Store
  Store
  Store
  Store
  Store
  Store

தேரில் வரும் அழியாத தேவதை

      வெள்ளச்சிப்பாட்டி இன்னும் உயிரோடு இருக்கிறது என்ற செய்தியே எனக்கு அதிசயமாகப் பட்டது.

இருபது வருடத்திற்கு முன் நான் பார்க்கும் போதே வாயெல்லாம் பொக்கையாகி தோல்சுருங்கி எலும்பு வளைந்து தட்டுத் தடுமாறி நடமாடிய பாட்டி எப்போதோ சிவலோகத்திற்கோ வைகுண்டத்திற்கோ போயிருக்கும் என்று நினைத்திருந்தேன்

ஆனால் நேற்று ஊருக்கு வந்து இரவில் வனஜா அக்காவிடம் ஊர் விஷயங்களை பேசிக்கொண்டிருந்த போது எதேச்சையாக கேட்டேன் வனஜாஎன் ஒரே தமக்கை உள்ளுரிலேயே வாக்கப்பட்டிருந்தாள்

""நம்ம வெள்ளச்சிப் பாட்டி மகன் எப்படி இருக்கிறான் பழைய மாதிரியே குடியும் கும்மாளமுமாய் தான் வாழ்க்கையை ஓட்டுகிறாரா இல்லை நிதானப் பட்டிருக்கிறாரா'' என்று

அதற்கு  வனஜா சொன்ன பதில்தான் என்னை ஆச்சரியப்பட வைத்தது ""ஐய அந்த ஆள் குடிச்சே குடல்வெந்து செத்துப் போனார்

பாவம் பாட்டித்தான் இப்போ மருமக கையிலும் பேரப்பசங்களிடத்திலும் மாட்டிக்கிட்டு அல்லாடுது'' என்று வருத்தத்துடன் சொன்னாள்

""என்னது அந்தப் பாட்டி இன்னும் இருக்கா? நான் முன்பு பார்க்கும் போதே எம்பது வயசை தாண்டி இருக்குமே?

இப்போ நூறு வயசுன்னா கண்தெரியுமா நடக்க முடியுமா புத்திதான் நிதானத்தில் இருக்குமா?

ஐயோ பாவம்! ஒருகாலத்தில் ராணிமாதிரி நடந்தவங்க இன்னைக்கு மூத்திரம் போகக்கூட வேறொருத்தரை எதிர்பார்க்க வேண்டியிருக்குமே'' என்று உள்ளத்தில் தேன்றியதை படபடவென கேட்டுவிட்டன்.

    என் படபடப்பிற்கு காரணம் உண்டு எங்க அம்மாவிற்கு ஐந்தோ ஆறோ வயசிருக்கும் போதுதான் வெள்ளச்சிப் பாட்டி கல்யாணம் முடிஞ்சி எங்க ஊருக்கு வந்தாங்களாம்

அப்போ அவங்க அழகுன்னா அழகு அப்படியோர் அழகாம் அம்மா சொல்லுவாங்க

"" என் வயசுக்கு அப்படியோரு அழகை பார்த்ததில்லை செக்கச் சேவேல்னு ஒரு நெறம் வெத்தலை போடாமலே கோவப்பழம் மாதிரி செவந்த உதடு

காதுல பாம்படம் பூடியும் கர்ணப்பூவும் கழுத்துல உக்கூட்டும் கால்ல தண்டையோடவும் தெருவுல நடந்து போனா திறந்த வாயை மூட மாட்டாளுக தெரு பொம்பளைங்க

தளவாரம் சேலையை கரண்டைக்கால் வரையும் கட்டிக்கிட்டு நடப்பாள் பார் ஒருநட அந்த நடக்கி மகாராணிங்கல்லாம் பிச்சைக் கேக்கனும்.

நீங்க எல்லாம் அந்தம்மா வீட்டுக்காரரை பார்த்ததில்லை ஆளு நெகுநெகுன்னு ஒசரமா இருப்பாரு கதவுமாதிரி அவர் முதுகு பரந்து விரிஞ்சி இருக்கும் இரண்டுபேரு அதுல படுத்து தூங்கலாம்

அவர் முகத்திலும் சரி நடையிலும் சரி அப்படியோரு கம்பீரம் தெரியும் ஆளு ஆனா சுத்தக் கருப்பு இவுக ரெண்டுபேரும் ஜோடியா போரதை பார்த்து எங்க ஐயா (அப்பா) காக்கா எலும்பிச்சை பழத்தை கொத்திக்கிட்டு போரமாதி இருக்குன்னு கிண்டலடிப்பார்.""

இப்படி அம்மா சொல்லும்போது என் கற்பனை விரியும் மான்கள் இழுத்துச் செல்லும் தேரில் மேகக்கூட்டத்திற்குள் வெள்ளச்சிப்பாட்டி தேவதை மாதிரி போரதாக எனக்குத் தோன்றும்

    அம்மாவிடம் மீண்டும் கேட்பேன் ''அந்த கம்பீரமான தாத்தா என்ன ஆனார்?"" அம்மாவிடமிருந்து நீளமான பெருமூச்சு வரும்

'' நல்ல திடகாத்திரமான மனுஷன் அவரு எந்த நேரமும் எதாவது வேலை செஞ்சிகிட்டே இருப்பாரு ஒருநாள் வயலுக்கு போயி வந்தவரு கலப்பையை சுவத்தில சாஞ்சி நெஞ்சப் பிடிச்சி உக்காந்திருக்கார் அவ்வளவுதான் கதை முடிஞ்சி போச்சு
.

வெள்ளச்சி அன்னைக்கு வெள்ளப் புடவைக் கட்டினா விதவிதமா அலங்கரிச்சவ அதுக்கு பிறகு தலையைக்கூட வாரிக்கலை''

பத்து வயதிலேயே அந்தக்கதையை கேட்கும் போது என் மனதை யாரோ பிசைவது போலிருக்கும் நன்றாக வளர்ந்த ரோஜாச் செடியை பிடுங்கி நெருப்பில் போட்டது மாதிரி ஒரு தோற்றம் கண்களுக்குள் தோன்றி மறையும்

இனம்புரியாத ஒரு பச்சாதாபம் வெள்ளச்சி பாட்டியின் மீது ஏற்படும். ஆனாலும் என் பிள்ளைப்பிராயக் கனவில் அடிக்கடி வெள்ளச்சிப்பாட்டி மான்கள்தேரில் போவார்கள்

அம்மா சொல்லுவதை வைத்துப்பார்த்தால் அந்தப்பாட்டி வாழ்க்கை முழுவதும் சோகத்தில்தான்  கழித்திருக்க வேண்டும் இளமையே கரையாத வயதில் குஞ்சும் குறும்பானுமாய் பிள்ளைகள வைத்துக் கொண்டு ஒரு தனி மனுஷி அந்தக்காலத்தில் வாழ எத்தனை கஷ்டத்தை அனுபவித்திருக்க வேண்டும்?


ஆனால் அப்படி சிமப்பட்டதற்கான அறிகுறி எதயும் காணவே முடியாது


     என் பாட்டி வீட்டுக்கு பக்கத்து வீடுதான் வெள்ளச்சிப்பாட்டி வீடு. அந்த வீட்டுக்குள் இருந்து எப்போதும் அவுங்க குரல் சத்தமா கேட்டுக்கிட்டே இருக்கும்

அதை எடு இதை செய் இன்னுமா முடிக்கல என்று அதிகாரக் கட்டளைகள் பறந்துக் கொண்டே இருக்கும்

வெள்ளைச் சேலைய வரிந்துக் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி களைபறிப்பதும் பனை மட்டைகளை வெட்டி படலைக்கட்டி வேலி அடைப்பதும் தோட்டத்திற்குள் நுழைந்த ஆடுகளை துத்துவதும் ஆட்டுச் சொந்தக்காரர்களை சரமாரியாக கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும் அன்றாடம் நடந்துக் கொண்டே இருக்கும்

நான் கூட நினைப்பேன் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் இந்தப்பாட்டிக்கு மட்டும் எப்படித் தெரியுமென்று அத்தனையும் புதிதுபுதிதான அசிங்கமான வார்த்தைகள்.

ஒருமுறை பாட்டியின் மகளை ஊட்டியார் மகன் தங்கராஜ் கிண்டல் செய்து விட்டானாம் அதற்கு அவன் வீட்டுக்கே போய் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே பச்சைபச்சையாய் திட்டிவிட்டு வந்துவிட்டது பாட்டி.

பாட்டி சண்டை போடும்போது தங்கராஜ் வீட்டில் இல்லையாம் விஷயம் தெரிந்து அவன் நன்றாக கள்ளுகுடித்துவிட்டு தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வீட்டு முன்னால் வந்து கைகளை உயர்த்தி உயர்த்தி வெள்ளச்சி மாதியே கெட்ட வார்த்தைகளில் பேசினான்

அவன் பேசிய பேச்சு பல எனக்கு மறந்து விட்டாலும்""அடியே வெள்ளச்சி கொடி கட்றியாடி கொடி வண்டிமலையான் கொன்டையில கட்டுடீ'' என்பதை மறக்கவே முடியாது

அவன் இப்படிச் சொன்னதுதான் தாமதம் வீட்டுக்குள் இருந்து புயல் மாதி பாட்டி வெளியில் வந்தாங்க வந்த வேகத்தில் அவன் உச்சி முடியை பிடித்து கீழே தள்ளினாங்க


அவன் மல்லாந்து விழுந்தான் விழுந்தவன் நெஞ்சி மீது அவுங்க மிதித்த மிதி இப்போக்கூட நெனைச்சா உடம்பு நடுங்கும்.

மஹிஷா  சூரமர்த்தினியைப் பற்றி இப்போது படித்ததை அப்போதே நேரில் பார்த்து விட்டேன் ஆக்ரோஷம் வந்தால் ஒருபெண் எப்படி பத்திரக்காளியாக மாறிவிடுவாள் என்பதற்கு அந்தக் காட்சியே சரியான உதாரணம்.

    அந்தச் சண்டைக்கு பிறகுதான் அவுங்க வீட்டுக்காரர் பெயர் வண்டிமலையார் என்பது எனக்குத் தெயும் அந்தத் தாத்தாவின் போட்டோவை பார்க்க ஆசைப்பட்டு வெள்ளச்சிப் பாட்டியிடம் கேட்டிருக்கேன்

அதற்கு'' போட்டோ எடுத்தா ஆயுசு கொறைஞ்சிரும்ன்னு தாத்தா எடுக்கவே இல்லை அவரு எல்லா விஷயத்திலேயும் ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாரு இப்பத்தைய ஆளுங்க மாதிரி எடுத்தேன் கவுத்தேன்னு ஒன்னும் செய்யமாட்டாரு"" என்று பெருமையாக சொல்வார்கள்

பாட்டியின் இந்த விளக்கம் என் சின்ன மூளைக்கு புரியவே இல்லை அதனால் பாட்டியிடம் '' போட்டோ எடுக்கலைன்னாலும் தாத்தா சின்ன வயசிலேதானே செத்துப்போனாரு"" என்று கேட்டு விட்டேன்

உடனே பாட்டிக்கு கோபம் வந்து முறைச்சி பார்த்து '' மொழைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள பேசுரபேச்சப்பாரு"" என்று வெடுக்கென போய்விட்டார்கள்

இப்படித்தான் பாட்டியிடம் யாரு எதிர்கேள்வி கேட்டாலும் கோபம் வந்துவிடும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுஅவர்களை எப்போதுமே முறைக்கும்

பார்க்கும் போதெல்லாம் ''இவன் சுத்தமடயன் எக்குத்தப்பாத்தான் பேசுவான்""என்று விமர்சிக்கும்

அப்படி அவர்களின் விமர்சனத்தில் மாட்டிக் கொண்ட பலரில் நானும் ஒருவன்

சின்ன வயசில் பாட்டிக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது பார்க்கும் போதெல்லாம் திட்டி துரத்தி விடும் அவர்கள் பார்வையில் நான் ஒரு துஷ்டப் பையன் எல்லாவற்றையும் ஏறுக்குமாறா செய்யும் போக்கிரி.

எனக்கு ஒரு பதினெட்டு வயசிருக்கும்  ராஜேஷ்வரி அக்கா மகளோடு சும்மா பேசிக் கொண்டிருந்த போது பாட்டியின் கண்ணில் பட்டுவிட்டேன்

உடனே அந்த அக்காவை பார்த்து ""உன் மகளை அந்தப்பையனோடு பேசவேண்டாமென்று சொல்லு அவன் ஒருமாதிரி் பட்டவன் பொண்ணு மனசை கெடுத்தாலும் கெடுத்து விடுவான்'' என்று சொல்லியிருக்கிறார்கள்

அதை ராஜேஷ்வரி அக்கா என்னிடம் சொல்லி சிரியாய் சிரித்தார்கள் பாட்டிக்கு என்மேல் தப்பான அபிப்பிராயம் இருந்தாலும் அவர்கள்மேல் எனக்கு கோபம் எப்போதுமே வந்தது கிடையாது

நான் முதுகலை படிப்பை முடித்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாரான விஷயம் ஊர்முழுவதும் நெருப்பாய் பற்றிக்கொண்டது

இன்னார் மகன் கலைட்டெருக்கு படிக்கிறானாம் என்று சொல்லி சந்தோஷப்பட்டவர்கள் பாதிப்பேர் பொறாமையில் புழுங்கியவர்கள் பாதிப்பேர்

வெள்ளச்சிப்பாட்டியிம் சேதி போனதும் கூப்பிட்டு கேட்டார்கள் நீ கலைட்டெருக்கு படிக்க போறியாமே?''என்று

""ஆமாம் பாட்டி'' என பணிவாகப் பதில் சொன்னேன்

'' அப்போ நீ முன்னாடி படிச்சதெல்லாம் என்னாவது?'' என்றார்கள்

""அந்தப்படிப்பும் இருந்தால்தான் இதைபடிக்க முடியும் பாட்டி'' என்று எவ்வளவோ விளக்கினேன்

அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை ""நீ விவரம் தெரியாதவன் இந்தப்படிப்பை முதலிலேயே படிச்சிருக்கலாம் அப்பன்காரன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை வீணாக்கிறதே உன்வேலை'' என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள்

பாட்டியிடம் மறுப்பு பேசுவதைவிட மௌனம் சாதிப்பதேமேல் என இருந்துவிட்டேன்

பள்ளிக்கு போய்வரும் வழியில் டவுனில் கறிகாய் வாங்கிவரச் சொல்வார்கள் சில நேரங்களில் அரிசி மூட்டையை ஏற்றிவர சொல்வார்கள்

அதையெல்லாம் தட்டாமல் செய்தால் கூட பாட்டியிடமிருந்து சின்னதாக ஒரு நன்றியை எதிர்பார்க்க முடியாது "" சரி சரி செய்த வரையும் போதும்போ'' என்ற ரீதியில்தான் பார்வையை வீசுவார்கள்

அவர்கள் அந்தப்பார்வையே கூட எனக்கு சந்தோஷத்தைதான் தரும் அதற்கு காரணம் என்னவென்று இதுவரை எனக்கு தெரியாது நானும் அதைப்பற்றியெல்லாம் யோசித்தது இல்லை

என்னிடமென்றில்லை நிறையபேரிடம் பாட்டி நடந்து கொள்ளும் விதமே அப்படித்தான் இது பலருக்கு பிடிக்காது  அப்படி பிடிக்காதவர்கள் எல்லோரும் அவர்களை வாயாடி என்றும் வலுச்சண்டைக்கு இழுப்பவள் என்றும்  காதுபடாமல் முனுமுனுப்பார்கள்

இந்த சமாச்சாரம் வெள்ளச்சிக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் ஊரே இரண்டுபட்டு விடும்

ஆனால் அவர்களை அப்படியொன்றும் குறை சொல்லிவிட முடியாது தனது கருத்துக்கு ஒத்துவராதவர்களை அர்த்தமே இல்லாமல் வெறுப்பார்களே தவிர மற்றவர்களுக்கு விழுந்து விழுந்து உதவிப் பண்ணுவார்கள்

சரோஜினி அக்காவின் அம்மாவிற்கு சின்ன வயசிலேயிருந்து பெறுநோய் கைகால்கள் எல்லாம் புண்ணுவந்து அழுகிப்போய் நாற்றம் வயிற்றைக் குமட்டும்

அந்தம்மாவை கடேசிக்காலத்தில் யாரும் ஒழுங்காக கவனிக்காமல் தின்ணையில் ஒதுக்கி விட்டார்கள் புண்நாற்றத்தோடு மலமூத்திர வாடையும் சேர்ந்து நெஞ்சை அடைக்கும் வெள்ளச்சிப்பாட்டிக்கு அதுவெல்லாம் ஒருபொருட்டே அல்ல!

மூக்கில் துணிகூட கட்டாமல் அந்தம்மாவை தூக்க துடைக்க செய்யும் புண்களை கழுவி சுத்தமாக்கி மருந்து போடும் துணிமாற்றி விடும் தன்வீட்டிலிருந்தே சாப்பாடு கொண்டுபோய் ஊட்டிவிடும்

அந்கக்கிழவி செத்தப்போது வெள்ளச்சி வைத்த ஒப்பாரி சத்தம் கேட்டவர்களின் வயிற்றையல்லாம் ஒரே கலக்காக கலக்கியது இன்னும் ஞாபகத்தில் இருக்கு.

தனக்கு வந்த பெரியகஷ்டத்தக் கூட துச்சமென கருதிவாழ்ந்த ஒருபெண்ணிற்குள் சதாசர்வகாலமும் சண்டையிடுவதையே பொழுது போக்காக கொண்ட மன இயல்புடைய ஒரு ஜீவனுக்குள் இப்படியும் ஒருபாச ஊற்று பொங்கி பிரவாகமாக பாய்ந்தோடும் என்பதை ஊரே அன்று கண்ணாரக் கண்டு வாயடைத்து நின்றது

     தெருவில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் வெள்ளச்சிப்பாட்டியை அவர்களின் சண்டைக்கோழி இயல்பிற்கு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டும்

ஆனால் அப்படி ஒதுக்காமல் இருந்ததற்கு இப்படி சில காரணங்களும் உண்டு இதுமட்டுமல்ல பாட்டியின் உதவி பல நேரங்களில் மக்களுக்குத் தேவையாய் இருந்தது

குழந்தைகளுக்குவயிற்று உப்பசம் மாந்தம் குடல் ஏற்றம் என்று வந்தால் பாட்டித்தான் சிறந்த டாக்டர்.கால்களை நீட்டி குழந்தைகளை மல்லாக்கா கிடத்தி பூனைக்குட்டிய வருடுவதுபோல் தடவி விட்டு வலிக்காமல் வயிற்றை திருகி விபூதி பூசிவிடுவார்கள்

சீக்குக் கோழி மாதிரி சுருண்டு கிடக்கும் குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் குதிரைக்குட்டி மாதிரி சுறுசுறுப்பாகி விடுவார்கள்.

கிராமங்களில்""கொரி''(கண்திருஷ்டி) விழுதல் சர்வசாதாரண விஷயம் சாப்டும் போது துஷ்டக்கண் உடையவர்கள் பார்த்தால் கொரி விழுந்து விடுமாம்

அப்படி விழுந்தால் வயிற்றை திருகித் திருகி வலிக்கும் நுங்கும் நுரையுமாய் வயிறு கழியும் எந்தமருந்து சாப்பிட்டாலும்  பயனிருக்காது கொரிக்கு பார்த்து மந்திரித்தால்தான்  வலியும் பேதியும் சரிவரும் மருந்து மாத்திரைகள் சரிவரக்கிடைக்காத அந்தக் காலத்தில் இதேப்போல் ஏராளமான நம்பிக்கை வைத்தியங்கள் உண்டு

இப்போது கூட நம்பிக்கைகள்தான் முக்கால்பங்கு நோயை குணப்படுத்துவதாக நல்ல மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் எனக்குக்கூட அப்படி ஒருமுறை கொரி விழுந்து விட்டது

வனஜாதான் பாட்டியிடம் என்னைத் தூக்கிப் போனாள் பாட்டி என்னை மடியில் வைத்து தலையைத் தடவிக் கொடுத்ôர்கள் சட்டையை தூக்கி வயிற்றில் திருநீறு பூசி குசுகுசுவென மந்திரம் ஜெபித்தார்கள் நிறைய முறை கொட்டாவி விட்டார்கள்

பிறகு முதுகில்தட்டி ""போடாப் பயலே எதையும் மறைச்சித்தின்னு''என்று அனுப்பி விட்டார்கள்

வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் வலியெல்லாம் போயே போச்சி பாட்டியை பற்றி வீட்டில் எல்லோரும் பெருமையாக பேசினார்கள் ஆனால் யாருமே நான் முந்தைய இரவில் மாங்காயில் உப்புமிளகாய் தடவி ஏகமாய் சாப்பிட்டதினால்தான் வயிற்று வலிவந்திருக்கும் கொரிக்குப் பார்கும் முன்பு காலையில் வெறும்வயிற்றில் வெந்தையத்தண்ணீர் குடித்ததனால் கூட சுகமாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே இல்லை

எனக்குமட்டும் அந்த நினைப்பு இருந்ததா என்ன? பாட்டியின் தேவை இப்படி பலவாறு இருந்ததனால் அவர்களின் கெட்ட வார்த்தைகளும் வசவுகளும் கஷ்டமாகத் தெரிவதே இல்லை

இந்தமாதிரியெல்லாம் இருந்தப்பாட்டி இப்போது எப்படி இருப்பார்கள்? நினைத்துப் பார்க்கவே பதபதைப்பாய் இருந்தது

"" நாளைக்கு காலையில் வெள்ளச்சிப் பாட்டியை பார்க்க போகலாமா?'' என்று வனஜாவிடம் கேட்டேன்

அவளும் ""சரி பார்க்கலாம்'' என்று சொல்லி விட்டு வேறு ஏதேதோ ஊர் விவகாரங்களை பேசினாள்

அவள் சொன்ன விஷயங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை கம்பீரமாய் நடந்தவர்கள் முட்டுத்தேய்ந்து முடங்கி இருப்பார்கள் பகலா இரவா எனத்தெரியாத அளவிற்கு கண்பார்வை மங்கி இருக்கலாம்

உடுத்தத் துணி அவிழ்ந்துப் போனால் கூட எடுத்துக் கட்டுவதற்கு கைகளில் தெம்பு குறைந்து போயிருக்கும் தும்பைப்பூவாட்டம் வெள்ளை வெளேர் எனக்கட்டும் புடவை துவைத்துக் கொடுக்க ஆளில்லாமல் மாற்றிக்கட்ட வகையில்லாமல் அழுக்காகி பழுப்பேரி சீலைப்பேன் பிடித்து கிடக்கலாம்

தினம்தினம் குளித்து  துளி அழுக்குக் கூட ஒட்டாமல் இருந்த உடம்பு தன்னை அறியாது போகும் இயற்கை உபாதைகளால் நாற்றமடித்து யாரும் நெருங்கவே முடியாதவாறு இருக்கலாம்

நாலுபேருக்குச் சமைத்துப்போட்டு தானும் விதவிதமாய் ருசிப்பார்த்து இளைப்பாரிய வயிறு ஒருபிடி சோற்றுக்கு கெஞ்சி கொதித்து சுறுங்கி அடங்கிப்போய்யிருக்கலாம்

இப்படியெல்லாம் நினைவுகள் பெருகப்பெருக நெஞ்சு அடைத்து கண்களில் நீர்முட்டிக் கொண்டு வந்தது
   அர்த்தமே இல்லாமல் நானும் வருங்காலத்தில் அப்படியாகி தின்ணை ஓரமாக முடங்கிக் கிடப்பதாக ஒரு கற்பணை தோன்றி பயமுறுத்தியது

இன்னும் ஏதேதோ விபரீத எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முளைத்து இரவு உறக்கத்திற்கு தண்ணீர் தெளித்தது எப்போதடா விடியுமென காக்க வைத்து பொழுதும் புலர்ந்தது.

உறங்காத கண்களின் எரிச்சல் குளித்துப் அடங்கவில்லை அம்மா கொடுத்தகாலை உணவை பாதி சாப்பிட்டு வனஜா வீட்டிற்கு வந்தேன்

இந்த நேரத்தில் என்னை அவள் எதிர்பார்க்க வில்லை என நினைக்கிறேன் மாட்டுத் தொழுவத்தில் கன்றுக்குட்டிகளை பிடித்துக் கட்டிக் கொண்டிருந்த அவள்

"" அடடே காலங்காத்தாலே வந்துட்டியா வா வா அப்படி உட்கார்'' என தொழுவத்தில் ஒரு திண்டைக் காட்டினாள்

""உட்காருவதெல்லாம் இருக்கட்டும் வெள்ளச்சிப் பாட்டியை பார்க்கலாம் புறப்படு'' என்றேன்""ஓ...! மறந்தே போயிட்டேன் நேற்றே சொன்னியே... இரு இரு இதோ வந்துடுறேன்''

என்று வீட்டிற்குள் போனவள் சற்றுநேரத்தில் திரும்பி வந்து "" கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ஸ்கூல் பஸ் இப்போ வந்துடும் பிள்ளைகளை அனுப்பி போனா கொஞ்சம் நிதானமா நின்று பாட்டியை பார்க்கலாம்'' என்பதை சொல்லி விட்டு என்பதிலுக்கு காத்திராமல் வேலையை கவனிக்க போய்விட்டாள்

இந்த மாதிரி பதிலை என் அலுவலக பணியாளர்கள் சொன்னால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை சிந்தித்துப் பார்த்தேன் முகமெல்லாம் கடுகடுத்து குரல் தடிப்பாகி அவர்களை உண்டு இல்லைன்னு ஆக்கியிருப்பேன்

ஆனால் இவர்கள் பணியாளர்கள் இல்லை சொந்த பந்தங்கள் இங்கே நமது அதிகாரத்தை காட்டமுடியாது 

இதை பலபேர் புரிந்துக் கொள்வதில்லை சின்ன சின்ன வார்த்தைகளோடு மல்லுக்கட்டி மாய்ந்து போகிறார்கள் 

ஏறக்குறைய வெள்ளச்சிப்பாட்டியும் அப்படித்தான் தன்மனதிற்கு ஒத்துக்காது என்றவுடன் அது காரமானதா பாரமானதா என்றெல்லாம் யோசிக்காமல் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விடுவார்கள் பிறகு ஒருகாலத்தில் தான் மறந்தது போல மற்றவர்களும் மறந்து விடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள்

சுட்டவனுக்கு வடு இல்லையே சுடுபட்டவனுக்குத்தானே வலியும் வடுவும் என்பதை புரிந்துக்கொள்ள மாட்டார்கள்தன் மருமகளிடம் தெம்பாக இருக்கும் போது எடுத்தெரிந்து பேசியிருப்பார்கள்

இப்போது அந்தப் பெண்ணுக்கு வாங்கிய சொற்கள்தான் தெரியுமே தவிற பாட்டியின் நிலைமை தெரியாது பகையாளி பலகீனமானால் கூட வஞ்சம் தீர்க்கும் மனதுதானே மனிதனிடம் உள்ளது  வனஜா வரும்வரை மனவண்டியிலிருந்து இத்தகைய பொதிகள் இறங்கிக் கொண்டே இருந்தன

அரைமணி நேரமாவது அவள்வர ஆயிருக்கும் ""பாவம் உன்னை காக்க வைச்சுட்டேன் புறப்படலாமா...'' என்றவாரே வனஜா வந்தாள்
""அதனால் என்ன எதையும் காத்திருந்து பெறுவதே நல்லது மனிதன் நினைப்பதெல்லாம் உடனுக்குடன் நடந்து விட்டால் கர்வம் தலைக்கேறி விடுகிறதே'' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்

இருவரும் வாசலுக்கு வந்து காரில் ஏறினோம் "" இங்கிருக்கும் வெள்ளச்சி வீட்டுக்கு போறதுக்கு நடந்தே போகலாமே பெட்ரோலும் மிச்சம் உடம்புக்கும் நல்லது '' என்றாள்

""சென்னையின் புகையும் வெப்பமும் எனக்கு பிடிப்பதில்லை அதனால் காரே பழகிப்போச்சி அது கூட சோம்பேரித்தனமும் ஒட்டிக்கிச்சி'' என்றேன்

அதற்கு வனஜா பதிலேதும் பேசவில்லை நானே பேச்சைத் தொடர்ந்தேன்""வெள்ளச்சிப்பாட்டியை மருமகள் சுத்தமாக கவனிப்பதில்லையா? வயதான ஒரு ஜீவனை பசி பட்டினியில் வாட்டுவது பாவம் என்று அந்தப் பெண்ணுக்கு தெரியவில்லையா?""எனக்கேட்டேன்

""அப்படி ஒன்னும் அந்தம்மாவை முழுசா குறைசொல்லிவிட முடியாது புருஷன் உயிரோட இருக்கிற வரையிலும் இருந்த சொத்துப்பத்தை விற்றே குடிச்சான்

எல்லா சொத்தும் பாட்டியின் பெயரில்தான் இருந்தது என்றாலும் புள்ளை பாசத்தில் ஏன் எதற்கு என்ற கேள்வியே இல்லாமல் எல்லாவற்றையும் மகன் கேட்டபோதெல்லாம் கைநாட்டு பேட்டுக் கொடுத்துறாங்க அவனும் ஆடு ஆடுன்னு ஆடிச் செத்துற்றான்

அவனுக்கு ஒரேபெண்ணு அவளை மட்டும் எப்படியோ தன் காலத்திலேயே கறைஏற்றினான் விதி யாரை விட்டது? ஒரே ஒரு பொண்ணா பிறந்தவள் அவசர அவசரமாய் நாலு பிள்ளைகளை பெற்று போட்டுற்று ஐந்தாவது பிரசவத்தில் கண்ணை மூடினாள் 

அந்த நாலு குழந்தைகளும் இப்ப வெள்ளச்சி மருமகள் தலையில்! அந்தம்மா மட்டும் வயசான காலத்தில கூலி வேலைக்கு போயி பச்சை பிள்ளைகளை காப்பாற்றுமா? மூலையில் கிடக்கும் மாமியாருக்கு சேவை செய்யுமா?

வாழ வேண்டிய பெண்ணை பறிகொடுத்து குஞ்சும் குறுமானுமாய் பிள்ளைகளை காக்கவும் முடியாம கைவிடவும் முடியாம போராடும் போது இக்கம் மனிதாபிமானம் என்றெல்லாம் எப்படி பார்க்க முடியும்?'' வனஜா மூச்சுவிடாமல் பேசினாள்

அவளது பேச்சை மட்டும் கேட்பவர்கள் அது உணர்ச்சிகளையே வெளிப்படுத்தாத வெறும் ஒலியலை என்றுதான் நினைப்பார்கள் ஆனால் நான் அவள் முகத்தை நன்றாக உற்றுநோக்கி செவிகொடுத்ததனால் அவள் கண்களில் வழிந்த சோகத்தையும் முட்டிக் கொண்டு நின்ற நீர்திவலையையும் காணமுடிந்தது

சோகத்தின் அளவு அதிகரித்தால் கண்கள் மட்டும் வண்டு போகாது குரலும் வண்டு போகும் என்பதை நன்றாக உணரமுடிந்தது""வயிற்றுப் போராட்டம் என்று வந்தால் மனிதனிடம் உள்ள நியாய தர்மங்கள் எல்லாம் செத்துவிடும் என்பதை போனவாரம் பார்த்தேன்

வெள்ளச்சியின் மருமகள் ரேசன் கடையில் அரிசி வாங்கி வைத்திருக்கா பாட்டி கண் தெரியாம நடந்தபோது கால் இடரி  அரிசியில் விழுந்திடுச்சி

வயசாயிடுச்சா விழுந்த வேகமும் படபடப்பும் கலந்து நீராய் போயிடுச்சி அத்தனை அரிசியும் வீணான கோபத்தில் மருமக தட்டுத்தடுமாறி எழுந்தப்பாட்டியை தள்ளிவிட்டிருக்கா

பாவம் வெள்ளச்சிக்கு கால்கையெல்லாம் நல்ல அடி காயம் பட்ட இடத்தில் இரத்தம் நிக்கவே வெகுநேரமாச்சி''

இப்போதும் வனஜாவின் குரலில் ஈரப்பசையே இல்லை இருப்பினும் அவள் முகம் முழுமையாக இருண்டு கிடந்ததை என்னால் காண முடிந்தது

அவள் சொன்ன சம்பவத்தின் நிஜத்தோற்றம் என் கண்களின் முன்னால் விஸ்வரூபம் எடுத்த போது நெஞ்சத்துடிப்பின் வேகம் அதிகத்து அடிவயிற்றில் இனம்புயாத கனம் உருவாகி உருண்டது

பனிக்குகைக்குள் குளிர்ஜுரத்தில் போர்வை இல்லாது தன்னந்தனிமையில் புரள்வது போல உணர்வு தோன்றி மூளைக்குள் மின்சாரமாய் கசிந்தது கைகள் கட்டுக்குள் இல்லாமல் நடுங்கத் துவங்கியது

இதற்குமேலும் காரை ஓட்டினால் நிதானம் தவறி யார்மீதாவது மோத வேண்டிய சூழல் வரும் என தோன்றியதனால் வண்டிய நிறுத்தினேன்

""என்ன வண்டியை நிறுத்திட்டே?''

 என்ற வனஜாவின் கேள்விக்கு என்னால் உடனடியாக பதில்சொல்ல முடியவில்லை ஸ்டரிங்கில் தலையை சாய்த்து என்னை ஆசுவாசப்படுத்த முயர்ச்சி செய்தேன் முடியவில்லை

வாய்விட்டு அழுதால் பரவாயில்லை என்றுத் தோன்றியது ஒரு பெண்பிள்ளையின் முன்னால் அழுது விடுவோமோ என்ற வெட்கம்  அந்த நேரத்தில் எனக்கு சௌகர்யமாகப் போனது

எண்ணங்களின் போக்குசற்று திசைமாறவும் உணர்வுகள் கட்டுக்குள் வந்தது "" அக்கா வெள்ளச்சி போன ஜென்மத்தில் நிசயம் மகாபாவம் பண்ணியிருக்கனும்
வாழ வேண்டிய வயசில் புருஷனை இழந்து வயசான போது பிள்ளையை இழந்து வாழக்கூடாத நேரத்தில் இழுத்துப்பறிச்சி வாழுதுன்னா அது எவ்வளவு பெரிய வேதனை?

வெள்ளச்சி இளமையில் சண்டைக்கோழியாய் இருந்திருக்கலாம் தக்கத் துணையில்லாத ஒரு பெண் கண்கொத்தும் காலிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முரட்டு வேசம் போட்டால்தான் அமைதியாக வாழமுடியும்

குனிஞ்சத்தலை நிமிராமல் அப்பாவியாய் இருந்தால் காக்கையும் கழுகும் கொத்தித் தின்றுவிடும் அதனால் அவர்கள் வாயாடியாக அலைந்தது தவறல்ல

ஆனாலும் அவுங்க யாருக்கும் நல்லது செய்யல நல்லவளா இல்லைன்னு சொல்லிவிட முடியுமா? அதனால் இப்ப ஆடிய ஆட்டத்திற்கு சம்பளமாய் பாட்டி கஷ்டப்படுகிறாள்ன்னு யாராவது சொன்னா அதை ஏத்துக்க முடியாது கண்ணுக்குத் தெரியாத பாவம்தான் அவுங்களை ஆட்டி வைக்குது'' என்றேன்

இந்தப்பேச்சு இப்போது தேவையா இல்லையா எனப்புரியாமலே பேசினேன் அளவுக்கு மீறிய சோகத்திற்கோ சந்தோஷத்திற்கோ ஆட்படும் போது வார்த்தை மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட முடிவதில்லை எப்படியோ முட்டி மோதி வெளியில் வந்து குதித்து விடும் எனது இப்போதைய நிலை இதை உறுதிப்படுத்தியது

நான் பேசிக் கொண்டுவரும்போது என் முகபாவத்தில் விசித்திரமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் இமை கொட்டாமல் வனஜா என்னை பார்ப்பதிலிருந்தே புரிந்துக் கொண்டேன் ஆனாலும் அதை சட்டைசெய்யாமல்

""பாட்டியும் பாவம் பாட்டியின் மருமகளும் பாவம்  இப்போதைய பரிதாப நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க மூன்றாவதாய் ஒரு கை தேவை ஏன் அந்தக்கை நானாக இருக்க கூடாது?"" என்றேன்

நான் சொல்லுவதை வனஜாவால் உடனே புந்துக் கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் அதனால் அவள்"" நீ என்ன சொல்ல வருகிறாய்??'' என்று கேட்டாள்"

பாட்டியின் கணக்குப்படி நான் துஷ்டப்பயல் எதையும் ஏறுக்கு மாறா பேசும் குதர்க்கவாதி ஆனாலும் என்னைப் பொறுத்தவரை அவுங்க என்கனவில் தினம் தினம் தேரில் பவனிவரும் ராஜகுமாரி! அல்ல அல்ல வானத்து தேவதை! 

அந்த தேவதை புழுதியில் விழக்கூடாது வாழ்வில் பலசோதனைகள் வரும்போதெல்லாம் துணிச்சலை வரவழைக்க கற்றுத்தந்த சரஸ்வதி தேவி அந்த தேவி தாமரைப்பூவிலிருந்து சகதியில் விழுந்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டு சும்மா நின்றால் நான் நன்றியில்லாதன்

அவர்களை என்னோடு கூட்டிப் போகப் போறேன் சாகும் காலம் வரை ஒரு கிழவியின் வயிற்றை காயாமல் பார்த்துக் கொள்ளும் பாக்கியமாவது கிடைக்கும் செத்தப் பிறகு கருமாதி திவசம் என்று ஊரைக்கூட்டி சோறு போடும் முட்டாளல்ல நான்''என்றேன்

வனஜா மௌனமாக என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் இருந்தாள்

  ""பாட்டியின் மேல் இத்தனை பாசமா உனக்கு ? நான் அந்தக் கிழவியை துக்கி என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன் இப்போது அவள் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல பாக்கியசாலியும் கூட என்று நினைக்கிறேன்
பெற்றப்பிள்ளையை பறிகொடுத்தாலும் தனது நடத்தையால் பெறாத பிள்ளையாய் உன்னை பெற்றிருக்கிறாளே! ம்... எதற்கும் குடுப்பினை வேண்டும்''என்று சொன்னாள்

அவள் குரலில் இருந்த அழுத்தம் என்னை பாராட்டுவதாக இருந்ததா பாட்டியின் நிலைக்கு சந்தாஷப்படுவதாக இருந்ததா இல்லையென்றால் எனது தீர்மானத்தை சந்தேகப்படுவதாகவோ கேலி செய்வதாகவோ இருந்ததா என்பதை என்னால் சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை

ஆனாலும் அவள் பேச்சுக்கு மறுமொழி எதுவும் கூறாமல் மௌனம் காத்தேன்

அவளே மீண்டும் தொடர்ந்தாள் ""இருந்தாலும் ஒரு விஷயத்தை நன்றாகத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் அவசரப்பட்டு ஒரு முடிவெடுத்து நிதானமாய் வருத்தப்படக் கூடாது.

உன்னிடம் அவர்களை பராமரிக்க நல்ல மனசு இருக்கலாம் பணமும் இருக்கலாம் ஆனால் நடைமுறைக்கு சரிப்பட்டு வருமா என்பதை நிதானமாக சிந்தித்துப் பார் அதன் பிறகு எந்த முடிவுக்கும் வா'' என்றாள்

இப்போதுதான் அவள் என் முடிவை பாராட்ட வில்லை வேறு எதையோ மனதில் வைத்துப் பேசுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டேன்

"" நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை முதுமையான ஒரு ஜீவனை பாதுகாக்க நினைப்பதில் என்ன சிமம் இருக்க போகிறது? இல்லை யென்றால் அதில் அப்படியென்ன சிக்கல் வந்துவிடப் போகிறது?

ஊரார் உனக்கென்ன அப்படியோர் அக்கரை என்று கேட்பார்கள் என நினைக்கிறாயா? '' என்று புரியாமல் அவளிடம் கேட்டேன்

வனஜா பலமாகத் தலையசைத்தாள்"" நான் ஊராரைப்பற்றியோ உன் சிமத்தைப்பற்றியோ கவலைப்பட வில்லை நீ விரும்பியப்படி செய்ய முடியுமா என்றுதான் கவலைப்படுகிறேன் '' எனப் பீடிகைப் போட்டாள்

""எனக்கு இன்னும் புரியவில்லை ''என்று பதில் சொன்னேன்

""உன் தகப்பனார் மரணப்படுக்கையில் கிடந்தப்போ சென்னையில் வைத்துப் பராமரிக்க கூட்டிப்போனாய் அப்போ உன் மனைவி நடந்துக் கொண்ட விதத்தை மறந்திருக்க மாட்டாய் 

பெற்ற அப்பாவுக்கே தன்புருஷன் சேவை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத சுபாவம் உன் பெண்டாட்டியினுடையது

இந்த நிலையில் யாரோஒரு கிழவிக்கு நீ சிஷ்சுருதை செய்வதை அவளால் எப்படி ஜீரணிக்க முடியும்?''

வனஜாவின் இந்த வார்த்தைகள் ஆகாஷத்தில் பறந்துக் கொண்டிருந்த என்னை பிடித்து பூமியில் குப்புத் தள்ளியது போலிருந்தது

வனஜா ஒளிவுமறைவற்ற வார்த்தைகளை நேரடியாகப் பேசியது மனதிற்கு சற்று வலியைத் தந்திருக்கலாம் ஆனால் அத்தனையும் நிஜம்தானே உண்மை சுடுவதினால் அது பொய்யாகி விடுமா?

உங்களை கட்டிக் கொண்டதினால் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அடிமையாய் ஏவல் செய்யனுமா? என்றும்

படுக்கையில் கிடக்கும் கிழட்டு மனுஷன் இன்னும் யாருக்காக காத்திருக்கிறாரோ தெரியலை சட்டுப்புட்டுன்னு போய் தொலைந்தால் இருக்கிறவங்க நிம்மதியாய் மூச்சு விடலாம் என்றும்

அந்த ரூம் பக்கமே போக முடியலை நாற்றம் வயத்தை புறட்டுது உருவாகும் கிருமிங்க குழந்தைங்களை கொல்லுரதுக்கு முன்னாடி இவருக்கு சாவு வராது போலிருக்கு என்றும் ஏகப்பட்ட புலம்பல்கள் சண்டைகள்

இத்தனைக்கும் அவள் அப்பா பக்கத்தில் கூட போனது கிடையாது அறை வாசலில் உணவை வைத்துவிட்டு வந்துவிடுவாள் மற்ற வேலைகள் எல்லாமே அம்மாவும் நர்ஸ்சும்தான் கவனித்துக் கொள்வார்கள்

அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தாலே அவளின் நச்சரிப்பு புண்ணில் ஊசியால் குத்துவது போலாகிவிட்டது

அதிகாரப்படுத்தி அடக்கலாம் என்றால் ஊரே இரண்டாகுமாறு கூப்பாடு போடுவாள் வெளியில் தலைகாட்ட முடியாதபடி அசிங்கம் ஆகிவிடும்என்று புழுங்கி செத்தேன்

இந்த கிழவன் இல்லாவிட்டால் நம் புருஷன் பிறந்திருக்க முடியுமா?

ஆளான ஆளா வளந்து படித்து இவளையும் கைபிடித்து வளரவும் முடியுமா?

கழுத்தில் தங்கமும் வைரமும் அணிந்து ஐம்பதாயிர ரூபாய் பட்டுப்புடவை கட்டி நான் கலைட்டெர் பெண்டாட்டி என்று தலைநிமிர்ந்து நடக்க முடியுமா?

இந்த நியாயங்களை எல்லாம் எண்ணிப்பார்க்க அவளுக்கு மனதும் இல்லை  அறிவும் இல்லை

அவளது உதாசீனத்தையும் எரிச்சலையும் புந்துக் கொண்ட அம்மா எனக்காக பல்லைக்கடித்துக் கொண்டு காலத்தை தள்ளினார்கள்

அவர்களின் சகிப்புத் தன்மையும் எல்லை மீறி விடக்கூடாது என்றோ மகனின் இயலாமையான நிலையை எண்ணியோ அப்பாவும் சீக்கிறமாக கண்ணை மூடிவிட்டார்கள்
 

   அப்பாவின் உடலை ஊருக்கு கொண்டு வரும் போது கூடவே வந்த அம்மா திரும்ப சென்னைக்கு வரவேயில்லை நான்தான் அவ்வப்போது ஊருக்கு வருவேன் அப்போதெல்லாம் கூட அவள் வருவதும் இல்லை வருகின்ற என்னையும் மலர்ச்சியுடன் அனுப்புவதில்லை

இந்தமாதிரி குடும்பம் அமைந்த நான் வெள்ளச்சிப்பாட்டியை அழைத்துச் செல்ல நினைத்தால் அது ஊமை கண்ட கனவாகத்தானே இருக்கும் வனஜா சொல்வதில் என்னத்தவறு? அத்தனையும் சத்தியம் அல்லவா?

மிக நீண்ட அமைதியில் இருந்த என்னை ""என்ன உன் கற்பணை ராஜ்ஜியத்தை உண்மையைச் சொல்லி கலைத்து விட்டேனா?'' என்ற வனஜாவின் குரல் மீட்டது.

"" சரியான நேரத்தில் சரியானதை சுட்டிக்காட்டினாய் நீ இப்போது சொல்லவில்லை என்றால் உணர்ச்சி மேலிட பாட்டி வீட்டில் பேசி தர்மச்சங்கடத்தில் மாட்டியிருப்பேன்   இதனால் எத்தகைய அவமானத்தை சந்திக்க வேண்டி வந்திருக்கும்? அப்பாடா '' என்று நிம்மதி பெருமூச்சி விட்டேன்

""பேசியது போதும் வண்டியை கிழப்பு  பாட்டிவீட்க்கு போகலாம் '' என வனஜா சொல்லவும் காரை ஸ்டார்ட் செய்து வந்த வழியை பார்த்து திருப்பினேன்

அக்கா ""ஏய்... என்ன செய்கிறாய்?'' என்றாள் பதறியப்படி

நான் எதுவும் பதில் பேசவில்லை அவள் என்னை குழப்பத்துடன் பலமுறை பார்ப்பது தெரிந்தும்அமைதியாக காரை செலுத்தி அவள் வீட்டுவாசலில் நிறுத்தினேன்

அப்போது அவள் பார்வையில் நான் பைத்தியக்காரனாத்தான் காணப்பட்டிருக்க வேண்டும் அதை அவள் கண்கள் சொன்னது

வண்டியிலிருந்து இறங்கியவள் என்னை வீட்டுக்குள் வருமாறு சைகை செய்தாள் நாற்காலியில் நான் அம ர்ந்ததும்

"" முன்பெல்லாம் அடிக்கடி ஏற்படும் மூளைக்குழப்பம் உனக்கு இ த்தனை வயதாகியும்  தீரவில்லையா? என்றாள் கிண்டலாக

"" நீ கிண்டலாக கேட்பது பொய்யல்ல நிஜம்தான் உண்மையில் என் மூளை உணர்ச்சி வசப்டும்போது குழம்பித்தான் விடுகிறது

இந்த வியாதி எனக்குமட்டுமல்ல கொஞ்சம் இக்கசுபாவம் அதிகமுள்ள எல்லாருக்கும் உள்ளது

உண்மையில்
பாட்டியை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை விட அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆசைத்தான் அதிகமாக இருந்தது

அந்த ஆசை நிஜத்தை மறந்து கற்பணைக் கோட்டையில் என்னை பறக்க வைத்தது உண்மை தெளிவானபோது அவர்களூக்கு நேரடியாக என்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை புரிந்துக் கொண்டேன்

அதுமட்டுமல்ல அந்தப்பாட்டி என் கனவு தேவதை அந்த தேவதை சிதைந்து சின்னாபின்னமாகி மூலையில் கிடப்பதை சகித்துக் கொள்ளும் மனபக்குவம் என்னிடம் இல்லை '' உணர்வுகள் பொங்கி வந்ததினால் என் குரல் கம்மி கண்களில் நீர் முட்டியது

ஒருதாயின் பரிவு கண்களில் கொப்பளிக்க வனஜா என்னைப் பார்த்தப்படியே நின்று கொண்டிருந்தாள்

""அக்கா! இன்னொறு உண்மையைச் சொல்லட்டுமா? அவர்கள் உருவத்தால் சிதைந்துபோய் இருப்பார்கள்

அந்த நிலைமையில் பார்த்தால் என்காலம்வரை பாட்டி நினைப்பு வரும்போதெல்லாம் இந்தத் தோற்றம்தான் மனக்கண்ணில் நிற்கும்

உதவியும் செய்யமுடியாமல் கனவையும் சிதைத்துக்கொண்டு வாழும் தைரியம் எனக்கில்லை'' என்று சொல்லி நிறுத்தி அவள் முகத்தை ஏறிட்டுப்பார்த்து

""எனக்கொரு உதவி நீ செய்யவேண்டும் கொஞ்சம் பணம் தருகிறேன் மாதாமாதம் உனக்கு பணம் அனுப்பியும் வைக்கிறேன்

அதை எதாவது ஒருவழியில் பாட்டிக்கு கொடு. பாவம் அந்த மருமகள் கூட சிறிது அதைப்பயன் படுத்தினால் தவறல்ல'' என்றேன்

கைகளால் அரவணைக்க நினைப்பவனுக்கு கைகள் இல்லையென்றால் அவன் உணர்வுகளை பார்வையாலும் வார்த்தையாலும்தானே வெளிப்படுத்த முடியும்?

ஏறக்குறைய என் நிலையும் அப்படித்தான் புரிந்துக் கொண்ட வனஜா இமைகளை தாழ்த்தி சம்மதித்தாள்



  நல்லவேளை மான்கள் பூட்டியத்தேரில் மேகக்கூட்டத்திற்குள் பாட்டி பவனி வரும் கனவு இனிமேல் கலையவே கலையாது




                                                         எழுதியவன் பேசுகிறேன்
     உண்மையான வெள்ளச்சி பாட்டி இதோ என்னோடு இருப்பவர்தான்
     இவர்களின் நிஜ வாழ்க்கையும் என் கற்பனையும் கலந்தது இந்த கதை



Contact Form

Name

Email *

Message *