Store
  Store
  Store
  Store
  Store
  Store

உறங்குகிற சாட்டை !


ற்றையடி பாதையிலே
நிலவு முளைத்த நேரத்தில்
ஒற்றை மாட்டுவண்டி
தடுமாறி தடுமாறி போகிறது.

சக்கரங்கள் சுற்றும் போது
மணிசத்தம் கேட்கும் போது
வீசுகின்ற காற்றில் ஓர்
வெம்மை தெரிகிறது.

நடந்து வந்த பாதையெல்லாம்
செந்தனலின் தகிப்பு
இழுத்துவிடும் மூச்செல்லாம்
நீராசையின் தவிப்பு

ஓடி ஓடி விறகுவெட்டி
கட்டுக்கட்டாய் சுமையை தூக்கி
கூன் விழுந்து நடந்தது தான்
முடிந்த கதையின் மிச்சம்

தண்ணீருக்கு தவமிருந்து
குளக்கரையில் காத்திருந்து
தொண்டை வறண்டு போனது
தொடர்கதையின் எச்சம்

கருக்கு மட்டையெடுத்து
சதை பிளந்த புண்ணில் சொரிந்து
வடியும் குருதியிலே ஒப்பாரி வைக்கும் மனமே
வாய்த்ததெல்லாம் கனவென்ற
நிஜம் தெரியாதா உனக்கு.

உனக்குள் மொட்டவிழும்
சிந்தனை அரும்புகள்
உன்னை செதுக்குகின்ற சிற்றுளிகள்
உன்னை காட்டுகின்ற கண்ணாடிகள்
இன்னும் எத்தனைமுறை அரிதாரம் பூசினாலும்
மாறாத உன் வடிவம்
மாட்டுவண்டி சக்கரமாய்
உன்னை நகர்த்தி செல்லும்


உன்வண்டியை இழுத்துசெல்லும் மாடுகளை
குளிப்பாட்டும் குளத்தில் உள்ள
சகதியும் சந்தனமும்
உனது அடிச்சுவடாய்
காலமென்னும் பாதையில் பதிந்துவிடும்.
நான்கு சுவருக்குள் நடக்கும் நாடகத்தை
காலத்தால் எப்போதும் கரைத்துவிட முடியாது.

மலைகளின் மேல் மோதி எதிரொலிக்கும்
சங்கநாதத்தின் பேரோலியாய்
உன் காதுகளில் இரைச்சலோடு துளைபோடும்
சிந்தனை அம்புகளை
கூர்மையாக்க பழகிக்கொள்


வலிமையற்ற முருங்கை மரம்
சிறிய காற்றில் விழுந்துவிடும்
வயிறு காய்ந்த நொண்டி மாடு
வண்டியை குடைசாய்த்து தள்ளிவிடும்
ஆசைகளின் மீது கட்டிய மாளிகை
அரைநொடியில் வீழ்ந்துவிடும்

ஒற்றையடி பாதை என்பது
உனக்கும் எனக்குமுள்ள ஒரே வாழ்க்கை
உருளுகிற வண்டி என்பது
ஓடிவரும் சிந்தனைகள்
உருட்டுவதும் புரட்டுவதும்
உன்கையிலும் என் கையிலும்
உறங்குகிற சாட்டையில் உள்ளது.
Contact Form

Name

Email *

Message *