Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜியின் செவ்வாய்கிரக பயணம் !


யோகியின் ரகசியம் 1
  மக்கு தெரியாததை அறிந்து கொள்ளும் ஆர்வம் இயற்கையாக எல்லோருக்கும் உண்டு. தென் அமெரிக்கா நாட்டில் மறைந்து போன மாயன்களின் அதிசய ஆற்றல்களை அறிந்து கொள்வதற்கே ரேஷன் கடையில், மண்ணெண்ணெய் வாங்குவதற்கு வரிசையில் நிற்பது போல நமது ஜனங்கள் நிற்கிறார்கள் என்றால் கண்ணுக்கும், கருத்துக்கும் வெகுதூரத்தில் இருக்கின்ற அண்டங்கள் மற்றும் அமானுஷ்ய இரகசியங்களை தெரிந்துகொள்ளவே வேண்டாம் என்று எந்த சோம்பேறியும் சொல்லமாட்டான். தள்ளாடி தள்ளாடி மரணப்படுக்கையில் கிடக்கும் கிழவன் கூட இப்படிப்பட்ட செய்தி கிடைக்கிறது என்றால் எழுந்து திண்ணையில் வந்து உட்கார்ந்து கொள்வான். அவ்வளவு ஆர்வம் மனித சமூகத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.

பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ்கிறார்களா? வேற்று கிரக மனிதர்கள் பூமிக்கு வந்து போகிறார்களா? பூமியில் அறியப்படாத இரகசியங்கள் வேறு எதாவது உண்டா? கூடு விட்டு கூடு பாய்வது என்றால் என்ன? அமானுஷ்யமான உருவங்களை எல்லோரும் பார்க்க முடியவில்லையே ஏன்? பார்க்க என்ன செய்ய வேண்டும்? இப்படி நிறைய கேள்விகள் நம்மிடம் உண்டு. இந்த கேள்விகள் பலவற்றிற்கு அறிவியல் கூறுகிற பதில்கள் நமக்கு தெரியும். நமது பண்டையகால ரிஷிகள் வேதங்களிலும், வேறு பல நூல்களிலும் வான சாஸ்திரம், கிரகங்களின் தன்மைகள், ஆகாயத்தில் பறக்கும் வித்தை என்பது போன்று பல அறிய இரகசியங்களை கூறி வைத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லி சென்றிருக்கின்ற இரகசியங்கள் என்ன? அத்தகைய இரகசியங்களை அவர்களால் மட்டும் தான் காண முடியுமா? கண்டு கூற முடியுமா? இன்று இருக்கும் ஆன்மீக பெரியவர்கள் எவராலும் அப்படி கூற இயலாதா? என்பது போன்ற பல கேள்விகளை குருஜியிடம் நாங்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. அதற்கு அவர் நேராகவும், மறைமுகமாகவும் பதிலைச் சொல்வார். அந்த பதில்களில் சிலவற்றை உங்களோடு அவ்வப்போது பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகிறோம். அந்த வகையில் குருஜியிடம் பூமியை தவிர மற்ற இடங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டோம் அதற்கு அவர்


புராணங்களை பற்றி நமக்கு மிக தவறான அபிப்ராயங்கள் இருக்கிறது. புராணங்கள் என்றாலே அதில் மிகைபடுத்தி கூறப்பட்ட விஷயங்கள் இருக்கும். பொய்களும், அதீதமான கற்பனைகளும் மலிந்து கிடக்கும் எதை நம்பினாலும் நம்பலாம். புராணங்களை நம்ப கூடாது என்று நினைக்கிறோம். இது நமது இயற்கையான சுபாவம் அல்ல. வெள்ளைக்காரன் நமது மண்டையை உடைத்து, அதற்குள் திணித்து வைத்த சுபாவமாகும். முதலில் நமது அறிவு வளர வேண்டுமென்றால் இது இப்படிதான் இருக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக முடிவு கட்டிவிடும் மனோ பாவத்தை மாற்ற வேண்டும். புராணங்களிலும் உண்மைகள் இருக்கலாமோ, அவைகளிலும் நம்ப தகுந்த காரியங்கள் எதாவது மறைந்து கிடக்குமோ? என்ற ஆய்வு மனப்பான்மையை வளர்த்து கொண்டாவது அவைகளை படிக்க வேண்டும்.

பல புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் அசாத்தியமான வீரம் படைத்த அரச குமாரர்களும் பல உலகங்களுக்கு சென்று வந்ததாகவும், அவைகளை வென்று வந்ததாகவும் கருத்துக்கள் நிறையவே இருக்கிறது. பொய்யான ஒரு விஷயத்தை கண்ணை மூடிக் கொண்டு திரும்ப திரும்ப சொல்வது நமது முன்னோர்களின் இயல்பு அல்ல. ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லாத விஷயத்தை அவர்கள் பேச மாட்டார்கள். உதாரணத்திற்கு சந்திரனை எடுத்து கொள்வோம். சந்திரன் என்றாலே குளிர்ச்சி, சிலேத்துமம், தண்ணீர் என்று தான் நமது பெரியவர்கள் கூறினார்கள். ஆனால், விஞ்ஞானம் என்ன சொன்னது ஒட்டுமொத்த நிலாவையே பிடித்து வந்து ஆலையில் போட்டு அரைத்து பிழிந்து எடுத்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்று தான் ஆரம்பத்தில் வாதிட்டார்கள். கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்தார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. சந்திரனில் இருக்கும் ஒரு சிறு நீர் பிடிப்பு பகுதியை பூமிக்கு கொண்டுவந்தால் பூமியில் முக்கால்வாசிபேர் சில வருடங்கள் தாகம் இல்லாமல் இருப்பார்கள் என்ற அளவிற்கு பேச வந்துவிட்டார்கள். எனவே விஞ்ஞானம் கூறுவது இறுதியான உறுதியான முடிவுகள் அல்ல. காலந்தோறும் அவைகள் மாறிக்கொண்டே வருவதை காணலாம். அதே போலதான் வேறு உலகங்களை பற்றிய நிகழ்வுகளும்.

நமது ரிஷிகளில் பலர் “ஆகாச காமினி” என்ற மந்திர சித்தி பெற்றவர்கள். இந்த மந்திர சித்தி என்ன பலனை தருமென்றால் நமது உடம்பு ஒரு இடத்தில் பத்திரமாக இருக்கும் போதே,  நமது உயிர் உடம்போடு சிறிய தொடர்பை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமென்றால் சென்று வரலாம் என்பதாகும். இதன் சக்தியால் பூமியை மட்டுமல்ல. பூமிக்கு அப்பாலும் சென்று பல அரிய காட்சிகளை, இரகசியங்களை தெரிந்து வரலாம். அந்த வகையில் எந்தெந்த கிரகங்களில் உயிர்கள் இருக்கிறது. எதில் இல்லை என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம். இதுவரையில் நமது ஞானிகள் பூமியை தவிர, பதினாலு உலகங்கள் உயிர்கள் வாழக்கூடிய தகுதியில் இருக்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதல, விதல, சுதல, பாதாள, என்பது தொடங்கி பூ, புவ, சுவ என்று அதன் பட்டியல்கள் செல்கிறது இதை மிக சுலபமாக மேலோகம், ஏழு கீழ் லோகம், ஏழு என்று நாம் பிரிக்கலாம்.

இஸ்லாமிய  இறை வேதமான குரானில் கூட, ஏழு வானங்கள் இருப்பதாக சொல்லபட்டிருப்பது ஏழு உலகங்களை தான் குறிக்குமென்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவ விவிலியத்திலும், வானவர்கள் மேலே இருந்து இறங்கி வந்தார்கள் என்று கூறுவதையும் இந்த வகைகளிலே கருதுகிறேன். எனவே பூமியை தவிர வேறு பல கிரகங்களில் உயிர்வாழ்க்கை இருக்கிறது வேண்டுமானால், நமது சூரிய குடும்பத்திலுள்ள மற்ற கிரகங்களில் தற்போதைய நிலையில் உயிர் வாழ்க்கை எதுவும் இல்லை என்று கூறலாம். ஆனால், மற்ற சூரிய குடும்பத்தில் நிலைமை இப்படி இல்லை. அங்கே உயிர்கள் உண்டு என்று பதில் சொன்னார். அவரிடம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததா, அதைப் பற்றி நமது முன்னோர்கள் எதாவது கூறியிருக்கிறார்களா? நீங்கள் சொல்லும் ஆகாச காமினி மந்திரத்தால் உங்களுக்கு சொந்த அனுபவங்கள் ஏதாவது உண்டா? என்று கேட்டோம்.

நமது பூமியை போலவே செவ்வாயில் உயிர் வாழ்க்கை இருந்திருக்கிறது. கந்த புராணத்தில் சூரபத்மன் செவ்வாய் கிரகத்தில் தான் தேவர்களை அடைத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் புராணத்தில் சொல்லப்படும் சிறைச்சாலை பற்றிய வர்ணனைகளும் தற்போது தொழில்நுட்ப உதவியால் நாம் பெற்றிருக்கும் செவ்வாயை பற்றிய புகைப்படங்களும் இதை நமக்கு சொல்லாமல் சொல்லுகின்றன. இன்று பூமியை நாம் இயற்கையை சிதைத்து வாழ்ந்து கொண்டிருப்பது போல, அன்று செவ்வாய் வாசிகள், செவ்வாயை கொன்றிருக்கிறார்கள். குருஷேத்ராவில் புதைபொருளாக கண்டெடுக்கப்படும் எலும்புகளில் அணுக்கதிர் தாக்கம் இருப்பதை விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அணுவாற்றலை அக்கால மனிதர்களே அறிந்து வைத்திருக்கின்ற போது, செவ்வாயில் வாழ்ந்தவர்கள் அணுவை விட சக்தி வாய்ந்த வேறு எதாவது ஒரு வகை கனிமத்தை கண்டுபிடித்து விபரீதமாக விளையாடி தாங்கள் வாழும் பகுதியை முற்றிலுமாக கொலை செய்திருக்கலாம். ஆனாலும், செவ்வாய் முழுமையாக செத்துவிடவில்லை. அதன் ஒரு பகுதியில் நீரும், காற்றும் இன்னும் உயிர் துடிப்போடு இருக்கிறது. சில உயிர்களும் கூட அங்கிருக்கலாம். இன்னும் சிறிது காலத்தில் மக்கள் நம்பும் படியான ஆதாரங்கள் கண்டிப்பாக கிடைக்கும். அப்போது நான் சொல்வது உண்மை என்று தெரியவரும். என்று பதில் சொன்னார். இந்த பதிலில் அவரது ஆகாச காமினி மந்திர அனுபவமும் கலந்திருப்பதை எங்களால் உணர முடிந்தது.
குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்
Contact Form

Name

Email *

Message *