Store
  Store
  Store
  Store
  Store
  Store

நம்பியவர்களை காக்கும் குருஜி !


யோகியின் ரகசியம்  8

   குருஜியின் மேல் நம்பிக்கை வைப்பது ஒருவகை. அவர் மீது அளவு கடந்த பக்தி வைப்பது இன்னொரு வகை. இவை இரண்டுமே இல்லாமல் சகலமும் குருஜி தான் தன்னையே சரணாகதி ஆக்கி இருப்பது மற்றொரு சிறப்பான வகை. இப்படி சிறப்பான முறையில் தங்களை குருஜியிடம் சரணாகதி ஆக்கி கொண்டவர்கள் சிலர் உண்டு என்றாலும், அவர்களில் முக்கியமானவர்கள் குருஜியின் மிக நெருங்கிய முதன்மை சீடர்களாகிய கோவிந்தசாமியும் சந்தானமும் எனலாம்.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் குருஜியிடம் சந்தானம் அறிமுகமானார். அதைப்பற்றி குருஜியே பல முறை விளையாட்டாக சொல்லியிருக்கிறார். ஒரு வியாழக்கிழமை என்று நினைக்கிறேன். மாலை நான்குமணியிருக்கும். அப்போது என் உதவியாளாராக இருந்த சண்முக சுந்தரம் என்பவர் திருக்கோவிலூரில் இருந்து உங்களை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். ஆனால், அவர் எனது தந்தையாரின் அச்சுக் கூடத்தில் இருக்கிறார். கண்டிப்பாக வந்து ஒருமுறை பாருங்கள். உங்களைப் பார்க்க வெகு ஆவலோடு இருக்கிறார் என்று சொன்னார்.

என்னை பார்க்க நினைப்பவன் என்னிடமே வந்து என்னை பார்க்கலாமே தவிர உன்னிடத்தில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்க்க என்னை அழைப்பது என்பது, அவன் முதலாளி. நான் தொழிலாளி என்று ஆகிவிடும். நான் கடவுள் ஒருவனை தவிர வேறு எவனையும் என் முதலாளியாக ஏற்றுக்கொண்டதும் கிடையாது. அந்த வகையில் மரியாதை செலுத்தியதும் கிடையாது. எனவே என்னால் பார்க்க வர முடியாது என்று பதில் சொன்னேன். ஆனால், சண்முக சுந்தரம் என்னை விடுவதாக இல்லை. கெஞ்சி கூத்தாடி எப்படியோ அனுமதி வாங்கி விட்டார்.

அன்று நாலரை மணியிருக்கும். சண்முக சுந்தரத்தின் அச்சுக் கூடத்தில் வைத்து சந்தானத்தை பார்த்தேன். என்னை கண்டவுடன் வணக்கம் வைத்து ஏதோ விசாரித்தார். நானும், ஆர்வமே இல்லாமல் பதில் சொன்னேன். பத்து நிமிடம் எங்கள் உரையாடல் நடந்திருக்கும் என்று நினைக்கிறன். திடீரென்று சந்தானம் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ ரகூத்தம சுவாமி மூல பிருந்தாவனதிற்கு செல்ல வேண்டும். எனவே தவறாக நினைக்காதீர்கள் நாளை வந்து உங்களைப் பார்கிறேன் என்று கூறி புறப்பட்டு விட்டார்.

என் கோபம் முழுவதையும் சண்முகசுந்தரிடம் கொட்டித் தீர்த்தேன். இன்னும் சற்று நேரம் ஓய்வு எடுத்தாலும், எடுத்திருப்பேன். அதையும் கெடுத்து, இங்கே கூட்டி வந்தாய். அந்த ஆள் பிருந்தாவனத்திற்கு போகிறானாம். அங்கே போக இருந்தவனுக்கு இங்கே என்ன வேலை. நாளை வருகிறேன் என்று கூறி இருக்கிறான். நாளை ஒருநாள் தான் அனுமதி. அதன் பிறகு, நீ தலை கீழே நின்றாலும் பார்க்க முடியாது என்று கூறினேன். சந்தானம் திரும்ப வரமாட்டார் என்று நம்பிக்கையில் அப்படிச் சொன்னேன். ஆனால், என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. அடுத்த நாள் சொன்னது சொன்னபடி வந்து நின்றார். அன்று வந்தவர் இன்று வரை என்னை விட்டு அகலவில்லை. தன்னை முழுமையாக கடவுளுக்கும், எனக்கும் அர்பணித்து விட்டார் என்று குருஜி சந்தானம்ஜி யின் வருகையை பற்றி கூறுவார்.

குருஜியின் மேல் இத்தனை அபிமானம் சந்தானத்திற்கு ஏற்பட எது காரணமாக இருந்திருக்கும்? சந்தானத்தின் அர்ப்பணிப்பு தன்னையே கொடுத்தது என்றால், டீ கடை ராமு போன்ற வேறு சில அன்பர்களின் அன்பு குருஜிக்காக உயிரே கொடுக்க சித்தமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் குருஜியால் எப்படி ஈர்த்துக் கொள்ள முடிகிறது? அப்படி என்ன சக்தி அவரிடம் இருக்கிறது? பணத்தை கொடுப்பதற்கு குருஜியிடம் எதுவும் கிடையாது. மற்றவர்கள் தான் அவருக்கு கொடுக்க வேண்டும். குருஜியின் மந்திர சக்தியில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றால், தன்னை மிக நெருங்கியவர்களுக்கு குருஜி ஒரு போதும் அனாவசியமாக மந்திரங்களை பயன்படுத்தமாட்டார். கர்மப்படி அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆக வேண்டும். அதை தடுத்து நிறுத்தி, உன் பிறவியின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளாதே என்று கூறிவிடுவார். பிறகு எது இவர்களை எல்லாம் குருஜி பக்கம் இழுக்கிறது?

சந்தானமே அதற்கு எங்களுக்கு தெளிவான பதிலை தந்தார். கடவுளிடம் சென்று பணம் கேட்டால் பணத்தை தருவார். ஆடை கேட்டால் ஆடை தருவார். இப்படி நாம் ஒவ்வொன்றாக கேட்க கேட்க அவர் தனித்தனியாக எல்லாவற்றையும் தந்து கொண்டே இருப்பார். ஆனால் அதே கடவுளிடம் என்னை முழுமையாக நீனே கவனித்து கொள் என்று நம்மை ஒப்படைத்து விட்டால், நமக்கு கவலை இல்லை. எந்த காலத்தில் என்ன தேவையோ அதை கேட்காமலே கடவுள் தருவார். கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் கடவுளும் நம் கண்முன்னே இருக்கும் குருஜியும் எனக்கு வேறு வேறாக தெரியவில்லை. நான் குருஜியிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். என் தேவைகள் என்னவென்று கூட நான் யோசிப்பது இல்லை. எனக்காக அவர் யோசிக்கும் போது, நான் எதற்காக சிரமப்பட வேண்டும்?

இந்த எண்ணம் எனக்கு உடனே வரவில்லை. எத்தனையோ அனுபவங்கள், எத்தனையோ சோதனைகள் அத்தனையையும் சந்தித்த பிறகு தான் சரணாகதியில் உள்ள சுகம் தெரிந்தது. ஒரு முறை ஒரு ஜோதிடரிடம் என் ஜாதகத்தை கொடுத்து என் தாயார் பார்த்திருக்கிறார் உங்கள் பையனுக்கு ஆயுள் தோஷம் இருக்கிறது. வண்டி, வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக போகும்படி சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். எனது தாயாரும் நான் பயணப்படுவதையே தடுத்து விட்டார். இரண்டு சக்கர வாகனத்தை தொடுவதற்கு கூட அவர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில் புதிய சைக்கிள் ஒன்றை என்னிடம் கொடுத்த குருஜி இன்று முதல் இதை பயன்படுத்தி கொள் என்று சொன்னார்.

அம்மா சொன்னபடி வண்டி ஒட்டாமல் இருப்பதா? குருஜியின் எண்ணப்படி வண்டியை பயன்படுத்துவதா? என்று குழம்பினேன். அம்மாவின் பாசத்தை விட குருஜியின் ஞானம் பெரிது. அவர் எதையும் தெரியாமல் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் தினசரி திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூருக்கு சைக்கிளில் வந்து போக துவங்கினேன். ஒரு நாள் திருக்கோவிலூர் செல்லும் வழியில், தேவனூர் மூன்று சந்திப்பு சாலையை கடக்கும் நேரம் இரவு நல்ல இருட்டு திடீரென்று ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. பின்னால் ஒரு லாரியும் வந்து கொண்டிருந்தது. நாய் பாய்ந்த வேகத்தில் தடுமாறி வண்டியோடு லாரியின் பக்கவாட்டில் நான் சாய்ந்திருக்க வேண்டும். அப்படி சாய்ந்திருந்தால் லாரியில் நான் அடிப்பட்டது அந்த ஓட்டுனருக்கும் தெரிந்திருக்காது. என் உடல் முழுவதும் நசுங்கி போயிருக்கும்.

அந்த நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. என் மேல் பாய வந்த நாய் திசை மாறி லாரியின் சக்கரத்தில் போய் விழுந்தது. நான் எதிர் திசையில் விழ போனவன் யாரோ பின்னாலிருந்து என் தோள்பட்டையை வேகமாக பிடித்து இழுப்பது போலவும், மிக நெருக்கமாக மூச்சு விடுவதை போலவும் உணர்ந்தேன். இந்த நிதானிப்பு என்னை சுதாகரித்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது. கால்களை பேலன்ஸ் செய்து நின்றுவிட்டேன். விநாடி நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவம் என் இதய துடிப்பை அதிகரித்தது. மயக்கம் வருவது போல கண்கள் இருண்டு கொண்டு வந்தது.  இருப்பினும் இறுக மூடி மீண்டும் கண்களை திறந்து பார்த்தேன். என் முகத்திற்கு அருகாமையில் குருஜியின் வட்ட வடிவ முகம் இருப்பதை பார்த்தேன். அது எனக்கு அதிசயமாகவோ, அதிர்ச்சியாகவோ படவில்லை. ஆறுதலாக இருந்தது. அந்த இடத்திலே உட்கார்ந்து விட்டேன். இரண்டு நிமிடம் கழித்து கண்ணை திறந்து பார்த்தால், என் மீது மோத வந்த நாய் உருக்குலைந்து நசுங்கி போய் கிடந்தது. எனக்காக நாய் உயிரை விட்டிருப்பதை உணர்ந்தேன். பிறகு வீட்டிற்கு சென்று யாரிடமும் எதுவும் சொல்லாமல் உறங்கிவிட்டேன்.

காலையில் வழக்கம் போல் ஆசிரமதிற்கு சென்றவுடன், குருஜி கேட்டார். என்னப்பா சந்தானம் சைக்கிளில் சர்க்கஸ் எல்லாம் செய்கிறாய் போலிருக்கு எதையும் சொல்லிவிட்டு செய். சொல்லாமல் செய்தால் சிரமமாக இருக்கும் அல்லவா என்று கூறி சிரித்தார். குருஜியின் திறன் எனக்கு புரிந்தது. அவர் எங்கே இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தான் யார் மீது அன்பு வைத்திருக்கிறாரோ அவரை காப்பாற்றுவார். அவருக்காக எத்தனை சிரமங்களையும் தாங்கி கொள்ள சித்தமாக இருப்பார் என்பது புரிந்தது. அப்படிபட்ட சர்வ சக்தி வாய்ந்த ஒரு மகானிடம் பிச்சைக்காரன் போல் அவ்வப்போது யாசகம் கேட்பது தவறல்லவா? அதனால் தான் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன் இனி எனக்கு கவலை இல்லை.

என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தால், குருஜியின் கரங்கள் துடைக்கும். என் கால்களில் முள் தைத்தால் குருஜியின் கரங்கள் பறித்தெடுக்கும். நான் கல்லிலும், முள்ளிலும் நடந்தாலும் என் பாதங்களில் இரத்தக் கசிவு இல்லாமல் குருஜி என்னை நடத்திச் செல்வார். எனக்கு துயரம் இல்லை. துன்பமில்லை. காரணம் குருஜி எனக்கு தருவதெல்லாம் ஆனந்தமும், நம்பிக்கையும். மலையளவு துயரம் வந்தாலும் அதை தாங்கும் சக்தி எனக்குள் வளர வைத்திருப்பது குருஜி. வன் புலி தாக்க வந்தாலும் கூட குருஜியின் மீது நான் கொண்ட நம்பிக்கை புலியை பூனையாக்கிவிடும் என்று கண்கள் பிரகாசம் அடைய சந்தானம் கூறியது எங்கள் நெஞ்சில் இன்றும் அழியாத ஓவியமாக இருக்கிறது.

சந்தானத்தின் வாழ்வில் மட்டும் தான் இத்தகைய அதிசயங்கள் நடந்திருக்கிறது என்றில்லை. குருஜியை இதுவரை நேரில் வந்து பார்த்தே இராத பலருக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் நடந்திருப்பதை நாங்கள் நன்றாக அறிகிறோம். அப்படிப்பட்ட தொலைபேசி செய்திகள் தினசரி ஒன்றோ இரண்டோ ஆசிரமத்திற்கு வந்து கொண்டே இருக்கும். இலண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இருப்பவர்கள் கூட இத்தகைய அபூர்வ சம்பவங்களை இன்றும் அனுபவித்து இருக்கிறார்கள். குருஜியை முழுமையாக நம்பினவர்களை மட்டும் தான் கரையேற்றுவார். மற்றவர்களை பற்றி அவருக்கு கவலை இல்லையா? என்று நமக்கு சந்தேகம் வரக்கூடும் அதற்கு குருஜியின் தலைமைச்  சீடர் கோவிந்த சாமி சொல்லுகின்ற பதிலை இங்கே சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

சூரிய வெளிச்சம் எல்லோருக்கும் பொதுவானது. தன்னை வணங்குபவர்களை மட்டும் சூரியன் காப்பது இல்லை. வணங்கவே தெரியாத பூச்சி புழுக்களை கூட சூரிய வெளிச்சம் காப்பாற்றுகிறது. குருஜியியும் அப்படி தான். அவரை எதிர்த்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் என்ற பாகுபாடு கிடையவே கிடையாது. ஒரு முறை குருஜியை என் முன்னால் ஏக வசனத்தில் பேசிய ஒருவரை பார்த்து நான் கோபப்பட்டேன். ஆனால், அதை தடுத்த குருஜி அவன் என்னை எப்படி சொன்னாலும் அவைகள் வெறும் வார்த்தைகளே நீயேன் வார்தைகளை கவனித்து விசனப்படுகிறாய். அவன் மனதை தூயதாக மாற்றும் போது நம்மை பற்றிய தெளிவு வரும். அதையும் நீ பார்ப்பாய் என்று சொல்வார். அன்று குருஜியை தவறான வார்த்தையில் அழைத்த மனிதன் ஒரு வருடத்தில் குருஜியிடம் வந்ததையும் குருஜி அவனுக்கு தொல்லை கொடுத்த நோய் ஒன்றை அக்கறையோடு குணப்படுத்தியதையும் பார்த்தேன். அதன் பிறகு தான் குருஜியின் பக்கம் சாராத தன்மை எனக்கு புரிந்தது என்பார்.

பல நேரங்களில், நமது ஆசிரமத்திற்கு வருகின்ற தொலைபேசி அழைப்புகளில் பலரின் துயரங்கள் வார்த்தையில் வர்ணிக்க முடியாத அளவிற்கு கொப்பளிக்கும். தங்களது துக்கங்களை, குருஜியிடம் நேரடியாக முறையிட்டே தீரவேண்டும் அவர்கள் துடிப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் எத்தனை ஆறுதல் சொன்னாலும் மனது கேட்காது. அவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொண்டால் நேராக குருஜியிட பேசவேண்டுமென்று அடம்பிடிக்க மாட்டார்கள்.

பேசத்தெரியாத குழந்தை அழுகிற விதத்தை வைத்தே அது இன்ன காரணத்திற்க்காக அழுகிறது என்று தாயார் கண்டுபிடித்து விடுவாள். தாய்க்கு ஒரு குழந்தை மட்டும் தான். குருஜி போன்ற மகான்களுக்கு ஆயிரக்கணக்கில் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் அழுகை சத்தமும் அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். தன்னை நம்பி தன்னிடம் பிரார்த்தனை வைத்து சிந்துகிற ஒவ்வொரு சொட்டு கண்ணீரையும் அவரது கரங்கள் நீங்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் துடைத்துவிட தயாராக நீண்டு வரும். நீங்கள் அவரிடம் நேராக சொன்னால் மட்டும் தான் அவருக்கு புரியும், தெரியுமென்று நினைத்தால் அது குழந்தைத்தனமானது. ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் குருஜியை மனதால் நினைத்து உங்களது குறைகளை சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் அழைக்காமலே அவர் உங்கள் அருகில் இருப்பதை கண்டிப்பாக உணர்வீர்கள்.

உண்மை தானே தண்ணீர் தாகத்தை மட்டும் தான் தணிக்கும். அதை நாம் அடக்கி வைக்கிறோமோ மிதிக்கிறோமா விஷமாக மாற்றுகிறோமா என்பதை பற்றியெல்லாம் அதற்கு கவலை இல்லை. அதன் வேலை தாகத்தை தணிப்பது உயிர்களை தழைக்க வைப்பது நமது நாட்டை பொருத்தவரை அன்று முதல் இன்று வரை வாழ்ந்த, வாழுகிற ஞானிகள் அனைவருமே தண்ணீரை போல தாகம் தணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். நம்மை போன்ற சாதாரண மனிதர்களால் தான் புனிதமான கங்கையும் அழுக்காகி விடுகிறது.




                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்


Contact Form

Name

Email *

Message *