Store
  Store
  Store
  Store
  Store
  Store

பாம்போடு தவம் செய்த குருஜி !


யோகியின் ரகசியம்  10


  ங்களுக்கு பிடித்தமான பறவை எது? என்று குருஜியிடம் கேட்டவுடன் சற்றும் யோசிக்காமல் சட்டென்று காகம் என்ற பதிலை சொல்வார். பாடுகின்ற குயிலை ரசிக்கலாம். ஆடுகின்ற மயிலை ரசிக்கலாம். வண்ணமயமான மீன் கொத்தி பறவையை கூட ரசிக்கலாம். காகத்திடம் ரசிப்பதற்கு அப்படி என்ன இருக்கிறது?  ஒற்றைக் கண்ணை வைத்து பார்க்கும் குருட்டு பார்வை, முகம் சுளிக்க வைக்கும். கறுப்பு நிறம். கர்ண கொடூரமான குரல் வளம். இதை தவிர காகத்திடம் வேறு என்ன இருக்கிறது என்று நமக்கு தோன்றும். ஆனால், குருஜி அதற்கு வேறு விதமான விளக்கத்தை தந்து நம்மை வியக்க வைப்பார்.

காக்கா இருக்கிறதே அதுவும் ஆண் காக்கா அதை மதிய நேரத்தில், உச்சி வெயிலில் மரத்து கிளையில் இருக்கும் போது உற்றுப் பார். கீழே கிடக்கும் இரையை கவனிப்பதற்காக தலையை இப்படியும் அப்படியும் திருப்பும் போது அதன் கழுத்து அசையும். அந்த அசைவில் அதன் கழுத்து, கறுப்பிலும் கறுப்பாக வெண்ணை தடவியது போல் பளபளப்பாக மின்னும். அந்த அழகிற்கு ஈடு இணையே கிடையாது. குஞ்சு காகத்திற்கு இரையூட்டும் போதும், சரி பறக்க படித்து (கற்று) கொடுக்கும் போதும் சரி. அதன் கண்களில் தெரிகின்ற பாச உணர்ச்சியை எந்த மொழியிலும் வர்ணனை செய்ய முடியாது. என்று கூறி இது தவிர காகத்திற்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என்று சொல்லி மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துவார் அது என்ன ஒற்றுமை? என்று கேட்டால்

கண்டதை படித்தவன் பண்டிதனாவான் என்று சொல்வார்கள். இதையே என் நண்பர் ஒருவர் கண்டதை படித்தவன் பண்டிதனாவான் கண்டதை தின்றவன் புண்டிதனாவன் என்று விளையாட்டாக சொல்லுவார். காகமும் அப்படிதான் எதையும் விட்டு வைப்பது கிடையாது. பவித்ரமான சைவ உணவாக இருந்தாலும், இரத்தம் சொட்ட சொட்ட கிடைக்கிற மாமிச உணவாக இருந்தாலும் அழுகிப் போன புழுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடும். அந்த விஷயத்தில் காகம் புண்டிதன் என்றால் எதையும் விட்டு வைக்காமல் ஒதுக்கி தள்ளாமல் படிக்க ஆசைபடும் நான் பண்டிதனாவேன் என்று சொல்லி சிரிப்பார்.

இது மட்டுமல்ல காகம் தினசரி இரண்டு வேளை குளித்துவிடும். நானும் அப்படித்தான். கூடியமான வரையில் காகம் உறவுகளிடம் பகையை வளர்த்து கொள்வது கிடையாது. வாழ்க்கை துணையென்று ஒன்று இருக்கும் போது வேறொன்றை நாடுவதும் கிடையாது. பிள்ளைகளை பெறுவதும், வளர்ப்பதும் பெண்களின் வேலை என்று ஆம்பிளைத்தனமாய் பொறுப்பற்று இருப்பதும் கிடையாது. குழந்தைகளை வளர்ப்பதில் ஆண் பெண் இரண்டும் தீவிரமான கவனம் செலுத்தும். காகத்திடமிருந்து நான் ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் பகிர்ந்து செயல்படுவதையும் கற்றுக்கொண்டேன் எனலாம். இதை விட சிறப்பாக சொல்வது என்றால் காகத்தை யாரும் பெரியதாக நேசிப்பது கிடையாது. அதற்காக அது மற்றவர்களின் மீது புகார் கூறுவதும் கிடையாது. நானும் மற்றவர்கள் என் மீது அன்பு பாராட்டுகிறார்களா? இல்லையா? என்பதை பற்றி அக்கறை காட்டுவது இல்லை என்று சுவாரஸ்யமான பதில்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

குருஜி வேண்டுமானால் காக்காவை மட்டும் தனக்கு மிகவும் பிடித்தமான பறவை என்று சொல்லலாமே தவிர, குருஜியை நிறைய ஜீவராசிகளுக்கு பிடித்திருக்கிறது என்பதை நாங்கள் கண்கூடாக பார்த்திருக்கிறோம். நமது ஆசிரமத்திலுள்ள தென்னமரத்தடியில் உட்கார்ந்து மதிய நேரம் காற்று வாங்குவது குருஜிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த நேரம் யாரும் அனாவசியமாக அருகில் செல்வது கிடையாது. மனிதர்கள் வேண்டுமானால் அவர் அருகில் அப்போது இல்லாமல் இருக்கலாமே தவிர அணில், சிறிய குருவிகள் போன்றவைகள் அவரோடு அந்த நேரம் மிக நெருக்கமாக இருக்கும். அவர் கையில் வைத்திருக்கும் காட்டுப்பூ ஒன்றிலிருந்து தேன் உறிஞ்சி குடிக்கும் தேன் சிட்டு ஒன்றை அடிக்கடி காணலாம். அந்த சிட்டிற்கு குருஜியின் மேல் சிறிது கூட பயம் கிடையாது. பூவிலுள்ள தேனை குடிப்பதும் அவர் சட்டை காலரில் அல்லது தலையின் மேல் உட்காருவதிலும் அச்சப்படுகின்ற வேலையே இல்லை. இன்னொரு தேன்சிட்டிடம் பயமில்லாமல் எப்படி உறவாடுமோ அப்படியே குருஜியிடம் உறவாடுவதை இன்றும் காணலாம்.

குருஜியின் நண்பர்கள் வரிசையில் அணில் ஒன்று இருக்கிறது. அவர் கையிலிருந்து மணிலா பயிர்களை ஒன்றொன்றாக வாங்கி கொறிப்பதில் அதற்கு அளவில்லாத சந்தோசம். குருஜியின் உள்ளங்கையில் அது படுத்து கொள்வதும், அதை அவர் தடவிக் கொடுப்பதும் கண்கொள்ளா காட்சியாகும். அந்த நேரத்தில் வேறு யாராவது அருகில் சென்று விட்டால் அணில் ஓடி ஒழிகின்ற வேகம், மின்னலுக்கு இணையானதாக இருக்கும். யாரிடம் காட்டாத அன்பை இந்த விலங்குகள் உங்களிடம் காட்டுகிறதே அது எப்படி என்று குருஜியிடம் நாங்கள் கேட்போம்.

விலங்குகள் என்பது ஐந்தறிவு உடையது. நான் ஆறறிவு பெற்றவன். அவைகளை ஆட்சி செய்வதும், அனுபவிப்பதும் தான் என் வேலை என்ற எண்ணத்தில் அவைகளோடு நீ நெருங்கினால் உன்னிடத்தில் எந்த ஜீவ ராசியும் நெருங்காது. உன் அண்ணனை போல, உன் குழந்தையை போல அவைகளையும் பாவித்து உறவு காட்டி பார். அவைகளின் உணர்ச்சி உனக்கு மிக சுலபமாக தெரியும். மனிதர்கள் மட்டும் தான் மொழியை பயன்படுத்துகிறார்கள். விலங்குகள் பயன்படுத்துவது இல்லை என்று நினைத்தால் நீங்கள் மூடர்கள். விலங்குகளும் பேசும். சக விலங்குகளோடு மட்டுமல்ல மனிதர்களிடத்திலும் அவைகள் பேசுவது உண்டு.  உங்கள் காதுகளுக்கு தான் அந்த மொழிகள் விழுவது இல்லை என்பார்.

அந்த கால ஞானிகளும், ரிஷிகளும், பறவைகளோடும் விலங்குகளோடும் பேசினார்கள் என்று சொல்லப்படுகிறதே அப்படி என்றால் அவைகள் முற்றிலும் நிஜமானது தானா? என்ற கேள்வி எங்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது. மனிதர்கள் விலங்குகளோடு பேசமுடியும் என்றால் கொடிய விலங்குகளிடத்திலும் நல்ல உறவை ஏற்படுத்தி கொள்வது இலகுவாக இருக்கும் அல்லவா? என்ற எண்ணத்தில் குருஜியிடம் பாம்புகளிடத்தில் கூட அன்பை காட்டினால் பேச முடியுமா? என்று குழந்தைத்தனமாக கேட்டோம்.

பாம்புகளை அவ்வளவு சீக்கிரம் நான்கறிவு ஜீவன் என்று முடிவு செய்து விடாதீர்கள். காகத்திற்கும், நமது முன்னோர்களுக்கும் ஆத்மா ரீதியில் மிக நெருங்கிய தொடர்புண்டு. பசுவிற்கும், மனித உயிரின் பரிணாமத்திற்கும் நெருக்கம் உண்டு. சித்தர்களின் கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கும் பாம்புகளுக்கும் உள்ள நெருக்கம், கண்ணுக்கும் இமைக்கும் உள்ள நெருக்கம் போன்றது. அதனால் எதையும் புறந்தள்ளிவிடக்கூடாது. உண்மைகள் நமது கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் நிறைய இருக்கிறது. அதனால் பாம்புகளிடம் நீ அன்பு செலுத்தினாலும் பதிலுக்கு அன்பை கண்டிப்பாக பெறலாம் என்ற பதில் சொன்னார். அவர் சொன்னவற்றில் உள்ள பாம்பு சித்தர் என்ற தொடர்பை எங்கள் கண்ணெதிரே பலமுறை நேரில் பார்த்திருக்கிறோம்.

அப்போது குருஜி தங்கியிருந்த குடில், நாணல் புற்களால் ஆனது. வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். வருடத்தில் பலநாள் அதில் தங்குவார். அருகில் இரண்டு கிலோ மீட்டர் அளவிற்கு மனித வாசனையே இருக்காது. இதனால் அவரை அங்கு தங்க பலமுறை நாங்கள் அனுமதிப்பது இல்லை. எப்படியாவது தடுத்துவிடுவோம். எங்கள் தடுப்புகளையும் தகர்த்துவிட்டு அங்கே தங்குவதில் குருஜிக்கு அலாதியான சந்தோசம் உண்டு. உணவு எடுக்க நாங்கள் வெளியில் சென்று வரும் போது வரலாமா என்று கேட்டு விட்டு தான் கதவை திறக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருப்பார்.

இங்கு உங்களை தவிர வேறு யாரும் கிடையாது. பிறகு எதற்காக வரலாமா என்று கேட்டு விட்டு வர வேண்டும்?  நேராக வருவதில் என்ன தவறு என்று நாங்கள் எப்போதாவது கேட்டால், அப்படி இல்லை. நாங்கள் தியானத்தில் இருக்கும் போது தொந்தரவு செய்தால் நன்றாக இருக்காது அல்லவா என்று ஒரு முறை அவரையும் அறியாமல் ஒரு பதிலை சொல்லிவிட்டார். நாங்கள் என்றால்? உங்களை தவிர இங்கு வேறு யார் இருக்கிறார்? என்று நாங்கள் கேட்டு பார்த்தோம் அவரிடமிருந்து எந்த பதிலும் எங்களால் பெற முடியவில்லை குடிலில் ஒரு மூலையை மட்டும் அர்த்தபுஷ்டியோடு அவர் பார்ப்பதை நாங்கள் உணர்ந்தோம். ஒரு நாள் அந்த மூலையில் சிறிய வளை ஒன்று இருப்பதையும், அதில் நன்கு வளர்ச்சி பெற்ற பெரிய கோதுமை நிறத்தில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதையும் அறிந்த போது நாங்கள் அதிர்ந்து விட்டோம். நாங்கள் பார்த்ததை குருஜியிடம் சொன்னால் எங்களை தவறாக நினைத்து கொள்வார் என்பதனால் அதை வெளிகாட்டவில்லை.

இருந்தாலும் சித்தர்கள், பாம்புகளின் உடம்பிற்குள் உட்கார்ந்து தவம் செய்கிறார்கள் என்ற உண்மையை நேராக அறிந்த போது அதிர்ச்சியால் ஆடிபோய்விட்டோம். குருஜி இன்று பலருக்கும் வழிகாட்ட கூடியவராக இருந்தாலும், அவரை நாங்கள் ஒரு குழந்தை போல பாதுகாத்து வருகிறோம். அவர் ஒரு நாகத்தோடு வாழ்வதை எங்களால் சகிக்க முடியவில்லை நாகமா? சித்தரா? எங்களுக்கு தெரியாது. நாங்கள் மனிதர்கள். எங்கள் பார்வையில் அது கொடிய விஷமுள்ள பாம்பு. அதன் அருகில் உலகத்திற்கு வழிகாட்ட கூடிய ஞானக் குழந்தையை விட்டு வைப்பதும், வைரத்தை குப்பை தொட்டியில் போடுவதும் ஒன்று என்று உணர்ந்தோம். அதனால், கூடியமான வரை குருஜியை குடிலுக்கு வராமல் பார்த்து கொண்டோம். ஒருமுறை நாங்கள் குடிலை மராமத்து செய்வதற்கு முன்னால் வீடியோ படம் எடுத்தோம். அதில் அந்த நாகப்பாம்பும் பதிவாகி இருப்பதை யதேச்சையாக அறிந்து சிலிர்த்து போனோம்.

குருஜியிடம் சித்தர்களை பற்றி கேட்கும் போது, வேறொரு கேள்வியையும் நாங்கள் கேட்பதுண்டு. சித்தர்கள் நாகத்தின் வடிவில் மட்டும் தான் வருவார்களா? வேறு வடிவிலும் வருவார்களா என்று அதற்கு அவர் எனது பாசத்துக்குரிய நண்பர், சனீஸ்வர பகவானின் வாகனம் காக புஜண்ட ரிஷிக்கு ஞானத்தை வழங்கியவர், சீதா ராமர் இருவரின் காதல் விளையாட்டில் உடனிருந்தவர். காகம் இருக்கிறாரே அவர் வடிவிலும் சித்தர்கள் வருவார்கள் என்று மேடைப் பேச்சு பாணியில் எங்களுக்கு பதில் சொல்வார். அந்த பதிலுக்கு பிறகு தான், காகத்தை ஏன் குருஜிக்கு மிகவும் பிடிக்கும் என்பதன் இரகசியம் எங்களுக்கு விளங்க துவங்கியது. இப்போது கூட நமது ஆசிரமத்திற்கு வருபவர்கள் கவனித்திருக்கலாம். குருஜி தங்கியிருக்கும் அறையில் உள்ள ஜன்னலில், மதிய நேரத்தில் காகம் ஒன்று வந்து உட்கார்ந்து ஜன்னல் கம்பிகளை கடகடவென கொத்தி சத்தத்தை ஏற்படுத்துவதை, உனக்கு இன்னும் சாதம் வரவில்லையா? போய் உட்கார் ஏற்பாடு செய்கிறேன் என்று குருஜி சொன்னவுடன், அந்த காகம் பறந்து சென்று மரத்தின் மீது உட்காருவதையும் இன்றும் காணலாம். இதே காகம் பலமுறை குருஜி திருவண்ணாமலை வாயுலிங்கம் பக்கத்தில் சென்று உட்காரும் போது அவர் அருகில் வந்து நெருக்கமாக உட்கார்ந்து இருப்பதையும் குருஜி அந்த காகத்தோடு ஏதோ முணுமுணுவென்று பேசுவதையும் நாங்கள் பார்த்ததுண்டு.

ஞானிகளை எந்த வடிவத்தில் இருந்தாலும் ஞானிகள் அறிந்து கொள்வார்கள் என்பது எங்களுக்கு இத்தகைய சம்பவங்களின் மூலம் சிறிது சிறிதாக விளங்க துவங்கியது.


வீடியோவில் பதிவான நாகபாம்பு 


                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்.


Contact Form

Name

Email *

Message *