Store
  Store
  Store
  Store
  Store
  Store

காமராஜர் ஆவி தந்த ஊழல் பட்டியல்


  துவரை உயிர் என்பது அழியாத தன்மை கொண்டது என்பதையும் அது உடலை விட்டு சென்றபின் எந்தெந்த வகையில் பயணபடுகிறது என்பதையும் என்னென்ன நிலையை அடைகிறது என்பதையும் சற்று விரிவாகவே பார்த்தோம்.  இனி உடலைத் துறந்து மேலுலகம் அடையும் உயிர் மீண்டும்தான் வாழ்ந்த பூமிக்கு ஆவி நிலையில் வருகிறதா?  அப்படி வரும் போது அதன் சுயத்தன்மை எப்படி இருக்கிறது?  தனது பூர்வஜென்ம வாசனையை அதாவது தான் வாழ்ந்த காலத்து நினைவுகளை மறக்காமல் இருக்கிறதா என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

  ஆவிகளை அழைத்துப் பேசுவது என்பது இன்றைய காலத்தில் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது என்பது சரியான விஷயமாகாது.  ஆதிகாலம் தொட்டே என்பதுதான் உண்மை நிலை ஆகும்.  உதாரணமாக இராமாயணத்தில் தசரதனின் மறைவிற்குப் பிறகு அவனது ஆவி ஸ்ரீராமனிடம் வந்ததாகவும் பல கோரிக்கைகளை வைத்து ஸ்ரீராமனை வற்புறுத்தியதாகவும், வாழ்த்தியதாகவும், வழிகாட்டியதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  மஹாபாரதத்திலும் பீஷ்மன் தம்பியும் கௌரவர்களின் அதாவது திருதுராஷ்டரனின் தந்தையுமான விசித்திர வீரியனின் ஆவி பீஷ்மர் குழம்பியபோது எல்லாம் வந்து வழிகாட்டியதாகவும் குறிப்புகள் உள்ளன.  ஆக இறந்து போனவர்களிடம் இறந்து போக இருப்பவர்கள் கொள்ளும் தொடர்பு பூர்வகாலம் தொட்டே இருந்து வருகிறது என்பது புலனாகிறது.


  ஆவிகளைப் பற்றி ஆராய்ந்து தமிழில் முதல் முறையாக நூற்களை எழுதிய மதுரை ஆதினகர்த்தாவும், மறைமலை அடிகளும்,  ஆவி உலகத்தைப் பற்றி ஆவிகளிடமே தாங்கள் பெற்ற ஆதாரக் குறிப்புகளைக் கொண்டே புத்தகங்கள் எழுதி உள்ளது  எதைக் காட்டுகிறது என்றால் ஆவிகளின் நிலையை ஆவிகளால் மட்டும்தான் நிதர்சனமாகக் கூறமுடியும் என்பதையும் அந்தத் தகவல்கள் நூற்றுக்கு நூறு நம்பக்கூடிதாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.  உதாரணமாக ஒரு மருத்துவனை மீடியமாக வைத்து ஒரு வைத்தியனின் ஆவியை அழைத்துப் பேசினால் அந்த ஆவி சொல்லும் விஷயத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்படுவது சற்று கடினம்.  காரணம் மீடியமான மருத்துவனின் ஆழ்மனது பேசுகிறதோ என்ற ஐயம் ஏற்படுவது இயற்கை.

  இந்த ஐயமும் சந்தேகமும் நமக்கு வரக்கூடாது என்பதனால் ஆவிகளுடன் பேசும் கலையில் நல்ல அனுபவம் எனக்கு ஏற்பட்டபின் வித்தியாசமான பல முயற்சிகளை சோதனை அடிப்படையாகச் செய்து பார்த்து உள்ளேன்.  அவற்றில் முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

  உலக அறிவு ஒரு துளிகூட இல்லாத ஏன் எழுத்து வாசனையே அறியாத ஒரு பாமரனை மீடியமாகப் பயன்படுத்தி உலகில் வாழ்ந்த போது பெரும் மேதையாக இருந்த ஒருவரின் ஆவியை அழைத்துப் பேசினால் மீடியத்தின் சுய எண்ணங்கள் வருகிறதா அல்லது உண்மையிலேயே ஆவிகளின் கருத்துக்கள்தான் வருகிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு ஆவல் என்னுள் எழுந்தது.  15 வருடங்களுக்கு முன் இதற்கான முயற்சியைச் செய்து பார்த்தேன்.  அதில் கிடைத்த வெற்றியும் திருப்தியும் பல விதத்திலும் ஊக்கம் தந்தது அதை இப்போது பார்ப்போம்.

   நான் வசிக்கும் பகுதியில் அப்படி ஒரு பாமரனைத் தேர்ந்து எடுத்தேன்.  அவனிடம் மீடியமாக இருக்க சம்மதமா?  எனக் கேட்டேன்.  முதலில் அவனுக்கு மீடியம் என்றால் என்னவென்று புரியவில்லை.  அதை நான் புரியவைத்த போது பயந்தான்.  அதன்பின் அவன் பயத்தைப் போக்கும்  வண்ணம் உண்மைகளைப் பக்குவத்துடன் எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைத்தேன்.  ஒரு நாள் மதியம் அவனை  மீடியமாக்கி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு.  காமராஜர் அவர்களின் ஆவியை அழைத்தேன்.  அவருக்கும் எனக்கும் நடந்த உறையாடலை கேள்விபதிலாக அப்படியே தருகிறேன்.


நான் :- அரசியல்  வாதி என்பது யார்?  அதற்கான இலக்கணம் என்ன?

திரு.  காமராஜர் :-
இன்று நீங்கள் பார்ப்பது போல் அரசியல்வாதி என்பவர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவராகவோ,  ஒழுங்கீனமானவர்களாகவோ அறவே இருக்கக்கூடாது.  இவர்கள் பெயர் அரசியல்வாதி அல்ல.  தாதாக்கள் என்றோ புரோக்கர்கள் என்றோ கும்பலின் தலைவர்கள் என்றோ அழைக்கலாமே தவிர இவர்களை அரசியல்வாதிகள் என்று அழைப்பது அரசியலைக் கேவலப்படுத்துவது ஆகும்.

  பின்னர் அரசியல்வாதி என்பவனின் தன்மைதான் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.  சொல்கிறேன்.  அவன் கடந்த கால சரித்திரங்களை முழுமையாகத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.  அப்போதுதான் வருங்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டும் தகுதி அவனுக்கு இருக்கும்.  அறிவியலையும் ஆன்மீகத்தையும் உன்னிப்புடன் கவனிப்பவனாக அவன் இருந்தால்தான் பழமைகளின் பெருமைகளையும் புதுமைகளின் பயன்களையும் மக்களுக்கு அவனால் கொடுக்க முடியும்.


  பொருளாதாரத்திலும் நாட்டின் கனிவளங்களைப் பற்றிய அறிவிலும் நிபுணனாக அவன் இருந்தால்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும்.  மனோ தத்துவத்தையும் சகல மத சம்பிரதாயங்களையும் புரிந்தவனாகவும் இருந்தால்தான் மக்களின் மனநிலை அறிந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் இயல்பை அவன் பெற இயலும்.  இதற்கெல்லாம் மேலாக மனித நேயமும் மன்னிக்கும் சுபாவமும் அவனிடம் இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால்தான் அப்படி இருப்பவன் மட்டும்தான் அரசியல் வாதியாகவும் நாட்டை வழி நடத்தும் நல்ல தலைவனாகவும் இருக்க முடியும்.


நான் :-  நீங்கள் சொல்லும் இலக்கணப்படி இன்று யாராவது ஒரு தலைவர் நம் நாட்டில் இருக்கின்றார்களா?

திரு.  காமராஜர் :-  இந்த கேள்விக்கு அவரிடமிருந்து நீளமான மௌனமும் ஆழமான பெருமூச்சுமே பதிலாக வந்தது.

நான் :-  உங்களால் அப்படிப்பட்ட ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியாத சூழ்நிலை நாட்டில் இருப்பதற்கு வாழும் நாங்கள்தான் வெட்கப் பட வேண்டும்.  இந் நிலை மாறுமா?  மாறுவதற்கு மக்கள் செய்ய வேண்டியது  என்ன?

திரு.  காமராஜர் :-  ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.  ஆனால் தங்களை வழிநடத்தும் தலைவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாகவும் நெறிமுறைப்படி வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று  கண்டிப்புடன் விரும்புகிறார்கள்.

  நம் நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.  மக்களில் பெருவாரியானவர்கள் ஒழுக்கத்தை சிறப்புடன் கடைப்பிடிக்கிறார்கள்.  ஆனால் தங்களது தலைவாக்ள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதை தலைவர்களின் பெருமைகளில் ஒன்றாகக் கொண்டாடுகிறார்களே தவிர அவமானமாக அதைக் கருதுவது இல்லை.   


   ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள் பொது வாழ்வில் நேர்மையாக வாழ இயலாது.  சுய வாழ்வில் யோக்யம் இல்லாதவர்களைப் பொது வாழ்வில் வளர விடுவது நமது மக்கள்தான்.  இந்த மனோபாவத்தை மக்கள் மாற்றாத வரை தாதாக்களும் சுயநலமிகளுமே தலைவர்களாக நடமாடுவார்கள்.

நான் :-
  அப்படி என்றால் நீங்கள் வாழ்ந்த காலத்தில் அரசியலில் நேர்மை இருந்ததா?

திரு.  காமராஜர் :-  நான் வாழ்ந்த காலத்திலும் அரசியலில் நேர்மை என்பது அவ்வளவாக இல்லை.  அந்தக் காலத்தில் நடந்த புகழ்பெற்ற ஊழல்கள் சிலவற்றைக் கூறுகிறேன்.  ஆங்கிலேயர் ஆட்சியில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் ஊழல் முறைகேடுகள் நிலமதிப்பீடு வரி வருவாய் தீர்மானிப்பு ஆகியவற்றில் பல ஊழல்கள் நடந்து உள்ளன.  காவல் துறை நீதித் துறை சுங்கத்துறை ஆகியவற்றில் ஊழல் பேயானது தலை விரித்து ஆடியது. இரண்டாம் உலகப்போரின் போது ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதில் பல பேரங்கள் நடந்து ஊழல் முதலாளிகள் பலர் உருவாயினர்.

விடுதலைக்குப் பின்பு அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரிடத்தில் சந்தர்ப்பவாதக் கூட்டணி ஏற்பட்டு ஊழலின் வேகம் அதிகரித்தது.  1940ம் வருடம் காங்கிரஸ்காரர்கள் அதிகாரிகளுடன் இணைந்து பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை மகாத்மா காந்தியிடமும் நேருவிடமும் புகார்களாக அப்போது அளிக்கப்பட்டது.  நேருஜி இந்தப் புகாரில் அவ்வளவாக் அக்கரை காட்டவில்லை.


     பல    ஊழல் பேர் வழிகளை அவர் காப்பாற்றியதாகவும் வதந்திகள் உண்டு அது உண்மையும் கூட 1948ல் வி.கே.  கிருஷ்ணமேனன் மீது அரசாங்கத்திற்கு ஜீப்கள் வாங்கியதில் அவர் 18 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.  நாடாளுமன்றக் குழு இந்தக் குற்றச் சாட்டை விசாரித்து இது உண்மைதான் என்று அறிக்கையும் தாக்கல் செய்தது.  ஆனால் நேரு இதை மறுத்து கிருஷ்ணமேனனுக்கு பதவியும் அதிகாரமும் அளித்தார்.  1955 வரையில் இந்த ஊழல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.  அதே போன்றே டி.டி.  கிருஷ்ணமாச்சாரி, கே.டி.  மாளவியா, பிரதாப்சிங் கெய்ரன் ஆகியோர் மீதும்  ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சி.  சுக்லா விசாரித்து உறுதியும் செய்தார். இதன் பின்னும் கிருஷ்ணமாச்சாரியார் கே.டி.  மாளவியாவுக்கும் நேரு அமைச்சர் பதவி வழங்கினார்.

    ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பதவியில் அமர்த்தியதிலிருந்து நேருவின் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரும் களங்கமாகும். நேருவைப் போலவே ஊழல் விஷயங்களில் லால்பகதூர் சாஸ்தியும் அணுகுமுறை கொண்டு இருந்தார்.  1961 முதல் 1967 வரை நீதிபதி கண்னா தலைமையிலான விசாரணைக் குழு விசாரித்து 15 காங்கிரஸ் அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது.  இவர்களில் ஒரிசாவின் முன்னாள் முதல்வர்களான பிஜூபட்நாயக், மிரன்மித்ரா, திரிபாதி ஆகியோரும் அடங்குவர்.  கண்ணா குழுவின் அறிக்கையை ஆராய நீதிபதி வெங்கட்ராம ஐயர் குழு அமைக்கப்பட்டது.  இக்குழுவும் ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்தது.  ஆனால் சாஸ்திரி தான் வாழ்ந்த காலத்தில் எந்த நடவடிக்கையும் குற்றவாளிகளின் மீது எடுக்கவில்லை.


    திருமதி.  இந்திராகாந்தியும் தனது கட்சிக்காரர்கள் செய்த ஊழல்களைக் கண்டு கொண்டதே கிடையாது.  ஆனால் பிறக்கட்சித் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு வந்தவுடனேயே நடவடிக்கை எடுக்கத் தயங்கியதும் கிடையாது.  உதாரணமாக எல்.என். மிஸ்ரா, தேவராஜ் அர்ஸ், வெங்கல் ராவ், பி.டி.  மிஸ்ரா ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத திருமதி காந்தி பிரகாஷ்சிங் பாதல், கருணாநிதி ஆகிய மாற்றுக் கட்சிக்காரர்களை புகார் வந்தவுடனேயே பழிவாங்கி உள்ளார்.  அவசரநிலை காலத்தில் நடந்த பல முறைகேடுகளை விசாரித்த  ஷா  கமிஷன் அறிக்கைகளையும் தனது  மகன் சஞ்சய் காந்தி மேற்கோண்ட மாருதி கார் ஊழல்களையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திராகாந்தி அழித்த கதை உலகமே அறியும்.

    காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல காங்கிரஸ்ஸில் இருந்து வெளியேறி ஆட்சி அமைத்த மற்ற தலைவர்களின் கதையும் இப்படித்தான்.  உதாரணமாக முரார்ஜிதேசாய் தனது மகன் காந்திதேசாய் மருமகள் பத்மாதேசாய், சரண்சிங் மனைவி ஆகியோர்கள் மேற்கொண்ட ஊழல்களின் ஆதாரங்களைப் புறக்கணித்தார் என்பதும், வைத்தியலிங்கம் விசாரணைக்குழு குற்றச்சாட்டை நிரூபித்த பிறகும் முரார்ஜிதேசாய் அதை மறுத்தார் என்பதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    இவைகளெல்லாம் மத்திய அரசாங்கத்தில் நடந்த ஊழல்களில் ஒருசிலவே ஆகும்.  இன்னும் நிறைய ஊழல்கள் உள்ளன அவைகளையெல்லாம் பட்டியலிட்டால் அது ஒரு பெரிய புத்தகம் அளவிற்கு வரும்.  தமிழகம் உட்பட பல மாநிலங்கிளல் நடந்த ஊழல்களை தனி ஒரு புத்தகமாகவே எழுத வேண்டிருக்கும்.  எனவே இன்றுதான் அரசியல் கெட்டுவிட்டது, அன்று மிகவும் புனிதமாக இருந்தது என்பதெல்லாம் வீண் விபரீத கற்பனை ஆகும்.


    நான் :- உங்கள் ஆட்சியில் ஊழல்கள் நடந்தனவா?

    திரு.  காமாரஜர் :- ஊழலைப் பொருத்தமட்டில் எனது ஆட்சி மற்றவர்கள் ஆட்சி என்று வேறுபாடு கிடையாது.  எனது ஆட்சியில் ஊழலின் வேகம் குறைந்திருந்தது என்று சொல்லலாம்.  அங்கொன்றும் இங்கு ஒன்றுமாக சிறிய அளவில் ஊழல்கள் நடைபெற்றது எனது ஆட்சியில் உண்டு.  ஆனால் பெரிய அளவில் ஊழல்கள் எதுவும் நடை பெறவில்லை. அதற்குக் காரணம் என் மீது அதிகாரிகளும் சக அரசியல்வாதிகளும் கொண்டிருந்த பயமே காரணம் என்று சொல்லலாம்.

   நான் ஊழல் பேர்வழிகளை மறைத்து வைக்கவோ காப்பாற்றவோ என்றுமே முயற்சித்தது இல்லை.  தவறு செய்பவர்களின் குற்றங்களை அவர்களிடமே நேருக்கு நேராக அனைவர் முன்னிலையிலும் கேட்டு விடுவது என் வழக்கம்.  அப்படி நான் கேட்பதனால் தங்களது  சுயரூபம் வெளிச்சம் ஆகிவிடும் என்பதனாலேயே அவர்கள் தங்களது ஊழல் செயல்களை நான் ஆட்சியில் இருக்கும்வரை ஒதுக்கி வைத்து இருந்தனர்.


    நான் :- அப்படி என்றால் ஊழலை ஒழிக்கவே முடியாதா?

    திரு.  காமராஜர் :-
அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் பலவும் தொழில் அதிபர்கள் பலரும் நிதி உதவி அளிக்கிறார்கள்.  ஆட்சியில் உள்ள கட்சிக்கும் ஆட்சி அமைக்க சாத்தியமுள்ள கட்சிக்கும் அதிகப் பண உதவி கிடைக்கிறது.  கட்சியின் செலவு என்பதில் கட்சித் தலைவர்களின் செலவுகளும் அடங்கும்.  இவ்வாறு தான் அரசியல் வாதிகளுக்கு நிதி ஆதாரங்கள் வந்து சேர்கின்றது.  கட்டாயப்படுத்தி நிதி சேர்க்கும் முறையும் கட்சிகளுக்கு இடையில் உள்ளது.  சில கட்சிகளுக்கு வெளி நாட்டிலிருந்தும் பணம் வருகிறது.  பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஆளும் கட்சியைச் சார்ந்த இரண்டாம் கட்டத்தலைவர்கள் ஆட்சியில் முறைகேடான சலுகைகளைப் பெறவும் தங்களது செல்வாக்குகளை உயர்த்திக் கொள்ளவும்.  மக்களிடம் அடாவடித்தனத்தின் மூலம் பணம் பறித்துக் கொண்டு தருகிறார்கள்.

    நிதி சேர்ப்பது என்பது கண்ணியமான ஊழல் என அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.  ஆதாயம் இல்லாமல் யாரும் அரசியல்வாதிகளுக்கோ அரசியல் கட்சிகளுக்கோ பணம் தருவது இல்லை.  அரசியல் வாதிகளில் நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர்களும் கூட தங்களது நற்பெயர் கெடாதவாறு நம்பிக்கையான பிரதிநிதிகளை வைத்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபது அரசியல் ரகசியம் ஆகும். 


  எந்த ஒரு அரசியல்வாதியும் தனது உழைப்பை மட்டும் நம்பி  வாழ்வது இல்லை.  மேலும் அரசியலைத் தவிர வேறு செயல்பாடு எதுவும் இல்லாத நபர்கள் தங்களது பிழைப்பை நடத்த பிறரின் உதவியை நாடும் போது ஊழல் என்பதும் முறைகேடு என்பதும் அதிகார துஷ்பிரயோகம் என்பதும் சகஜமான விஷயமாகி  விடுகிறது.  இவைகளை ஒழிப்பதும் அரசியல் வாதிகளை புனிதர்களாக மாற்றுவதும் மிகக் கடினமான விஷயமாகும். 

 சாணக்கியன் அர்த்த சாஸ்திரத்தை படித்திருப்பவர்கள் அதிகாரிகளின் ஊழல்கள் அரசியல் வாதிகளின் அராஜகங்கள் நடப்பதற்கு மக்களின் சட்டம் பற்றிய அறியாமையே காரணம் என்று கூறப்பட்டிருப்பதை நன்கு அறிவார்கள்.  முதலில் நமது நாட்டு நீதித்துறையைச் செப்பனிட வேண்டும்.  சிவில் வழக்குகள் தவிர குற்றவியல் வழக்குகள் உடனடியாக தீர்க்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தினாலும் மக்களுக்கு அரசியல் நடைமுறைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் ஊழலை ஓரளவு ஒழிக்கலாம்.

    நான் :- நம் நாட்டில் தற்போது நடக்கும் அரசியல் ஜாதிகளை மையமாக வைத்து நடைபெறுவதாக உள்ளது.  இதை மாற்றி அமைக்க இயலுமா?


    திரு.  காமராஜர் :- மதவாத அரசியல் ஜாதியவாத அரசியலையும் நம் நாட்டில் வேறூன்றச் செய்தது பிரிட்டீஸ்காரர்களும் ஒரு சில காங்கிரஸ்காரர்களுமே ஆகும்.  காங்கிரசின் சுதந்திரப் போராட்ட வேகத்தை குறைப்பதற்கும் அதற்குள் பிளவுகளை ஏற்படுத்தவும் பிரிட்டீஸ்காரர்கள் ராஜதந்திர ரீதியாக திட்டமிட்டு இந்து முஸ்லீம் என்ற பேதமில்லாமல் வாழ்ந்த மக்களிடம் சிறுபான்மையினருக்கான தனித்தொகுதி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு என்றெல்லாம் பிரிவினை விதையைத் தூவினார்கள்.  பதவியைப் பிடிக்க வேண்டும்.  மக்களிடத்தில் தியாகத் தலைவர்களாக வலம் வரவேண்டும் என்ற ஆசையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மதப்பாகுபாடு மகுடிக்கு ஆட ஆரம்பித்தார்கள்.  அதே போன்றே மேல்ஜாதி ஆதிக்கம் என்ற கோஷங்களை முன்னிறுத்த பிரிட்டீஸ்காரர்கள் விரித்த வலையில் இந்தியத் தலைவர்கள் சிலரும் அகப்பட்டுக் கொண்டார்கள்.

    உதாரணமாக தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கங்கள் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பிராமணர் அல்லாதவன் ஆதரவைப் பெற்று அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தனர்.  பிராமணர் அல்லாத வகுப்பில் உயர் குடி சாதிகள் பிற்படுத்தப்பட்டோர்கள் தாழ்த்தப்பட்டோர்கள் என்று பலதரப்பட்ட சாதிகள் ஒன்று சேர்ந்தன.  தமிழ் நாட்டிலும், மஹாராஷ்டிரத்திலும் பிராமணர், பிராமணர் அல்லாதோர் முரண்பாடுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.  


 ஆந்திராவில் கம்மார் மற்றும் ரெட்டியார் முரண்பாடு ராஜஸ்தானில் ஜாட் மற்றும் ரஜபுத்திர முரண்பாடு குஜராத்தில் பணியா பட்டிதார் முரண்பாடு பீஹாரில் யாதவ் மற்றும் டாகூர் முரண்பாடு ஹரியானாவில் ஜாட் மற்றும் பிராமணர் முரண்பாடு கேரளாவில் ஈழவர் மற்றும் நாயர் முரண்பாடு ஆகியவைகளிலெல்லாம் ஆதிக்கம் செலுத்துவதற்கு நமது தலைவர்களும் பிரிட்டீஸருமே முழுமையான காரணம் ஆகும்.

    ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென்று உண்மையில் யாரும் ஆசைப்படவில்லை.  மக்களை தனித்தனிக் குழுக்களாக பிரித்து வைத்து இருந்தால் தான் தங்களது அரசியல் அதிகார வேட்டையைத் தொடர்ந்து நடத்த இயலும்.  ஜாதியின் பெயரைச் சொல்லி பதவிகளைப் பெற இயலும் என்று ஜாதிகளைப் பேணிபாதுகாக்க அரசியல்வாதிகள் முன்பெல்லாம் மறைமுகமாகச் செயல்பட்டார்கள்.  ஆனால் இப்போது எந்தவித கூச்சமும் இன்றி பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள்.

  ஜாதித் தலைவர்களைப் பின்பற்றும் தொண்டர்கள் ஒரு விஷயத்தைக் கவனத்துடன் சிந்திக்க வேண்டும்.  இந்தத் தலைவர்களால் தங்களது ஜாதி மக்கள் முன்னேறி உள்ளார்களா?  அல்லது தலைவர்கள் முன்னேறி உள்ளார்களா?  என்பதைச் சிந்தித்தார்கள் என்றால் உண்மை நிலை தெரியும்.  மேலும் அரசியலில் ஜாதி ஆதிக்கம் செலுத்துகிறாதா அல்லது ஜாதிகளில் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறதா என்பதை மக்கள் ஞாயதர்மத்தின்படி சிந்தித்தார்கள் என்றால் மத மோதல்கள் ஜாதி மோதல்கள் எல்லாம் முடிவுக்கு வந்து ஜாதி வெறியைத் தூண்டுபவர்களும் ஒரங்கட்ட ஆரம்பிப்பார்கள்.  மேலும் சட்டப்படி ஜாதியை ஒழிக்க பலவழிகள் உண்டு.  அதை நேர்மையான தலைவர்கள் செய்தார்கள் என்றால் நிச்சயம் நாடு நலம் பெறும்.


     நான் :- நமது நாட்டில் நிறுபான்மையினர் உண்மையாகவே பாதிக்கப்படுகிறார்களா?  அது உண்மை என்றால் அதை நிவர்த்திக்க என்ன செய்ய வேண்டும்?  எந்த அரசியல்வாதிகளும் சிறுபான்மையினர் குறை தீர்க்க முன்வரவில்லையே ஏன்?

    திரு.  காமராஜர் :- இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் கனடாவில் உள்ள க்யூபெக் மக்கள் இங்கிலாந்தில் உள்ள ஐயரிஷ் மற்றும் ஸ்காட்லாந்து மக்கள் ஸபெயினில் உள்ள பேஸ்கியூ மக்கள் பிரான்சில் உள்ள பிரிட்டன் மற்றும் குரோவென்கள் ஆகியோர்கள் தங்களின் தனிப்பட்ட பண்பாட்டு அடையாளங்களை நிலை நிறுத்திக் கொள்ள சில நூற்றாண்டுக்காலமாகவே பெரும்பான்மை மக்களிடம் போராடி வருகிறார்கள்.

  நமது இந்தியாவைப் பொருத்தவரை காஷ்மீர் மக்களின் தனிப்பட்ட விருப்பங்களைப் புறக்கணித்தே அந்தப் பகுதி நம்மோடு இணைக்கப்பட்டது.  அந்த மக்களின் அதிருப்தியைப் போக்குவதற்கு சலுகைகள் பல அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.  ஆனால் வழங்கப்பட்ட சலுகைகள் முழுமையாகச் செயல்படுத்தாமல் போனதாலும் அந்நிய சக்திகள் மக்களிடத்தில் ஊடுருவி பொய்ப்பிரச்சாரங்கள் பல செய்து தீவிரவாதத்திற்கு வழி வகுத்தார்கள். அரசியல் வாதிகள் சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கியைக் கைப்பற்ற கபட நாடகம் ஆடியதனால் பெரும்பான்னை மக்களின் உண்ர்வுகளைப் புண்படுத்தினர்.  இதனாலேயே மதங்களின் அடிப்படையில் அரசியல் போராட்டங்கள் வெடித்து பயங்கரவாதத்திற்கு வழி வகுத்துவிட்டது.


     தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்றால் சிறுபான்மையினர்க்கு சமூக ரீதியான சலுகைகள் அளிப்பது நாகரீக சமுதாயத்தின் கடமையாகும்.  அதே நேரம் அந்தச் சலுகைகள் தேவைப்பட்டவர்கள் அனுபவிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும்.  இந்தியாவைப் பொருத்தவரையில் சிறுபான்மை மக்களில் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.  அவர்களுக்கான சலுகைகளை அனுபவிப்பது சிறுபான்மையினன் மேட்டுக்குடி மக்களும் அரசியல் வாதிகளுமே ஆகும்.

 வேலை மறுக்கப்பட்டு சலகைகள் மறைக்கப்பட்டு வாடிக்கிடக்கும் சிறுபான்மை இளைஞர்களுக்கு இன உணர்வுகளையும் மத உண்ர்வுகளையும் தூண்டி விடுவதைத்தவிர வேறு எதையும் சிறுபான்மைத் தலைவர்கள் மேட்டுக்குடி வாசிகள் செய்வது இல்லை.  வெறியூட்டப்பட்ட அந்த இளைஞர்களின் செயல்பாட்டால் பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்கள் தங்களின் உண்மை எதிகளான அரசியல் வியாபாரிகளை மறந்து சிறுபான்மையினரை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.  இதன் விளைவுகளேதான் பஞ்சாப்பிலும் பார்த்தீர்கள்.  அசாமிலும், நாகாலாந்திலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

    அரசியல்வாதிகள் சிறுபான்மையினர்க்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு மட்டும்தான் இருப்பார்கள்.  எந்த நன்மையும் செய்யமாட்டார்கள்.  காரணம் அந்த மக்கள் தன்னிறைவு பெற்றுவிட்டால் தங்களை அண்டி இருக்க மாட்டார்கள்.  தங்களது நாட்டாமை செல்லுபடி ஆகாமல் போகும்.  கசாப்புக் கடைக்காரனை நம்பும் ஆடுகள் போல் சிறுபான்மையினர் இராமல் தங்களது தலைமுறைகளைத் தொழில் நுட்பத்திலும் அறிவுத் திறமையிலும் வல்லவர்களாக்க முயற்சிக்க வேண்டும்.  அந்தச் செயல் நடக்கும்போதுதான் இளைஞர்கள் கையிலிருக்கும் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் மௌனமாகும்.


     நான் :- வருங்காலத்தில் நமது இந்தியா எப்படி வளர்ச்சி அடையுமா?  அது எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

    திரு.  காமராஜர் :- நமது நாட்டு வரலாற்றில் இந்து மன்னர்களின் முடி ஆட்சி முகலாயர்களின் சர்வாதிகாரம் ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கம் ஆகியவற்றைக் கடந்து 1950ம் ஆண்டு மக்களாட்சி குடி அரசை நிறுவி உள்ளோம்.  41 வருட அரசு செயல்முறை என்பது வரலாற்று நோக்கில் மிகச்சிறிய காலமே ஆகும்.  இந்த ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சி பெற்று இருப்பது உண்மைதான் என்றாலும் காலத்திற்கு ஏற்ற முழு வளர்ச்சியை நாம் அடையவில்லை என்பது நிதர்சனம் ஆகும்.

  இதற்குக் காரணம் மக்கள் நலனில் அக்கரை இல்லாத தலைவர்கள் கடமை உணர்வு அற்ற அதிகாரிகள் தேச நலனுக்காகப் பாடுபடாத அரசியல் கட்சிகள் அறியாமையில் கிடக்கும் மக்கள் என்று பல காரணங்களை சொல்லலாம்.  இந்த நிலை மாற நம் நாடு முன்னேற்றம் அடைய இரண்டு மாற்றங்கள் தேவைப்படுகிறது.  


   முதலில் தற்போது உள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை என்ற நிலையை மாற்றி அமைக்க மக்களாட்சி முறை போன்று ஜனாதிபதி மக்களாட்சி என்ற முறையை கொண்டு வர வேண்டும்.  மக்களுக்கு ஒழுங்காக செயல்படாத தலைவர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை வழங்க வேண்டும். 

  இரண்டாவது முழுமையான கூட்டாட்சி முறையை ஏற்படுத்தி மாநிலங்களுக்கு முழு அதிகாரங்களை நிதி ஆதாரங்களை பணிகளை வழங்கி விடுவது சிறப்பானதாகும்.  இதனால் மத்திய அரசாங்கத்தின் வேளைப்பளூ குறையும் பாதுகாப்பு உயர்மட்ட நீதித்துறை வான், கடல் மற்றும் தரைவழி போக்குவரத்து தகவல் தொழில் நுட்பம் பணம் மற்றும் வங்கித்துறை, விண்வெளி ஆய்வு புவி ஆய்வு ஆகியவை மட்டும் மத்திய அரசு நிர்வாகத்திலும் மற்றவை அனைத்தும் மாநிலங்களின் கையிலும் கொடுக்க வேண்டும்.

 இதுதான் சரியான கூட்டாட்சி முறை ஆகும். ஜனாதிபதியின் கையில் முழு அதிகாரங்கள் இருக்கும்பேது அமைச்சரவை சிக்கலும் அரசியல்வாகிகளின் சிக்கலும் குறையும்.  மக்கள் சேவை என்ற பெயரில் கொடுக்கப்படும் வீண் கவர்ச்சியான திட்டங்களும் இலவச சலுகைகளும் நிறுத்தப்பட்டு தொலை நோக்குப் பார்வையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

   கல்வித்துறையில் பழைய நடைமுறைகள் சிலவற்றை கொண்டு வர வேண்டும் இன்றும் அதாவது பஞ்சாயத்துக்களின் அதிகாரங்களுக்கு கீழ்கல்வி நிலையங்கள் அலுவலகங்கள் வர வேண்டும்.  பாடத்திட்டத்தில் சிறந்த மனப்பாடம் செய்பவனே வெற்றி பெறுபவன் என்பதை மாற்றி செயல்பூர்வமான பாடத்திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.  அப்படிச் செய்யும் பட்சத்தில் துடிப்பு மிக்க செயல்திறன் மிக்க இளையதலை முறையினர் உருவாகுவார்கள்.

  நமது குழந்தைகள் நம்மை அரசாண்ட அந்நியர்களைப் பற்றியே இன்னும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  நமது நாட்டின் பெருமை நமது சுயவிஞ்ஞானம் பண்பாடு ஆகியவற்றை அவர்களுக்கு முழுமையாகப் போதிக்க வேண்டும்.  தனது பெருமையைத் தெரியாத எவனும் முழுமனிதனாக வாழ முடியாது. இன்று பெருவாரியான மக்கள் முழு மனிதனாக இல்லை.

    மேலும் வருங்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் மனிதர்களுக்கு இயற்கையாகவே உண்டு.  காரணம் வருங்காலத்தைப் பற்றிய கற்பனைகள் சுகமான அனுபவத்தை தருவதனாலும் ஆகும்.  ஆனால் மனிதர்களால் வருங்காலத்தை அவ்வளவு தெளிவாக அறிந்து கொள்ள இயலாது. 

  ஆவிகளான எங்களை காலம் கட்டுவது இல்லை.  எங்கள் முன்னால் மூன்று காலங்களுமே பரந்து கிடப்பதை காணமுடிகிறது.  அந்தக் காட்சியில் வருங்கால இந்தியா தன்னிகரற்ற தலைவன் ஒருவனின் ஆட்சியின் கீழ் பொருளாதாரத்திலும் ஆயுத பலத்திலும் நவீன தொழில் நுட்பத்திலும் தலை நிமிர்ந்து நிற்பதைக் காண முடிகிறது. 

  உலக அரங்கில் இந்தியாவை ஒளி வெள்ளத்தில் குளிப்பாட்டும் அந்த இளம் ஞாயிறு தெற்கிலிருந்து உதயமாவதை நான் காண்கிறேன்.  அந்தக் காலம் வெகுவிரைவில் வரும்.  அப்போது இந்தியாவிலிருக்கும் பிரச்சினைகள் என்ற குப்பைக் கூளங்கள் முற்றிலுமாக சுத்தப்படுத்தப்பட்டு இருக்கும் என்பது நிச்சயம்.  அந்த இளம் ஞாயிறின் ஒளிக்கதிர்கள் பல நூறு வருடங்கள் இந்தியாவை உலகின் தலைவனாக திகழச் செய்யும்.


     காமராஜருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் நான்கு மணி நேரம் நீடித்தது.  இன்னும் பல விஷயங்களை அவர் சொல்லி இருந்தாலும் அவரின் வேண்டுகோளின் படி முழுமையாக இங்கு தர இயலவில்லை.

    இந்த நான்கு மணி நேர உரையாடலில் மீடியத்தின் உடலிலிருந்து பலமுறை அவரது ஆவி வெளியில் வந்து மீடியத்திற்கு இளைப்பாறுதல் தந்தது.  பேச்சின் நடுவில் மீடியம் மிகவும் களைத்து காணப்பட்டார்.  உங்கள் மூலமாக காமராஜர் இவை எல்லாம் பேசினார் என்று விளக்கிச் சொன்னபோது மீடியத்திற்கு அந்த விஷயங்கள் எதுவும் புரியவில்லை.  தெரியாத பாஷையில் பேசுபவர்களைப் பார்ப்பது போல் அவர் என்னைப் பார்த்தார். ------> இனி உஜிலாதேவி பதிவுகளை செல்பேசியிலும் வாசிக்கலாம் அதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது Google Play‎ Store -க்கு சென்று Ujiladevi என்று டைப் செய்து நமது Apps உங்கள் தொலைபேசியில் Download  செய்து கொள்ளுங்கள் அல்லது  

நேரடியாக Download செய்ய கிழே கிளிக் செய்யவும் -----------------------------------------

Contact Form

Name

Email *

Message *