Store
  Store
  Store
  Store
  Store
  Store

மூன்றாவது கண்ணை திறந்து வைத்த குருஜி !

யோகியின் ரகசியம்  9


    ரு சமயம் இளைஞர் ஒருவர் குருஜியை காண ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அவர் அடிக்கடி வந்து குருஜியை பார்ப்பதும், அவரோடு மனம் விட்டு பேசுவதும், குருஜியும் வயது வித்தியாசமின்றி அந்த இளைஞரோடு சகஜமாக உரையாடுவதும் வழக்கமாக நடப்பது தான். இவரைப் போன்றே பல இளைஞர்கள் குருஜியோடு உரையாடுவதை விரும்புவார்கள்.

காரணம் யார் என்ன விரும்புகிறார்களோ அதைப் பற்றி ஆழ அகலத்தோடு கருத்துக்களை பரிமாறுகிற வல்லமை குருஜிக்கு உண்டு. அதே நேரம் மற்றவர்கள் கூறுகிற சரியான கருத்துக்களை உடனுக்குடன் ஏற்று கொள்வார். தனக்கொரு விஷயம் தெரியவில்லை என்றால் அதை தயக்கமே இல்லாமல் ஒப்புக்கொள்வதும், தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் குருஜியின் இயல்பு.

சில நேரம் இளைஞர்கள் சில்லறைத் தனமான கேள்விகளை கேட்பார்கள். இது சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கு சங்கோஜமாகபடும். ஆனால், குருஜி அதைப்பற்றி எல்லாம் வருத்தப்பட மாட்டார். ஆத்மாவுக்கும், உடம்புக்கும் உள்ள தொடர்பை தத்துவ ஞான தெளிவோடு கூறுவதற்கு எத்தனை அக்கறை எடுத்துக் கொள்கிறாரோ அதே அக்கறையோடு தூண்டில் போட்டு மீனை பிடிக்கும் வித்தையை பற்றியும் விளக்கம் கொடுப்பார். இந்த இயல்பு கூட குருஜி பக்கம் மற்றவர்களை ஈர்ப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இன்றும் அந்த இளைஞர் அப்படி ஒரு சிறிய கேள்வியை தான் குருஜியிடம் கேட்டார். நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கொரு பெண்ணையும் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதைப் பற்றி என் பெற்றோர்களோடு பேசினால் மெளனம் சாதிக்கிறார்கள். உறவினர்கள் மூலம் சொன்னால் திருமணம் செய்வதற்கு அவனுக்கு என்ன தகுதி வந்திருக்கிறது. கொஞ்ச காலம் போகட்டும். பொறுத்திருக்க சொல்லுங்கள் என்று பதில் சொல்கிறார்கள். என் உறவினர்கள் கூட, அது சரியான பதிலும் என்று எனக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

இவர்களது சொல்லும், செயலும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கல்யாணம் செய்ய ஆண் பிள்ளையாக இருந்தால் போதாதா? வேறு என்ன தகுதி வேண்டும்? தகுதி உள்ளவன் தான் திருமணம் செய்து கொள்ள முடியுமென்றால் ஊரில் பாதி பேர் பிரம்மச்சாரியாக அலைய வேண்டியது தான். இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் குருஜி? என்று அந்த இளைஞன் கேட்டான். சிறிது நேரம் அவன் முகத்தை உற்றுப் பார்த்த குருஜி தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். பிறகு, நீ கூறுவது சரிதான் தம்பி. தகுதி படைத்தவனுக்கே தாம்பத்தியம் நடத்த அருகதை இருக்கிறது என்றால், ஊரில் அரை பங்கு அல்ல. தொண்ணூறு பங்கு மனிதர்களுக்கு திருமணம் நடக்காது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று. திருமணம் என்பது நீ நினைப்பது போல இரயிலில் ஏறி இறங்கும் சாதாரண செயல் போன்றது அல்ல. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். சம்மந்தமே இல்லாத இன்னொரு உயிரை உன்னோடு சேர்த்து கொண்டு வருங்காலத்தை நோக்கி பயணம் நடத்தும் சத்திய சோதனை. அந்த தாம்பத்திய வேள்விக்குள் இறங்குவதற்கு முன்பு சிறிது யோசிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

நமக்கு அறிவு இருக்கிறதா? அறிவை வைத்து செயல்பட கூடிய ஆற்றல் இருக்கிறதா? மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருக்கிறதா? ஒரு குழந்தை பிறந்தால் அதைப் போற்றி பாதுகாத்து வளர்க்கும் தெளிவு இருக்கிறதா? என்பதெல்லாம் கூட முக்கியமில்லை. கட்டிய மனைவியை அப்பன் சம்பாதித்த சொத்தில் கை வைக்காமல் காப்பாற்றக் கூடிய தைரியம் இருக்கிறதா?  உன் சுய சம்பாத்தியத்தில் மூன்று வேளை மனைவிக்கு சோறு போடக்கூடிய தெம்பு இருக்கிறதா? என்பதை பற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

அப்பா சட்டைப் பையில் காசு எடுக்காமல், அம்மாவின் சிறுவாட்டு காசை யாசகம் கேட்காமல், உன் மனைவிக்கு புடவை எடுக்கும் அளவுக்கு சம்பாத்தியத்தை வளர்த்து கொள்ளும் போது, திருமணம் செய்கின்ற தகுதி உனக்கு சிறிது வந்திருப்பதாக பெற்றவர்கள் நினைப்பார்கள். ஆகவே, உன் தாய் - தகப்பன் அவர்களது சிந்தனையே மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நீ போராடுவதை விட, அவர்களாக மாறும் வண்ணம் உன் செயல்பாட்டை மாற்று என்று அவனுக்கு விளக்கம் கூறினார்.

அந்த இளைஞன் சிறிது நேரம் தலைகுனிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனது கண்களில் நீர் கசிவு ஏற்படுவது போல இருந்தது. திடீரென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை. குருஜியின் காலடியில் விழுந்து கதறி அழுதான். குருஜி அவனது தோள்களை ஆதரவாக தொட்டு அவனது தலையில் கை வைத்து தனது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்தார். அவன் அழுது முடிப்பதற்கு பத்து நிமிடம் ஆகியிருக்கும். பெரிய புயல் வந்து ஓய்ந்தது போல அவன் நிலை இருந்தது. அமைதி அடைந்து மீண்டும் ஒரு முறை குருஜியை நமஸ்காரம் செய்து கிளம்பி சென்றுவிட்டான். அதன் பிறகு அவனைப் பற்றி நாங்களும் மறந்து போயிருந்தோம்.

ஒரு வாரம் ஆகியிருக்கலாம். அந்த இளைஞனின் பெற்றோர்கள் ஆசிரமத்திற்கு வந்து குருஜியை நமஸ்காரம் செய்தார்கள். எங்கள் பிள்ளையை பிள்ளையாக மாற்றி கொடுத்த உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது போதாது. எங்கள் வாழ்க்கையையே வெளிச்சமாக மாற்றி இருக்கிறீர்கள். காலம் முழுவதும் உங்களுக்கு கடன் பட்டிருக்கிறோம் என்று ஏதேதோ வார்த்தைகள் சொல்லி நெகிழ்ந்து போனார்கள். எங்கள் யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பிறகு அந்த வயதான பெற்றோர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள்,

போன வாரம் சுவாமியை பார்த்து வந்த என் பையன் இரவு சாப்பிடவில்லை. வெகு நேரம் எதையோ யோசித்த வண்ணம் இருந்தான். காலையில் விழித்ததும் என்னிடம் வந்து அப்பா உங்கள் நண்பர் சென்னையில் தொழில் செய்கிறாரே அவரிடம் எனக்கு வேலை வாங்கி தர முடியுமா? என்று கேட்டான். அவன் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. இவனை நம்பி நண்பரிடம் வேலை கேட்டு அதன் பிறகு இவன் போக மாட்டேன் என்று சொல்லி விட்டால் நன்றாக இருக்காது என்று இரண்டு நாட்கள் அமைதியாக இருந்து விட்டேன்.

அவனும் வீட்டை விட்டு வெளியே போகாமல், என்னிடம் அடிக்கடி என்னை வேலையில் சேர்த்து விடுங்கள் என்று அடம் பிடித்தான். நானும் நண்பரிடம் பேசி அவனுக்கு வேலைக்கு உறுதி செய்துவிட்டேன். இன்று மாலை அவன் சென்னை கிளம்பி சென்று விட்டான் போகும் போது சுவாமி என்னை தொட்டு ஆசிர்வாதம் செய்தார். அவர் தொட்ட பிறகு என் உடம்பில் மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். அதற்கு முன் இருந்த சோம்பேறித்தனமும், குழப்பமும் என்னை விட்டு சுத்தமாக அகன்று விட்டதை அறிந்தேன். எனவே என் புது வாழ்வை துவங்கப் போகிறேன். அதற்கு சுவாமியே காரணம் அவரை நான் முழுமையாக வெற்றி அடைந்து வந்து தரிசனம் செய்கிறேன் அதற்கு முன் நீங்கள் சென்று என் நன்றியையும், வணக்கத்தையும் சொல்லுங்கள் என்றான் என்று அந்த இளைஞனின் தந்தை நா தழுதழுக்க பேசினார்.

இந்த சம்பவத்தை பற்றி குருஜியின் சீடர் கோவிந்தசாமி எங்களிடம் விளக்கும் போது குருஜியை போன்று குண்டலினி சக்தி முழுமையாக கைவரப்பெற்ற ஞானிகள் நம்மை தொடும் போதோ அல்லது நாம் அவர்களை தொடுகிற போதோ நமது கர்மா பெருமளவு விலகி அந்த ஞானிகளிடம் சென்றடைகிறது. அதனால் தான் ஞானிகளில் பலர் சாதாரண மனிதர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். அவர்கள் நம்மை தொடுவதும் இல்லை. தொட விடுவதுமில்லை. நம் குருஜி கூட அப்படி தான்.

தேவையில்லாமல் தன்னை தொட யாரையும் அனுமதிக்க மாட்டார். அதை போன்று யாரை வேண்டுமென்றாலும், தொட்டுவிடவும் மாட்டார். அதையும் தாண்டி அவர் தொடுகிறார் தொட நமக்கு அனுமதி தருகிறார் என்றால் இறைவனது ஆணைப்படி நமது கர்மா முடிவுக்கு வந்து, நமது வாழ்க்கை பாதையை சரியான திசையில் திருப்பி விடுகிறது என்று அர்த்தம். அந்த இளைஞனுக்கும் திசை தெரியாமல் இருந்த வாழ்க்கை, சரியான கோணத்தில் செல்ல துவங்கி இருக்கிறது. இனி அவனை வெல்ல யாராலும் இயலாது. என்று எங்களது குழப்பங்களுக்கு சரியான தெளிவை தந்தார்.

இதை போன்று வேறொரு இளைஞனின் வாழ்க்கையை பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். குருஜியை காண்பதற்கும், அவரோடு தங்கியிருந்து சாஸ்திரங்கள் சிலவற்றை கற்றுக்கொள்வதற்கும், இலங்கையிலிருந்து அந்த இளைஞர் வந்திருந்தார். பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக தெரிந்தாலும் கூட உள்ளத்தில் குழந்தை போன்றவர். மிக அருமையாக சமையல் செய்வார். யாழ்ப்பாணத்து சமையலை அவர் செய்கிற விதம் குருஜியை மிகவும் கவர்ந்து விட்டது. காரம், மணம் மிகுந்திருக்கும் அந்த சமையலை கண்களில் நீர் துளிர்க்கும் வண்ணம் சாப்பிடுவது குருஜிக்கு மிக பிடித்தமான செயலாக இருந்தது. ஆசிரமத்தில் தங்கியிருந்த பல நாட்களில் அவரை சமைக்க சொல்வார் குருஜி. அந்த வகையில் அந்த இளைஞருக்கு மகிழ்வு இருந்தாலும் அவரை பொறுத்தவரை ஒரே குறை எதை படித்தாலும் நினைவில் நிற்க மறுக்கிறது. எதிலும் சில நிமிடங்களுக்கு மேல் மனதை குவிக்க முடியவில்லை என்பது தான் இதை பற்றி குருஜியிடம் அவர் பலமுறை சொன்னாலும் குருஜி அதை காதில் போட்டு கொண்டதாக தெரியவில்லை.

அந்த இளைஞர் தாய் நாடு திரும்ப வேண்டிய காலம் வந்தது. நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஆனாலும், மனது வந்த போது எப்படி நிறையாமல் இருந்ததோ அதே போலவே இன்னும் இருக்கிறது கங்கை கரைக்கு வந்தும், தாகத்தோடு செல்வது போல் செல்கிறேன் என்று கண்ணீருடன் தொழுது நின்றார். அவரை தன் பக்கத்தில் அழைத்த குருஜி அவர் நெற்றிப் பொட்டில் கை வைத்து எதோ செய்தார். பிறகு நன்றாக கண்ணை மூடி இந்த புத்தகத்தை படி என்றார். நாங்கள் ஆச்சரியப்பட்டு விட்டோம். கண்களை திறந்து கொண்டே சரளமாக படிக்க முடியாத மிகச்சிறிய எழுத்து கொண்ட அந்த புத்தகத்தை கண்களை மூடி எப்படி படிப்பது என்று குழம்பினோம்.

ஆனால் அந்த அதிசயம் நடந்தது கண்கள் விரிய விரிய திறந்து வைத்தால் எப்படி மடை திறந்த வெள்ளம் போல் தமிழை வாசிக்க முடியுமோ அதை போன்று இறுக மூடிய கண்களால் அந்த இளைஞர் புத்தகத்தை படித்தார். அந்த இளைஞருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. குருஜியின் காலடியில் விழுந்து உருண்டு புரண்டார். தேடினாலும் கிடைக்காத வரத்தை பெற்றேன் என்று ஆனந்த கூத்தாடினார். இன்னும் மூன்று நாள் கண்களை மூடி உன்னால் படிக்க முடியும் அதன் பிறகு இந்த சக்தி உன்னிடமிருந்து விலகி விடும். ஆனாலும், உன் மனது நிமிட நேரத்தில் இனி வாழ்நாள் முழுவதும் குவிந்து வந்துவிடும். ஆழ்ந்து சிந்தித்தார். உன் சென்ற பிறவியை அறிந்து கொள்ளும் அளவிற்கு நினைவாற்றல் உனக்கு பெருகும். இந்த பிறவியோடு உன் வாழ்வு முற்றுப்பெறும். மீண்டும் நீ பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இறைவன் உனக்கு அனுக்கிரஹம் செய்வார். எனவே நீ இன்று முதல் நல்லதை நினை. நல்லதை செய். மகிழ்வோடு உன் நாட்டுக்கு சென்று வா என்று அந்த இளைஞரை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

இப்போது பல விஷயங்கள் புரியத் துவங்கியது. சூரியனை தொடுகிற சிட்டுக் குருவி கூட சூரியனாக மாறி விடும். பனிக் கூட்டத்தில் விழுகிற மலர் காலம் கடந்தாலும், மலர்ச்சியோடு இருக்கும். ஞானிகளின் அருகாமை என்பதும் சாதாரண மனிதர்களை முக்தி  நிலைக்கு கொண்டு சென்று விடும் அதை நாங்கள் தினசரி பார்த்து வருகிறோம். இந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறுவதா அல்லது குருஜிக்கு நமஸ்காரம் செய்வதா என்று பல நேரம் புரிவதில்லை.                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்


Contact Form

Name

Email *

Message *