( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Idocs Guide to HTML  வரும் ஜூலை 5 ஆம் தேதி அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை  கொடுக்க படுகிறது தொடர்புக்கு Cell No = +91-8110088846 - Idocs Guide to HTML


மதத்தை நாடிய மனிதன் !

சித்தர் ரகசியம் - 20

    சித்தர்கள் மனித உடம்பை பற்றி பேசுகிறார்கள். அந்த உடம்பை செப்பனிட்டு இறைவனிடம் அழைத்து செல்லும் யோக கலைகளை பற்றி பேசுகிறார்கள். இவைகளெல்லாம் எதற்கு என்று கேட்டால், மனிதப் பிறவியின் இறுதி லட்சியமான முக்தியை அடைவது என்பதற்காகத்தான் என்கிறார்கள். முக்தியை நோக்கி மனிதன் ஏன் செல்ல வேண்டும்? முக்தி என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒன்றா? எப்போதோ இறுதிப் பகுதியில் அடையக்கூடிய முக்திக்காக இப்போது இருக்கும் வாழ்க்கையை கரடுமுரடாக்கி கொள்ள வேண்டுமா? மிக குறுகிய மனித வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய சந்தோசங்களை அனுபவிக்காமல் விட்டுவிட்டு, கண்ணுக்கே தெரியாமல் இருக்கிறதா? இல்லையா என்று புரியாமல் மாயக்கண்ணாடிக்குள் மின்னுகிற முக்திக்கா அரும்பாடு படவேண்டுமா? என்று சிலருக்கு தோன்றும்.

சித்தர்கள் அர்த்தமற்ற வழியில் முக்தி முக்கியம் என்று கருதவில்லை. முக்தி என்ற மூன்றெழுத்தை சர்வ சாதாரணமாக இன்று நாம் பயன்படுத்துகிறோம் என்றாலும், அந்த வார்த்தையை அதன் பொருளை மனித சமுதாயம் பெற்றுக் கொள்வதற்கு மிக நீண்ட நெடிய காலம் போராடி இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக பெற்றுவந்த அனுபவத்தின் வரலாற்று தெளிவாகத்தான் சித்தர்கள் முக்தி கட்டாயம் வேண்டும் என்கிறார்கள். அந்த கருத்தை அனுபவப்பட்ட பெரியோர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். எதற்காக முக்தி கட்டாயம் தேவை? முக்தியை அடைவதற்கு மனிதன் இதுவரை உழைத்தது என்ன?  பெற்றது என்ன?  எப்போது அந்த உழைப்பை ஆரம்பித்தான்? என்பதை எல்லாம் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.

சமுதாய அமைப்புகள் என்ற வார்த்தையை இன்று பல இடங்களில் கேட்கிறோம், படிக்கிறோம், நாமும் கூட எழுதுகிறோம். இந்த சமுதாய அமைப்பில் எவை எவையெல்லாம் அடங்குகிறது என்று பலரும் சிந்தித்தது கிடையாது. கணவன் - மனைவி என்று இரண்டு மனித ஜீவன்கள் இணைந்து உருவாக்குகிற குடும்பம் என்பதில் தொடங்கி, அரசாங்கம் என்பது வரை பல நிறுவனங்களை உள்ளடக்கியது தான் சமுதாய அமைப்பாகும். அத்தகைய சமுதாய அமைப்பில் முதுகெலும்பாக இருப்பது மதம் என்று சொல்லலாம். மதத்தை பற்றி இன்று பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் உலா வருகின்ற போது, நான் அது சமூகத்தின் முதுகெலும்பு என்று சொல்வதனால் சிலருக்கு திகைப்பாக கூட இருக்கும்.

அரசு சட்டம் என்பதெல்லாம் உலகியல் சார்ந்த மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்டவைகளாகும். ஆனால், மதம் என்ற அமைப்பு மனிதனை உலகியல் கடந்த உன்னதமான அனுபவத்தை நோக்கி அழைத்து செல்ல உருவாக்கப்பட்டதாகும். நாம் கண்ணெதிரே காணும் இந்த உலகில் அனுபவிக்கும் புணர்ச்சி, இனவிருத்தி, உணவு, உடை, ஆடம்பரம், பதவி, சுகம் ஆகிய அனைத்துமே சிற்றின்பங்கள். ஆனால், உலகத்தை கடந்து, உலக பொருள்களை கடந்து கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இன்பத்தை நாடுவது பேரின்பமாகும். இதனுடைய மறுபெயர் தான் முக்தியாகும் எதை பெற்றால் எல்லாவற்றையும் பெற்றதாக ஆகுமோ அந்த பெரும் பேறுக்கு மனிதனால் வைக்கப்பட்ட பெயர் தான் முக்தி என்பது.

உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களையும், அதன் காரணங்களையும் ஆதார பூர்வமாக நிரூபிக்கலாம். ஆனால், உலகத்தை கடந்த முக்தியினால் பெறுகின்ற சுகத்தை, எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் புற உலகத்திற்கு நிரூபிக்க இயலாது. அதனால் இதை, கற்பனாவாதம் என்றும், அறிவுக்கு பொருந்தாத மூட சித்தாந்தம் என்றும் நாத்திக நண்பர்கள் புறக்கணிக்கிறார்கள். நிரூபிக்க முடியவில்லை என்றால், ஒன்றை முற்றிலுமாக இல்லை என்றோ, விரிவுரை செய்ய இயலாது என்றால் ஒரு தனிமனித அனுபவத்தை பொய் என்றோ புறக்கணித்து விட இயலாது. ஒருவேளை முக்தி என்பது இறைவனோடு சம்மந்தபட்ட காரியம் என்பதனால், அதை நிரூபித்து காட்ட இந்த உலகத்து பொருட்களுக்கு சக்தி இல்லாது இருக்கலாம். இந்த வகையில் சிந்தித்தால், ஆன்மீக ஞானிகளின் அருளுரைகளும், அனுபவ வாக்கியங்களும் பொய்யல்ல, கற்பனை கட்டுக்கதைகள் அல்ல, அனைத்தும் சக்திய வாக்குகளே என்பது புலனாகும்.

முக்தி என்பதை ஆன்ம சுகம் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கியே பன்னெடுங்காலமாக பலதரப்பட்ட மக்கள் ஈர்க்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஈர்க்கப்படும் மக்களுக்கு, வழிகாட்ட கூடியதாக, ஒரு கட்டமைப்பாக அழைத்து செல்ல கூடியதாக மதம் என்பது இருக்கிறது. அதனால் தான் மதத்தை சமுதாயத்தின் முதுகெலும்பு  என்று துணிந்து கூறுகிறேன். மனிதன் டார்வின் தத்துவப்படி குரங்கிலிருந்து வந்தானா? அல்லது நேற்றுவரை இல்லாமல் இருந்து இன்று திடீரென்று புதியதாக படைக்கப்பட்டானா?  என்று ஆராய்ச்சி செய்யாமல், மனிதன் என்று மனிதனாக சிந்திக்க துவங்கினானோ அன்றிலிருந்தே மதம் வந்துவிட்டது. புலன்கடந்த தேடுதலான ஆன்மிகம் வந்துவிட்டது என்பது தான் பொருளாகும்.

மனித வரலாற்றில் மத உணர்ச்சியற்று வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவுமே இல்லை. இன்றைய நாகரீக மனிதன் கற்காலம் என்று கருதக்கூடிய நாகரீகம் இல்லாத காலத்தில் கூட மதமும், மத சிந்தனையும் இருந்தது. இதன் அடிப்படையில் கூர்மையாக நமது பார்வையை செலுத்தினால், இன்று நடைமுறையில் இருக்கும் மதங்கள் எதுவும் புதியதாக தோன்றிவிடவில்லை. ஆதி மனித சிந்தனையின் புனரமைப்பு தான், சீர்திருத்தங்கள் தான் இன்றைய மதம் என்று அறிய வேண்டும். எனவே ஆன்மீக சிந்தனை என்பது ஆதிகாலம் தொட்டே மனிதனின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. ஆன்மிகம் இல்லாத, அறச்சிந்தனைகள் கிடையாது. அறம் இல்லாத மனித வாழ்க்கை என்பது மிருக வாழ்க்கைக்கு சமமானது. அதனாலும் தான் மதத்தை சமுதாயத்தின் முதுகெலும்பு என்று சொன்னேன். அதை மீண்டும் சொல்வேன்.


சரி இவைகளெல்லாம் இருக்கட்டும் முக்தி என்பதை ஆதாரபூர்வமாக காட்ட இயலாது பத்துபேர் நம்பும்படி நிரூபிக்க முடியாது என்று சொல்கிறீர்கள் அப்படிப்பட்ட ஒரு பொருளை ஆண்டாண்டு காலமாக மனிதன் நாடவேண்டிய அவசியம் என்ன? தேன் இருக்கும் பாத்திரத்தை எறும்புகள் மொய்ப்பது போல முக்தி வாழ்க்கையை நோக்கி மனித மனங்கள் மொய்ப்பது ஏன்? என்ற கேள்விகள் நமக்குள் எழும்பினால் ஆச்சரியபடுவதற்கு இல்லை அழகான பெண்ணை மனிதன் நாடலாம் அளவுக்கு அதிகமான செல்வத்தை மனிதன் தேடி ஓடலாம் ஆதிக்க உணர்ச்சியை அள்ளி தருகின்ற மண்ணாசையின் பால் அவன் ஈர்க்க படலாம் இவைகளெல்லாம் இயற்க்கை நிலைமை இப்படி இருக்க எல்லா ஆசைகளையும் துறக்க கூடிய முக்தியை நோக்கி அவன் ஏன் ஓடவேண்டும்? அதற்கு என்ன காரணம்? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...


தொடரும்...


கடவுளை நெருங்கும் மனிதன்

சித்தர் ரகசியம் - 19


   னிதனது உடம்பில், விசுத்தி சக்கரம் ஐந்தாவது நிலையில் இருக்கிறது. கீழிருந்து மேல்நோக்கி போகும் போது, இது ஐந்தாவது நிலையில் இருந்தாலும், குண்டலினி பாதையில் குண்டலினி சக்தியை தொடுவதற்கு மிக அருகினில் இருப்பதனால், இதை குண்டலினி நிலைக்கு முந்தையது, இரண்டாவது தகுதியில் இருப்பது என்று சொன்னாலும், அதுவும் சரியாகத்தான் இருக்கும். காரணம் விசுக்தியை தொட்டபிறகு குண்டலினி சக்தி தான் அடையவேண்டிய இறுதி லட்சியம்.

இந்த சக்கரம் பதினாறு இதழ் கொண்ட அழகிய தாமரை பூ வடிவத்தில் இருக்கிறது. தாமரை வடிவத்தில் இருந்தாலும் இதன் நிறம் செம்மை அல்ல பசுமையாகும். அடர்ந்த நீலம் கரைந்து கரைந்து தனது வடிவத்தை முற்றிலுமாக இழக்கும் போது, பசுமை வடிவத்தில் வருமென்று வண்ண கலவைகளின் தத்துவம் அறிந்தவர்கள் கூறுவார்கள். அடர்ந்த கருமை வண்ண வானம், சூரிய வெளிச்சத்தால் வெளிர் நீலமாகி மனித கண் கொண்டு உற்று பார்க்கும் போது, வெளிர் பச்சை நிறத்தில் தான் தெரியும். அதனால் தான் விசுக்தி சக்கரத்தை ஆகாய ஸ்தானம் என்று யோகிகள் கருதுகிறார்கள்.

இந்த ஆகாய ஸ்தானத்தில் அருள் செய்யும் சக்தியாகிய, அன்னை டாகினி என்பவள் நிறைந்திருக்கிறாள். டாகினி தேவி ஒருமுகம் கொண்டவள். ஆகாயம் பலமுகம் கொண்டது அல்ல. பிரபஞ்ச வெளியில் எங்கிருந்து பார்த்தாலும் ஒரே தன்மை உடையது என்பதை மனதில் வைக்க வேண்டும். இந்த ஆகாய தேவி, பாதிரி பூவின் நிறம் போல வெண்மை கலந்த சிவப்பு வண்ணம் உடையவள். கைகளில் கட்வாங்கம், கத்தி, சூலம் மற்றும்  கேடயம் ஆகிய ஆயுதங்களை தாங்கியவளாக இருக்கிறாள்.

விசுக்தி சக்கரம் பதினாலு இதழ் கொண்ட என்று முதல் பத்தியில் பார்த்தோம். பதினாறு இதழ்கள் என்பது வடமொழியில் உள்ள பதினாறு உயிர் எழுத்துக்களின் வடிவமாகவும் இருக்கிறது ஒவ்வொரு இதழிலும் அம்ருதா, ஆகர்ஷின், இந்த்ராணி, உமா, ஊர்த்வகேசி, ருத்திகா, ஈசானி, ரூகாரா, லுகாரா, லூகாரா, ஏகபாதா, ஐஷ்வர்யாத்மீகா, ஓங்காரா, ஒளஷதி, அம்பிகா, அக்ஷரா என்ற பதினாறு தேவிகள் உயிர் எழுத்தின் துவக்க எழுத்தாக கொண்டு அமர்ந்திருந்து ஆட்சி செய்கிறார்கள்.

இந்த சக்கரத்தில் குண்டலினி சக்தியானது பயணப்பட்டு வருகின்ற போது மனிதனுக்கே உரிய நான், எனது என்ற அகங்காரம் அழிந்து போகிறது. நாலு திசையிலும் கட்டுக்கடங்காமல் ஓடிக் கொண்டே இருக்கும் மனம், சந்திர மண்டலத்தில் உள்ள அமிர்தமான நீர் தடாகத்திற்குள் விழுந்து முற்றிலுமாக கரைந்து, மறைந்து உருவங்கள் அற்ற அருவமான பிரம்மத்தை நோக்கிய தியானத்தில் லயித்து விடுகிறது. இப்படி லயிக்கும் போது, குண்டலினி சக்திக்கு அதீத சக்தி உருவாகி ஒரே பாய்ச்சலில் ஆஞ்ஞை சக்கரத்தில் போய் உட்கார்ந்து விடுகிறது.

ஆஞ்ஞை என்பது ஆறாவது சக்கரம். இதுவே இறுதி சக்கரம். நமது இரண்டு புருவங்களுக்கு நடுவே இரண்டு இதழ் கொண்ட தாமரை பூ போல இது இருக்கிறது. இது அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதின் ஸ்தானமாகும். இங்கு குண்டலினி சக்தி வருகின்ற போது, நிலம், காற்று, நீர், தீ மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் உருவான மனது நசிந்து விடுகிறது. எனவே தான் ஆஞ்ஞை சக்கரத்தின் அதிபதியான ஹாகினி தேவிக்கு பஞ்சபூதங்களின் ஐந்து வடிவமும், மனதின் ஒருவடிவமும் சேர்ந்து ஆறு முகங்கள் அமைந்திருக்கிறது.

இந்த தேவி நான்கு கை உடையவளாக இருக்கிறாள். உடுக்கை, அக்ஷமாலை ஞான முத்திரை, கபாலம் ஆகியவைகள் அவள் கைகளிலே இருக்கிறது. இந்த தேவி மனித உடம்பில் உள்ள எலும்புகளில் இருக்கும் மஜ்ஜையில் தனது சக்தியை நிலை நிறுத்துகிறாள். இவளே விசுக்தி முதலாகிய ஐந்து சக்கரங்களின் தலைவி ஆவாள். ஐந்து சக்கரங்களின் செயல்பாட்டையும் ஹாகினி தேவியே முன்னின்று நடத்துகிறாள். ஆஞ்ஞை எனும் ஈரிதழ் தாமரையில், ஒருபக்கம் ஹம்சவதி தேவதையும், இன்னொருபக்கம் ஷமாவதி தேவதையும் பரிவார தேவதைகளாக இருந்து ஹாகினி தேவதைக்கு தொண்டு செய்கிறார்கள்.

சக்கரங்களில் இறுதி சக்கரமாக ஆஞ்ஞை இருந்தாலும், இது குண்டலினி சக்தியின் முடிவான உறைவிடம் அல்ல. அதனால் தான் நமது ஞானிகள் இதற்கு ஆஞ்ஞை என்று பெயரிட்டார்கள். அப்படி என்றால், சிறிது வெளிப்படுதல் என்பது பொருளாகும். அதாவது குண்டலினி சக்தி தான் இன்னார் என்றும், தனது சக்தி இன்னதென்றும் ஒரு சிறிது நேரம் வெளிப்படுத்துவதற்கே இந்த சக்கரம் துணை செய்கிறது. இதை தொட்டுவிட்ட குண்டலினி, மனித முயற்சி இல்லாமலே இறைவனின் கருணையால் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையின் வடிவமான சகஸ்ரத்தை அடைந்து தனது பயணத்தை முடித்து கொள்கிறது.

குண்டலினி சக்தி சகஸ்ரத்தை தொடும் நிகழ்வை வைதீகர்கள் சொர்க்கம் என்கிறார்கள். சித்தர்களும், ஞானிகளும் முக்தி என்கிறார்கள். கெளதம புத்தர், மகாவீரர் போன்ற அவாதார புருஷர்கள் பரிநிர்வாணம் என்கிறார்கள். எந்த பெயரிட்டு அழைத்தாலும், அந்த நிகழ்வு இறைவனும் மனிதனும் ஒரே நேர்கோட்டில் வருகின்ற நிகழ்வாகும். அதாவது எலும்பும், சதையும் கொண்ட மனிதன், நேருக்கு நேராக இறை தரிசனத்தை பெறுகிறான் அல்லது இறைவனை உணர்கிறான் எனவே குண்டலினியின் சகஸ்ர நிகழ்வு விரிவாக பார்க்க கூடியது.

எனவே இறை தரிசனத்தின் முழுமையான இரகசியத்தை உணர்வதற்கு முன்பு, அதை பெறக்கூடிய மனிதனின் தத்துவப்பூர்வமான வாழ்க்கை எப்படி இருக்கும், எப்படி அமையவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே சித்தர்களின் தத்துவங்களுக்கு மத்தியில் சஞ்சாரம் செய்து, அதன்பிறகு சகஸ்ர அனுபவத்தை உணர்ந்து கொள்வதே சரியான மார்க்கமாகும். அதனால், இதுவரையில் அதிகமாக பேசப்படாத சித்தர் தத்துவத்தின் மிக நுட்பமான பகுதிகளை நமது சிற்றறிவு கொண்டு அறிய முயற்சிப்போம்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் இல்லையா...?


   மிழ்நாட்டு அரசியல் களம் என்பது எப்போதுமே காரசாரம் மிகுந்தது. தலைவர்களின் நடவடிக்கைகளாக இருக்கட்டும், தொண்டர்களின் மேடை கச்சேரிகளாக இருக்கட்டும். மிளகாய் நெடி தூக்கலாகவே அடிக்கும். கடந்த ஐம்பது வருட அரசியல் சரித்திரத்தை ஊன்றி கவனித்தாலே இது தெளிவாக தெரியும். பிராமணர்கள் நாட்டை சுரண்டுகிறார்கள். மற்ற ஜாதியினரை முன்னேறவிடாமல் தடுக்கிறார்கள் என்று துவங்கி தனித் திராவிட நாடு கொள்கை, இந்திக்கு எதிரான போராட்டம் என்பது வரையில் நெருப்பு பொறி பறக்காத நாட்களே அரசியலில் இல்லை எனலாம்.

சில காலத்திற்கு தமிழ்வானம் சற்று அமைதியாக இருந்தது. அது அமைதியா? பதவி சுகத்தை அனுபவிக்கும் ஆனந்த போதையா? என்று தெளிவாக கணிக்க முடியாத காலம் அது. ஆனால், தற்போது தமிழக மேடைகளில் சூடான விவாதங்கள் அனல்பறக்க ஆரம்பித்து விட்டது. திராவிட நாடு கொள்கையை எந்த வகையில் நியாயப்படுத்தி பேசினார்களோ? அந்த வகையில் இன்னும் சொல்லப் போனால் அதை விட தெளிவாக தனித் தமிழ் தேசிய வாதம் பேசத் துவங்கி இருக்கிறார்கள். இது தமிழ்நாட்டை ஆரோக்கியமான பாதையில் நடத்தி செல்லுமா? அல்லது மீண்டும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதைக்கு தான் தள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

திராவிட நாடு கேட்டவர்கள் ஆரியர்களும், ஆரியமும், தமிழர்களையும் தமிழ் பண்பாட்டையும் சாகடித்து விட்டது. எனவே, ஆரியர்களின் வழி தோன்றல்களான பிராமணர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். பாம்பை விட்டு விட்டு பார்ப்பனனை அடிக்க வேண்டும். பூணூலை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். சில இடங்களில் வரம்பு மீறவும் செய்தார்கள். ஆனால், நல்ல வேளையாக அவர்களது எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்பவர்கள் ஒன்றிரண்டு பேர்களாக மட்டுமே இருந்தார்கள் இப்படி இருந்தும் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. கொள்கை முழக்கங்களால் அல்ல. சினிமா கவர்ச்சியால் என்பதை அவர்களும் அறிவார்கள் நாடும் அறியும்.

ஆனால் இன்று, தமிழ் தேசியம் பேச வந்திருப்பவர்கள் திராவிட தேசியவாதிகளை விட மிகவும் கூர்மை மிகுந்த, அதே நேரம் விஷமத் தனமான ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள். திராவிட தேசியம் பேசியதனால், தமிழர்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே குறுகி கிடந்தார்கள். ஆனால், இவர்கள் அந்த கூறுகளையும் இன்னும் சிறுத்துப் போக செய்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. தமிழ் தேசிய வாதிகள் சொல்கிறார்கள். தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மட்டும் தான் தமிழர்கள். அவர்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று.

அதாவது, ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வந்தாலும் சரி, அவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் என்றால், இந்த நாட்டை ஆளும் தகுதியற்றவர்கள். அவர்கள் அரசியல் பதவிகளுக்கு வரக்கூடாது என்பது இவர்களது வாதம். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளை பேசிக்கொண்டு தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் வருங்காலத்தில் பார்வையாளர்களாக மட்டும் ஒதுங்கி விட வேண்டும் என்பது இவர்களது ஆசை.

ஒரு வாதத்திற்காக இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு சற்று சிந்தித்து பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. நேற்று வரை நமது அண்ணன் - தம்பிகளாக பழகிய நாயுடுகள், ரெட்டியார்கள், வைசிக செட்டியார்கள், நாயர்கள் மற்றும் பட்டாணிகள் இவர்கள் யாருமே நமக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் விருந்தினர்கள் போல இருக்கலாமே தவிர, இவர்களை நாம் தான் கவனித்து கொள்ள வேண்டுமே தவிர, இவர்களுக்கென்று வேறு எந்த உரிமைகளும் கிடையாது என்றாகி விடும். அதாவது தமிழ்நாட்டின் சரிபாதி ஜனங்கள் இரண்டு கூறுகளாகக்கபட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழ்தேசியம் பேசுகிறவர்களின் இந்த சித்தாந்தத்திற்கு மிக முக்கியமான காரணம், பெரிய அரசியல் பின்புலங்கள் ஏதாவது இருக்குமோ? வரலாற்று ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருந்திருக்குமோ என்று யோசிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இலங்கை தமிழர் விவகாரங்களில் யார் குரல் ஓங்கி ஒலிக்கிறது. யார் அதிகமாக அவர்களுக்காக பாடுபட்டவர்கள் என்ற நோக்கில் பார்க்கும் போது வை. கோபால்சாமி அவர்கள் கண்களில் மிக அழுத்தமான உறுத்தலை ஏற்படுத்தியவராக இருக்கிறார். வை.கோ வை தாக்கவேண்டும் அவரை பின்னுக்கு தள்ளவேண்டும் என்று, கணக்கு போட்டவர்களின் கண்களில் கிடைத்தது வைகோவின் ஜாதி. அவர் நாயுடு, தெலுங்கு மொழி பேசுபவர். இந்த ஒற்றைக் காரணத்தை வைத்து, தமிழர்களிடமிருந்து அவரை பிரித்துவிடலாம் என்பது ஒரு இலக்கு.

இவர்களை, இன்றைய காலத்தில் சற்று ஆறுதலாக பார்ப்பவர் ஜெயலலிதா அம்மையார். அவருக்கு எதிராக செயல்படுவதில் விஜயகாந்தும், முன்னணியில் இருக்கிறார். அவரும் அதே ஜாதி எனவே வை.கோ, விஜயகாந்த் இவர்கள் இருவரையும் ஓரங் கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட விஷம சித்தாந்தம் தான் தமிழர்கள் ஆள வேண்டும். மற்றவர்கள் வெறுமனே வாழவேண்டும் என்பது. தனி நாட்டு கொள்கை எந்த அளவு விஷமானதோ? அதைவிட பத்து மடங்கு நச்சுத்தன்மை மிகுந்தது இந்த வாதம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாட்டுநலம் விரும்பும் எவரும் இதை கண்டிப்பதாக தெரியவில்லை.

தமிழர்கள் தான், தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றால் நாயுடு, நாயக்கர், ரெட்டியார் மற்றும் செட்டியார் இவர்களை பாதியாக பிரித்து விட்டால் மீதமாக இருக்கும் இதர ஜாதிக்காரர்களே தமிழர்கள் என்ற பெயரில் வருவார்களாம். ஆனால், உண்மையில் அந்த ஜாதியினரின் பூர்வாங்க சரித்திர வாதங்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களையும் தமிழர்களாக ஏற்பதில் சிக்கல் இருக்கிறது. உதாரணத்திற்கு, தெற்கு தமிழ்நாட்டில் அடர்த்தியாக வாழுகின்ற நாடார் இன மக்களை எடுத்துக் கொள்வோம். நாடார்களில் பலர் திருவனந்தபுரம், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள். தமிழ் பண்பாட்டை விட, மலையாள பண்பாடே அதிகமாக இவர்களிடம் உண்டு.

நாடார்களில் இன்னொரு வகையினர், விருதுநகர் பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களது பண்பாடும், நாங்குநேரி நாடார்கள் பண்பாடும் முற்றிலுமாக வேறுபட்டது. நாங்குநேரி நாடார்களில், பலருக்கு பூர்வீகம் கன்னியாகுமரி பகுதிகளே. கன்னியாகுமரி தற்போது தான், தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது. அதற்கு முன்பு அதுவும் கேரளாவிற்கு சொந்தமானது. எனவே பச்சைத்தமிழன் என்று நாடார் சமூகத்தை சேர்ந்த காமராஜர் பாராட்ட பட்டாலும், நாடார் சமூகத்திலும் மலையாள ஊடுருவல் இருக்கிறது. எனவே அவர்களையும் உண்மையான தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள இயலாது.

மேலும், வடக்குப் பகுதியில் இருக்கின்ற வன்னியர்கள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களது ஜாதி வரலாற்றை பல்லவர்கள் காலத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பல்லவர்கள் தமிழர்கள் அல்லர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லர் என்பது வரலாற்று உண்மை. எனவே அவர்கள் வழித் தோன்றல்களாக சொல்லிக் கொள்ளும் வன்னியர்களும், தமிழர்கள் என்ற கட்டத்திற்குள் வரமாட்டார்கள். இவர்களைத் தாண்டி தேவர்களும், தேவந்திர குல வேளாளர்களும், நாட்டுக்கோட்டை செட்டிமார்களும், ஆதி திராவிடர்கள் என்ற ஹரிஜனர்களும் இருக்கிறார்கள். தனித் தமிழ் தேசியவாதிகளின் கைகளில் இருக்கின்ற தராசு மூலம் இவர்களையும் எடை போட்டால் இதிலும் சிக்கல் இருக்கிறது.

தமிழ் பண்பாட்டையும் இவர்கள், தமிழர்கள் மதம் என்று கருதுகிற மதப் பிரிவையும் ஏற்காதவர்கள் கூட, தமிழர்கள் இல்லையாம். அந்த வகையில் நாட்டுக்கோட்டை செட்டியார்களும், தேவமார்களும், சனாதனமான ஹிந்து மதத்தின் அறப்பணிகள் பலவற்றை செய்தவர்களாக இருக்கிறார்கள். தேவாரம், திருவாசகம் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவைகள் வளர, என்ன உதவிகள் செய்தார்களோ? அதே உதவிகளை வேதபாட சாலைகள் அமைக்கவும், நடத்தவும் செய்திருக்கிறார்கள். எனவே, இவர்களையும் தமிழர்கள் என்று ஒத்துக் கொள்வது கடினம்.

தேவந்திர குல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் போன்ற ஜாதியை சேர்ந்தவர்கள் பலர் இன்றும் ஹிந்துக்களாகவே வாழ்கிறார்கள். ஹிந்து கடவுள்களையே வழிபடுகிறார்கள். ஹரிஜன மக்களின் ஒரு பகுதியினர், வைஷ்ணவர்களாக கருதப்பட்டு முத்திரை வாங்கி திருக்குலத்தார் என்ற பெயரோடு, விஷ்ணு ஆலயங்களில் கெளரவிக்கப்படுகிறார்கள். அதனால், இவர்களும் தமிழர்கள் என்ற போர்வையின் கீழே வர மாட்டார்கள். கூட்டி கழித்து கணக்குப் போட்டால், தமிழ் தேசியம் பேசுகிற ஒன்றிரண்டு பேர், அவர்களது கணக்குப்படி தமிழர்களாக வருவார்கள். ஆக, நம்மை ஆளுகின்ற தகுதி அவர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லது ஒத்துக்கொள்ள வைக்கப்படுவோம்.

வளர்ச்சி என்பது குறுகிப் போவதில் இல்லை. நாளுக்கு நாள் விரிந்து, பறந்து இருப்பதில் தான் இருக்கிறது. தமிழ்நாடும், தமிழர்களும் இன்றைய கால கட்டத்தில் தங்களுக்கு தாங்களே, போட்டுக் கொண்ட திராவிட விலங்குகளை உடைத்தெறிய ஆரம்பித்து இருக்கிறார்கள். திராவிடம் பேசிப் பேசி திராவிடத் தலைவர்களின் கருத்துக்களை நம்பி, நம்பி எந்த அளவு முன்னேற்ற பந்தயத்தில் பின்தங்கி கிடக்கிறோம் என்பதை இன்றைய இளைய தமிழர்கள் தெளிவாக உணர்ந்து வருகிறார்கள். எனவே தமிழர்கள் என்ற பாத்தி கட்டி, அதற்குள் தனி தமிழர்கள் என்ற இன்னொரு பாத்தியை பிரித்து, சதுரங்கம் விளையாடுவது எல்லாம் மிகப் பெரிய சரித்திரப் பிழையாகி விடும்.

காரமாக இருக்கிறது என்பதற்காகவும், நாக்கிற்கு சுவை தருகிறது என்பதற்காகவும் மிளாகாய் பஜ்ஜியை அதிகம் உண்பது போல ஊடகங்கள் கார சார விவாதத்திற்காக தனித் தமிழ் தேசியவாதிகளை சுற்றி வருவதும், அவர்களது கருத்துக்களை பூதக் கண்ணாடி கொண்டு மிகைப்படுத்தி காட்டுவதும், மிகத் தவறுதலான உதாரணங்களாக மாறிவிடும். மக்கள் மத்தியில் ஆதரவு என்பதே எள் முனையளவு கூட இல்லாத, இந்த தலைவர்களை மீண்டும், மீண்டும் ஊடகங்கள் முன்னிறுத்தினால் இல்லாததை இருப்பது போல மாய நம்பிக்கைகள் அதிகரித்து விட துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மத்திய அரசாங்கத்தால், தமிழ்நாடு மட்டும் தான் குறிவைத்து தாக்கப்படுகிறது. நெறியில்லாமல் பின்னுக்கு தள்ளப்டுகிறது. அந்நிய சக்திகளின் கொள்ளை கூடாரத்திற்கு வரன் முறையே இல்லாமல் திறந்து விடப்படுகிறது என்ற பிரச்சாரங்கள் எல்லாம் முற்றிலும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள இயலாது. கதை கட்ட சில பேர் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு என்று புகழ்பெற்ற திரைப்பட பாடல்கள் உண்டு. எதையெடுத்தாலும் குற்றம் குறைகளையே பார்ப்பது, அதைப் பற்றியே பெரிதுபடுத்தி பேசுவது என்பது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல.

இந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டை பிரித்து தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களையே பிரிக்கவேண்டும் என்று நினைப்பது தான் இன்றைய தமிழ் தேசியவாதிகளின் கணக்காக இருக்கிறது. நாயுடுகளும், ரெட்டியார்களும், செட்டியார்களும், பிராமணர்களும் தமிழர்கள் இல்லை என்றால், தமிழுக்காக போராடும் இவர்களுக்கு எதற்கு அவர்களின் ஓட்டு. எனவே இந்த ஜாதி மக்கள் தங்களுக்கு ஓட்டே போட வேண்டாம். நாங்கள் அவர்களிடம் ஓட்டும் கேட்க மாட்டோம் என்று சொல்ல இவர்களுக்கு தைரியம் உண்டா? ஒற்றுமையாக எல்லோரும் ஓட்டு போட்டு, இவர்களை பதவிக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொருவனும் சட்டையை பிடித்துக் கொண்டு சண்டைப் போட்டு, மண்டை உடைய வேண்டும். யாரோ எக்கேடும் கெட்டுப் போங்கள் என்று, இவர்கள் தங்களது சுகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம் என்பது என் கருத்து. அது இல்லை என்றால், நான் மேலே சொன்னபடி இந்த ஜாதியினரின் வாக்குச் சீட்டை ஒதுக்குவதாக அறிவிப்பார்களா...?


குழந்தைபேறு தரும் மந்திரம் !பாசம் மிகுந்த குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். என் அக்காவிற்கு திருமணமாகி பத்துவருடங்கள் முடிந்துவிட்டது. அக்காவின் உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. அவள் கணவனின் உடல்நிலையிலும் எந்த குறையும் இல்லை. இருந்தாலும், இருவருக்கும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்கள் உடம்பில் எந்த சிக்கலும் இல்லை. பொறுமையாக காத்திருங்கள் அல்லது செயற்கைமுறை கருத்தரிப்புக்கான சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் தத்து எடுப்பது தான் ஒரே வழி என்கிறார்கள்.

இதனால் மனமுடைந்து என் சகோதரி மிகவும் சோகமாக இருக்கிறாள். நீங்கள் கொடுக்கும் அமிர்ததாரா மகா மந்திர தீட்சை நினைத்ததை கொடுக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என் அக்காவின் பிரச்சனைக்கு அது தீர்வாக அமையுமா? அவளும், அவளது கணவரும் தீட்சை எடுத்து கொள்ளலாமா? தயவு செய்து வழி காட்டவும்.

இப்படிக்கு,
ஜகதீஸ்வரி,
புதுடெல்லி
ன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு இரண்டு வருடமாக ஒவ்வாமை காரணமாக உடம்பில் அரிப்பு இருக்கிறது. ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். ஓரளவு பலனும் தெரிகிறது. என் ஜாதகப்படி ஆறாம் இடத்தில் ராகு இருப்பதனால், ஆரோக்கிய குறைவு, அடிக்கடி ஏற்படும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதற்கு ராகுவின் கொடுமையை குறைக்க கூடிய சரியான பரிகாரம் செய்யவேண்டும் என்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் அமிர்ததாரா மஹாமந்திர தீட்சை கிரக தோஷங்களை விலக்கும் என்று எழுதியிருக்கிறீர்கள். அதன் அடிப்படையில் நான் அந்த தீட்சை எடுத்து கொள்ளலாமா? எனக்கு பலன் கிடைக்குமா? தயவு செய்து பதில் கூறவும்.

இப்படிக்கு,
நாகராஜன்,
கோவை.குருஜி அவர்களின் திருப்பாதங்களுக்கு, அனந்தகோடி நமஸ்காரம். என் பூர்வீகம் மதுரை என்றாலும், நான் தற்போது மும்பையில் வாழ்கிறேன். எனக்கு ஒரே மகள், இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுமார் அவளது ஜாதகப்படி, புதனும், கேதுவும் நல்ல நிலையில் இல்லாததால் அவ்வளாவாக படிப்பு வராது என்று கூறுகிறார்கள். எனது ஒரே மகளுக்கு நான் கொடுக்கும் அழியாத சொத்து கல்வி மட்டும் தான் என்று நினைக்கிறேன். அதுவும் குறைந்துவிட்டால், வருங்காலத்தில் என் மகள் சொந்த காலில் நிற்க முடியாத நிலையில் இருப்பாள். எனவே அந்த நிலையை தடுக்க அமிர்ததரா மஹாமந்திர தீட்சை அவள் எடுத்து கொள்ளலாமா நல்ல பதிலை தாருங்கள்.

இப்படிக்கு,
நெடுஞ்செழியன்,
மும்பைந்திர தீட்சை என்பது மேஜிக் செய்வது போல் நமது வாழ்க்கையை நிமிட நேரத்தில் மாற்றிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகளிலிருந்து, உடனடியாக விடுபடவேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில், ஆனந்தமான வாழ்வை பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அதீதமான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இதை தவறு என்று நேராக சுட்டிக் காட்ட நான் விரும்பவில்லை என்றாலும், அப்படி எதிர்பார்ப்பது யதார்த்தத்தை மறந்துவிட்ட நிலையாகும் என்பதை உணர்த்த வேண்டும்.

நோய் வருகிறது என்றால் அதற்கு மருந்து உண்ணுகிறோம் என்றால், அந்த மருந்து உடம்பில் சென்று இரத்தத்தோடு கலந்து, நாடி நரம்புகளில் பாய்ந்து, குறிப்பிட்ட நோயை தாக்கி நம்மை சுகப்படுத்துவதற்கு சற்று நேரமாவது நாம் பொறுத்திருக்க வேண்டும். ஒரு மருந்து எப்படி உடம்பிற்குள் வேலை செய்கிறதோ? அதே போலதான் மந்திரம் என்பதும் நமக்குள் வேலை செய்கிறது.

நேற்றுவரை சுதந்திரமாக சுற்றித்திரிந்த மனதை பிடித்து இழுத்து, கால்மணி நேரமாவது, அங்கே இங்கே ஓடாமல் கட்டி போடுகிறோம். அப்படி கட்டும் போது, அது உடனடியாக வசப்பட்டு வராது. முரண்டு பிடிக்கும். மிரண்டும் ஓடும். சில நாட்கள் செல்ல செல்ல, மனது நிலை பட்டு மந்திரத்தின் அதிர்வுகளை உள்வாங்க துவங்கும். இதற்கு எப்படியும் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது ஆகும். அதுவரை மனம் சலிக்காமல், முயற்சியை கைவிடாமல், சோர்வுக்கு இடம் கொடுக்காமல், தொடர்ந்து மந்திரத்தை உருவேற்ற வேண்டும்.

மந்திர அதிர்வு என்பது, நமது உடம்பில் சேர சேர இதுவரையில் உடம்பிற்குள் இருந்த எதிர்மறையான அதிர்வுகள் வெளியேற துவங்கி, நல்ல சக்திகள் உள்ளுக்குள் உற்பத்தியாகும். அப்படி உருவாகும் மந்திரத்தின் சக்தியானது, நமது ஆத்மாவில் நமது விதியில் பதிவாகி இருக்கும் தீய இயல்புகளை, துயரமான பாதிப்புகளை துணியின் மீது பதிந்திருக்கும் அழுக்கை, சோப்பு எப்படி சிறிது சிறிதாக கரைத்து சுத்தமானதாக மாற்றுமோ அதே போல நாம் எதிர்கொள்ள வேண்டிய சோதனைகளை, வலிமை குறைத்து மெலியதாக மாற்றி, ஒரு நேரத்தில் இல்லாததாக ஆக்கி நமக்கு நன்மை செய்ய துவங்குகிறது.

மனிதன் கடவுளை பற்றி, அவரது உறவை பற்றி, அவரது கருணையை பற்றி, அதிகம் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு அவனது சொந்த பிரச்சனைகளே காரணமாகும். அமிர்ததாரா மகாமந்திரம் என்பது, மனிதனை சொந்த சிக்கலிலிருந்து விடுவித்து, அதாவது அந்த சிக்கல் விதி வழி வந்திருந்தாலும், மதி வழி வந்திருந்தாலும், கிரகங்களின் கோளாறுகளால் வந்திருந்தாலும், அவைகளை விலக்கி நம்மை இறைவன் என்ற ராஜபாட்டையில் அழைத்து செல்ல துவங்கும்.

அப்படி என்றால், நமது பெரும் துயரங்கள் என்று எது இருக்கிறதோ அதாவது குழந்தையின்மை, ஆரோக்கியமின்மை, செல்வமின்மை, வாழ்க்கையின்மை ஆகிய இல்லாமைகளை முதலில் நீக்க துவங்கும். அதன் பிறகு, நமக்கு தேவையான பற்றின்மையை, அதாவது நிரந்தரமான மன அமைதியை கொடுத்து, இறைவனின் அருளை பெற உதவி செய்யும். அதன் அடிப்படையில், இங்கே வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றுவிதமான பிரச்சனைகளுக்கும், அமிர்ததாரா மகா மந்திர தீட்சை, கண்டிப்பான பலனை தரும்.

மந்திரம் சொல்வதில், ஏற்படும் மனச்சோர்வு எதிர்பாராத தடைகள் போன்றவற்றால், அடையவேண்டிய பலன் சிறிது காலம் கடந்து கிடைக்குமே தவிர, ஒருபோதும் கிடைக்காமல் போவது இல்லை. நமது ஆர்வமும், வேகமும் மந்திரத்தின் மேல் இருந்தால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உடனே கிடைக்கும். ஐயோ சோகம் நம்மை சுமை தூக்க முடியாமல் தடுக்குதே, தள்ளாட வைக்கிறதே என்று சுய பச்சாதாபத்தில் மந்திரம் சொல்வதில் சுணக்கம் காட்டினால் பலனும் சுணங்கும் என்பது இயற்கை.

பல புகழ்பெற்ற மலையாள திரைப்படங்களை இயக்கிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளருக்கும் மற்றவர்களுக்கும் நடந்த பனிப்போரினால் பாதிக்கப்பட்டு படவாய்ப்புகள் இல்லாமல், சில வருடங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். அவர் அமிர்ததரா மஹாமந்திர தீட்சை எடுத்த பிறகு, முழு மூச்சாக உண்ணும் நேரம், உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மந்திரத்தை உருவேற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். இரண்டே மாதத்தில், பிரச்சனை ஏற்படுத்திய தயாரிப்பாளரே நேரில் வந்து புதுபடம் ஒன்றை இயக்குவதற்கு இவருக்கு அட்வான்சும் கொடுத்துள்ளார்.

இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், மகாமந்திரம் என்பது மிக சுலபமாக உங்களுக்கு கிடைத்தாலும், இது பிரம்மாஸ்திரதிற்கு இணையானது. ராமன் கையில் உள்ள வில், எப்படி இலங்கையின் தலைவிதியையே மாற்றியதோ, அதே போன்று அமிர்ததாரா மகாமந்திரம், உங்கள் தலையெழுத்தை மாற்ற வல்லது. மூர்த்தி சிறியது என்றாலும், கீர்த்தி பெரியது. எனவே துயரங்களை கண்டு துவண்டு போவதை விட்டு விட்டு, புதிய வாழ்க்கை நமக்கிருக்கிறது என்று நம்பிக்கையோடு வாருங்கள் நாராயணன் துணை செய்வான்.கழனிக்குள் செருப்பு போடலாமா...?
குருஜி அவர்களுக்கு, வணக்கம். நெல் வயலில் செருப்பு காலோடு நடக்க கூடாது என்று சொல்வது ஏன்?  சேறும், சகதியுமாக இருக்கும் பகுதியில் வெறும் காலோடு நடப்பது ஆரோக்கிய குறைபாடு இல்லையா?

இப்படிக்கு,
மயில்சாமி,
கோபிசெட்டிபாளையம்.கோபியில் பிறந்துவிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்பதே சரியா? என்பது என் பதிலாகவும், கேள்வியாகவும் வைக்கலாம். ஆனால், தனிப்பட்ட மயில்சாமிக்கு மட்டும் விளங்க வைப்பது என் வேலை என்றால், அது சரியாக இருக்கும். இவரைப் போன்று கேள்விகள் உள்ள பலருக்கும், பதில் சொல்ல வேண்டும் என்பதனால், அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதனால், எனக்கு தெரிந்த வரையில் பதிலைச் சொல்கிறேன்.

இன்று உலகில் ஏற்பட்டிருப்பது தகவல் தொழில்நுட்ப புரட்சி. இதுவும் இல்லாமல் மனிதனது தலைமுறை முன்னேற்றம் காண்பதற்கு பல புரட்சிகள் நடந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இயந்திர புரட்சி, தொழில் புரட்சி என்று எத்தனையோ புரட்சிகளை அவர்கள் பட்டியல் இடலாம். இந்த புரட்சிகளை எல்லாம் விட மிகச்சிறந்த புரட்சி, மனித சமுதாயமே முன்னுக்கு வர அஸ்திவாரமாக இருந்த புரட்சி எதுவென்றால்  விவசாய புரட்சி தான்.

நேற்று வரை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், ஓடி ஓடி வேட்டையாடி வயிற்று பசியை தீர்த்துக்கொண்ட மனிதன், ஒரு இடத்தில் நிலையாக உட்கார்ந்து பசியாறுவதற்கு பண்பாட்டை வளர்ப்பதற்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளை நடத்துவதற்கும், விவசாய புரட்சியே துணையாக இருந்திருக்கிறது. உலகத்தை கெடுக்காத, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத யாருக்கும், தீங்கு செய்யாத ஒரே புரட்சி வேளாண் புரட்சியே.

அதனால் தான், உலகம் முழுவதும் ஏர் பிடித்து உழுகின்ற உழவர்கள் பயிரையும், பயிரை விளைவித்து தரும் நிலத்தையும், தெய்வமாக கருதினார்கள். நாம் வழிபாடு செய்யும் இடங்களுக்குள், செருப்போடு போகக்கூடாது என்பது இந்திய பண்பாடு. விவசாயி வழிபடும் கோவில், கழனி. அதில் காலணியோடு போனால், அவனது தெய்வத்தை அவமானப்படுத்திய படு பாதகச் செயல் நம்மை பாவமாக துரத்தும். பசுவையும், பிராமணனையும் கொன்றால் கூட ஏற்படாத பிரம்மஹத்தி தோஷம், சோறுபோடும் நிலத்திற்குள் காலணியோடு நடந்தால் ஏற்படும் என்பது எனது கருத்து.

நெல் விளையும் பூமி என்பது கிருமிகள் வாழும் சாக்கடை அல்ல. நமது பசியை ஆற்றும் பூக்கடை அது. எனவே, அதில் வெறுங்காலோடு நடந்தால் நிச்சயம் ஆரோக்கிய குறைவு ஏற்படாது. உடல் முழுவதும் சர்க்கரை நோய் பற்றிகொண்டவன் கூட, திருப்பதி பிரசாதத்தை நம்பிக்கையோடு உண்டால் எந்த தொல்லையும் ஏற்படாது. அதே போல் நிலம் என்ற கோவில், உனது பக்தி என்ற நம்பிக்கையை கண்டிப்பாக மதிக்கும். உன்னை காப்பாற்றும். எனவே, தாய்மையை, பூமியை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். பக்திப் பூர்வமாக அணுக கற்றுக் கொள்ளுங்கள். இன்பம் என்றால் என்னவென்று தெரியும்.நாத்திகன் ஆத்திகனாகும் நேரம்...


   றுப்புச் சட்டை போட்ட முரட்டு கிழவன் ஒருவன், வைக்கோல் போர் உருவப்பட்ட சோளக்கொல்லை பொம்மை போல, அதே அந்த கட்டிலில் சாய்ந்து  கிடக்கிறான். வெட்டப்பட்ட மரம், உளுத்துப் போன உத்திரம், துருப் பிடித்த இரும்பு, செல்லரித்த சுவர் என்று எப்படி வேண்டுமானாலும் அவனை அழைக்கலாம்.

வாழ்க்கை என்ற பயணத்தில், காலம் என்ற பாதையில், எத்தனையோ மைல்கற்களை கடந்துவிட்ட அவன், இப்போது கடைசி படிக்கட்டில் மயங்கியும், மயங்காமலும் கிறங்கி கிடக்கிறான். கண்களுக்குள் அகப்படும் நிகழ்கால உலகம், சில சமயத்தில் அவன் வசப்படுகிறது. பல சமயங்களில் அவனை விட்டு விட்டு எங்கோ தூரத்தில் நழுவி ஓடுகிறது.

தொண்டைக்குள் உருளும் சதைப் பந்தும், நெஞ்சிற்குள் உறுமும் சளிப்படலமும், கண்களை பிதுக்கி வயிற்றை சுறுக்கி ஈரக்குலையை கோபுரம் போல, மேலேத் தூக்கி கீழே போடுகிறது. மரணத்திற்கும், வாழ்விற்கும் நடக்கும் இறுதிப் போராட்டம் இது வென்று அவன் உணரத் துவங்கிவிட்டான்.

உணர்வுகள் கொப்பளிக்கும் போது, அறிவுக் குதிரை கடந்த கால பாதையில் தறிகெட்டு ஓடுவதை அவனால் காண முடிகிறது. அறுபது வருடத்திற்கு முந்தைய இருபது வயதில் காலம் அவனைப் படுத்திய பாட்டை நினைத்து பார்க்கிறான். அவன் பாடிய பாட்டை, மீட்டிய வீணையை போட்ட தாளத்தை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறான்.

அழுக்கு நிறைந்து, சிக்குப் பிடித்து, எண்ணெய் இல்லாமல் வறண்டு போன தலை ரோமங்கள் அவன் இளம் பிராயத்து அலங்கார கதையை பரிகாசமாக சொல்லி சிரிக்கிறது. எத்தனை கோணத்தில், எத்தனை வடிவத்தில், தினசரி எத்தனை முறை வாரப்பட்ட, வளர்க்கப்பட்ட தலைமுடி இது கன்னத்தில் சிறியதாக முளைத்தாலும் கூட, சுரண்டி வீசப்பட்ட முக முடி இது. இன்று அருகில் வந்தாலே நாற்றம் அடிக்கும் சாக்கடை புற்கள் போல, கேட்பாரற்று கிடக்கிறதே.

புடைத்து நின்ற தோள்கள், விடைத்து நின்ற மார்பு, எலும்புக் கூடுகளாக காட்சி அளிக்கிறதே தளதளத்த மேனி இன்று, தள்ளாடி தளர்ந்து உருகி வெறும் மாமிச தொங்கல்களாக ஆகிப் போனதே? உடம்பு அழகை காட்டி ஆடிய ஆட்டம் என்ன? உடம்பு சுகத்திற்காக போட்ட வேடங்கள் என்ன? எல்லாம் நீர்க்குமிழி போல பஞ்சாய் பறந்து விட்டதுவே


கொதிக்கும் பானையின் மூடியை, நீராவி உந்தி தள்ளுவதை போல கொதிக்கின்ற இரத்தம் போட்ட குதியாட்டம் என்ன?  இரத்தக் கொதிப்பில் சித்தம் தடுமாறி இரக்கம் அற்று முரடனாய் நடந்த மூட நாட்கள் எத்தனை? முறுக்கேறிய நரம்புகள், கிறுக்கு பிடித்தபோது, வருத்தும் முதுமை வறுமை வரும் என்று நினைத்து பார்க்க முடியவில்லையே?

கிழவனின் சிந்தனை புறா கூட்டம் போல, வானத்தில் பறந்து பறந்து வட்டம் அடித்தது. இராஜ இராஜ சோழனின் வீர வாளும் ஒருநாள் அமைதி கொள்ளும். அலெக்ஸாண்டரின் முரட்டு படையெடுப்பும் ஒருநாள் கலைந்து போகும். ஹிட்லரின் துப்பாக்கியும் ஓய்வெடுக்கும். சதிகள் நிறைந்த சதுரங்கமும் ஒருநாள் ஓய்வெடுக்கும். துவங்கும் எதுவும் முடிந்தே தீரும்.

துன்பம் எப்படி நிலையில்லாததோ, இன்பமும் அப்படியே நிலையில்லாதது. இளமையும் ஒருநாள் மறைந்து, முதுமை வந்தே தீரும். மாறிக்கொண்டே இருப்பது தான் மானிடர் வாழ்வும், உலகத்து நியதியும். ஆயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாமல் வாழ்வேன் என்று சீசர் கூட சொல்லமுடியாது. நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன் என்று ஸ்டாலின் கூட சபதம் போட இயலாது.

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முதுமைக் காலம் வரும். மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவது போல, காலம் மாறாது என்று கனவு கண்டால், கனவும் பொய்யாகும். கண்டவனும் பொய்யாவான். பரம நாத்திகனும், படுக்கையில் விழுந்தால் பாடையை நினைத்து பயந்து போவான். கொள்கையை மறந்து ஆத்திகன் பக்கம் சாயத் துவங்குவான்.

நான் நினைத்தது மட்டுமல்ல, நினைக்காததும் நடந்தது. நினைத்ததையும் நினைக்காததையும் நடத்தி வைத்தது எனது சக்தி அல்ல. எங்கேயோ இருந்து சூட்சம கயிறு ஒன்று, என்னை இழுத்து அசைத்து இயங்க வைத்தது ஆட்டுவித்தபடி ஆடினேன். பாட்டுவித்தபடி பாடினேன்.


ஐயோ! பரிதாபம். நானே ஆடுவதாக, நானே பாடுவதாக கற்பனையில் கிடந்தேன். சொப்பனத்தில் மிதந்தேன். மரணப் படுக்கையில் கிடக்கும் போது ஞானம் பிறக்கிறது. இருட்டு வந்து, கண்களை குருடாக்கும் போது, வெளிச்சம் தெரிகிறது. என்னால் எதுவும் இல்லை. என்னால் யாரும் இல்லை என்ற உண்மை இறுதியில் தெரிகிறது.

தூக்கி வந்த பாவச் சுமைகள், இப்போது தான் கனக்கத்  துவங்கி இருக்கிறது. இன்னும் எத்தனை தூரம் சுமக்க முடியும்? பாரம் அழுத்த, அழுத்த எனது சுமையை நான் மட்டுமே சுமக்க வேண்டும் என்ற நிதர்சனம் புரிகிறது. உடலோடு இருந்தாலும், உடல் விட்டுப் போனாலும் என் சுமை என்னை
விட்டுப் போகாது என்பதை தெள்ளன தெரிந்து கொள்கிறேன்.

அப்படி என்றால் கிழவனின் வாழ்க்கை இன்னும் தொடருமா? செத்த பிறகும் வாழ முடியுமா?   படுக்கையில் கிடப்பவனுக்கு அர்த்தம் புரிகிறது. ஆழ்ந்து சிரிக்கிறான். காலதேவன் அவனை சிரிக்க வைக்கிறான். சுற்றி இருப்பவர்கள் உடம்பிற்காக அழும் போது, உடம்பை விட்டவன் எதற்காக அழுவான்? யாருக்கு தெரியும்?

தான் சம்பாதித்த பாவ மூட்டைக்காக அழுவானா? சம்பாதித்ததை செலவு செய்ய தெரியாமல் அழுவானா? அல்லது இதோ சம்பாதித்து கொண்டிருக்கும் உன்னையும், என்னையும் பார்த்து புரியாத ஜென்மங்களே, அறியாமல் வாழ்கிறீர்களே என்று தலையில் அடித்துக் கொண்டு நமக்காக அழுவானா? யாருக்கு தெரியும். செத்துப் பார்த்தால் தான் செத்தவனின் கதை தெரியும்..
எந்த கிழமையில் அபிசேகம் செய்யலாம்...?
குருஜி அவர்களுக்கு, வணக்கம். எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அவைகள் தீர்வதற்கு கோவில்களில் அபிஷேகம் தொடர்ந்து எழு நாட்கள் செய்யவேண்டும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கருத்து படி குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்கின்ற நாட்களில் பல குளறுபடிகள் இருக்கிறது. அதாவது, ஒரு தெய்வத்திற்கு ஒரு கிழமையை ஜோதிடர் சொன்னால், வேறொரு ஜோதிடர் வேறு கிழமையை சொல்கிறார். இதனால் எங்களுக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் தவிப்பாக இருக்கிறது. எனவே தாங்கள், எந்த தெய்வத்திற்கு எந்த கிழமையில் அபிஷேகம் செய்யவேண்டும் என்ற விவரங்களை தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
மலர்கொடி,
சென்னை.விநாயகருக்கு ஞாயிற்றுக் கிழமையும், சிவனுக்கு திங்கள் கிழமையும், முருகனுக்கு செவ்வாய் கிழமையும், மகா விஷ்ணுவிற்கு புதன் கிழமையும், தக்ஷ்ணாமூர்த்தி மற்றும் மகான் ஸ்ரீ இராகவேந்திரர் போன்ற குருமார்களுக்கு வியாழக்கிழமையும், அம்மன் உட்பட பெண் தெய்வங்களுக்கு வெள்ளிக் கிழமையும் ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார கடவுள்களுக்கும் ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமையும், விநாயகருக்கு செய்வது போன்று நவகிரகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் அபிஷேகம் செய்யவேண்டும் என்று, பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அபிஷேகம் செய்து இறைவனை வழிபடுவது, நமது மன சுத்திக்கும் ஆத்ம சுத்திக்கும் சிறந்த வழியாகும். இறைவனின் திருமேனியில் குளிர்விக்கும் அபிஷேக பொருள் சேரும் போது, கொதிகலன் போல் கொதித்து கொண்டிருக்கும் நமது வாழ்க்கை பிரச்சனை, குளிர்ச்சி அடையும் என்பதே அபிஷேகத்தின் உண்மை நோக்கமாகும்.


வேலைக்கு போகலாமா...?
ரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். நான் ஆங்கில மொழி பாடத்தில், எம்.ஏ படித்துள்ளேன். என் படிப்பிற்கான வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. வேலை இல்லாமல் பெண் தரவும் யோசிக்கிறார்கள். முப்பத்தைந்து வயது ஆன பிறகும் வேலை இல்லாமல் இருப்பது, கவலையாக இருக்கிறது. என் கவலை எப்போது தீரும்? எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும் என்று கணித்து கூறவும்.

இப்படிக்கு,
மகேஷ்குமார்,
திண்டுக்கல்.


ப்போது வெளிவந்த +2 தேர்வு முடிவில், நல்ல மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவன் என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தான். அடுத்து என்ன படிக்கப் போகிறாய்? படித்துவிட்டு, என்ன செய்ய போகிறாய் என்று கேட்டேன். கணிப்பொறி துறையில், பொறியியல் படிக்கப் போவதாகவும், படித்த பிறகு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்ய போவதாகவும், மகிழ்ச்சியோடு சொன்னான்.

சிறிய பையனின் கபடமில்லாத ஆசையை, வேறு வார்த்தைகள் சொல்லி காயப்படுத்தி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில், அவனை வாழ்த்தி அனுப்பினேன். ஆனாலும், அவனையும் அவனை போன்ற வேறு இளைஞர்களையும் நினைக்கும் போது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. படிப்பு என்பது வாழ்க்கைக்கு வழிகாட்ட கூடியதே தவிர வயிற்றை வளர்ப்பதற்கு உதவக்கூடியது அல்ல என்ற நியாயம் பலருக்கு தெரியவில்லையே என்று தோன்றியது.

இன்றைய மக்கள் பலர், படிக்க வேண்டும் வேலைக்கு போகவேண்டும் சம்பளம் வாங்கவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நாமே ஏன் சம்பளம் கொடுப்பவர்களாக உயரக் கூடாது என்று நினைப்பதற்கு சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். தொண்டு செய்வது நல்லது தான். ஆனால் கூலிக்காக தொண்டு செய்வது முன்னேற்றத்திற்கு அடையாளம் அல்ல. பத்து லட்சரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதன் பெயர் கூலிதான். வெறும் பத்து ரூபாய் சொந்தமாக சம்பாதித்தால் அதன் பெயர் லாபம். லாபம் பெரியதா? கூலி பெரியதா? என்று சுய கெளரவம் உடையவர்கள் நினைத்து பார்த்தால் புரியும்.

வேலைக்காக படிக்காதீர்கள். படித்துவிட்டு வேலை செய்வதும், உறங்கி கொண்டு உணவு உண்பதும் ஒன்று. வேலை என்பது ஆர்வத்தின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில், அனுபவத்தின் அடிப்படையில் அமையவேண்டும். அப்படி அமைந்தால், அது தான் வெற்றி என்ற பேழையின் சாவியாக இருக்கும். மேலும் நான் இன்ன துறையில் படித்திருக்கிறேன். எனக்கு அந்த துறையில் தான் வேலை வேண்டும் என்று நினைப்பது இன்னொரு முட்டாள் தனம்.

கிடைக்கும் வேலையை செய். அப்படி செய்து கொண்டே, நீ விரும்பும் வேலையை நோக்கி நகர்ந்து போ. அது தான் சிறந்த வழி. விரும்பியதை கிடைக்கும் வரை காத்திருப்பேன் என்றால், காலச் சக்கரத்தில் நீ நசுங்கி விடுவாய். ஆங்கிலம் படித்தவன் கலப்பை எடுத்து, ஆழ உழுதால் மண் நெகிழ்ந்து கொடுக்காமல் மல்லுக்கு நிற்காது. உழைப்பவன் எவன் உழுதாலும் மண் நெகிழும். எனவே படித்தவன் என்ற கர்வத்தை விட்டு விட்டு உழைப்பவன் என்ற பட்டத்தை சூட்டிக் கொள்.

மேலும் பரிகாரம் வேண்டும் என்ற கேள்வியை கேட்டதனால், அதற்கும் பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். உடனடியாக வேலை கிடைக்க, நீங்கள் பிறந்த கிழமையில் வருகிற பிரதோஷம் அன்று, சிவாலயம் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். சிவனுக்குரிய காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வாருங்கள். வேலை கிடைக்கிறதோ இல்லையோ? கிடைத்த வேலையை செய்வோமே என்ற நல்ல புத்தி உடனே பிறக்கும். அதனால், நல்லதும் நடக்கும்.கடவுளின் அரசாங்கம்


   மாதவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கடவுள் ஒருவர் தானே! அவருக்கு ஒரு கோவில் போதாதா? தெருத் தெருவாக கோவிலை கட்டிவைத்து, அதில் வகை வகையாக சுவாமிகளை வைத்து வழிபாடு செய்வது ஏன்?

படிப்பு வரவில்லையா? சரஸ்வதியை வணங்கு என்கிறான் ஒருவன். தேவையில்லை ஹயக்ரீவரை வணங்கு என்கிறான் வேறொருவன். எதை எடுப்பது, எதை விடுவது அது ஒரு பெரிய குழப்பம். ஒரே காரியத்திற்கு இரண்டு சாமிகளா?

காசு கிடைக்கவில்லை என்றால், ஜென்மம் சேர வேண்டும் என்றால், மகா லஷ்மியை வணங்கு என்கிறான். சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கு என்கிறான். மனம் போன போக்கெல்லாம், வித விதமான கடவுள்களை காட்டுகிறார்கள். இதுவே பெரிய குழப்பம் அல்லவா?

ஒரு சாமியை வணங்குவதா? பல சாமியை கும்பிடுவதா?  எது சரி?  எது தப்பு? இரண்டில் எதோ ஒன்று சரியாக இருந்து. தவறானதை தேர்ந்தெடுத்து செய்தால் அதுவும் தவறு தானே என்று, மூளையை போட்டு கசக்கி கசக்கி குழம்பி போனான் மாதவன்.


கடைசியில் அவனுக்கு ஒன்று தோன்றியது. நம்ம மூளை மிகவும் சின்னது. ஆண்களுக்கு மூளையின் எடையோ ஒரு கிலோ நானூறு கிராம் தான் என்று அமெரிக்கா காரன் ஆராய்ச்சி பண்ணி சொல்கிறான். அது மற்றவர்களுக்கு சரியாக இருக்கலாம். அவர்கள் மண்டை சற்று பெரிது. ஆனால், நம் மண்டை கத்திரிக்காய் அளவு தான் இருக்கிறது என்று நினைத்து, புதிய ஞானோதயத்திற்கு அவன் வந்தான்.

சிறிய வயதிலிருந்தே அவனுக்கொரு பழக்கம். காற்றாடி சுற்றுவது எப்படி என்று அவனுக்கு தெரியாததனால், அம்மாவிடம் கேள்வி கேட்பான். அம்மாவும் அவளுக்கு தெரிந்தவரையில் பதிலை சொல்லுவாள். ஆனால், ஒரு வயதிற்கு மேல் அம்மாவிடம் கேட்கமுடியாத கேள்விகள் சிலவும் மாதவனுக்கு வரும்.

கல்யாணம் ஆகும் வரையிலும் சாதாரண வயிறோடு இருக்கும் மாலதி அக்கா, கல்யாணம் ஆன சில காலத்திலேயே வயிறு பெரிதாகி ஒரு குழந்தையை பெற்றாளே அது எப்படி? என்று அவனுக்கு தோன்றியது. அதை போல நேற்று வரை தன்னோடு விளையாடிய கல்பனாவை பெரிய மனுஷி ஆகிவிட்டாள் என்று, மூலையில் உட்கார வைத்தார்களே அது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் தோன்ற, அம்மாவிடம் கேட்டுப் பார்த்தான். அவள் துடைப்ப கட்டையால் அடிக்க வந்தபிறகு, இதை அம்மாவிடம் கேட்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டான்.

அன்று முதல் தனது கேள்விகளை, தன் நண்பன் கோபாலிடம் தான் கேட்பான். கோபால் ஒன்றும் பெரிய மனுஷன் இல்லை. அவன் அப்பா வாத்தியார் என்பதனால், இவனுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுப்பார் அதனால் அவன் எதைக் கேட்டாலும் கோவில் மணி போல டான் டான் என்று பதிலை சொல்லுவான்.

இப்போது கோபாலுக்கும், தலை நரைத்து விட்டது. மாதவனுக்கும் தலைநரைத்து விட்டது. ஆனாலும், மாதவன் பார்வையில் கோபால்தான் அறிவாளி. நாலா விஷயங்களை அறிந்தவன், தெரிந்தவன், திறமைசாலி. எனவே அவனிடமே இந்த கடவுள் கேள்வியை கேட்டு விட வேண்டுமென்று கேட்டும் விட்டான்.

கோபால் சொன்னான். மாதவா நம்ம வீட்டில் சாக்கடை அடைத்துக் கொண்டால் யாரிடம் சொல்லுவோம்?

துப்புரவுத் தொழிலாளியிடம்.

தெருவில் விளக்கு எரியவில்லை என்றால், யாரிடம் சொல்லுவோம்?

பஞ்சாயத்து மெம்பரிடம்.

ஏரி உடைத்துக் கொண்டு போவதாக இருந்தால்?

தாசில்தாரிடம் முறையிடுவோம்.

இப்போது நன்றாக யோசி! துப்புரவு தொழிலாளி, பஞ்சாயத்து மெம்பர், தாசில்தார் இவர்கள் எல்லாம் யார்?  யாருடைய பிரதிநிதி?

மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் எல்லோரும், அவரவர் வேலையை செய்பவர்கள் தானே? பிறகு இவர்கள், எப்படி மற்றவர்களுடைய பிரதிநிதியாக வரமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. எனவே கோபாலிடம், நீனே பதிலைச் சொல். எனக்கும் ஒன்னும் விளங்கவில்லை என்று அவனிடமே விட்டுவிட்டான்.

கோபாலன் பேசினான்
சாக்கடையை சுத்தம் செய்வது, தெருவிளக்கு ஏற்றுவது, ஏரி உடைப்பை தடுப்பது என்று தனித்தனியான பணிகளாக இவைகள் தெரிந்தாலும் பொதுவாக இவைகள் அனைத்துமே அரசாங்கத்தின் வேலை. அரசாங்கத்தின் தலைவர் யார்? ஜனாதிபதி. ஜனாதிபதியின் மக்கள், கடமைகள் தான். ஆனால், இவை ஒவ்வொன்றையும் செய்ய அவரா வரமுடியும்? அதற்காகத்தான் அவரது பிரதிநிதிகளாக இந்த பணியாளர்கள் வேலைசெய்கிறார்கள்.

மாதவனுக்கு லேசாக புரிந்தது போல் இருந்தது. ஜனாதிபதி வேலையை மற்றவர்கள் செய்வது போல, கடவுள் வேலையை மற்ற தெய்வங்கள் செய்கிறார்களா? அப்படியென்றால் கடவுள் என்பது வேறு. இந்த தேவதைகள் என்பது வேறா? கோடிக்கணக்கில் வேலைகள் இருப்பதனால், அதை செய்ய கோடிக்கணக்கில் தேவதைகள் உண்டா? என்று கோபாலிடம் குழந்தை போல் கேட்டான்?

இல்லை. கடவுளும், ஜனாதிபதியும் இந்த இடத்தில் தான் மாறுபடுகிறார்கள். ஜனாதிபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதன். அதனால், அவருக்கு பல மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. கடவுள் அப்படி அல்ல. அவர் சகல சக்தி வாய்ந்தவர். எனவே அவர், ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு தேவதை போல தனது ஆற்றலை வெளிப்படுத்தி, உலக இயக்கத்தை நடத்துகிறார். அதனால் தான், கடவுளை சிருஷ்டி கர்த்தா என்கிறோம். சிருஷ்டி என்பது படைத்தல் மட்டுமல்ல, பாதுகாப்பதும் கூட.

கோபால் சொன்னது மாதவனுக்கு விளங்குவது போல் தோன்றினாலும், முழுமையாக புரியவில்லை. ஒருவேளை, அதை புரிந்துகொள்ள இன்னும் அதிகமாக சிந்திக்க வேண்டுமோ? என்று தோன்றியது. கோபாலிடமே இந்த கேள்வியை கேட்டான். இதை விரிவாக புரிந்து கொள்ள நான் இன்னும் அதிகமாக சிந்தனை செய்யவேண்டுமா என்று?

கோபால் சிரித்தான். சிந்தனையில் தெளிவு வராது. நன்றாக குழப்பிக் கொள்.  குழம்பிய குட்டை தெளிவடையும் வரை காத்திருப்பது போல, பொறுமையாக உன் குழப்பங்கள் தீரும் வரை. அது, அதனுடைய எல்லையை தொடும் வரை காத்திரு. அப்போது நீரோடை தெளியும். தண்ணீருக்கு அடியில் உள்ள இரகசியங்கள் புரியும் என்றார்.ராமனுக்கு பிடித்த துளசி
   கவான் கண்ணனுக்கு துளசிமாலை அணிவிப்பது போல ஸ்ரீ ராமபிரானுக்கும் துளசிமாலை சாற்றி வழிபாடு செய்யலாமா? 


இப்படிக்கு ,
ரேணுகாதேவி ,
அமெரிக்கா .    துளசியும் துளசியின் நிழலும் கூட எனக்கு மிகவும் பிடித்தமான இடமென்று கண்ணன் சொல்கிறான். நீ வழிபாடு செய்கிறபோது எனக்கு படைப்பதற்கு எதுவுமே உனக்கு கிடைக்கவில்லையா கவலைப்படாதே ஒரு காய்ந்த துளசியிலை இருந்தாலும் போதும், அது கூட இல்லையா துளசி வளர்ந்த இடத்தில் இருக்குமே மண் அந்த மண்ணின் ஒரு சிறு துளியை கூட எனக்கு அர்ப்பணம் செய்து நீ வழிபடலாம். என்று கண்ணன் நமக்கு தனது எளிமையை மிக அழகாக சொல்லி நான் ஆடம்பரங்களை விரும்புவன் அல்ல அன்பை மட்டுமே நேசிப்பவன் என்று காட்டிவிடுகிறார்.

அப்படிப்பட்ட கண்ணபெருமானுக்கு எந்த துளசி இலையாக இருந்தாலும் ஏற்றது தான் என்றாலும் கருந்துளசி இலை அவனுக்கு மிகவும் பிடித்தது. அதே போல வெண்துளசி ராமனுக்கு ஏற்றது என்று சொல்வார்கள் வெண்துளசி என்பது இளம் பச்சை நிறத்தில் இருக்கும் இதுதவிர செந்துளசி என்ற  துளசி உண்டு இது மிகவும் அரிதானது இந்த துளசி அன்னை மகாலஷ்மிக்கு மிகவும் பிடிக்குமாம் இதை கொண்டு பூஜை செய்தால் மகாலஷ்மி மகிழ்ந்து செல்வ வளத்தை வாரித்தருவாளாம் இறைவனுக்காக உள்ளன்போடு அர்ப்பணம் செய்தால் எல்லாம் கிடைக்கும்.

இந்தியாவை உருவாக்குவாரா மோடி...?


    மோடி அரசாங்கம், மத்தியில் உட்கார்ந்து வருடம் ஒன்று முழுமையாக முடிந்துவிட்டது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது? இனி வருங்கலத்தில் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை ஆறு மாதங்கள் சென்ற பிறகே அவதானித்து அறிய முடியும். கருத்துக்களை கூறமுடியும் என்று, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒரு நெறிமுறையை முதல் முறையாக வகுத்து மக்களுக்கு தந்தார். அந்த  நெறிமுறையின் படி ஆறு மாதத்திற்கு பதிலாக, பனிரெண்டு மாதங்களே நடந்து முடிந்து விட்டன. இனி தாரளமாக மோடி அரசை ஆழ்ந்து நோக்கலாம்.

அவசர நிலை காலத்திற்கு பிறகு, பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பை விட, பீரங்கி பேர ஊழலுக்கு பிறகு நடந்த தேர்தலில் வி. பி. சிங் மீது மக்கள் கொண்ட எதிர்பார்ப்பை விட, நரேந்திர மோடியின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மிக அதிகம். தேசாய், சிங் இவர்கள் காலத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் தாண்டி, ஆட்சி அதிகாரத்தை ஆட்டி படைப்பதற்கான வலிமை பெற்றிருந்தது. ஆனால், இப்போது மோடியின் காலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத அளவிற்கு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

காங்கிரஸ் கட்சியின் அனுபவம் இல்லாத தலைமை, சுயநலம் மிக்க தலைவர்கள் கூட்டம் என்று ஆன பிறகு, நூற்றாண்டை கடந்த அந்த கட்சி மீண்டும் எழுந்து வருமா? புத்துயிர் பெறுமா? என்ற சந்தேகம் மக்களுக்கும், அரசியல் வல்லுனர்களுக்கும் மிக வலுவாகவே இந்த சூழலில் ஏற்பட்டு இருக்கிறது எனலாம். ஆனால், மோடியின் தலைமையினாலான மைய அரசு தனது எழுச்சி மிக்க செயல்பாடுகளால் காங்கிரசை எழமுடியாமல் செய்யுமா?  அது நடக்கும் காரியமா? காங்கிரசை வீழ்த்துகிற வலு, நிஜமாகவே மோடிக்கு இருக்கிறதா?  என்று பல கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை.

புறப்பட்ட வேகத்திலேயே புற முதுகை காட்டி ஓடுவது போல, கறுப்பு பண விவகாரத்தில் அரசாங்கம் ஜலதரங்கம் வாசிக்கிறது. பதவிக்கு வந்து நூறு நாட்களில், அந்நிய நாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தை நாட்டுக்கு மீட்டு வருவேன் மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் லட்சக்கணக்கில் முதலீடு செய்வேன் என்று வீரம் பேசிய மோடி, பேசிய ஈரம் காய்வதற்கு முன்பே காங்கிரஸ் பாடிய பழைய பல்லவியை தொடர்ந்து பாடி நம்மை எரிச்சலடைய வைக்கிறார். நிலங்களை கையகப்படுத்தும் சட்ட விவகாரத்திலும், காங்கிரஸ் ஏற்படுத்திய பச்சைப் புண்ணின் மீது மிளகாய் பொடி தூவியது போல் நம்மை துணுக்குற செய்கிறார்.


ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின், தேசிய பொருளாதார கொள்கையாக சுதேசியம் இருந்தது. முழுமையான சுதேசியம் காலத்திற்கு ஏற்றதாக இராது. எனவே சற்று மாற்றலாம் என்று வாஜ்பாய் காலத்தில் ஏற்பட்ட மாற்றம் இன்று மோடி அவர்களால் சுதேசியம் என்பது முற்றும் முதலாக குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. இந்தியாவில் உருவாக்குவோம் என்று கோஷம் போடுகிறார். ஆனால், இந்தியர்களுக்காக உருவாக்குவார்களா என்பதை மிக வசதியாக மறைத்துவிட்டார். அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் மற்றும் சீனாவுடனும் அவர் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார ஒப்பந்தங்களை பார்க்கும் போது முற்றிலுமாக இந்திய தொழில்துறை, அந்நியர்களின் கைவசம் சென்றுவிட்டதோ? என்று தோன்றுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தாழ்வை அனுசரித்து இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், இந்திய எண்ணெய் நிறுவனம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு தான் விரும்புகிற படி விலையை தீர்மானித்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் அரசாங்கம் செய்திருந்த ஏற்பாடுகளை, மக்களுக்கு சுமையாக இருக்கிறது, இதனால் ஒவ்வொரு பொருட்களின் விலையும் விண்ணை முட்டுகிற அளவிற்கு உயர்கிறது எனவே ஆட்சி பொறுப்பு தனது கைக்கு வந்தவுடன் எண்ணெய் நிறுவனத்திற்கு கடிவாளம் போடுவேன் என்றார் மோடி. இந்த வாக்குறுதி அவரின் நினைவில் இருக்கிறதா? இல்லையா என்றே நமக்கு தெரியவில்லை.

மோடியின் அரசாங்கத்தால், மக்கள் உடனடியாக பாலும், தேனையும் பெற்றுவிடுவார்கள் என்று யாரும் கனவு காணவில்லை. இப்போதெல்லாம் மக்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் தாக்கப்பட்டு, தாக்கப்பட்டு நிதான புத்திக்கு வந்து விட்டார்கள். எனவே, அவர்கள் வீண் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வது இல்லை. ஆனால், மோடியின் சக அமைச்சர்களின் பேச்சுக்களும், செயல்களும் மக்களை அச்சமடைய வைத்திருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

மதச் சார்பின்மை என்பது நமது தேசிய கொள்கை. அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் அரசியல் சாசனத்தின் எதிர்பார்ப்பாகும். ஆனால், கடந்த காலங்களில் நடந்த காங்கிரஸ் அரசும், ஜனதா அரசும் சிறுபான்மை மக்களுக்கு தாஜா செய்து பெரும்பான்மை மக்களை இழித்தும், பழித்தும் செயல்படுவதே மதச் சார்பின்மை என்று போலி நாடகத்தை அரங்கேற்றி வந்தார்கள். இது பெருவாரியான பெரும்பான்மை மக்களை காயப்படுத்தியது, வேதனைப்படுத்தியது என்பது உண்மை. அதனால் தான் மக்கள் பாரதிய ஜனதா பக்கம் சாய்ந்தார்கள் என்பதை கசப்பாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மோடியின் சில அமைச்சர்களும், நண்பர்களும் பல துவேஷமான, கருத்துக்களை பொது மேடைகளில் பரவவிடுகிறார்கள். தேவாலயங்களும், மசூதிகளும் வழிபாட்டு கூடங்களே அல்ல என்று பேசுவதும், மோடியை ஏற்காதவர்களும், பசு மாமிசம் உண்பவர்களும், பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்று பேசுவதும் எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. சிறுபான்மை மக்கள் வாழவேண்டும், பெரும்பான்மை மக்கள் ஆளவேண்டும் என்று பா.ஜ.க கருதினால் அது சரியான ஜனநாயக மாண்பாக இராது. இந்தியர் அனைவரும் சிறுபான்மை பெரும்பான்மை என்ற பாகுபாடு இல்லாமல், சேர்ந்து உழைத்தால் மட்டுமே இந்த நாடு முன்னேறும் என்பதை மோடி எந்த நாளிலும் மறக்கக் கூடாது.

மத வெறியை ஊட்டுவது எளிது. அதை வளர்ப்பது அதை விட எளிது. ஆனால், அதனால் நாடு முழுவதும் பற்றி எரியும் சூழல் ஏற்பட்டால், நமது தேசத்தின் கட்டுமானம் என்னவாகும் என்பதை பொறுப்பில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். யாருக்கோ? எப்போதோ சக்தி கிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடிப்பான் என்பான் என்பதை நினைவு படுத்துவது போல, ஆளும் கட்சியின் செயல்பாடு இருக்க கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு வேண்டும்.

மோடியின் அரசாங்கத்தில் ஒட்டுமொத்தமாக நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என்று கூற இயலாது. இலங்கை - இந்திய விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் விஷயத்தில் சில நீக்கு போக்கு இருந்தால் தான் சிக்கலை தீர்க்க முடியும் என்ற யதார்த்த நிலை மக்கள் மத்தியில் மோடியின் அரசு வந்த பிறகுதான் வைக்கப்பட்டிருக்கிறது. நமது மீனவர்களின் எதிர்பார்ப்பும், இலங்கை மீனவர்களின் பரிதாப நிலையும், காய்த்தல் உவத்தலின்றி விவாதிக்கப்பட்டு, வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. பூடான், வங்கதேசம் மற்றும்  பர்மா போன்ற அண்டை நாடுகளிலும் நமது மரியாதை கூடியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஆளுமை பழுதுபட்டிருந்த நிலை மாறி, சீர்பட்ட நிலைக்கு வந்திருக்கிறது. எனவே இவைகளை எல்லாம் பாராட்டாமல் இருந்தால், அது ஒருதலைபட்சமானதாகும். நமது வருத்தமெல்லாம் மோடி, பல நேரங்களில் தன்னை பிரதமர் என்று நினைக்காமல், பா.ஜ.க வின் தலைவர் என்றே நினைத்து செயல் செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது. நம் நாட்டு பிரதமர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். சீக்கியர், பார்சி, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மற்றும்  ஹிந்துக்கள் என்று அனைவருக்கும் அவரே பிரதமர் ஆவார். இதை அவர் மறக்காமல் இருந்தால், நாட்டுக்கு நல்லது. மறந்து போனால் அவருக்கு நல்லது அல்ல.


Next Post Home