Store
  Store
  Store
  Store
  Store
  Store

புத்தர் சொல்லாமல் விட்டது !சை தான் துன்பத்திற்கு காரணம்

ஆம் அப்படித்தான் புத்தர் சொல்கிறார்

தங்க நகைகளால் தன்னை அலங்காரம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாய்

அதற்கு தங்கம் நம்மிடம் இல்லையே என்று வருத்தப்படுகிறாய் இது முதலாவது துன்பம்

தங்கம் வாங்க பணம் வேண்டும் பணத்தை பெற உடலை வருத்தி உழைக்கிறாய் இது இரண்டாவது துன்பம்

வாங்கிய தங்கத்தை பாதுகாக்க வேண்டுமே திருடர்கள் எவராவது களவாடிவிட்டால் என்ன செய்வது என்று வருந்துகிறாய் இது மூன்றாவது துன்பம்

ஒரு நிலையில் அந்த தங்கம் உன்னை விட்டு போய் விடுகிறது விரும்பியதை இழந்து விட்டோமே என கண்ணீர் விடுகிறாய் இது நான்காவது துன்பம்

சிறியதான ஒரு அலங்கார ஆபரண ஆசையே நான்கு விதமான துன்பத்தை தரும் போது மண்ணாசை பெண்ணாசை பதவி ஆசை அதிகார ஆசை என்ற பேராசைகள் எத்தனை வகையான துன்பங்களை தரும்?

ஒரு நிமிடம் யோசி ஆனந்தமான சுகமான சந்தோஷமான வாழ்க்கையை ஒரு சிறிய ஆசைக்கு பலி கொடுத்து வாழ்க்கை முழுவதையும் நரகமாக்கி கொள்ள வேண்டுமா? எனவே ஆசையை விடு என்கிறார் புத்தர்

புத்தர் மட்டுமா அப்படி சொல்கிறார்? சர்வலோகத்தையும் சிருஷ்டித்து காத்து வரும் வாசுதேவ கிருஷ்ணன் கூட காமிய கர்மம் செய்யாதே நிஷ் காமிய கர்மம் செய் என்கிறான் காமியம் என்றால் ஆசை பற்று எதிர்பார்ப்பு என்பது பொருள் நிஷ் காமியம் என்றால் அவைகள் இல்லாத நிலை என்பது பொருளாகும்

நமது தமிழ் கூறும் நல்லுலகின் மிகப் பெரிய ஆச்சார்ய புருஷரான திருவள்ளுவர்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

     என்கிறார் அதாவது வாழ்க்கை கெடாமல் அமைய வேண்டும் என்றால் ஆசையை ஒழிக்க வேண்டும் என்பது அவரின் வலுவான கருத்து

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்று வள்ளுவர் சொல்லுகிறார் புத்தரும் அதை ஆமோதிக்கிறார் 

கண்ணபெருமானும் அது தான் சரி என்று சான்றிதழ் தருகிறார். பெரியவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தில் பேசுகிற போது சிறியவர்களான நாம் அதை மறுத்து பேசினாலோ அல்லது சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பினாலோ மரியாதை குறைவான செயல் என்று நமது பண்பாடு பறை சாற்றுகிறது. 

இருந்தாலும் நமது மனது அற்பமான மனது தானே? அதில் சில சந்தேகங்கள் எழும்பாமல் இருக்கவே முடியாது. அப்படி ஒரு வலுவான சந்தேகம் இப்போது சமீப காலத்தில் ஏற்பட்டது அந்த சந்தேகம் உண்மையாகவே மனிதனின் துயரங்களுக்கு ஆசை மட்டும் தான் காரணமா? அதையும் தாண்டி வேறு காரணங்கள் எதுவுமே இல்லையா? என்பது தான் 

முதலில் ஆசை என்றால் என்ன? அது ஒரு உணர்ச்சி 

பசி ஒரு உணர்ச்சி, 

தாகம் ஒரு உணர்ச்சி,

கோபம் ஒரு உணர்ச்சி,

மூக்கில் ஊறல் எடுப்பது முதுகில் சொரிந்து விட்டால் சுகமாக இருக்குமே என்று தோன்றுவது எல்லாமே உணர்ச்சி தான். அதே போன்று ஆசையும் ஒரு உணர்ச்சி அதை யாரும் மறுக்க மாட்டார்கள். 

ஆனால் ஆசை என்ற உணர்ச்சிக்கும் மற்ற உணர்ச்சிக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. எப்படி என்றால் ஆசை போடுகிற குட்டி உணர்சிகள் ஏராளம். உதாரணமாக கோபம் பயம் மோகம் காமம் என்று எத்தனையோ சொல்லி கொண்டே போகலாம். அத்தனை உணர்ச்சிக்கும் மூல உணர்ச்சியாக இருப்பது ஆசை 

ஆசை என்பது மூல உணர்ச்சியாக இருக்கட்டும் அது பல்வேறுபட்ட உணர்சிகளை தூண்டி மனிதனை பாதாள குழிகளில் தள்ளுவதாக கூட இருக்கட்டும் ஆனாலும் ஆசை என்பது மனிதனுக்கு உள்ளே தோன்றுகிற உணர்ச்சி தானே தவிர  வெளியே இருந்து வருகின்ற எதிரி அல்ல. அது உள்ளுக்குள்ளேயே இருந்து வருவதனால் தான் அதை அடக்கு ஆடவிடாதே என்று பெரியவர்கள் சொன்னார்கள். 

இந்த கருத்தை மையமாக வைத்து சிந்தித்தால் துன்பத்திற்கு அகக்காரணம் ஆசை என்று துணிந்து சொல்லலாம். அகம் என்று ஒன்று வந்துவிட்டாலே புறம் என்று இன்னொன்று இருக்கும் தானே எனவே துன்பத்திற்கு ஆசையை மட்டுமே குற்றவாளியாக்குவது எந்தவகையில் நியாயம்? 

மாடி வீடு கட்ட தோன்றுவது உள்ளே இருந்து வருகிற ஆசை அதிகார பதவியை பிடித்து உட்கார சொல்லுவது உள்ளே இருந்து வருகிற ஆசை ஆனால் விஷக்கிருமிகளால் நோய் தோற்று ஏற்படுகிறதே அது உள்ளே இருந்து வருகிற துன்பமா?  வாகன விபத்தில் மாட்டி உடல் உறுப்புகளை இழந்து விடுகிறோமே அது ஆசையால் ஏற்பட்டதா? யாரையோ ஒருவரை காப்பாற்ற போய் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோமே அதுவும் உள்ளே இருந்து புறப்பட்ட உணர்ச்சியால் வந்த துன்பமா? நிச்சயம் இல்லை

. அது என்னை மீறி நடக்கிறது. நான் எதிர்பாராமல் என்னை தாக்குகிறது, அதே நேரம் சம்மந்தம் இல்லாத என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது. எனவே இப்படிபட்ட துன்பங்களை புறக்காரணங்களால் வருகிற துன்பம் என்று தான் கருதவேண்டும். 

துன்பத்தின் ஊற்றுக்கண் இத்தோடு நிற்கவில்லை அகக்காரணங்கள் என்பதையும் தாண்டி புறக்காரணங்கள் என்பதையும் தாண்டி மூன்றாவதாகவும் துன்பத்திற்கு ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது. அது தான் இயற்க்கை காரணம். 

நேற்றுவரை நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடு வாசல் மனைவி மக்கள் அனைவரையும் இழந்து நிவாரணமே இல்லாத துன்பக்கடலில் தள்ளப்பட்டு விடுகிறான்.

 ஆழிப்பேரலை வருகிறது ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படுகிறது இவையெல்லாம் மனிதனை துன்பத்தில் பிடித்து மூழ்கடிக்கிறது வறட்சி பஞ்சம் பட்டினி என்று வெவ்வேறு விதமான கொடுமைகளும் மனிதனுக்கு ஏற்படுகிறது. 

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் என்று பெரியவர்கள் சொன்னது எப்படி சரியான கருத்தாக இருக்குமென்று எண்ணத்தோன்றுகிறது. என்னால் என்னுடைய எண்ணத்தால் என்னுடைய செயலால் துன்பம் வருகிறது என்றால் அதற்கு ஆசையை அடக்கினால் போதும் நான் துன்பம் இல்லாத பெரும் வாழ்வு வாழ்ந்து விடலாம். ஆனால் அது முடியவில்லையே 

நோய் வருகிறது விபத்து வருகிறது. எதிர்பாராத தாக்குதல் வருகிறது இயற்க்கை  பேரழிவு வருகிறது இவையெல்லாம் எனக்கு துன்பத்தை தருகிறதே நான் ஆசையை அடக்குனால் இவைகளெல்லாம் சரியாகிவிடுமா? என் துன்ப வாழ்க்கை மறைந்து போய்விடுமா? இந்த கேள்விக்கு சரியான பதிலை என்னால் பெறமுடியவில்லை 

கர்ம வினையாலும் துன்பம் வருகிறது என்கிறார்கள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் ஏனென்றால் இந்த ஜென்மத்தில் இந்த பிறப்பில் இன்று நான் செய்யகூடிய செயல்களுக்கான பலன்களை மட்டுமே என்னால் நேராக காணமுடிகிறது. என் சென்ற ஜென்மத்து கர்மாக்கால் என்பதும் என் மூதாதையர்களின் கர்மா என்பதும் என் கண்களால் காணமுடியாதவைகள் அதை பற்றி நான் உறுதியாக நம்பவும் முடியாது நம்பாமல் இருக்கவும் முடியாது. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம் நான் ஆசைபட்டாலும் துன்பம் வருகிறது ஆசை படாமல் இருந்தாலும் துன்பம் வருகிறது. 

இந்த துன்பத்திலிருந்து விடுவதலை பெறுவதற்கு வழியே கிடையாதா? என்று நான் ஆழமாக பலகாலமாக யோசித்தேன் அந்த யோசனையின் விளைவாக எனக்கொரு அனுபவம் ஏற்பட்டது அது துன்பத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளுவது சகித்துக்கொள்ளுவது என்பது தான் 

துன்பத்தை ஏற்றுகொள்வதற்கு அனுபவமும் மனதுணிச்சலும் வேண்டும் கடற்கரையில் வீட்டை கட்டினால் அலைகளிலிருந்து தப்பமுடியாது என்பது போல மனிதனாக பிறந்துவிட்டால் கஷ்டப்படாமல் இருக்க முடியாது என்பதும் நிஜம் என்று இருக்கும் போது அந்த கஷ்டத்தை எதிர்த்து போராடி என் சக்தியை எதற்காக வீணடிக்கவேண்டும்? 

வீட்டிலே எத்தனையோ பொருட்கள் உபயோகம் இல்லாமல் மூலையில் கிடக்கிறது அதே போன்று இந்த கஷ்டத்தையும் ஒரு மூலையில் தூக்கி போட்டுவிட்டு என் வேலையை நான் கவனிக்க துவங்கிவிட்டால் கஷ்டம் கஷ்டமாக தெரிவதில்லை. அப்படி ஒன்று உலகத்தில் இருப்பதாகவே என் கவனத்தில் வரவில்லை இது நல்லதாக தெரிகிறது நல்ல அனுபவமாகவும் இருக்கிறது 

இந்த அனுபவமும் கஷ்டத்தை தாங்கும் துணிச்சலும் எப்படி வருகிறது என்றால் நிச்சயம் நல்ல ஆஸ்திக மனப்பான்மை அவைகளை தருகிறது. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் இறைவனை பாடினால் இறைவனை நினைத்தால் எனக்குள் சந்தோசம் ஊற்றெடுக்கிறது என்பதை நான் கண்டுகொண்டால் எந்த துன்பமும் எண்ணை தீண்டுவதை நான் உணரவே மாட்டேன். எனவே துன்பத்தை வெல்ல நான் கண்ட ஒரே வழி இறைவனை நோக்கி நமது சிந்தனையை செலுத்துவதாகும். நீங்களும் அப்படி செய்ய முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக ஒருநாள் வெற்றி கிடைக்கும்.Contact Form

Name

Email *

Message *