Store
  Store
  Store
  Store
  Store
  Store

மோடி நினைத்ததை நடத்தினாரா...?



   ரண்டு நாட்களுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் வேடிக்கையான  ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அதைப் பார்க்கும் போது ஒரு புறம் வேதனையாகவும் மறுபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. படத்தில் இருந்த காட்சி வேறொன்றும் இல்லை. மத்திய அரசாங்கத்தால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் போட்டு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி என்று எழுதி இருந்தார்கள். 

இந்த ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று நமது பிரதமர் அறிவித்த அன்று இரவு பதினோரு மணியிருக்கும்.. அதை ஆதரித்து என் முகநூல் பக்கத்தில் ஒரு செய்தி எழுதினேன். முரார்ஜி தேசாய் அப்போதைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது போல, இந்திரா காந்தி அதிரடியாக வங்கிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கி அறிவித்தது போல இதுவும் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்திற்கான முதல் படி என்று எழுதி இருந்தேன். 

சில காலங்கில் வங்கியின் வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்த்தும் அரசாங்கம் சொல்லியது போன்ற கள்ளப் பணங்கள் குறையாததை பார்த்தும் சலிப்பு வந்து விட்டது. இந்த அரசு எதையோ நினைத்து எதையோ செய்திருக்கிறது. இது நாம் நினைத்தது போல இந்தியாவை துரிதகதியில் முன்னேற்ற உதவப் போவதில்லை என்பதும் மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. 

பழைய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்த நடவடிக்கையால் என்னென்ன இலக்குகளை அடைய முடியும் என்று அரசாங்கம் நமக்கு காட்டியதோ அந்த இலக்குகளை அரசு அடைந்திருக்கிறதா? அதன் மூலம் சாதனைகள் எதுவும் நிகழ்த்தப் பட்டிருக்கிறதா? என்பதை தீர்க்கமாக யோசிக்கும் போது சாதனைகளை விட வேதனைகளே அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. 

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நள்ளிரவு நேரத்திலிருந்து புழக்கத்திலிருந்த சுமார் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் மக்கள் கைகளில் இருந்தன. இந்த பணத்தில் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் வரை வங்கிகளுக்கு வராது கருப்புப் பண முதலாளிகளின் கஜானாக்களிலேயே அது தங்கி விடும். மதிப்பே இல்லாத வெற்று காகிதங்களாக மாறி விடும் என்று எதிர்பார்க்க பட்டது. 

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? வெளியில் புழக்கத்தில் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்து புதிய பணமாக மாறி கணக்குகளில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டது. அதாவது கள்ளப்பணமாக மதிப்பிழந்திருக்க வேண்டிய பணம் நல்ல பணமாக மாறி விட்டது. இந்த இடத்தில்தான் பொருளாதார அறிவே இல்லாத வெகு சாதாரண மக்களாகிய நமக்குக் கூட ஒரு சந்தேகம் வருகிறது. தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் பணம் வங்கிக்கு வந்துவிட்டது என்றால் அதுவரை கள்ளப்பணம் நிறைய இருக்கிறது என்று அரசாங்கம் சொன்ன சொல் என்ன ஆனது? ஒருவேளை அரசு மாயமான் பின்னால் சென்றதா?  

இன்னொரு காரணமும் அரசாங்கத்தால் சொல்லப்பட்டது. இந்தியாவில் கிராமங்களிலிருந்து நகரம் வரையிலும் பெருவாரியான கொள்வினை கொடுப்பினைகள் பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இனி இந்த நடவடிக்கையால் வங்கிகள் மூலமாக மட்டுமே, அதாவது பண அட்டைகள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை நடக்கும். இதனால் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரிகள் தங்கு தடை இல்லாமல் கிடைக்கும் என்றும் கூறினார்கள். ஆனால் ஆண்டு ஒன்றாகி விட்ட போதும் கூட அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இன்னும் பழையபடியேயான பணப் பரிவர்த்தனை தான் மக்கள் மத்தியில் நடந்து வருகிறது. 

கடன் அட்டைகள் மூலமாக பரிவர்த்தனைகளை நடத்த வேண்டுமென்று சட்டங்கள் வகுத்த அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் கூட அது சாத்தியமாகவில்லை. பெருவாரியான மக்கள் அத்தகைய பரிவர்த்தனையை விரும்பவில்லை. முற்றிலும் டிஜிட்டல் மயமாகி விட்ட நாடுகளில் உள்ள நிலைமையே இப்படி என்றால் இந்தியாவில் இன்னும் பலப்படி மோசமாகத்தான் இந்த திட்டம் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். 

ஒட்டுமொத்தமாக ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததில் நன்மையே ஏற்படவில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டுகளுக்கு முன்பு வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அது இப்போது மாறி இருக்கிறது. அரசாங்கத்திற்கு வருகின்ற வரியின் அளவு பதினேழு லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதை மறுக்க இயலாது. 

அரசாங்கத்தின் வருவாய்க்கு முக்கிய மூலதனமாக இருப்பது மக்கள் கட்டுகிற வரிப்பணமே ஆகும். இந்த வரிப்பணம் தான் நலத்திட்ட உதவிகளை செய்வதற்கும், அயல்நாட்டு கடன்களை அடைப்பதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பதை சாதாரண மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இந்த ஒரு வளர்ச்சியைத் தவிர, பல லட்சம் பேர் இந்திய அளவில் வேலை இழந்திருக்கிறார்கள். வளர்ச்சியின் அடையாளமாக காட்டப்பட்ட நிலவணிகம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. சிறு குறு தொழில்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பவைகளைப் பார்க்கும்போது, வரி வருவாய் மட்டும் அதிகரித்திருப்பதை சாதனையாக கூறிவிட முடியாது. 

ஒருவேளை நமது பிரத மந்திரி கூறுவது போல, இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியான பலனைத் தராது சற்று காலதாமதம் சென்றே பலன் தரும் என்பது உணமையாகவும் இருக்கக்கூடும். ஆனால் மக்களாகிய நாம் அவசரப்பட்டு முடிவு செய்வதற்கு பிரதமர் அவர்களின் சில பேச்சுக்களே காரணமாக இருக்கிறது என்பதை அவரும் யோசிக்க வேண்டும். 

ஐம்பது நாளில் மாற்றம் வரும் என்றார். ஓராண்டிற்குள் உச்சமான நிலையை அடைந்து விடலாம் என்றார். அவர் வார்த்தைப்படி அவைகள் நடக்காத போதுதான் நாம் கேள்வி கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நரேந்திர மோடி அவர்களை மக்கள் ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போல பார்க்கவில்லை. ஆரம்ப நாட்களில் தங்களையும் தேசத்தையும் மீட்க வந்த ரட்சகர் என்றே கருதினார்கள். ஆனால் இப்போது சில காலமாக அவர் நிலை மாறிக்கொண்டு வருவது போலத் தெரிகிறது. அந்த நிலைக்கு அவர் தாழ்ந்து விடாமல் மக்கள் மத்தியில் எப்போதுமே செல்வாக்காக இருக்க வேண்டுமென்று நிறையப்பேர் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகிற பொறுப்பு பிரதமர் அவர்களிடம் தான் இருக்கிறதே தவிர மக்களிடம் இல்லை.   




Contact Form

Name

Email *

Message *