Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜி தரிசித்த லிங்க ரூப விஷ்ணு !


யோகியின் ரகசியம்  11


      மது ஆசிரமத்தின் முன்னால் இருந்த கொய்யா மரத்தடியில் குருஜி அன்று அமர்ந்திருந்தார். இப்போது நான் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில் இரண்டு வருடத்திற்குள் சிவனும், விஷ்ணுவும் இணைந்தது போலிருக்கும் மூர்த்தியை ஸ்தாபிதம் செய்ய வேண்டும். அதன் மூலம் மக்கள் பலருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்று சொன்னார்.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், பிரார்த்தனை மண்டபத்தில் இருக்கின்ற பகவான் கிருஷ்ணர், குருஜியினால் மந்திரப் பூர்வமாக வடிவமைக்கப்பட்டவர். ஆசிரமவாசிகளும் சரி, குருஜியின் பக்தர்களும் சரி அந்த கிருஷ்ணரிடம் தனது பிரார்த்தனைகளை வைத்தால் இன்று வரை தவறாமல் நிறைவேற்றி வருகிறார். பிறகு எதற்காக இன்னொரு மூர்த்தியை ஏற்படுத்த வேண்டும்?  அதுவும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் இல்லாமல் சைவ சம்பிரதாயத்தை இணைத்து செய்ய வேண்டும் என்ற கேள்வியும் கூடவே பிறந்தது.

பொதுவாக குருஜி வெட்டவெளி தியானம் செய்கின்ற போது இந்த கொய்யா மரத்தடியை தான் தேர்ந்தெடுத்து உட்காருவார். அதில் அவர் இரவு நடுநிசிக்கு மேல் உட்கார்ந்தார் என்றால் நேரம் போவது தெரியாமல் அதிகாலை வரையில் தன்னை மறந்த நிலையில் தியானத்தில் இருப்பார்.  இதை நாங்கள் வழக்கமாக அனுபவிப்பது உண்டு. அந்த மறந்திருக்கும் இடத்தில் புதியதாக சிவன் விஷ்ணுவை ஸ்தாபிக்க வேண்டுமானால் மரத்தை எடுக்க வேண்டும். சிறிய செடியை கூட அகற்றாதே என்று சொல்லுகிற குருஜி மரத்தை எடுக்க சொல்வது மேலும் எங்களுக்கு வியப்பளிப்பதாக இருந்தது. ஒருவேளை விசேஷ காரணங்கள் எதுவும் இருக்குமோ என்ற எண்ணத்தில் குருஜியிடம்

நமது ஆசிரம வளாகத்தில் எத்தனையோ இடமிருக்கிறது அதில் நீங்கள் சொல்கிற மூர்த்தியை ஸ்தாபிக்கலாம். இந்த இடம் நீங்கள் தியானம் செய்கின்ற இடம். அதிலும் உயிரோடு ஒரு மரம் இருக்கிறது அந்த இடத்தில விக்ரகத்தை நிர்மாணிக்க வேண்டுமா? அப்படி செய்தே தான் ஆகவேண்டும் என்றால் அதற்கான காரணங்கள் என்னவென்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டோம்.

பொதுவாக தான் பெற்ற ஆன்மீக அனுபவங்களை காரணம் இல்லாமல் வெளிப்படுத்தாத குருஜி அன்று விக்ரஹம் நிர்மாணிக்க வேண்டிய காரணத்தை கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார். அன்று கார்த்திகை மாதம் பெளர்ணமி தினம் நடுநிசி நேரத்தில் நான் இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். என் மனது சரீர உணர்சிகளை மறந்து ஆனந்த சாகரத்தில் மூழ்க துவங்கும் போது எனது இடது தொடையின் மீதும், தோளின் மீதும் சுகமான பாரம் ஏற்படுவதை உணர்ந்தேன் அந்த கனம் எனக்கு சிரமத்தை தருவதற்கு பதிலாக இனம்புரியாத சந்தோஷத்தை தருவதை உணர்ந்தேன். மனம் ஒருநிலைப்பட்டு ஒன்றி இருக்கும் போது கூட கிடைக்காத மகிழ்ச்சி அது.

உள்ளுணர்ச்சியால் ஏற்படுகின்ற ஆனந்தம் வெளிக்காரணங்களால் ஏற்படுவது அபூர்வத்திலும் அபூர்வம். அதுவும் உடல் மீது பாரம் ஒன்று கூடும் போது சுகம் கிடைப்பது என்பது மிகவும் விசித்திரம். எனவே என் மீது கூடி இருக்கின்ற பாரத்தின் காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள கண்களை திறந்தேன். நம்பினால் நம்புங்கள் தலையின் மீது மயிற்பீலி சூடிய குழந்தை ஒன்று எனது தொடையில் உட்கார்ந்திருந்தது என் தோள் மீது இன்னொரு குழந்தை தலையில் சடாமுடியோடு சாய்ந்திருந்தது. இரண்டு குழந்தைகளும் என்னை பார்த்து தெய்வீகமாக சிரித்தார்கள். நான் அவர்களை ஆசையோடு தொட முயற்சி செய்தேன்.

அவர்கள் தெய்வ குழந்தைகள் மட்டுமல்ல தெய்வங்களே ஆவார்கள். தெய்வத்தை தொட்டு அனுபவித்து ஆனந்தபடுகின்ற பாக்கியம் சாதாரண மனிதனுக்கு கிடைக்குமா? இதை தெய்வம் அவனுக்கு கொடுக்குமா? எதாவது ஒரு பிறவியில் சிறிதளவு நன்மை செய்திருந்தால் ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைக்கலாம். நாம் பாவாத்மா நம்மால் இறைவனை தொட முடியுமா? அந்த குழந்தைகள் இரண்டும் சிரித்த வண்ணம் என் மீதிருந்து விலகி இந்த கொய்யா மரத்தடியில் சென்று மறைந்தன. நான் பரவசத்தில் உச்சத்தை அடைந்தேன். இறைவன் எனக்கு எதோ ஒரு நற்காரியம் நிமித்தமாக இந்த அனுபவத்தை தந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு தியானத்தில் அமர்ந்தேன்.

தன்னை மறந்து தியானம் செய்கின்ற போது சில விஷயங்கள் எனக்கு தெளிவாக புலப்படும். அப்படி தெரிகிற விஷயங்கள் நூற்றுக்கு நூறு சரியாக இருப்பதை நானும் அறிவேன். நீங்களும் அறிவீர்கள் அதன் அடிப்படையில் அன்றைய தியானத்தில் இந்த இடத்தில் சிவனுடைய அருளும், ஸ்ரீ கிருஷ்ணனுடைய கருணையும் பொங்கி பிரவாகமாக பாயப்போகிறது வருங்காலத்தில் இலட்சோப இலட்ச ஜனங்கள் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறார்கள். மனிதர்களுக்கு நன்மை தீமைகளை அறிந்து கொள்ள காரணமாக இருக்கும் நவகிரகங்களின் ஆகர்ஷனமும் இந்த இடத்தில் அதிகமாக ஏற்படுவதால், மனிதர்களின் தோஷமும் சாபமும் இங்கே விலகும். எனவே மரத்தை எடுத்து விட்டு சூரியநாராயண லிங்கத்தை ஸ்தாபிதம் செய் என்ற அறிவுறுத்தல் ஏற்பட்டது. எனவே தான் இரண்டு வருடத்திற்குள்  அதை செய்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்று குருஜி எங்களுக்கு விளக்கமாகவும் சொல்லவும் மகிழ்ச்சியின் எல்லைக்கே நாங்கள் சென்றுவிட்டோம்.

நீ சிவனை வழிபட்டாலும் சரி, பெருமாளை வணங்கினாலும் சரி தியானத்தின் முடிவில் கிடைக்கின்ற இறை தரிசனம் லிங்கவடிவாகவே இருக்குமென்று குருஜி எங்களுக்கு முன்பு பலமுறை சொல்லி இருக்கிறார். எனவே சிவ விஷ்ணு வடிவங்களை லிங்க ரூபமாக பார்ப்பது எங்களுக்கு கடினமானது அல்ல. மேலும் மூல லிங்கமாக இருப்பவரை சிவ விஷ்ணு வடிவத்தோடு மட்டும் இல்லாமல் சூரியனுக்குரிய மூல மந்திரத்தோடு ஸ்தாபிதம் செய்ய வேண்டும். அதை சூரிய லிங்கமாகவும் கருதி மற்ற படி உள்ள எட்டு கிரகங்களுக்கு தனித்தனி லிங்கங்களை நிர்மாணிக்க வேண்டும். அந்தந்த கிரகங்களுக்குரிய மூல மந்திரங்களையும் அங்கே பொறித்து வைக்க வேண்டும் என்று குருஜி அறிவுறுத்திய போது எங்களுக்கு வேறு சில உண்மைகளும் தெரிய ஆரம்பித்தன.

மனிதனது வாழ்வின் லட்சியம் இறைவனை உணர்ந்து இறைவனோடு ஐக்கியமாவது ஒன்று தான். ஆனால் அந்த முக்தி நிலையை மனிதன் உடனடியாக அடைய முடியாமல் பல தடைகளை சம்சார வாழ்க்கை என்பது ஏற்படுத்துகிறது. அந்த தடைகளின் மொத்த வடிவம் கர்மாவாக உருவாகி மனித முன்னேற்றத்திற்கு பல நேரங்களில் இடைஞ்சல்களாக இருக்கிறது. எனவே மனிதன் சம்சார பந்தங்களினால் உருவாகும் சாபங்களையும், பாவங்களையும், தோஷங்களையும் விலக்கி கொண்டு இல்லற கடமைகளை இனிதே நிறைவேற்றினால் மட்டும் தான் சாதாரண மனிதன் இறை சிந்தனையை சொந்தமாக்கி முக்தி நிலையை அடைவான். அதனால் வழிபாடு என்பது ஆன்ம விடுதலைக்கு மட்டும் வழி செய்யாமல் துயர விடுதலைக்கும் வழி செய்வதாக இருக்க வேண்டும் என்று குருஜி கூறாமல் கூறியதை புரிந்து கொண்டோம்.

ஒன்பது லிங்கங்களை மட்டும் உருவாக்காமல் நூற்றி எட்டு லிங்கமாக அல்லது ஆயிரத்து எட்டு லிங்கமாக நிர்மாணம் செய்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை எங்களுக்கு ஏற்பட்டது. அதை குருஜியிடம் தயங்காமல் அப்போதே வெளியிடவும் செய்தோம். ஆயிரம் லிங்கங்கள் வேண்டாம். வேண்டுமானால் நூற்றி எட்டு லிங்கங்களை வைக்கலாம் என்று குருஜி அறிவுரை சொன்னார். எங்களுக்கு அது சரியாகப்பட்டது எனவே மூல லிங்கங்களை ஒரு பகுதியாகவும் மற்ற லிங்கங்களை வேறு பகுதியாகவும் பிரித்து லிங்க வடிவிலேயே நூற்று எட்டு லிங்கங்களையும் நிர்மாணிக்க முடிவு செய்தோம். குருஜி பொதுவாக இரண்டு வருடத்திற்குள் என்று கூறினாரே தவிர நாங்கள் அதற்கான முயற்சிகளை உடனடியாக துவக்கி விட்டோம்.

இது சம்மந்தமான விஷயங்களை குருஜியின் பக்தர்கள் சிலபேரிடம் கேட்டோம் அவர்கள் அனைவரும் உடனடியாக அந்த முயற்சியை துவங்குங்கள் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று கூறினார்கள். கூறியதோடு மட்டுமல்ல. பெரிய தொகைகளை கொடுக்கவும் தயாரானார்கள். ஆனால், குருஜி அவர்கள் அனைவரிடமிருந்து நன்கொடை பெறுவதை தடை செய்தார் இது தெய்வ காரியம் அந்த பிராப்தம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே இதற்கு உதவ வேண்டும் என்பது தெய்வ சங்கல்பம் என்வே நான் கூறுகிற சிலபேர் மட்டும் தான் நன்கொடை தரவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

குருஜி குறிப்பிட்ட பெயர் வெளியிட விரும்பாத அந்த சில பாக்கியவான்கள் குருஜியின் கட்டளையை சிரமேற்கொண்டார்கள். இரண்டு வருடத்தில் நடக்க வேண்டும் என்று கூறிய காரியம் மூன்றே மாதத்தில் கைகூடி விட்டது. லிங்கங்களை உருவாக்க ஸ்தபதிகள் சிறிது கால தாமதம் செய்தார்களே தவிர இக்காரியதிற்கான பொருளாதார தடை என்பது சிறிது கூட ஏற்பட வில்லை. லிங்கங்களை நிர்மாணித்து பெரியளவில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் ஆனால் குருஜி அதற்கு உடன்படவில்லை. ஆலயங்களை எழுப்பி விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்துவதற்கு மகாராஜாக்களுக்கு மட்டுமே சாஸ்திரம் அனுமதி கொடுத்துள்ளது. நீயும், நானும் சாதாரண ஜீவன்கள் எனவே கும்பாபிஷேத்திற்கு பதிலாக பிராண பிரதிஷ்டை மட்டும் செய்யலாம். அதுவும் மற்றவர்களை அழைத்து செய்ய வேண்டியது இல்லை நானே விரும்புகிற நாளில் செய்துவிடுகிறேன் என்று குருஜி கூறிவிட்டார். அவர் எண்ணப்படி ஒரு நல்ல நாளில் பிராண பிரதிஷ்டை நடந்தது.

லிங்கங்களை நிர்மாணித்து பூஜைகளை துவங்கியவுடன் பல விசித்திரமான அனுபவங்கள் நமது ஆசிரமத்தில் ஏற்பட்டது. ஒரு நாள் மாலை தியானம் செய்துவிட்டு இறைவனை வணங்குவதற்காக சூரிய நாராயண லிங்கத்தை நெருங்கினார் குருஜியின் மிக மூத்த சீடர் கோவிந்தசாமி அப்போது சூரிய நாராயண லிங்கத்தின் மீது ஆறடிக்கும் குறையாத நாக பாம்பு ஒன்று சுற்றி படமெடுத்து நிற்பதை பார்த்து துணுக்குற்றார். இருந்தாலும் அச்சத்தை வெளிப்படுத்தி கொள்ளாமல் இறைவனை வணங்க முயற்சி செய்தார். பாம்பு தனது படத்தை கோவிந்த சாமியை நோக்கி விருத்தி உயர்த்திய போது அவர் கண்களை மூடிக் கொண்டார் சிறிது நேரம் கழித்து கண்களை திறந்த போது அந்த நாகம் அங்கு இல்லை. அவ்வளவு விரைவில் பாம்பு ஒன்றால் லிங்கத்தின் மேலே இருந்து இறங்கி தரையில் சென்று மறைந்து விட முடியாது. குறைந்த பட்சம் மூன்று நிமிடமாவது ஆகும். ஆனால், ஒரு நிமிடத்தில் பாம்பு மாயமாகி போனது அவருக்கு வியப்பாக இருந்தது.

இந்த சம்பவத்தை குருஜியிடம் தெரிவித்த போது அவர் பதிலேதும் கூறவில்லை சிரித்து கொண்டார். அதன் பிறகு ஆசிரமத்திலேயே இரவு தங்குகிற குருஜியின் இன்னொரு சீடர் சந்தானம் பல நாட்களில் நள்ளிரவு நேரத்தில் லிங்கத்தை சுற்றி காவி நிற உருவங்கள் சில தென்படுவதை பார்த்திருக்கிறார். ஒரு சமயம் ஜடாமுடி தரித்த மனிதர் ஒருவர் மூல லிங்கத்தை அரவணைத்து கொண்டிருப்பதை பார்த்து அவர் விலகி போக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், இவர் வாய் திறப்பதற்குள் அந்த ஜடாமுடி மனிதர் காற்றில் கரைந்து மறைந்து போய்விட்டார். இதை பற்றியும் குருஜியிடம் கேட்டதற்கு சித்தர்கள் இறைவனை தரிசிக்க எப்போது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் வருவார்கள் திருவண்ணாமலையில் மட்டும் தான் சித்தர்கள் தென்படுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சித்தர்கள் காற்று போன்றவர்கள் எங்கேயும் பிரேவசிக்க அவர்களால் முடியும். இறைவனின் அருள் எங்கே முழுமையாக நிறைவாக உறுதியாக இருக்கிறதோ அங்கே அவர்கள் அடிக்கடி வருவார்கள் அப்படி அவர்கள் இங்கேயும் வருவார்கள். இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை என்று சாதரணமாக குருஜி கூறினாலும் எங்களுக்கு ஏற்பட்ட மலைப்பை அவ்வளவு சீக்கிரம் விடுவிக்க முடியவில்லை.

குருஜியின் சீடர்கள் மட்டுமல்ல. குருஜியை தரிசிக்க வரும் பல பக்தர்களும் இதை அனுபவித்திருக்கிறார்கள். சமீபத்தில் கோவையில் இருந்து வந்த ஒரு பக்தர் சித்தர் ஒருவரை இங்கு கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆனந்த கண்ணீர் வடித்திருக்கிறார். சித்தரை கண்ட சில நாட்களிலேயே தனது வாழ்க்கையில் உள்ள பல சிக்கல்கள் விலகுவதை நேருக்கு நேராக அனுபவித்திருக்கிறார் இப்படி நிறைய அனுபவஸ்தர்களின் உணர்சிகளை நாங்கள் கேட்டு ஆனந்த பட்டிருக்கிறோம்.   இதுமட்டுமல்ல குருஜியின் உத்தரவுப்படி மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மனிதர்களுக்கு வருகிற தனித்தனி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்துகிற பல விஷேச பூஜைகளையும் சித்தர்கள் வழியில் இங்கு நடத்துகிறோம். உள்ளுரிலிருந்தும், வெளியூரிலிருந்து நிறைய பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து தரிசனம் செய்து பயனடைந்து வருகிறார்கள்.

இதை இங்கே நான் கூறுவதற்கு மிக முக்கியமான காரணங்கள் இருக்கிறது. குருஜியின் ஆன்மீக அனுபவங்கள் அவரை மட்டும் தனிப்பட்ட ரீதியில் உயர்த்துவதாக என்றுமே அமைந்ததில்லை. வழிபாட்டு முறையில் சுயநலம் இருப்பதை குருஜி அனுமதித்ததும் இல்லை. தான் பெற்ற சுகத்தை தான் பெற்ற செல்வத்தை எல்லோரும் பெறவேண்டும் என்பதற்காகவே வாழ்வதாக அடிக்கடி கூறுவார். அவருடைய உயரிய ஆன்மீக தெய்வீக அனுபவத்தால் உருவான இறை மூர்த்திகளை நீங்களும் உணர வேண்டும். வழிபட வேண்டும் உங்களது துயரங்களுக்கு முழு விடுதலை வேண்டும் இறை ஐக்கியத்தை பெறவேண்டும் என்பதற்காகவே வெளிப்படையாக இதை பதிவு செய்கிறோம். ஒருமுறை நமது ஆசிரமம் வந்து நிதர்சனமான இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டுமே இதை பதிவு செய்கிறோம். உங்களது துயரம் தீர்ந்தால் எல்லோருக்கும் மகிழ்வு கிடைக்குமே அதற்காகவே இதை சொல்கிறோம். இன்னும் வேறு சில அனுபவங்களையும் சொல்லுவோம்.


                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்


Contact Form

Name

Email *

Message *