவுமுறையில் எல்லா நேரமும் அழைக்க கூடியவர் அது ஏன் என்று நாங்கள் கேட்டபோது எங்களுக்கு அவர் தந்த பதில் இது. இந்த பதிலில் நூறு சதவிகிதம் உண்மை இருப்பதை நாங்கள் எங்களது நேர்முகமான அனுபவத்தில் பலமுறை பார்த்திருக்கிறோம். தாங்க முடியாத தவிர்க்க முடியாத கஷ்டங்கள் பல குருஜியின் வாழ்வில் சூறைக் காற்றாக தாக்கிய போது உடனிருந்தவர்கள் நாங்கள். எனவே அவர் வார்த்தைகளில் உள்ள சத்தியத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

குருஜி சந்நியாசம் வாங்கிய ஆரம்ப காலம் தீட்சை வாங்கியவுடன் குருஜி எடுத்த முதல் சங்கல்பம் மூன்று வருடத்திற்கு பணத்தை கையால் எந்த வகையிலும் தொடமாட்டேன். சாஸ்திரங்கள் பார்த்து, சம்பாவனைகள் வாங்க மாட்டேன். யாரும் தானாக கொடுக்காமல், நானாக நன்கொடைகள் கேட்க மாட்டேன் என்பது தான். இதை நாங்கள் இப்போது சுலபமாக எழுதிவிட்டோம். ஆனால், இதை கடைபிடிப்பதில் உள்ள கஷ்டங்களை அனுபவத்தில் தான் உணர முடியும். அந்த உணர்வுகளை குருஜியோடு சேர்ந்து நாங்களும் பெற்றோம் என்றால் அது எங்களது பெரும் பேறாகவே கருதுகிறோம்.

ஒரு நாள் ஆசிரமத்தில் அடுத்த வேளை சமையலுக்கு அரிசி உட்பட எந்த பொருளும் கிடையாது. அப்போது கையிருப்பில் இருந்த பொருட்கள் சில அலுமினிய பாத்திரங்களும், ஒரு கட்டு விறகும் தான். மதிய வேளை ஏழு பேர் உணவருந்த வேண்டும். அதில் ஐந்து பேர் ஆதரவு இல்லாத ஆசிரமத்தால் பராமரிக்கப்படும் குழந்தைகள். இன்னொருவர் குருஜி. மற்றொருவர் அப்போது அவருக்கு உதவியாளராக இருந்த திரு.விஜயன். யாரிடமும் சென்று எதுவும் கேட்க கூடாது என்று குருஜி உத்தரவு போட்டிருந்ததனால் என்ன செய்வது என்று யாருக்கும் விளங்கவில்லை. ஆனால், இதைப்பற்றி குருஜி சிறிது கூட கவலை இல்லாமல் சிவபுராணத்தை எடுத்து வைத்து ஏற்ற இறக்கத்தோடு பாடிக்கொண்டிருந்தார்.

குருஜியின் உதவியாளராக இருந்த விஜயன் சற்று அவசரக்காரர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் யதார்த்தமான குடும்பஸ்தர். அவரால் மறு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருப்பதை பற்றி சிந்திக்க கூட முடியவில்லை. நேராக குருஜியிடம் சென்ற அவர், நீங்கள் எந்த உறுதி மொழியாவது எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக இங்கிருக்கும் குழந்தைகள் பட்டினி கிடக்க வேண்டுமா? நீங்கள்தான் யாரிடமும் பணம் கேட்க கூடாது நாங்கள் கேட்கலாம் அல்லவா? அதற்காவது அனுமதி உண்டா? இல்லையா? என்று பட்டாசு வெடித்தது போல் பட படவென்று வார்த்தைகளை கொட்டினார்.

சிவபுராணத்தில் உள்ள கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தார் போல சிறந்தடியார் சிந்தனையுள் என்ற வரிகளை பாடிக்கொண்டிருந்த குருஜி நிமிர்ந்து, விஜயனை பார்த்தார். ஒன்றுமே இல்லாத காலிகுடம் தான் சத்தம் எழுப்பும். நீயும் நானும் காலிகுடமா என்ன? பேசாமல் இரு. யார் என்னை இந்த சங்கல்பம் எடுக்க வைத்தார்களோ அவர்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வருமென்றா தெரியாமல் வைத்தார்கள். எல்லாம் அவர்களுக்கு தெரியும் நடக்க வேண்டிய நேரத்தில் நடப்பது நடக்கும். பட்டினி கிடப்பது தான் இவர்களுக்கு சரியானது என்று கடவுள் நினைத்தால், அதை மாற்ற யாரால் முடியும்?  அமைதியாக ஏதாவது புத்தகத்தை எடுத்து படி. கொதிக்கும் நேரத்தில் மூளை அமைதி பெறும் என்று பதில் சொல்லிவிட்டு சிவபுராணத்தோடு கலந்துவிட்டார்.

விஜயனுக்கு, பிறகு அங்கு பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. மீறி பேசினாலும் என்ன பதில் வருமென்று அவருக்கு தெரியும். எனவே தனக்கே உரிய முணுமுணுப்போடு இடத்தை விட்டு நகர்ந்தார். ஆசிரமம் முழுவதும் அமைதி நிலவியது. மணி மதியம் ஒன்று என்று கடிகாரம் காட்டியது. குருஜி, குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துவர சொன்னார். அந்த நேரத்தில் வாசலில் சிறிய லாரி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி, ஒரு அரிசி மூட்டையும், காய்கறி கூடையும் ஒரு பை நிறைய பருப்பு, எண்ணெய் வகைகளும் எடுத்துக்கொண்டு குருஜியிடம் வந்து, அவர் காலடியில் வைத்தார்கள்.

குருஜி அவர்களை வியப்போடு பார்த்தார். நீங்கள் யார்? எங்கேயிருந்து வருகிறீர்கள். இவைகளை கொடுத்தனுப்பியது யார்? எதற்காக கொடுத்தனுப்பினார்கள்? என்ற ஒரே நேரத்தில் பல கேள்விகளை அவர் கேட்டார். அவர்கள் இருவரும், குருஜியின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள். ஐயா டி.என்.சி குடோனுக்கு புதிய ஆபிசர் வந்திருக்கிறார். அவர் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு உங்களுக்காக முதலில் இந்த காணிக்கைகளை கொடுத்து வர சொன்னார். நீங்கள் அனுமதி கொடுத்தால், மாலையில் வந்து உங்களை சந்திப்பதாகவும் சொல்கிறார். அவருக்கு உங்கள் பதில் என்ன? என்று பணிவோடு கேட்டு நின்றார்கள்.

உங்கள் ஆபிசர் எவரையும் எனக்கு தெரியாதே? அவர் பெயர் என்ன?  என்று அந்த பணியாளர்களிடம் குருஜி கேட்கவும், ருத்ரமூர்த்தி என்று அவர்கள் இருவரும் ஒரே குரலில் பதிலை சொன்னார்கள். இதே ருத்ரமூர்த்தி என்ற பெயரை வேறொரு சந்தர்ப்பத்தில் நடு இரவையும் தாண்டிய நேரத்தில் காடுகள் அடர்ந்த பிரதேசத்தில் நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்போது இந்த பெயர் எங்களுக்கு வெறும் பெயராக தெரியவில்லை. கடவுளாகவே தெரிந்தது. ருத்ரமூர்த்தி என்ற பெயருக்கும், குருஜிக்கும் உள்ள மிக நெருக்கமான உறவு அதன் பிறகு தான் சிறிது சிறிதாக எங்களுக்கு விளங்க ஆரம்பித்தது.  

விழுப்புரத்திலிருந்து கன்னியாகுமரி வரை ஆட்டோவில் பயணம் செய்ய போவதாக குருஜி தீர்மானித்திருந்தார். அவர் தீர்மானம் எங்களுக்கு பயம் தந்தது. இப்போது இருப்பதுபோல அன்று நான்கு வழி பாதை கிடையாது. வாகனங்கள் வருவதும், போவதும் ஒரே சாலையில் தான் நடக்க வேண்டும். வளைவுகளும், உயர்ந்து நிற்கும் மரங்களும் கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்வதற்கு பெரிய சவாலாக இருக்கும் போது ஆட்டோ ரிக்ஷாவில் இவ்வளவு தூரம் பயணப்படுவதை நினைத்து பார்த்தால் யாருக்கு தான் அச்சம் வராமல் இருக்கும்?

பாதி தமிழ்நாட்டை நிதானமாக அணு அணுவாக பார்த்து ரசிக்க நான் விரும்புகிறேன். அதற்கு ஒன்று பாதயாத்திரை செல்ல வேண்டும் அல்லது மிதி வண்டியில் செல்ல வேண்டும். இரண்டும் என்னால் முடியாது. அதனால், மூன்று சக்கர வாகனத்தில் மெதுவாக பயணம் செய்வது என்று முடிவு செய்து விட்டேன். உங்களில் யார் என்னோடு வரப்போகிறீர்கள். இது தான் என் கேள்வி என்று இரத்தின சுருக்கமாக பேசினார் குருஜி. இதற்கு பிறகு அதற்கு மறுப்பு சொல்லும் அளவிற்கு எங்களில் யாருக்கு தகுதி இருக்கிறது? அனைவருமே வருகிறோம் என்றோம். அத்தனை பெரும் ஒரே ஆட்டோவில் பயணம் செய்ய இயலாது. எனவே நானும், சந்தானமும் தவிர கூட ஒருவர் மட்டும் வாருங்கள் என்று சொன்னார். சரி என்று எங்கள் பயணம் ஏற்பாடாயிற்று.

ஆட்டோவில் நாங்கள் திருச்சியை தொடும் போது இருட்டி விட்டது. சோதனையாக ஆட்டோவின் முன் விளக்குகள் எரிய மறுத்துவிட்டன. டைனோமாவில் பிரச்சனை என்று ஓட்டுனர் சொன்னார். சரி நிறுத்தாதே வண்டியை செலுத்து என்று குருஜியும் சொல்லி விட்டார். இருள் ஏறிக்கொண்டே வந்தது. சாலையில் முன் பகுதி எதுவும் தெரியவில்லை. எங்கள் வாகனத்தை பெரிய வாகனங்கள் கடந்து செல்லுகின்ற போது கிடைக்கின்ற வெளிச்சம் தான் அந்த பயணத்தில் எங்கள் கூட இருந்த விளக்குகளாகும். சற்றேறக் குறைய இதே மாதிரியான நிலையில் இரவு முழுவதும் எங்கள் பயணம் நடந்தது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

இருபத்தைந்து மணி நேர பயணத்திற்கு பிறகு, கன்னியாகுமரியை சென்றடைந்தோம். அங்கே ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு எட்டு நாள் கழித்து மீண்டும் எங்கள் பயணம் துவங்கியது. நல்ல வேளை ஆட்டோவின் விளக்குகள் அனைத்தையும் சரி செய்திருந்தோம். மூன்று சக்கர வாகன பயணம் ஒரு வாரத்தில் நன்றாக அனுபவப்பட்டு வந்துவிட்டதனால் வரும் போது இருந்த பயம் இப்போது  இல்லை. மதுரையை தாண்டி வந்து கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன். சுற்றி எந்த ஊர்களும் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தெரியவில்லை. இரவு மணி ஒன்றரை. வேகமாக சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று நின்றுவிட்டது. பயணப்பட்டவர்களில் யாரும் உறங்கவில்லை என்பதனால் முட்டிக்கொள்ளவில்லை. அதனால் காயமும் இல்லை. ஆனால், வண்டி நகராததன் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை.

ஓட்டுனரே மெக்கானிக் என்பதனால், சிறிய விளக்குகளை வைத்துக்கொண்டு ஆட்டோ இஞ்சின்களோடு போராடத் துவங்கினார். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, சிறிய பொருள் ஏதோ ஒன்று உடைந்து விட்டதாகவும், அது இருந்தால் தான் வண்டி நகரும் என்றும் அவர் கூறினார். அந்த நேரத்தில், அந்த பொருளுக்கு எங்கே போவது?  யாரை பார்ப்பது குளிர்ந்த காற்று வேறு ஊசியால் குத்துவது போல் வீசியது. இன்னும் சிறிது நேரத்தில் மழை வருமென்ற அறிகுறி தென்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்துவதற்கு முயற்சி செய்தால் யாரும் நிறுத்தவில்லை. விடிகிற வரையில் அந்த இடத்தில தான் நிற்க வேண்டும் ஏன்ற நிலை வந்து விட்டது. மழை இப்போது சரசரவென துளிகளை போட துவங்கிவிட்டது. அந்த நேரத்திலும் குருஜி பதட்டப்படாமல் எங்களை நையாண்டி செய்து சிரித்துக்கொண்டிருந்தார். உண்மையில் அவரது உள்ளம் எங்களுக்கு புரியவில்லை. எதையுமே இவர் சீரியசாக எடுத்துகொள்ள மாட்டாரா? என்று தோன்றியது.

அந்த நேரம், போலீஸ் ஜீப் ஒன்று எங்கள் பக்கத்தில் வந்து நின்றது. யார் நீங்கள் என்று கரகரப்பான குரலில் கேட்டவாறு இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி வந்தார். அவர் அருகில் சென்று எங்களை அறிமுகம் செய்துவிட்டு நிலைமையை சொன்னோம். குருஜியின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட அந்த இன்ஸ்பெக்டர், எங்களை மிகவும் கடிந்து கொண்டார். இவ்வளவு தொலைவிலிருந்து ஆட்டோவில் வருகிறீர்களே அதுவும் நடக்க முடியாத மனிதரை வைத்துக்கொண்டு பயணம் செய்கிறீர்களே நீங்களெல்லாம் படித்தவர்களா? நீங்களே தப்பு செய்தால் மற்றவர்கள் ஏன் செய்ய மாட்டார்கள்? என்று பேசிய அவர் குருஜியின் அருகில் வந்தார். எங்களுக்கு சிறிது தயக்கமாக இருந்தது எங்களிடம் பேசியது போலவே குருஜியிடமும் இவர் பேசி மரியாதை குறைவாக நடந்து கொண்டால் நன்றாக இருக்காதே என்று தோன்றியது.

நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தானாக குனிந்து குருஜியின் கால்களை தொட்டு வணங்கினார். உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும் என்று கேட்டார்? குருஜி நிலைமையை சொல்லி உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள் போதும் என்றார். சரி சிரமத்தை பார்க்காமல் சற்று நேரம் காத்திருங்கள். ஐந்து நிமிடத்தில் வருகிறோம் என்று கூறி ஜீப்பை திருப்பிக் கொண்டு சென்ற இன்ஸ்பெக்டர் ஐந்து நிமிட நேரத்திலேயே சொன்ன படி வந்தார். அவரோடு வேறொரு மெக்கானிக்கும், தேவையான பொருட்களும் இருந்தன. பத்து நிமிட நேரத்தில் ஆட்டோ உறுமத் துவங்கி விட்டது.

குருஜியை மீண்டும் வணங்கிய இன்ஸ்பெக்டர் தனது வாகனத்தை தொடர்ந்து வரும் படியும், ஏதாவது சிறிது உணவு அருந்தும் படியும் பணிவோடு கேட்டு நின்றார் குருஜியும் சம்மதித்தார். அருகிலிருந்த சிறிய கிராமத்தில் பெட்டிக்கடையை திறந்து வாழைப்பழங்களை வாங்கி எங்களுக்கு கொடுத்த அந்த போலீஸ்காரர், குருஜியை திரும்பி பார்க்கும் ஒவ்வொரு நேரத்திலும் கண்களில் காட்டிய பணிவை எங்களால் மறக்க முடியாது. பிறகு எங்களோடு சிறிது தொலைவு கூடவே வந்த அவர், விடைபெறுவதற்கு குருஜியிடம் வந்தார். பணிவாக கை கட்டிக்கொண்டு குனிந்து நின்று, எனக்கு உத்தரவு கொடுங்கள் என்றார். மிகவும் நல்லது. உங்கள் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? என்று குருஜி கேட்கவும், ருத்ரமூர்த்தி என்று அவர் பதில் சொல்லவும் அந்த பெயர் மிக பிரம்மாண்டமான ஓசையாக எங்கள் செவிகளில் விழுந்து இதயங்களின் கதவுகளை திறந்துவிட்டு மணியோசையாக ரிங்காரம் செய்தது.

ஆரம்பத்தில் அரகண்டநல்லூரில் அமைக்கபட்டிருந்த நமது ஆசிரமம், களிமண் சுவர்களை கொண்டது. கூரையாக மூங்கிலும், மண் ஓடுகளும் இருந்தன. பார்ப்பதற்கு எளிமையாக அழகாக இருந்தாலும் கூட, மழை நேரங்களில் அருகிலுள்ள ஆற்றிலும், ஆசிரமத்திற்கு பின்னால் ஓடுகிற ஓடையிலும் தண்ணீர் அதிகரித்துவிட்டால், இருப்பிடதிற்குள்ளே இடுப்பளவிற்கு தண்ணீர் வந்துவிடும். நீர் முற்றிலுமாக வடிந்து சகஜ நிலை வருவதற்கு, பத்து பதினைந்து நாட்கள் ஆனாலும், அதுவரையிலும் வெளியில் தான் தங்கவேண்டும். இந்த நிலைமையை மாற்றி நல்ல உயரமாக சிறிய அளவில் கட்டிடம் அமைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதற்கு அப்போதைய செலவு கணக்குப்படி குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலும் ஆகக்கூடும். ஆனால், அதற்கான வசதி வாய்ப்புகள் அப்போது இல்லை. இதனால் பலமுறை குருஜியிடம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள வருபவர்களிடம் வசதிபடைத்தவர்களாக இருந்தால் அதிகமான காணிக்கைகளை வாங்கி செய்யலாம் என்று வற்புறுத்துவோம்.

குருஜி அதற்கு சம்மதம் கொடுக்கமாட்டார். எவரிடமும் வற்புறுத்தி பணம் வாங்க கூடாது. அவர்கள் தருவதை தரட்டும். நடக்க வேண்டிய வேளை வந்தால் நல்லபடியாக நடக்கும். பொறுத்திருங்கள் என்று கூறுவார். ஒரு முறை பிரபல அரசியல்வாதி ஒருவர் தான் அமைச்சராக வேண்டும். அதற்கு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். நீங்கள் செய்து தாருங்கள். எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை. உங்களுக்கு இந்த கட்டிடத்தையும் நான் முழுமையாக கட்டிகொடுத்து விடுகிறேன். வேண்டுமானால் நீங்கள் பூஜை செய்வதற்கு முன்பே கூட கட்டிடவேலையை முடித்து தருகிறேன் என்று வலியுறுத்தி கேட்டார்.

குருஜி அதற்கு சம்மதிக்கவில்லை. நான் அமைச்சராக வேண்டும் என்று கேளுங்கள் அதில் தவறில்லை. ஆனால், அதற்காக பேரம் பேசி இறையருளை வியாபரமாக்காதீர்கள் என்று கறாராக பேசினார். குருஜி அப்படி பேசியது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. பழம் நழுவி பாலில் விழுவது போல சந்தர்பம் வாய்க்கும் போது அதை தவற விடுகிறாரே என்று தோன்றியது. அந்த அரசியல்வாதி சென்ற பிறகு ஏன் அப்படி செய்தீர்கள் அவர் ஒன்றும் இல்லாதவர் அல்ல. அவரிடம் வாங்குவதில் என்ன தவறு? என்று கேட்டோம். அதற்கு குருஜி யாரிடமிருந்து வேண்டுமானாலும் பொருளை வாங்கி கொள்வது பிச்சை எடுப்பதாகும். தக்கவரிடமிருந்து பெறுவது தானமாகும். நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை இவன் கொடுக்கும் பணமும், மலத்தில் கிடக்கும் புழுவும் ஒன்று இதை வைத்து ஆசிரமம் கட்டினால் அது சிரமமாக முடியுமே தவிர ஆசிரமமாக இராது. உங்களுக்கு நல்ல கட்டிடம் தானே வேண்டும். பொறுத்திரு நல்ல காலம், நல்ல மனிதன் வடிவில் தெய்வம் கொண்டுவரும் என்று பதில் கூறி விட்டு தனது வேலைகளை கவனிக்கத் துவங்கி விட்டார்.

இந்த சம்பவம் நடந்து மூன்று மாதம் ஆகியிருக்கும். பெளர்ணமி இரவு, நிலா வெளிச்சத்தில் வெட்டவெளியில் அக்னி ஹோத்ரா ஹோமம் செய்து குருஜி முடித்திருந்தார். ஹோமம் என்றால் என்ன? அக்னியில் இடப்படும் பொருள் மனித சரீரத்திற்குள் எப்படி செல்கிறது என்பதை பற்றி விஞ்ஞான வடிவில் விளக்கம் சொல்லி கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்த குருஜியின் பார்வை திடீரென்று தெரு வாசலை நோக்கி சென்றது. அங்கு மூங்கில் படலை விலக்கி கொண்டு ஒரு மனிதன் நின்றிருந்தார். மெல்லிய வெளிச்சத்தில் அவரை பார்க்க முடிந்தது. ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும் தோற்றம். பஞ்ச கச்சம் கட்டி, அங்கவஸ்திரத்தால் உடம்பை போர்த்தி இருந்தார். தலை குடுமியும், நெற்றிப் பொட்டும் அவரை வைதீகர் என்று அடையாளம் காட்டியது. அவரை அழைத்து வா என்று குருஜி கூறவும், நாங்கள் சென்று கூட்டி வந்தோம்.

வந்த வைதீகர், சாஸ்திர முறைப்படி குருஜியை வணங்கினார். அவரும் குருஜியும் சிறிது நேரம், எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், தனது அருகிலிருந்த இரண்டு வாழைபழங்களை எடுத்து, அந்த வைதீகரிடம் கொடுத்த குருஜி சுகமாக சென்று வாருங்கள் என்றார்.. பக்தியோடு பழங்களை பெற்ற அவர், தன்னிடம் இருந்த துணி மூட்டையை அவிழ்த்து, அந்த பழங்களை அதற்குள் வைத்து கட்டப் போனவர் முக்கியமான விஷயத்தை மறந்து போய்விட்டேன் என்று கூறி மூட்டையினுள் கை விட்டு ஐந்து கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்தார். அதை குருஜியின் பாதங்களில் வைத்து விட்டு, இது எனது தாயார் எனக்கு தந்தது. சத்காரியங்களுக்கு கொடு என்று சொன்னார். இப்போது அதை செய்து விட்டேன், நான் வருகிறேன் என்று கூறி புறப்பட்டார்.

சந்தானம் அவர்களிடம் பணத்தை எடுத்து வைக்க குருஜி சொன்னார். சந்தானம் பணத்தை எடுப்பதற்கு முன்னால் அந்த வைதீகரிடம் ஐயா நன்கொடை கொடுத்த உங்கள் பெயரை கணக்கு புத்தகத்தில் எழுத வேண்டும் உங்கள் பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த வைதீகர் எங்களை எல்லாம் பார்த்து அர்த்த புஷ்டியோடு சிரித்த வண்ணம் என் பெயர் ருத்ரமூர்த்தி என்றார். உண்மையில் நாங்கள் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டோம். குருஜியின் வாழ்வில் பலமுறை நேரில் வந்து உதவுகிற இந்த ருத்ரமூர்த்தி யார்? உண்மையில் மனிதரா? அல்லது மனித வடிவில் வரும் தெய்வமா? என்று நாங்கள் ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டோம்.

ஆன்மீக வாழ்வின் ஆரம்ப கால கட்டத்தில் தனக்கு துறவு தீட்சை தருவதற்கு யாரும் இல்லையா? என்று குருஜி வருந்திய போது, அவரை தேடி வந்து அவரோடு தங்கி, மிக நுணுக்கமான, இரகசியமான விஷயங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்து சந்நியாச தீட்சை கொடுத்த குருதேவரின் பெயரும் ருத்ரபரமஹம்சர். இது மட்டுமின்றி ஒவ்வொரு இக்கட்டிலும் துனையாக நின்று, ஆதரவாக காத்து, பறவை ஒன்று தன் குஞ்சை பாதுகாப்பது போல காக்க வேண்டிய பல சந்தர்பத்திலும் ருத்ரன் என்ற திருநாமம் படைத்த மனிதர்களே குருஜியின் வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இங்கே உதாரணமாக காட்டியது ஒன்றிரண்டு ருத்ரமூர்த்திகள் தான். சொல்லப்படாமல் இருப்பது இன்னும் எத்தனையோ! அதனால் தான் நாங்கள் குருஜியிடம் யார் இந்த ருத்ர மூர்த்தி என்று கேட்டோம்.

அதற்கு அவர் இந்த பதிவின் துவக்கத்தில் சொன்ன பதிலை எங்களுக்கு சொன்னார். நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்த பதிலை படித்து பாருங்கள் குருஜியின் வாழ்வோடு கூடவரும் ருத்ரமூர்த்தி யார் என்பது தெளிவாக தெரியும். மனிதன் தெய்வமாக மாறுகிற போது, தெய்வம் மனித வடிவில் வந்து அன்பு காட்டு என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் எங்களுக்கு தேவையில்லை.


                                  குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்

Contact Form

Name

Email *

Message *