Store
  Store
  Store
  Store
  Store
  Store

தேன்சிட்டு வழங்கும் தேவாமிர்தம்குருஜியின் நட்பு வட்டம் மிகப் பெரியது மனிதர்கள், மிருகங்கள் என்று துவங்கி பாம்பு வரையிலும் அந்த வரிசை நீளும், அன்றும் அப்படித்தான் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த அவரின் கையில் தேன்சிட்டு ஒன்று பறந்து வந்து உட்கார்ந்தது

தடவிக் கொடுத்தால் பூனைக்குட்டியும் நாய்குட்டியும் எப்படி குழைந்து குழைந்து விழுந்து செல்லம் கொஞ்சுமோ அப்படி அந்த தேன்சிட்டு குருஜியின் கைகளில் புரண்டு புரண்டு விழுந்து விளையாடியது

"தேன்சிட்டை சாதாரண பறவை என்று நினைக்காதீர்கள் அது மனிதர்களுக்கு பல விஷயங்களை கற்றுத் தரும் ஞானாசிரியனாகும், ஆயிரக் கணக்கான பூக்கள் பூத்திருந்தாலும் எந்தப் பூவில் தேன் இருக்கிறது என்ற ரகசியம் அதற்கு நன்றாக தெரியும்

அதைப் போல மனுஷனும் தன்னை சுற்றி பலவிதமான சிந்தனைகள் கருத்துக்கள் இருந்தாலும் நல்லனவற்றை தேடி கண்டுபிடித்து தனக்காக சுவிகரித்து கொள்ள வேண்டும், அப்படி செய்தால் தான் முழு மனிதனாக வாழ முடியும்

தேன்சிட்டு இருக்கிறதே அது ரொம்ப சுத்தமான ஜீவனாகும், தன்னை மட்டுமல்ல தான் வாழும் இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும், தன் குஞ்சுகளுக்கு இரை தேடி எடுத்து வந்து ஊட்டும், உணவு உண்டவுடன் குஞ்சுகள் மலம் கழிக்க துவங்கும் அந்த மலம் பார்ப்பதற்கு மிகச் சிறிய டியூப் மாத்திரை மாதிரி இருக்கும்

தாய்தேன்சிட்டு அந்த மலக்கழிவுகளை அலகுகளால் கொத்தி கூட்டிலிருந்து தொலைவுக்கு சென்று போட்டுவிட்டு வரும், ஆனால் அதன் அலகில் மலம் ஒட்டவே ஒட்டாத அளவிற்கு மிக நேர்த்தியாக காரியம் செய்யும்

நாமும் கூட நம் வாழ்நாளில் கெட்ட மனிதர்களோடு வாழ வேண்டிய பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம், அப்போதும் அவர்களின் குணாம்சம் நம்மிடத்தில் ஒட்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

இன்னொறு விஷயத்தையும் தேன்சிட்டு நமக்கு கற்பிக்கிறது, நாம் ஒருவரை நம்பி விட்டால் குருட்டுத்தனமாக அவரிடம் தவறுகளே இருக்காது என்று எண்ணி விடுகிறோம், அதற்காக பல வித நியாங்கள் கற்பித்து வாதாடவும் செய்கிறோம் அது தவறு என்று தேன்சிட்டு நமக்கு சுட்டிக்காட்டுகிறது

கூடு கட்ட உபகரணங்களை தேர்ந்தெடுப்பது, கூடு கட்டுவது எல்லாமே பெண் தேன்சிட்டுத்தான் ஆனால் ஆண் தேன்சிட்டு தானே எல்லா காரியத்தையும் செய்வது போல பெண்ணோடு கூட மாட பறக்கும், பரபரப்பாக காணப்படுமே தவிர ஒரு சிறு தும்பைக் கூட கிள்ளிப் போடாது

நம்மில் பலரும் அப்படித்தானே இருக்கிறார்கள், வீணான வாய்ஜம்பம் பேசுவார்கள், எல்லாமே தன்னால் தான் நடப்பது போல பாவனை செய்வார்கள், நாமும் அவர்கள் மீதுள்ள ஈடுபாட்டால் தவறுகளை கவனிக்க மாட்டோம், அது தவறு' ஒருவனிடம் உள்ள தீமைகளையும் அறிந்து அதை தவிர்த்து வாழ கற்றுக்கொள் என்று தேன்சிட்டு போதிக்கிறது"

சின்னஞ் சிறிய உயிரினம் கூட மனிதனுக்கு போதிக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கிறது, சதாகாலமும் கண்களையும் செவிகளையும் தீட்டி வைத்து அறிவு விழிப்புணர்வோடு இருக்கும் எவருக்கும் அது புரியும் என்பதை குருஜியின் உபதேசத்தால் உணர முடிந்தது


                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர் 


Contact Form

Name

Email *

Message *